வணிக வடிவமைப்பு- 2

வணிக வடிவமைப்பு- 2

The Design of Business- 2


பொறுப்புத்துறப்பு: இந்தப் பதிவு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்கினை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல. The design of business (நிறுவனங்களின் வணிக வடிவமைப்பு) என்ற கருத்தாக்கத்தை விளக்கும் பொருட்டு ஒரு நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு இது எழுதப்பட்டிருக்கிறது.


             *                *                *


Never invest in any idea you can't illustrate with a crayon- Peter Lynch 


ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.


             *                *               *


Federal Reserve: Plumber of the financial system 


              *                *               *


Info Edge - A Flywheel and a venture capital fund with 0% management expenses.


Info Edge - ஒரு பறக்கும் சக்கரம் மற்றும் பூஜ்ய சதவீத மேலாண்மைச் செலவுகளுடன் கூடிய ஒரு துணிகர முதலீட்டு நிதி.


Info Edge நிறுவனத்தின் குறை நிதி விகிதங்கள் (financial ratios) மற்றும் அதன் மிகை மதிப்பீடு (higher PE) காரணமாக அதில் முதலீடு செய்ய முனைபவர்கள் அதனைக் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு ஒன்று எப்போதும் உள்ளது.   


Info Edge நிறுவனத்தின் பணம் காய்க்கும் மரமாக அதன் Naukri இணையதளத்தைக் குறிப்பிடலாம். Naukri இணையதளத்தைப் பொறுத்தவரை அதற்கு வலுவான நேர் பின்னூட்ட வளையம் (positive feedback loop) ஒன்று அமைந்திருக்கிறது. அதாவது வேலை தேடுபவர்களின் முதல் தேர்வாக Naukri உள்ளது. இவ்வாறு வேலை தேடுபவர்களின் முதல் தேர்வாக Naukri இருப்பதால் வேலை கொடுக்கும் நிறுவனங்களின் முதல் தேர்வாக Naukri உள்ளது. இவ்வாறு வேலை கொடுக்கும் நிறுவனங்களின் முதல் தேர்வாக Naukri இருப்பதால் வேலை தேடுபவர்களின் முதல் தேர்வாக ... இது தான் நேர் பின்னூட்ட வளையம். இதனை வேறு மாதிரியாகவும் விளக்கலாம். The reason Naukri is so popular is that Naukri is so popular. Naukri அவ்வளவு பிரபலமாக இருப்பதே அது அவ்வளவு பிரபலமாக இருக்கக் காரணமாக இருக்கிறது. இது Network Effect என்றும் அழைக்கப்படும். 


Network Effect குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம். ஒரு நாட்டில் ஒரே ஒருவரிடம் மட்டும் திறன்பேசி (smart phone) இருப்பதாகக் கொள்ளலாம். அதைக் கொண்டு அவர் யாரிடமும் பேச முடியாது. அவரிடமும் யாரும் பேச முடியாது. அதுவே ஆயிரம் பேரிடம் திறன்பேசி இருப்பதாகக் கொள்ளலாம். இந்த ஆயிரம் பேர்களும் ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இலட்சம் பேரிடம் திறன்பேசி இருந்தால் இந்த திறன்பேசி network ன் மதிப்பு கூடுகிறது. புதிதாக இந்த network ல் இணையும் ஒவ்வொருவரும் இந்த network ன் மதிப்பை அதிகரிப்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. அதினினும் முக்கியமான ஒன்று இந்த மாதிரி network ஒன்று உருவாகி விட்டால் அதனை உடைப்பது மிக மிகக் கடினம். இதற்கான சிகர உதாரணங்களாக ebay, facebook போன்ற நிறுவனங்களைக் குறிப்பிடலாம். Naukri இணையதளத்தில் இணையும் ஒவ்வொரு வேலை தேடுபவர் மற்றும் வேலை கொடுப்பவர் அதன் network ன் மதிப்பை உயர்த்துகிறார்கள்.


முதலாளித்துவத்தின் பெரும் பிரச்னை என்னவென்றால், நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றால் அதனை நகலெடுக்க ஓராயிரம் நிறுவனங்கள் புற்றீசல் மாதிரி கிளம்பி விடும். அதைத் தடுக்கும் அரணாக network effect செயல்படுகிறது. அகழி முதலீட்டில் (moat investing) இது ஒரு அரிய வகையாகும். 


Naukri மாதிரி இன்னொரு இணையதளம்  தொடங்கப்பெற்று அது வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை Naukri மாதிரி ஒரு இணையதளத்தை யாராவது ஒருவர் தொடங்கினாலும் எந்த வேலை தேடுபவர் அதில் அவருடைய தன்விவரத்தை (resume) இடுவார்? எந்த வேலை தேடும் நிறுவனம் அதனைப் பார்வையிடும்? இதுவே Info Edge நிறுவனத்தின் அகழியாகும். 


பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் attrition risk என்று சொல்லப்படும் பணியாளர் விலகல் அபாயத்தைக் கொஞ்சம் அதிகமாகவே எதிர் கொள்கின்றன. இந்தப் பணியாளர் விலகல் அபாயம் Info Edge நிறுவனத்திற்கு மட்டும் பாதகமாக இல்லாமல் சாதகமாகச் செயல்படுகிறது. முதன்முறையாக வேலை தேடுபவர் மட்டுமின்றி புதிய வேலைகளைத் தேடுபவர்களும் இவ்வாறு Naukri ஐ நாடி வந்த வண்ணம் இருப்பது இங்கே கவனம் பெறுகிறது.


இது போக jeevansathi, 99acres, shiksha போன்ற இணையத்தளங்களையும் அது நடத்தி வருகிறது. 


இவை போக நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரிப் பணத்தை (reserves and surplus) ஆரம்ப நிலையில் இன்றிருக்கும் நாளை வளர வாய்ப்பிருக்கும் பிற இணையத்தளங்களில் அது முதலீடு செய்கிறது. எதிர்காலத்தில் இந்த இணையதள நிறுவனங்கள் வளர்ந்து அவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது மதிப்புத்திறப்பு (value unlocking) என்ற அடிப்படையில், Info Edge நிறுவனத்திற்கு பன்மடங்கு வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கான சிகர உதாரணங்களாக அதன் Zomato மற்றும் Policy Bazaar முதலீடுகளைக் குறிப்பிடலாம். இம்மாதிரி இணையதளங்களின் ஒரு தொகுப்பை அது பராமரித்து வருகிறது. இந்தத் தொகுப்பின் மூலமான CAGR மட்டும் 2019 முதல் 2026 ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு 33 சதவீதமாக உள்ளது இங்கு கவனம் பெறுகிறது. 


ஆக, Info Edge நிறுவனத்தை ஒரு வெற்றிகரமான இணையதள நிறுவனமாக மட்டும் பார்க்காமல் நாளை வெற்றிகரமான இணையதள நிறுவனங்களாக ஆகவிருக்கும் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாகவும் பார்க்கலாம். 


இதன் காரணமாக அதன் வருமானம் மீமிகை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவது இயற்கையான ஒன்று. அதற்கேற்றவாறு அதன் நிதி விகிதங்களும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும். அதன் ROCE மற்றும் ROE போன்ற நிதி விகிதங்களை ஆண்டாண்டு என்ற கணக்கில் பார்க்காமல் ஐந்தாண்டு சராசரி என்ற கணக்கில் பார்ப்பது சரியான ஒரு பார்வையாக இருக்கும். அதன் கடந்த ஆண்டு (2026 மார்ச்) ROCE மற்றும் ROE முறையே 5.17 மற்றும் 2.93 என்ற வாக்கில் உள்ளது. ஐந்தாண்டுகளின் கணக்கில் அது 27.31 மற்றும் 23.29 என்றும் உள்ளது. 


Zomato (Eternal) மற்றும் Policy Bazaar (PB Fintech) நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது மதிப்புத் திறப்பின் காரணமாக அதன் வருமானம் வானளாவ உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி இந்த இரண்டு நிறுவனங்களின் 31500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை Info Edge நிறுவனம் இன்னும் தன்வசம் வைத்திருக்கிறது. Info Edge நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 64388 கோடி ரூபாய். அதன் சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதன் வெற்றிகரமான இரண்டு முதலீட்டு நிறுவனங்களின் பணமாக்கம் செய்யப்படாத இலாபம் (unrealised gain) மூலமாகக் கிடைக்கப் பெற்றிருப்பது இங்கு கவனம் பெறுகிறது. அந்த வகையில் Info Edge நிறுவனம், பிரதானமாக, ஒரு துணிகர முதலீட்டு நிதியாகவும் செயல்படுகிறது.


ஒரு துணிகர முதலீட்டு நிதியில் நீங்கள் தனிப்பட்ட முறையில் பங்கு பெற கோடிகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் துணிகர முதலீட்டு நிதிக்கான மேலாண்மைச் செலவுகள் தனி. Info Edge நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டால் அதன் துணிகர முதலீட்டு நிதியில் பூஜ்ய சதவீத மேலாண்மைச் செலவுகளுடன் நீங்கள் பங்கேற்பதாக அர்த்தம்.


நிறுவனம் நமது ஆறு அளவுருக்களான மிகை முதல் நீர்க்காமை (Minimum Equity Dilution) மிகை கடன் இல்லாமை (Nil debt/ Low debt) தரமான வளர்ச்சி (Quality Growth) நிறுவனத்தில் நிறுவனர் பங்கு (Skin in the game) அகழி (Moat) அறம் (Corporate Governance) ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதாக இருக்கிறது. 


