இயல்பு நிலை சாய்வு

இயல்பு நிலை சாய்வு

Status quo Bias 


இயல்பு நிலை சாய்வு என்பது ஏற்கெனவே உள்ள நிலைமைகளைப் பேணுதல், இந்த நிலைமைகளை மாற்றத்திற்கு உட்படுத்தினால் அது அனுகூலங்களுக்கு இட்டுச்செல்லும் என்று தெரிந்தும் பழைய நிலைமைகளையே தொடர்வதான ஒரு மனோநிலையாகும். 


பிதுரார்ஜித வடிவில் உங்களுக்குப் பாட்டனாரின் ஒரு பங்குத்தொகுப்பு கிடைப்பதாகக் கொள்ளலாம். அவர் காலத்தில் வாங்கப்பட்ட பங்குகளைக் கொண்டு அது கட்டப்பட்டுள்ளது தெளிவு. அது உங்கள் கைக்குக் கிடைத்ததும் நீங்கள் அந்தப் பங்குத்தொகுப்பைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி இனி தேறவே தேறாது என்பதான பங்குகளைக் களையெடுப்பது, மதில் மேல் பூனையாக இருக்கும் பங்குகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்துவது மற்றும் புதிய பங்குகளை மதிப்பாய்வு செய்து வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மாறாக, காலத்தின் கோலத்தில் உருமாறிய அவற்றை இவை எங்கள் பாட்டனார் வாங்கிய பங்கு என்று உணர்வுபூர்வமாக வைத்திருப்பது, இத்தகைய பங்குகளை விற்பது, வரி வகையறாக்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவற்றின் விற்பனையை ஒத்திப்போடுவது போன்றவை இயல்பு நிலை சாய்வின் பாற்பட்டதாகும். பங்குச்சந்தை குறித்த ஒரு புரிதல் உங்களுக்கு இல்லாமலிருக்கும் பட்சத்தில், மேலும்,  பங்குச்சந்தை குறித்துக் கற்க உங்களுக்கு  ஆர்வமில்லாமல் இருக்கும் பட்சத்தில் மொத்தப் பங்குத்தொகுப்பையும் விற்று விடுதல் மட்டுமே சரியான வழிமுறையாக இருக்கும். 


இன்னும் சிலர் அவர்கள் கட்டமைத்த பங்குத்தொகுப்பையே களையெடுக்காமல் வைத்திருப்பார்கள். இது நான் முதன்முதலில் வாங்கிய பங்கு, இது எனது விருப்பத்திற்கு உகந்த பங்கு என்று கூறிக் கொள்வார்கள். ஒருவேளை நாம் விற்ற பின்னர் பங்கின் விலை கூடினால் என்ன செய்வது என்ற அச்சம் கொண்டு எதுவும் செய்யாமல் விட்டு விடுவார்கள். இது நான் முதன்முதலில் வாங்கிய பங்கு என்ற சாய்வு உங்களுக்குத் தான் இருக்கும். அந்தப் பங்குக்கு இது எதுவும் தெரியாது. அண்ணன் நம்மை முதன்முதலில் வாங்கியிருக்கிறார், பன்மடங்காளர் ஆகாவிட்டாலும் ஒரு பத்து மடங்காளராவது ஆவோம் என்றெல்லாம் அது நினைக்காது.


மற்றும் சிலர் அவர்கள் முதலீட்டுத்தொகுப்பை பத்திரமாக இருக்கட்டும் என்று முழுவதும் கடன் பத்திரங்களால் கட்டியிருப்பார்கள். முதலீட்டாளர்கள் மாறா நிலை முதலீடுகள் (non-variable investments) மூலம் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குவது இயல்பானதே. பிரச்னை என்னவென்றால் இந்த மாறா நிலை முதலீடுகளிலிருந்து மாறாமல் நின்று விடக்கூடாது. நாளடைவில் முதலீடுகளின் அடுத்த படிநிலையான மாறும் நிலை முதலீடுகளுக்கு (variable investments) செல்ல வேண்டும். மாறா நிலை முதலீட்டு வருமானத்தை, கொதிநிலையில் இருக்கும் பணவீக்கம் முழுவதுமாக எரித்து விடும்.


