மறைந்திருக்கும் உண்மைகள்
மறைந்திருக்கும் உண்மைகள்
PE Multiple என்று கூறப்படும் விலை-வருவாய் விகிதம் பற்றி ஏற்கெனவே படித்திருக்கிறோம்.
நிறுவனப்பங்கு ஒன்றின் விலை, அது ஈட்டும் ஒரு பங்கு வருவாயின் எத்தனை மடங்குகளில் வர்த்தகமாகிறது என்ற விகிதமே விலை-வருவாய் விகிதம்.
அதற்கான சமன்பாடு:
விலை-வருவாய் விகிதம்= பங்கின் விலை ÷ ஒரு பங்கு வருவாய்
பங்கு ஒன்றின் விலை நமக்கு எதையும் தெரிவிப்பதில்லை.
பங்கு ஒன்றின் விலையைக் கொண்டு அது மலிவு அல்லது அதிகம் என்பதான எந்த ஒரு முடிவுக்கும் நாம் வரமுடியாது.
பங்கு ஒன்றின் PE எவ்வளவு என்று பார்ப்பது தான் சரியான ஒரு பார்வையாக இருக்கும்.
ஒரு பங்கு 1000 ரூபாய் என்ற விலையில் மலிவாகவும் (PE 10) மற்றொரு பங்கு 100 ரூபாய் என்ற விலையில் விலை அதிகமாகவும் (PE 20) இருக்கும்.
மேலும், பங்குகளின் விலையைப் பார்க்கும் போது அதன் முக மதிப்பையும் (face value) கணக்கில் கொள்ள வேண்டும்.
Groww நிறுவனப்பங்கு ரூ.191.55 என்ற விலையில் வர்த்தகமாகிறது. அதன் விலை மலிவாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அது வெறும் தோற்றம் மட்டுமே. அதன் முக மதிப்பு ஒரு ரூபாயாகவும் அதன் PE, 56.34 என்ற உயர் அளவீட்டிலும் உள்ளது.
பொதுவாக தரமான நிறுவனப்பங்குகளைக் குறை PE க்களில் வாங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி.
தரமான நிறுவனங்களின் ஒரு பங்கு வருவாய் மிகை அளவுகளில் கூடுவதாக இருக்கும். இது போக, சந்தை, இந்த ஒரு பங்கு வருவாய்க்கு நாளும் கூடி வரும் PE ஐ வழங்கும்.
ஆக, இரண்டு வழிகளில் பங்கின் விலை கூடும்.
இவ்வாறு தான் சந்தையில் செல்வ வளம் உருவாகிறது.
தரமான நிறுவனங்களைக் குறை PE மதிப்பில் வாங்க வேண்டும் என்று பார்த்தோம்.
சுழற்சி, அதாவது, Cyclical நிறுவனப்பங்குகளைப் பொறுத்தவரை இது தலைகீழாக மாறுகிறது.
Cyclical நிறுவனப்பங்குகளை அதிக PE க்களில் வாங்க வேண்டும். இவ்வாறு வாங்கப்பட்ட பங்குகளை அவற்றின் அடுத்த சுழற்சியில் குறை PE க்களில் விற்று விட வேண்டும்.
Sugar நிறுவனப்பங்குகளை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ளலாம்.
Sugar துறை என்பது சுழற்சி முறையில் செயல்படுவதாக இருக்கும். இந்த சுழற்சியில் அந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் குறைந்த இலாபம், அதாவது குறைந்த ஒரு பங்கு வருவாய் ஈட்டும் போது அதன் PE அதிகமாக இருக்கும் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள PE சமன்பாட்டை மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொள்ளவும்) இப்போது அதன் பங்குகளை வாங்க வேண்டும்.
காலத்தின் அடுத்த சுழற்சியில் நிறுவனத்தின் ஒரு பங்கு வருவாய் அதன் உச்சத்தை எட்டுகிறது. இப்போது நிறுவனத்தின் PE குறைவாக இருக்கும். இது அதன் பங்குகளை விற்க வேண்டிய நேரமாகும்.
எழுதுவது என்பது சுலபமானது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது கடினமானது.
முன்பக்கமாக நடக்கத் தான் நாம் பழகியிருக்கிறோம். பின்பக்கமாக நடப்பது கடினமான ஒன்றாக இருக்கும்.