இரண்டு இலவசப் பங்களிப்பு மற்றும் ஒரேயொரு QIP மூலமாக மட்டும் அதன் முதல் (capital) விரிவாக்கம் அடைந்திருக்கிறது. 


நிறுவனத்திற்குக் கடன் எதுவும் கிடையாது. 


நீண்ட கால அளவில் மிகை ROCE மற்றும் ROE மூலமாக தரமான வளர்ச்சியை அது எட்டியிருக்கிறது. 


நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 37.63%, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு 33.18%, இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு 18.9% மற்றும் பொதுமக்கள் பங்கு 10.29% என்ற அளவீடுகளில் உள்ளது. 


அகழியைப் பொறுத்தவரை Naukri ன் நேர் பின்னூட்ட வளையம் அதன் flywheel (பறக்கும் சக்கரம்) ஆக செயல்படுகிறது. நிறுவனத்தின் துணிகர முதலீட்டு நிதி அதன் மற்றொரு மறைமுக அகழியாகச் செயல்படுகிறது. 


நிறுவனத்தின் அறத்தைப் பொறுத்து விளக்கும் முகமாக அதன் நிறுவனர் Sanjeev Bikhchandani ன் சிறிய, சீரிய ஒரு செயல்பாட்டைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. Makemytrip இணையதள நிறுவனத்தில் Sanjeev Bikhchandani ஒரு director ஆக இருக்கிறார். அந்த வகையில் அதன் சில பங்குகள் அவருக்குக் கிடைக்கின்றன. அந்தப் பங்குகளை அவர் அவருடைய பெயரில் வாங்காமல் Info Edge நிறுவனத்தின் பெயரில் பெறுகிறார். ஏனென்றால் Makemytrip நிறுவனத்திற்கு அவர் செலவிடும் நேரம் Info Edge நிறுவனத்திற்கு உரித்தானது. சிறிய ஒரு செயல் தான். ஆனால் பெரிய ஒரு செயல்.


Info Edge நிறுவனம் இரண்டு முறை ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்களிப்பை வழங்கியிருக்கிறது. சமீபத்தில் அதன் பத்து ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை இரண்டு ரூபாய் என்று பிரித்து அளித்திருக்கிறது. அதன் 2006 ஆம் ஆண்டு IPO விலிருந்து நாளது தேதி வரையிலான கால அளவில் அது ஒரு 62 bagger. இந்தக் கால அளவிற்கான CAGR 23 சதவீதம். நிறுவனத்தின் மார்ச் 2026 இருப்பு மற்றும் உபரி அதன் பங்கு முதல் (equity capital) போல் 290 மடங்கு உள்ளது. எதிர் வரும் காலங்களில் அது இலவசப் பங்களிப்பை வழங்கலாம். அதன் இரண்டு ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை ஒரு ரூபாய் என்று பிரித்து வழங்கலாம்.


Info Edge நிறுவனத்தை ஒரு Side car investment என்ற வகையிலும் பார்க்கலாம். பொதுவாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் side car investment என்ற வகையைச் சார்ந்தவை தான். நன்றாக யோசித்துப் பாருங்கள், நிறுவனப்பங்கு ஒன்றை நாம் வாங்குகிறோம். அதன் பங்குகளை வாங்குவது என்ற முடிவைத் தவிர வேறு ஏதேனும் முடிவுகளை நாம் எடுக்கிறோமா? நாம் வெறுமனே passive owner மட்டுமே. நம் சார்பாக நிறுவனம் தான் அன்றாடம் ஆயிரக்கணக்கான முடிவுகளை எடுக்கிறது. Info Edge நிறுவனம் சில இணையத்தளங்கள் மூலமாக இலாபம் ஈட்டுகிறது. இந்த இலாபத்தை வேறு இணையத்தளங்களை இனங்கண்டு அது முதலீடு செய்கிறது. அந்த வகையில் அதனை side car investment squared என்று சொல்லலாம்.


Info Edge நிறுவனம் Naukri இணையதளம் மூலமாகக் கிடைக்கும் அதன் உபரிப் பணத்தை மூன்று வகையான கருப்பொருள் (Theme) சார்ந்து முதலீடு செய்து வருகிறது.


