பங்குச் சலிப்பான்- ஒரு புதிய பார்வை

பங்குச் சலிப்பான்- ஒரு புதிய பார்வை

Stock Screen- A New Perspective 


நிறுவனப்பங்குகளை சில குறிப்பிட்ட அளவுருக்களில் (parameters) தேர்ந்தெடுத்துக் கொடுப்பவை பங்குச் சலிப்பான்கள் (stock screens) என்று அழைக்கப்படுகின்றன. 


சலிப்பான்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, பங்குகளை எண் சார் காரணிகளைக் கொண்டு எடுத்துக் கொடுக்கும் Quantitative Screen. மற்றொன்று அவற்றைப் பண்பு சார் காரணிகளைக் கொண்டு எடுத்துக் கொடுக்கும் Qualitative Screen. 


பங்குச் சலிப்பான்களை மிகவும் இறுக்கமாக (rigid) கட்டமைக்கக் கூடாது. அவற்றை நெகிழ்வாகவும் (loose) அமைக்கக் கூடாது. ரொம்பவும் இறுக்கமாகச் சலிப்பான்களை வைத்திருந்தால் எந்தப் பங்கும் அதில் தேறி வராது. ரொம்பவும் நெகிழ்வாக வைத்திருந்தால் எல்லாப் பங்கும் ஏறி வந்து விடும். 


பங்குச்சந்தை ஒரு சிக்கலான அமைப்பு. அதில் பங்குகளை தின அளவில் வாங்கி விற்கும் வணிகர்கள் ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். மறுபுறம் நீண்ட கால முதலீட்டாளர்கள். இவர்களுக்கிடையே குறுகிய கால முதலீட்டாளர்கள். ஒரு பக்கம் தொழில் நுட்பப் பகுப்பாளர்கள். இது போக பங்குகளை விற்று வாங்கும் short sellers. இவை போக முதலீட்டாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சூதாடிகள் ... F & O செயல்பாடுகள் ... நிறுவனங்கள் செய்யும் குழப்பங்கள் ஒரு பக்கம் ... அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் ஒரு பக்கம் ... இவையனைத்தும் விளிம்பு நிலையில் நடைபெறுவதற்கான ஒரு இடமே பங்குச்சந்தை. விளிம்பு நிலை என்பது குறித்த ஒரு எளிய விளக்கம். நிறுவனம் ஒன்றில் நிறுவனர் பங்கு 75 சதவீதம் இருப்பதாகக் கொள்ளலாம். மீதி 25 சதவீதம் மிதவைப் பங்குகள் என்று சொல்லப்படும் floating stock. இந்த மிதவைப் பங்குகளில் 5 சதவீதம் DII என்று அழைக்கப்படும் இந்திய நிறுவன முதலீட்டாளர்களிடமும், இன்னொரு 5 சதவீதம் FII என்று அழைக்கப்படும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடமும், மற்றொரு 5 சதவீதம் நீண்ட கால மதிப்பு முதலீட்டாளர்களிடமும் உள்ளதாகக் கொள்ளலாம். மீதி 10 சதவீதப் பங்குகள் மட்டுமே அன்றாடம் விற்பனைக்கு வர வாய்ப்புள்ள பங்குகள். வாய்ப்புள்ள பங்குகள் அனைத்தும் தின அளவில் விற்பனைக்கு வராது. ஆக, ஒரு நாளில் வாங்க மற்றும் விற்க என்று வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை குறைவிலும் குறைவு. இந்தக் குறைவான எண்ணிக்கையில், அதாவது, marginal என்று சொல்லப்படும் விளிம்பு நிலையில் வர்த்தகமாகும் பங்குகள் மட்டுமே நிறுவனத்தின் சந்தை மதிப்பைத் தீர்மானிக்கின்றன. இவை தான் நிறுவனர்களின் சொத்து மதிப்பைத் தீர்மானிக்கின்றன. உலகப் பணக்காரர் என்று Elon musk இவ்விதமாகவே கணக்கிடப்படுகிறார். ஆக, சந்தை மதிப்பு என்பது இத்தகைய வெவ்வேறு ஆட்டக்காரர்களால் விளிம்பு நிலையில் ஆடப்படுவதான ஒரு மிக மிக சிக்கலான அமைப்பு. இந்த சிக்கலை சிக்கலால் நாம் வெல்ல முடியாது. நூற்றுக்கும் மேற்பட்ட அளவுருக்களைக் கொண்டு பங்குகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. தேர்ந்தெடுக்கவும் கூடாது. சிக்கலை எளிமை கொண்டு எதிர்கொள்ள வேண்டும். Simplicity is the ultimate sophistication. எளிமையே இறுதியான அதிநுட்பம். அந்த வகையில் ஆறே ஆறு அளவுருக்களைக் கொண்டு நாம் பங்குச் சலிப்பான்களைக் கட்டமைக்கலாம். அவையாவன:


1. மிகை முதல் நீர்க்காமை (Minimum Equity Dilution)


2. மிகை கடன் இல்லாமை (Minimum Debt)


3. நிறுவனர் பங்கு (Promoter Holding)


4. தரமான வளர்ச்சி (Quality Growth)


5. அகழி (Moat)


6. அறம் (Ethics)


இதில் முதல் மூன்று அளவுருக்கள் எண் சார் (Quantitative) காரணிகள். கடைசி மூன்று அளவுருக்கள் பண்பு சார் (Qualitative) காரணிகள். 


மேலும் இந்த ஆறு அளவுருக்களும் ஒன்றையொன்று மேன்மைப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மிகை முதல் நீர்க்காமை, அதிகப்படியான நிறுவனர் பங்குக்கு அடிகோலுகிறது. மிகை கடன் இல்லாமை, தரமான வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று. நிறுவனத்தில் நிறுவனர் பங்கு அர்த்தமுள்ள அளவில் இருந்தால் தான் மற்ற அளவுருக்களில் அவர் கவனம் கொள்வார். அகழி, தரமான வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மற்ற அளவுருக்களுக்கும்  அவசியம். இவையெல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது அறம்.


உண்மை விவரிக்கப்படும் போதே பொய்யாகிறது என்பதாக ஒரு வாசகம் உண்டு. அதன் அர்த்தம் இந்தப் பதிவை எழுதும் இந்தக் கணத்தில் இன்னும் தெளிவாகப் புரிகிறது. முதலாவதாக  பங்குச் சலிப்பான் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும், அதனை எளிமையாக வடிவமைக்க வேண்டும், மேலும், இதன் ஒவ்வொரு அளவுருவும் அடுத்த அளவுருவை மேம்படுத்தும் விதமாக இது இருக்க வேண்டும் என்பதாக முடிவு செய்து காலக்கெடு எதுவும் வைத்து இதனை உருவாக்கவில்லை. இது காலங்களின் போக்கில் படித்தது, கேட்டது மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அமையப் பெற்றது. பற்பல ஆண்டு முதலீட்டுப் பயணத்தின் மூலமாக இது உருவாக்கம் பெற்றது. இயற்கையான முறையில் (organic) அனுபவரீதியாக உருவானதால் இது எளிமையாக உள்ளது. நண்பர் ஒருவர் பங்குகளை எவ்விதம் தேர்வு செய்து வாங்குவது என்று கேட்டதற்கு பதிலாக என்னுடைய செயல்பாடுகளை reverse engineering என்று சொல்லப்படும் மறு உருவாக்கம் செய்ததன் மூலம் இந்த ஆறு அளவுருக்கள் கிடைக்கப்பெற்றது. மேலும், இதனைப் பயன்படுத்திப் பணமாக்கமும் செய்ய முடிகிறது.


வரும் வாரங்களில் இந்த ஆறு அளவுருக்கள் குறித்தும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் ...


Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14