எழுதிய பதிவுகளை இந்த மாதிரி தலைகீழாகப் படித்துத் தான் பிழை திருத்த வேண்டும். நேராகப் படிக்கும் போது பிழைகள் கண்ணிற்குத் தென்படாது. அப்படியே தென்பட்டாலும் நமது மூளை அந்தத் தவறைச் சரியாகப் படித்து நம்மை ஏமாற்றி விடும்.
'சூரியன் கிழக்கே உதிக்கும்' என்பதை 'உதிக்கும் கிழக்கே சூரியன்' என்று படித்து சரி பார்க்க வேண்டும்.
காலம் முழுக்க buy low, sell high என்று பாடம் படித்து விட்டு திடுதிப்பென்று buy high, sell low என்று மாறுவதும் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும்.
ஆனால், சுழற்சிப் பங்குகளில் இலாபமீட்ட இது தான் ஒரேயொரு சரியான வழி.
இது வரை சரி.
ஆனால், சில சமயங்களில், நிறுவனங்களின் PE ஆக நீங்கள் பார்ப்பது அவற்றின் உண்மையான PE ன் இரண்டு மடங்கில் இருந்தால் எப்படியிருக்கும்?
நிறுவனம் ஒன்றின் PE, 40 என்பதாக இருக்கிறது. ஆனால், அதன் உண்மையான PE வெறும் 20 என்பதாக இருந்தால் எப்படியிருக்கும்?
அது நிச்சயமாக தவற விடக்கூடாத ஒரு மதிப்பு முதலீட்டு வாய்ப்பாக இருக்கும்.
Saregama India நிறுவனம், வர்த்தக ரீதியிலான பொழுதுபோக்கு உரிமைகளைப் பெறுதல், நிர்வகித்தல் மற்றும் அவற்றின் மூலம் வருவாய் ஈட்டுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட, அதிக லாபம் தரும் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த வணிக மாதிரியைக் கொண்டு இயங்குகிறது.
Saregama India நிறுவனத்தின் விலை-வருவாய் விகிதம் 40 என்ற அளவீட்டில் வர்த்தகமாகிறது.
ஆனால், நிறுவனம், வளர்ச்சி செலவு (Growth Capex) என்ற வகையில் சிறந்த பாடல்களை இனங்கண்டு அவற்றுக்கான உரிமையைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் இது நிறுவனத்திற்கான ஒரு செலவு அல்ல. இது முழுமையான ஒரு முதலீடு.
ஆனால், கணக்கு விதிகளின் (accounting rules) படி இது செலவுக் கணக்கில் மட்டுமே காட்டப்பட வேண்டும். எனவே அதன் PE, 40 என்ற உயர் அளவீட்டில் உள்ளது.
பாடல்களுக்கான காப்புரிமையைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் இறந்த பின்னரான 60 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை இருக்கும். அதன் பின்னர் பாடல்கள் பொது வெளிக்கு வந்து விடும். அந்தப் பாடல்களைப் பணமாக்கம் செய்ய முடியாது.
ஆக, Saregama போன்ற நிறுவனங்கள் தரமான பாடல்களில் அவற்றின் இலாபத்தை மறு முதலீடு செய்வது காலத்தின் கட்டாயம்.
இன்னொரு வகையிலும் இந்த மறு முதலீடு முக்கியத்துவம் பெறுகிறது.
காலங்கள் மாறும் போது இரசிக்கப்படும் பாடல்களும் மாறும். எனக்குப் பிடித்த பாடல் என் மகனுக்குப் பிடிக்காது. என் தந்தை இரசித்த பாடல்களை நான் வியந்ததில்லை.
இந்தத் தலைமுறை இடைவெளியை நிறுவனம் இட்டு நிரப்ப வேண்டும்.
நிறுவனத்தின் இந்தத் தொடர்ந்த வாக்கிலான மறு முதலீடு இல்லையென்றால் அதன் ROE, ROCE, NPM போன்ற நிதி விகிதங்கள் அதன் தற்போதைய விகிதங்களைப் போல் குறைந்தது மூன்று மடங்கு இருக்கும்.
ஆனால், நிறுவனம் தலைமுறை தாண்டி நிற்க இந்த செலவு (முதலீடு) அவசியமாகிறது.
நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடி அளவிற்குப் பாடல்களில் முதலீடு செய்கிறது. இவ்வாறு கூட்டுப்பெருக்கம் அடையக்கூடிய ஒரு அகழியை அது தொடர்ந்தவாக்கில் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது. தற்போது நிறுவனத்தின் வசம் 1,70,000 பாடல் ஒலித்தடங்கள் உள்ளன.