1. AI: 28 நிறுவனங்களில் 614 கோடி ரூபாய் முதலீடு. அதன் தற்போதைய மதிப்பு 1268 கோடி ரூபாய். Gross IRR 31%


2. Deeptech: 30 நிறுவனங்களில் 455 கோடி ரூபாய் முதலீடு. தற்போதைய மதிப்பு 559 கோடி. Gross IRR 15%


3. Consumer Technology: 45 நிறுவனங்களில் 2755 கோடி ரூபாய் முதலீடு. தற்போதைய மதிப்பு 37214 கோடி. Gross IRR 34%


4. பிற துறை முதலீடு: 42 நிறுவனங்களில் 1257 கோடி ரூபாய் முதலீடு.


மொத்தமாக 135 நிறுவனங்களில் 4900 கோடி ரூபாய் முதலீடு. தற்போதைய மதிப்பு 41300 கோடி. Gross IRR 33%


இந்த 4900 கோடி ரூபாயில் Info Edge நிறுவனத்தின் தனிப்பட்ட முதலீடு 3600 கோடியாக உள்ளது. மீதி உள்ள 1300 கோடி AIF மூலமாக அது திரட்டிய நிதியாகும்.


முதலீடுகளில் Reinvestment risk என்பதான ஒரு அபாயம் இருக்கிறது. பத்திர முதலீடுகளை (bond investments) உதாரணமாகக் கொண்டு இதனைப் பார்க்கலாம். ஒரு FAAA குறியீட்டைக் கொண்ட பத்திர முதலீடு 7 சதவீத வருமானம் கொடுப்பதாகக் கொள்ளலாம். அந்தப் பத்திரத்தின் முடிவுக் காலத்தில் அதே 7 சதவீத வருமானம் கொடுப்பதான மற்றொரு பத்திர முதலீடு திறந்த நிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் இந்த 7 சதவீத வருமானத்தைத் தொடர்ந்து பெற முடியாது. இது Reinvestment risk என்பதாக அழைக்கப்படுகிறது. 


பங்கு முதலீடுகளுக்கும் இது பொருந்தும். Info Edge நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த மறுமுதலீட்டு அபாயம் என்பது அறவே இல்லை. அதன் Naukri இணையதளம் மூலமாக அது தரமான வருமானத்தை ஈட்டுகிறது. இந்த இலாபத்தை பிற இணையத்தளங்களில் முதலீடு செய்து இன்னும் மேலதிக வருமானத்தை அது ஈட்டுகிறது. நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடுகளால் அது இலாபப் பாதையில் தொடர்ந்து சென்ற வண்ணமாக இருக்கிறது. இவ்வாறு நிறுவனம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.


நிறைவாக நிறுவனத்திற்கான அபாயங்கள் குறித்துக் கொஞ்சம் பார்த்து விடலாம்.


Naukri இணையதளத்தில், தேவைப்படும் வேலை விவரங்களைப் பதிவிடவும், வேலை தேடுவோர் தரவுகளை ஆராயவும், நிறுவனங்கள், Info Edge க்குப் பணத்தை வழங்குகின்றன. வேலை தேடுவோரிடம் Info Edge பணம் எதுவும் பெறுவதில்லை. ஆனால், AI, இந்த வேலை தேடும் வேலையைத் தற்போது சிறப்பாகச் செய்யத் தொடங்கியிருக்கிறது. மேலும், AI முன்னேற்றத்தால் கணினி சார்ந்த வேலை வாய்ப்புகளில் ஒரு தொய்வும் ஏற்பட்டு அது Info Edge நிறுவனத்தின் வருவாயைப் பாதித்திருக்கிறது. பறக்கும் சக்கரத்தின் வேகம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது.


Info edge நிறுவனம் இந்த அபாயங்களை எதிர்கொள்ளும் விதமாக IT துறை சார்ந்த நிறுவனங்களைத் தவிர பிற துறைகளிலும், Global Capability Centre முதலியவற்றிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. IIM Jobs, Naukri Gulf என்று அதன் தேடுதல்களைப் பன்மயமாக்கம் செய்திருக்கிறது.


தேடல் வழிமுறைகளில் AI முன்னேற்றம் சார்ந்த அபாயங்களை எதிர்கொள்ள AI துறைகளில் Info Edge முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதும் ஒரு சாதகமான அம்சம்.


அதனுடைய இணையம் சார்ந்த முதலீட்டு வெற்றிகளில் Eternal மற்றும் PB Fintech பெரும்பான்மையான இடத்தைப் பிடித்திருப்பதும் ஒரு அபாயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், துணிகர முதலீடுகளின் அடிப்படை இந்த மாதிரி 80 - 20 என்ற வகையில் மட்டுமே இருக்கும்.


Allways day one மற்றும் Disrupt yourself or somebody else will போன்ற கருதுகோள்களையும், நம்மை நோக்கிப் பாய்ந்து வரும் அம்பை நாம் கவனித்து விட்டால் அது குறைந்த வேகத்துடன் தான் நம்மை நெருங்கும் என்பதையும் நிறுவனம் உணர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14