நிறுவனர் பங்கு
நிறுவனர் பங்கு
Skin in the game
பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்:
1. மிகை முதல் நீர்க்காமை
2. மிகை கடன் இல்லாமை
3. நிறுவனர் பங்கு
4. தரமான வளர்ச்சி
5. அகழி
6. அறம்
இவற்றில் நிறுவனர் பங்கு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வாரன் பஃபெட்டின் Berkshire Hathaway முதலீட்டு நிறுவனத்தில் அவருடைய தனிப்பட்ட பங்கு 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மேலும், வாரனின் 99 சதவீத சொத்து Berkshire Hathaway நிறுவனப் பங்குகளாக உள்ளது.
Tata குழுமத்தின் தாய் நிறுவனமான Tata Sons ல் அதன் நிறுவனர் பங்கு 78.8 என்ற அளவில் உள்ளது. பட்டியலிடப்பட்ட Tata குழும நிறுவனப்பங்குகளில் Tata Investment Corporation ல் நிறுவனர் பங்கு 73.38 சதவீதமாகவும் Tata Consultancy Services ல் நிறுவனர் பங்கு 71.77 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு நிறுவனர் பங்கு அதிக அளவில் இருப்பது இத்தகைய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
நிறுவனத்தில் நிறுவனர் பங்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அன்றாடம் விற்பனையாகும் அதன் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். இது பங்குகளின் மதிப்பைத் தக்க வைக்கும் மறைமுகமான ஒரு காரணியாகச் செயல்படுகிறது. அதன் பங்குகளுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும் போது பங்குகளின் விலை உயர்ந்து செல்ல இது வழிவகை செய்கிறது.
நிறுவனத்தில் நிறுவனர் பங்கு குறைவாக இருந்து அது தரமான நிறுவனமாகவும் இருக்கும் பட்சத்தில் பிற நிறுவனங்கள் அதனை வலிந்து கையகப்படுத்தும் (Hostile takeover) செயல்களில் ஈடுபடும் அபாயம் இருக்கிறது. இதற்காகவேனும் நிறுவனத்தில் நிறுவனர் பங்கு அர்த்தமுள்ள அளவில் இருப்பது அவசியமான ஒன்றாகிறது.
சில நிறுவனங்கள் இதனை மாறுபட்ட வாக்களிக்கும் உரிமைகள் (Differential voting rights) வழி எதிர் கொள்கின்றன. வழக்கமாக ஒரு பங்குக்கு ஒரு வாக்குரிமை என்பது மாறுபட்ட வாக்களிக்கும் உரிமைகளில் ஒரு பங்குக்கு பத்து வாக்குரிமை என்பதாக இருக்கும். Google ன் தாய் நிறுவனமான Alphabet இந்த வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறை வாக்குரிமை காரணமாக DVR பங்குகள் குறை மதிப்பீட்டில் வர்த்தகமாகும். இதன் காரணமாக அதன் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) உயர் அளவுகளில் இருக்கும்.
நிறுவனத்தில் நிறுவனர் பங்குகளின் உச்சபட்ச அளவு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அளவீடுகளின் படி 75 சதவீதமாக உள்ளது. நமக்கான அளவீட்டை நாம் 50 சதவீதம் என்ற அளவில் அமைத்துக் கொள்ளலாம்.
சில நிறுவனங்கள், அவற்றின் பங்குகளை அடமானம் வைக்கும் செயல்களில் ஈடுபடும். பங்குச்சந்தை, அடிப்படையில், ஒரு மாறுபடும் தன்மை கொண்ட முதலீடாகும் (variable investment) பங்குகளின் விலை சதா சர்வகாலமும் ஏறியவாறும் இறங்கியவாறும் இருக்கும். பங்குகளின் விலை ஏறும் போது வைக்கப்பட்ட அடகு அவற்றின் விலை இறங்கும் போது பிரச்னைக்கு உள்ளாகும்.
சில நிறுவனங்களின் நிறுவனர் பங்கு குறை அளவீட்டில் இருக்கும். சில நிறுவனங்களுக்கு நிறுவனர் பங்கு என்பது அறவே இருக்காது. உதாரணமாக HDFC வங்கிக்கு நிறுவனர் பங்கு பூஜ்யமாக உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) அதன் 47.66 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளனர். இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (DII) வசம் அதன் 37.19 சதவீதப் பங்குகள் உள்ளன. பொது மக்கள் கையில் 15.14 சதவீதப் பங்குகள். HDFC வங்கியில் நிறுவனர் பங்கு பூஜ்யம் என்பதால் அதில் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருப்பது அறிவுடைமையாகாது. இந்த வரிசையில் BSE, IEX, ITC, MCX முதலான பங்குகள் இடம் பெற்றுள்ளன.
L & T நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் 14.5 சதவீதப் பங்குகள் L & T Employees Trust வசம் உள்ளன. இந்த மாதிரி தரவுகளை ஆராயும் கலையைத் தேர்ந்து தெளிய வேண்டும்.
Sundaram Finance நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 37.21% என்ற அளவில் உள்ளது. இதற்கு இணையாக பொதுமக்கள் பங்கும் உள்ளது. அன்றாடம் சந்தையில் விற்பனைக்கு வரும் அதன் பங்குகளின் எண்ணிக்கை குறைவிலும் குறைவு. பொது மக்களில் பெரும்பாலோனோர் இந்தப் பங்குகளை நீண்ட கால முதலீடாக வைத்துள்ளனர் என்பதாகத் தோன்றுகிறது.
Shriram Finance நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 25.38 சதவீதம் என்ற குறை அளவில் உள்ளது. ஆனால் FII பங்குகள் 47.19 மற்றும் DII பங்குகள் 21.33 என்ற அளவிலும் உள்ளன. பொது மக்கள் வசம் 6.1 சதவீதம் பங்குகள் உள்ளன. நிறுவனர் பங்கு குறை அளவீட்டில் இருந்தாலும் அதிகப்படியான FII மற்றும் DII பங்குகள் அதற்கு ஒரு நிலைத்தன்மையைக் கொடுக்கின்றன.
Penny stocks என்று அழைக்கப்படும் ரூபாய் பங்குகளில் நிறுவனர் பங்கு மற்றும் பொதுமக்கள் பங்கு பெரும்பாலும் 10:90 என்ற அளவில் சமயங்களில் 1:99 என்ற அளவில் கூட இருக்கும்.
நிறுவனம் ஒன்றில் அதன் நிறுவனர் பங்கு வெறும் ஒரு சதவீதம் என்று இருந்தால் நிறுவனத்தை முன்னேற்றிச் செல்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் கேள்விக்கு உள்ளாகும்.
நிறுவனத்தில் நிறுவனர் பங்கு என்ற அளவுருவை இவ்வாறு பல நிலைகளில் ஆராய்வது அவசியமான ஒன்றாகிறது.
Comments
Post a Comment