தற்போது வாங்குவதான பாடல் ஒலித்தடங்களைத் தவிர தொடக்கத்தில் முதலீடு செய்யப்பட்ட பாடல்களுக்கான செலவுக் கணக்குகள் முன்னரே ஈடு செய்யப்பட்டு விட்டன. அவைகளைப் பொறுத்தவரை இனி வருவதெல்லாம் இலாபக் கணக்குகள் மட்டுமே.
மேலும், நிறுவனத்தின் பாடல் ஒலித்தடங்கள் ஒருபோதும் தேய்மானம் ஆகாது. காலங்களின் போக்கில் அது சிறு வயது நினைவு ஏக்கங்களின் (nostalgia) காரணமாக மதிப்புயர்வு ஆகும்.
இந்த மதிப்புயர்வு ஆகக்கூடிய பாடல் ஒலித்தடங்களைப் புதிதாக வரக்கூடிய விநியோகத்தளம் ஒவ்வொன்றின் மூலமாகவும் (ipod, spotify) பணமாக்கம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு நிறுவனத்தின் கையில் உள்ளது.
சந்தா கட்டி இசை கேட்கும் முறைமை இந்தியாவில் ஒரு சதவீதமாக உள்ளது. அதுவே அமெரிக்காவில் 42 சதவீதமாக உள்ளது. நிறுவனம் பயணிக்க வேண்டிய பாதை ஏராளம் உள்ளது.
இது போக live events என்று சொல்லப்படும் பாடகர்களின் நேரலை நிகழ்வுகள் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன. இது Experiential economy என்று சொல்லப்படும் அனுபவப் பொருளாதாரம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
Saregama நிறுவனம் ipod மாதிரி Carvann என்கிற பதிவேற்றம் செய்யப்பட்ட 5000 பாடல்களைக் கொண்ட சாதனத்தையும் சந்தைப்படுத்தி உள்ளது.
நிறுவனம், நமது ஆறு அளவுருக்களைப் பூர்த்தி செய்கிறதா என்பதையும் சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
மிகை முதல் நீர்க்காமை: நிறுவனத்தின் பங்கு முதல் (Equity capital) 19.28 கோடி ரூபாய் என்கிற குறை அளவுகளில் உள்ளது.
மிகை கடன் இல்லாமை: நிறுவனத்திற்குக் கடன்கள் ஏதுமில்லை.
நிறுவனர் பங்கு: நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 60.84 சதவீதம் என்கிற உயர் அளவீட்டில் உள்ளது.
தரமான வளர்ச்சி: நிறுவனத்தின் ஐந்து வருட சராசரி ROE மற்றும் ROCE முறையே 18.65 மற்றும் 25.42 ஆக உள்ளது. ஆனால் முன்னரே குறிப்பிட்டவாறு நிறுவன மறு முதலீடுகள் காரணமாக இது குறை அளவுகளில் உள்ளதான ஒரு தோற்றம் உள்ளது.
அகழி: நிறுவனத்தின் தொடர்ந்த வாக்கிலான மறு முதலீடுகள் அதன் கூட்டுப்பெருக்க அகழியாகச் செயல்படுகிறது.
அறம்: Saregama நிறுவனம், முக்கியமாக, எண்ணிம உள்ளடக்கம் மற்றும் அறிவுசார் சொத்து (IP) சார்ந்த ஊடக வணிகமாக செயல்படுவதால், அதன் நேரடி கார்பன் தடம் மிகக் குறைவானதாகும். மற்றபடி நிறுவனம் அறவழியில் செயல்படுகிறது. அதன் மேல் புகார்கள் என்பதாக ஏதுமில்லை.
பெரிய கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் Saregama India நிறுவனத்தின் செலவுகள் அதன் முதலீடாகவும், கணக்கியல் விதிகளின் படி இந்த முதலீடுகள் செலவினங்களுக்காகக் கருதப்படுவதால் அதன் EPS செயற்கையாகக் குறைந்து PE அதிகரித்தும், சந்தை இதனை சரிவர இனங்காணாததால் அது மதிப்பு முதலீடாக வர்த்தகமாவதாகவும் உள்ளது.
இவ்வாறு Saregama India நிறுவனப்பங்கு நம் கண்ணெதிரே மறைந்திருக்கும் ஒரு மதிப்பு முதலீடாக இருக்கிறது.
[Inspiration from Neel's News Letter]
Comments
Post a Comment