மாறும் நிலை முதலீடுகள் என்பவை பிரதானமாக பங்கு முதலீடுகளைக் குறிப்பதாகும். பங்குகள் சதா சர்வ காலமும் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கும். ஆனால், நீண்ட கால அளவில், human ingenuity என்று கூறப்படும் மனிதத்தின் கூர்மதியின் காரணமாக பங்குச்சந்தையின் ஏறி இறங்கும் தளம் உயர்ந்த வண்ணமாகவே இருக்கும். முன்னொரு காலத்தில் இந்தத் தளம் 8000 என்ற புள்ளியில் நிலை கொண்டிருந்தது. இப்போது 80000 என்ற புள்ளியில் நிலை கொண்டிருக்கிறது. தரமான நிறுவனங்களை இனங்கண்டு அவற்றைக் காலப் பன்மயமாக்க (time diversification) முறையில் வாங்கும் போது, சந்தையின் இந்த உயர்ந்து வரும் தளத்திலான ஏற்ற இறக்கங்கள், முக்கியமாக இறக்கங்கள், மீண்டும் மீண்டும் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும். 


முதலீட்டாளர்கள், மாறா நிலை முதலீடுகளிலிருந்து மாறும் நிலை முதலீடுகளுக்கு உருமாற்றம் (Metamorphosis) அடைவது முக்கியம். ஆனால், இந்த உருமாற்றத்தை அதனுடன் நிறுத்திக் கொள்வது அதைவிட முக்கியம். இதன் அடுத்த கட்டமான F & O போன்றவற்றுக்குச் செல்வது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்.


எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும் அதன் எல்லைக் கோடுகளுக்குச் செல்லக்கூடாது. எப்போதும் ஊசலின் நடுவில் இருப்பது மட்டுமே பாதுகாப்பானது. Fixed Income ஊசலின் ஒரு முனையிலும் F & O போன்ற பெறுதிகள் ஊசலின் எதிர் முனையிலும் உள்ளன. 


மேலும் சிலர் காப்பீடுகளின் மூலம் முதலீட்டை மேற்கொள்வார்கள். காப்பீடு செல்வப் பாதுகாப்புக்கு உரித்தானது. அது செல்வ உருவாக்கத்திற்கானது அல்ல.


பங்குகளில் முதலீடு செய்பவர்களும் அவற்றைப் பார்க்காமல் பார்த்து (benign neglect) வரவேண்டும். மேலும் பங்குத்தொகுப்பை மேலாண்மை செய்வது என்பது ஒருமுறை செய்ய வேண்டிய செயல் அல்ல. அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு வழிமுறையாகும். இவ்வாறு முதலீட்டு முடிவுகளைச் சிந்தித்து எடுப்பது கடினமான ஒரு காரியமாகும். சிலருக்குச் சிந்திப்பதே ஒரு கடினமான காரியமாக இருக்கும்.


ஒரு நாளின் கணக்கில் எத்தனை முடிவுகளை நாம் எடுக்கிறோம் தெரியுமா? பத்து? நூறு? ஒரு நாளின் கணக்கில் நாம் சராசரியாக 35000 முடிவுகளை எடுக்கிறோம். எனவே சிந்தனைக் களைப்பின் (thinking fatigue) காரணமாக நாம் இயல்பு நிலை சாய்வின் பக்கம் சாய்வது இயல்பானது.


இந்த இயல்பு நிலை சாய்விலிருந்து விடுபடுவது எப்படி?


ஆயிரக்கணக்கான சாதாரண (mundane) விஷயங்களில் சிந்தனையை அதிகம் சிதற விடாமல் முதலீட்டு முடிவுகள் போன்ற முக்கியமான விஷயங்களில் சிந்தனையைச் செலவழிப்பது சரியான ஒரு சிந்தனையாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14