மிகை முதல் நீர்க்காமை
மிகை முதல் நீர்க்காமை
Minimum Equity Dilution
பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்:
1. மிகை முதல் நீர்க்காமை
2. மிகை கடன் இல்லாமை
3. நிறுவனர் பங்கு
4. தரமான வளர்ச்சி
5. அகழி
6. அறம்
இவற்றில் மிகை முதல் நீர்க்காமை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உலகெங்கிலும் உள்ள நாணயங்கள், நாளும் தத்தமது மதிப்பை இழந்து வருவதற்கான அடிப்படையான காரணம், அரசாங்கங்கள் அவற்றை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவது தான்.
1971 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு நாடு எவ்வளவு தங்கத்தை இருப்பில் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு பணத்தை மட்டுமே வெளியிட முடியும் என்பதான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. 1971 ஆம் ஆண்டு இந்த அளவுகோல் கைவிடப்பட்டு விட்டது. பண நீர்த்தல் என்பது வாடிக்கையாகி விட்டது.
Bitcoin போன்ற எண்ணிம நாணயங்கள் (crypto currencies) அவற்றின் மதிப்பைத் தக்க வைத்திருப்பதற்கான அடிப்படையான காரணம் அவற்றை அதிக எண்ணிக்கையில் உருவாக்கம் செய்ய முடியாதது மட்டுமே.
Bitcoin உருவாக்கத்திற்கான உச்சபட்ச அளவு 21 மில்லியன் என்பதாக உள்ளது. தற்போது வரை கிட்டத்தட்ட 20 மில்லியன் Bitcoin கள் அகழ்வு (mining) செய்யப்பட்டுள்ளன. இன்னும் அதிகபட்சமாக ஒரு மில்லியன் bitcoin கள் மட்டும் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டும். கடைசி bitcoin அகழ்ந்தெடுப்பு 2140 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அகழ்ந்தெடுப்பு முதலில் எளிமையாகவும் பின்னர் சிக்கலாகவும் மாறும் வண்ணம் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் Bitcoin 2009 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. இவ்வாறு, இந்த நாணய உருவாக்கத்திற்கான காலம் 131 நீண்ட நெடிய ஆண்டுகளாகவும் அதிகபட்ச நாணயங்கள் 21 மில்லியன்களாகவும் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
மிகை முதல் நீர்க்காமைக்கு இது ஒரு சிகர உதாரணமாக விளங்குகிறது.
தங்கம் தன் மதிப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கும் இதுவே காரணமாக உள்ளது. பணத்தைச் சுட்டியின் ஒரு சொடுக்கில் உருவாக்க முடிவது மாதிரி தங்கத்தை உருவாக்க முடியாது.
நிறுவனங்களுக்கு இரண்டு விதமான முதல் (capital) கள் உள்ளன. ஒன்று equity capital என்று அழைக்கப்படும் பங்கு முதல். மற்றொன்று debt capital என்று அழைக்கப்படும் கடன் முதல்.
இந்த இரண்டு முதல்களையும் ஒன்றையொன்று செழுமைப்படுத்தும் விதத்தில் கவனமாகக் கையாள வேண்டும்.
கடன் முதலுக்கு வட்டி கட்ட வேண்டும்; ஆனால் பங்கு முதல் இலவசம், அதற்கு வட்டி கட்ட வேண்டாம் என்பதான ஒரு எண்ணப்போக்கு உள்ளது. இது மிகவும் தவறான ஒன்று.
நிறுவனப்பங்குகளின் முதல் பொது வெளியீட்டு விலை (IPO price) பத்து ரூபாய் என்று கொள்ளலாம். நிறுவனம் மேலே குறிப்பிடப்பட்ட ஆறு அளவுருக்களையும் செவ்வனே கடைப்பிடித்து வருகிறது. காலங்களின் போக்கில் அதன் பங்குகளின் விலை நூறு, ஆயிரம் என்று வளர்ந்து வருகிறது. ஆயிரங்களில் வளர்ந்து வரக்கூடிய பங்குகளை அவசரம் கொண்டு நூறுகளில் நீர்த்து வைப்பது அறிவுடைமையாகாது.
தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம், IPO வில், அதன் பங்குகளை 75 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது (நீர்த்தது) தற்போதைய இலவசப்பங்குகளை கணக்கில் கொண்ட அதன் பங்குகளின் விலை 10000 ரூபாய். இப்போது நிறுவனத்திற்குத் தரமான ஒரு விரிவாக்கத்திற்கான பணம் தேவைப்பட்டால் அது தன் பங்குகளை 10000 ரூபாய் என்ற விலையில் குறைந்த எண்ணிக்கையில் நீர்த்து நிறைந்த அளவிலான நிதியைத் திரட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு பங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் EPS என்று அழைக்கப்படும் அவற்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் தரமாக வளர்ந்து வரும். இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைத் தொடரும் அதன் விலை-வருவாய் விகிதமும் (PE Multiple) பெருக்கத்திற்கு உள்ளாகும்.
நிறுவனப்பங்குகளின் விலை அவற்றின் உள்ளார்ந்த மதிப்பிற்கும் (intrinsic value) குறைவாக வர்த்தகமாகும் போது அவற்றைத் திரும்ப வாங்குவதான செயல்முறை buyback என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகள் மூலமும் பங்கு நீர்த்தலைக் கட்டுப்படுத்தலாம்.
இது போக பத்து ரூபாய் முக மதிப்புள்ள (face value) பங்குகளை ஒரு ரூபாயாகக் குறைக்கும் capital reduction முதலான வழிமுறைகளும் உள்ளன.
விதி என்ற ஒன்று இருந்தால் விதி விலக்குகளும் இருக்கும். அந்த வகையில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் equity capital ஐ திரட்டலாம் அதாவது நீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதும் முக்கியமானதுமாக இலவசப் பங்குகள் வழி அதனை அதிகரிக்கலாம். இதற்கான சிறந்த ஒரு உதாரணமாக Sundaram Finance நிறுவனத்தைக் குறிப்பிடலாம். அதன் முதல் பொது வெளியீட்டின் 100 பங்குகள் இலவசப்பங்கு வெளியீடுகள் மூலமாக தற்போது 9600 பங்குகள் ஆகியிருக்கின்றன. பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டே அது 96 bagger ஆகியிருக்கிறது.
பங்கு முதல், இலவசப்பங்குகள் வழி அதிகரிக்கப்படும் போது Alignment of Incentive என்ற கருத்தின் படி நிறுவனர்களும் முதலீட்டாளர்களும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். நிறுவனர்களுக்கு எவ்வளவு இலவசப் பங்குகளோ அதே அளவு முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகிறது. Equity அதாவது சம பங்கு என்பதன் அர்த்தமே இது தான்.
இது போக தரமான நிறுவன விரிவாக்கத்தின் பொருட்டோ அல்லது பிற நிறுவனங்களை மதிப்பு முதலீடாகக் கையகப்படுத்தும் பொருட்டோ முதல் நீர்த்தலை மேற்கொள்ளலாம்.
இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இந்த முதல் நீர்த்தல் நிறுவனத்தின் தரமான வளர்ச்சிக்கு (Quality Growth) வித்திட வேண்டும்.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFC) மூலதனமே பணம் என்பதால் இந்த மிகை முதல் நீர்க்காமை அவற்றுக்குப் பொருந்தாது.
முதல் செறிவுள்ள (capital intensive) நிறுவனங்களான இரும்பு, எஃகு மற்றும் மின்துறை போன்ற நிறுவனங்களுக்கும் இந்த அளவுரு பொருந்தாது.
முதல் செறிவுள்ள துறையாக இருந்தாலும் சிற்சில நிறுவனங்கள் முதல் நீர்த்தலை மேற்கொள்ளாமல் உள்முகமாகவே வளர்வதாக (growth through internal accruals) உள்ளன. The Ramco Cements நிறுவனம் இந்த வகையில் கவனம் பெறுகிறது.
அதே மாதிரி NBFC களைப் பொறுத்தவரை Sundaram Finance உள்முகமாகவே வளர்வதாக உள்ளது. Motital Oswal Financial Services நிறுவனத்தையும் இந்த வகையில் சேர்க்கலாம்.
Comments
Post a Comment