மிகை கடன் இல்லாமை
மிகை கடன் இல்லாமை
Minimum Debt
பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்:
1. மிகை முதல் நீர்க்காமை
2. மிகை கடன் இல்லாமை
3. நிறுவனர் பங்கு
4. தரமான வளர்ச்சி
5. அகழி
6. அறம்
இவற்றில் மிகை கடன் இல்லாமை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடன் வாங்கி காணாமல் போன நிறுவனங்களின் நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது. எனவே இந்த அளவுருவில் கவனம் கொள்வது அவசியமாகிறது.
சில நிறுவனங்கள் முதல் செறிவாக (capital intensive) இருக்கும். விமானத்துறை, இரும்பு மற்றும் எஃகு, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, சுரங்கம் மற்றும் நில முதலீட்டு நிறுவனங்களைக் குறிப்பாகச் சொல்லலாம். இவை மிகை கடனைக் கொண்டிருப்பது இயல்பான ஒன்று. இவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது சாலச் சிறந்தது.
நிதி சார் நிறுவனங்களுக்குக் கடன் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவற்றுக்கான மூலப்பொருளே கடன் தான்.
உதாரணமாக வங்கிகள், சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு மூலமாகக் குறை வட்டியிலும் பூஜ்ய வட்டியிலும் பணத்தைப் பெறுகின்றன. இவை போக நிரந்தர வைப்புக் கணக்கு மற்றும் தொடர் வைப்புக் கணக்குகள் மூலமாகவும் ஓரளவு குறைந்த வட்டியில் அவை பணத்தைத் திரட்டிக் கொள்கின்றன.
இந்தப் பணத்தை உயர் வட்டி விகிதத்தில் அவை நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் கடனாகக் கொடுக்கின்றன.
வங்கிகளின் வணிக மாதிரி (business model) யைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவை குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று அதனை அதிக வட்டிக்கு விடுகின்றன. இந்த இரண்டு வட்டி விகிதங்களுக்கும் இடையிலான வித்தியாசம் நிகர வட்டி விகிதம் (Net interest margin) என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அவற்றின் கடனே ஆஸ்தியாகவும் செயல்படுகிறது.
இத்தகைய நிதி சார் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவற்றின் நிகர வட்டி விகிதம் மற்றும் NPA என்று சொல்லப்படும் அவற்றின் வாராக்கடன் முதலிய தரவுகளை மட்டும் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
சரி, எந்தெந்த சந்தர்ப்பங்களில் கடன் வாங்கலாம்?
இலாபகரமான நிறுவன விரிவாக்கத்திற்கோ அல்லது பிற நிறுவனங்களை மதிப்பு முதலீடாகக் கையகப்படுத்தவோ ஒரு வாய்ப்பு வருவதாகக் கொள்ளலாம். அப்போது பங்குச்சந்தை கரடியின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது. பங்குகளின் விலை, குறைவான மதிப்பீட்டில் வர்த்தகமாவதால் பங்கு முதலைத் திரட்ட முடியாமலும் பங்கு மாற்றை (share swap) செய்ய முடியாமலும் போகலாம். இந்த சமயத்தில் கடன் முதலைத் திரட்டிக் கொள்ளலாம்.
நிறுவன அளவில் கடன் வாங்குவது ஒரு பக்கம். சில நிறுவனங்கள் தத்தம் பங்குகளை அடகு வைக்கும் செயல்களில் ஈடுபடும். இத்தகைய தரவுகளையும் ஆராய்வது அவசியம்.
பங்கு முதலீடு என்பது நாளும் ஏறியிறங்குவதான ஒரு variable investment. இதனை அடமானம் வைத்துக் கடன் வாங்குவது இடர்ப்பாட்டின் மீதான இடர்ப்பாட்டிற்கு இட்டுச் செல்லும்.
காளைச்சந்தையில் பங்குகளை அடமானம் வைத்துக் கடன் வாங்குவது கரடிச்சந்தையில் பிரச்னைக்கு உள்ளாகும்.
நிறுவனங்கள் கடன் வாங்காமல் இருப்பதன் மூலமாக வட்டி விகித ஏற்ற இறக்கங்கள், பொருளாதார மந்த நிலை மற்றும் திவால் நிலையிலிருந்து தற்காப்பு செய்து கொள்ளலாம். கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய தேவை இல்லாததால் அதிகபட்ச பணப்பாய்ச்சலை (cashflow) உருவாக்கிக் கொள்ளலாம். Absolute strategic autonomy என்று சொல்லப்படும் முழுமையான மூலோபாய சுயாட்சியைப் பெறலாம். ஏதேனும் நெருக்கடி நிலை என்றால் உடனடியாகக் கடனைத் திரட்டிக் கொள்வதற்கான தகுதி கிடைப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
கடன் வாங்காமல் இருப்பதால் நிறுவனங்கள் சில நன்மைகளை இழக்கவும் செய்கின்றன. கடன் கட்டுவதன் மூலமான வரி சேமிப்பு அவற்றில் முக்கியமான ஒன்று. மேலும், நிறுவனங்கள் கடன் வாங்காமல் உள்முக இலாபத்தின் மூலமாக மட்டும் வளர்வதால் அவற்றின் வளர்ச்சி கொஞ்சம் மட்டுப்படுவதாகவும் இருக்கும்.
முதலீட்டாளர்களும் பங்குகளை அடமானம் வைத்து முதலீடு செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
பங்குச்சந்தையில் கரடியின் தாக்கம் எப்போது நிகழும் என்று யாராலும் எப்போதும் கூறவியலாது. முன்னரே குறிப்பிட்டவாறு பங்குச்சந்தை தின அளவில் ஏறியிறங்குவதான ஒரு மாறும் நிலை முதலீடு. இதனை மாறா நிலைக் கடனுடன் ஒருபோதும் இணைக்கக்கூடாது.
Comments
Post a Comment