அதிர்ஷ்ட மொழிகளும் அதற்கான விளக்கங்களும்- 1

அதிர்ஷ்ட மொழிகளும் அதற்கான விளக்கங்களும்- 1


1. No one is luckier than the person who believes in his luck- German proverb


அதிர்ஷ்டத்தை நம்புகிறவரே மிகப்பெரிய 

அதிர்ஷ்டக்காரர்.


எதன் மேலும் நம்பிக்கை கொள்பவருக்குத் தான் வாழ்க்கை இருக்கிறது. அது கடவுளாக இருக்கட்டும் அல்லது அதிர்ஷ்டமாக இருக்கட்டும், நம்பிக்கை தான் அடுத்தடுத்த கதவுகளைத் திறக்கிறது. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. உலகின் எல்லாக் கண்டுபிடிப்புக்களும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்ற வாதம் உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது. பங்குச்சந்தை முதலீடு என்பது மனிதத்தின் கூர்மதியில் (Human Ingenuity) செய்யப்படும் முதலீடு. மனிதத்தின் கூர்மதிக்கு எல்லைகள் என்பதாக எதுவும் கிடையாது. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை நன்னம்பிக்கை (Optimism) மற்றும் அவநம்பிக்கை (Pessimism) என்ற இரு துருவங்களின் சேர்க்கையான புன்னகையுடனான அவநம்பிக்கை (Sunny Pessimism) என்ற எதிரெதிர் சிந்தனையில் (opposable mind) இயங்குவது இன்னும் சிறப்பு.


2. I am a great believer in luck and I find the harder I work, the more I have of it- Thomas Jefferson


நான் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புகிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுகிறது.


எத்தனை கற்களை ஒருவன் புரட்டுகிறானோ அத்தனை தங்கம் அவனுக்குக் கிடைக்கப்பெறும். பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இது உண்மை. 100 நிறுவனங்களைக் குறித்து நீங்கள் ஆராய்ந்தால் அதில் ஒன்றிரண்டு நிறுவனங்கள் முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும். எனில் 20 பங்குகளால் ஆன ஒரு பங்குத்தொகுப்பைக் கட்ட எத்தனை நிறுவனங்களைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்? அது எவ்வளவு பெரிய வேலையாக இருக்கும்? வாரன் பஃபெட்டிடம் இந்தக் கேள்வி ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு பஃபெட்டின் பதில்: Start with 'A' இவ்வாறு நிறுவனப்பங்குகளைத் தேர்வு செய்து பங்குத்தொகுப்பைக் கட்டிய பின்னர் அதனைப் பார்க்காமல் பார்த்து (benign neglect) வரவேண்டும். இவ்வாறு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறீர்களோ ...


3. The secret of a lucky life is making the most of a bad moment.


அதிர்ஷ்டமான வாழ்க்கையின் இரகசியம், துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டத்தின் வேர்களை இனங்காண்பதில் உள்ளது.


கடினமாக உழைத்து ஒரு பங்குத்தொகுப்பைக் கட்டமைத்து விட்டீர்கள். எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருக்கிறது. திடுதிப்பென்று பூவுலகைப் போர் மேகங்கள் சூழ்கின்றன. அல்லது கொள்ளை நோயின் தாக்கம் உலகெங்கிலும் உணரப்படுகிறது. சந்தை சரிகிறது. நீங்கள் பார்த்துப் பார்த்துக் கட்டிய முதலீட்டுக் கோட்டை உங்கள் கண்முன்னே விழுந்து நொறுங்குகிறது. இது உண்மையிலேயே துரதிர்ஷ்டமான ஒரு நிகழ்வு தான். ஆனால், பாருங்கள், இந்த துரதிர்ஷ்டத்தில் அதிர்ஷ்டத்தின் ஒரு வாய்ப்பும் ஒளிந்து கொண்டுள்ளது. நீங்கள் தரமான நிறுவனப்பங்குகளை வாங்கியிருக்கும் பட்சத்தில் அவற்றின் விலையை மட்டுமே சந்தையால் குறைக்க முடியும். அவற்றின் மதிப்பை சந்தையால் குறைக்க முடியாது. விலை குறைகையில் அவற்றின் மதிப்பு அதிகரித்துச் செல்வதையும் சந்தையால் தடுக்கவியலாது. இப்போது சந்தையின் தற்காலிகமான விலைக் குறைப்பைப் புறக்கணித்து மதிப்பை வாங்கும் செயல்களில் ஈடுபடுவது ஆகச்சிறந்த ஒரு செயலாக இருக்கும். இவ்வாறு உண்மையான முதலீட்டாளர்களால் கரடிச்சந்தையை உணர முடியாது. அவர்களைப் பொறுத்தவரை கரடிச்சந்தை தான் காளைச்சந்தை.


4. Better a ounce of luck than a pound of gold- Yiddish proverb


கிலோ கணக்கில் தங்கம் கிடைக்கப்பெறுவதை விட கிராம் கணக்கில் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவது மேலானது.


ஒரு idea உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமே என்ற விளம்பர வாசகம் கூறுவது மாதிரி பங்குச்சந்தையில் ஒரு எண்ணக்கரு பன்மடங்காளர்களை உருவாக்கும் வல்லமை படைத்தது. கூகுள் நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ளலாம். Google நிறுவனம் தேடுபொறியை வடிவமைக்கும் நோக்கில் தொடங்கப்படவில்லை. தின அளவில் மீமிகைப் பெருக்கத்தில் வளர்ந்து வரும் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தும் விதமாகத் தான் கூகுள் நிறுவனம் தொடங்கப்பெற்றது. ஒழுங்குபடுத்துவது என்றால் எந்த அளவீட்டைக் கொண்டு ஒழுங்குபடுத்துவது? ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றின் முக்கியத்துவம் அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எத்தனை பேர் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு பின் இணைப்பாகக் காட்டியிருக்கிறார்கள் என்பதில் நிலை கொண்டுள்ளது. கூகுள் நிறுவனர்கள் இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தினர். காப்பீடு குறித்த Human Life value என்ற கட்டுரை ஒன்றுக்கு LIC பின் இணைப்பு கொடுத்திருக்கிறதென்றால் அதற்கு முதல்தர முக்கியத்துவம். IRDAI இணைப்பு கொடுத்திருந்தால் அதற்கு இரண்டாம் தர முக்கியத்துவம் ... இவ்வாறான செயல்முறையை முடித்தால் இணையத்தளங்கள் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்து விடும். பின்னர், Human Life Value என்று கூகுள் தேடுபொறியில் உள்ளீடு செய்தால் மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரை முதலாவதாக வந்து விடும். இந்த எண்ணக்கருவில் தான் Google கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணக்கருவின் இன்றைய மதிப்பு 4.596 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் சொல்வதானால் 4,39,77,90,000 இலட்சம். இவ்வாறு அதிர்ஷ்டத்தைக் கொண்டு தங்கத்தை வாங்கலாம். ஆனால், தங்கத்தைக் கொண்டு அதிர்ஷ்டத்தை வாங்க முடியாது. 


5. Luck is what happens when preparation meets opportunity- Seneca


தயார்நிலையும் வாய்ப்பும் சந்திக்குமிடமே அதிர்ஷ்டம்.


முன்னரே குறிப்பிட்டவாறு கூகுள் நிறுவனம் தேடுபொறியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை அதன் நோக்கமாக ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தும் போது ஒரு இனிய விபத்தாக (Serendipity) தேடுபொறி கண்டடையப்படுகிறது. முன்பே பார்த்தபடி இணையத்தளங்களை ஒழுங்குபடுத்திய பின்னர் 'காப்பீடு' என்ற வார்த்தையை கூகுள் தேடுபொறியில் உள்ளீடு செய்தால் காப்பீடு சம்பந்தமான உங்களுடைய தேடுதலுக்குப் பொருத்தமான தகவல்களை அது வரிசைப்படுத்திக் காட்டும். கூகுள் நிறுவனர்களின் தயார்நிலையும் தேடுபொறி என்ற வாய்ப்பும் சந்திக்கும் பாங்கைக் கவனிக்க வேண்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14