வேகப் பாய்வை இனங்காணுதல்
வேகப் பாய்வை இனங்காணுதல்
Finding the fast flow
வாழ்க்கையில் பெரும்பாலோனோர் அவர்களுடைய கனவு என்ன என்று தெரியாமலேயே கடைசி வரை வாழ்ந்து மடிந்து விடுகிறார்கள். சிலருக்கு அவர்களுடைய கனவு என்னவென்று தெரியும். ஆனால் அதை நனவாக்கும் வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியாது. கனவை நனவாக்கும் வழிமுறைகளில் தலையாய ஒரு உத்தியாக இந்த finding the fast flow வைச் சொல்லலாம்.
உங்களுடைய கனவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தக் கனவு எங்கு உயிர்த்துடிப்புடன் நனவாகிக் கொண்டிருக்கிறதோ அத்தகைய இடங்களை நாடி நீங்கள் செல்ல வேண்டும்.
நீங்கள் ஒரு நாட்டுக்கே தலைவனாக வேண்டுமென்று விரும்பினாலும் சரி, நல்ல வேலை என்பது உங்களின் இலக்காக இருந்தாலும் சரி அவை நடைபெறும் இடங்களில் உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நடிகராக வேண்டுமென்று விரும்பினால் கோடம்பாக்கத்திற்கு நீங்கள் செல்ல வேண்டியது அவசியம். நல்ல வேலை வேண்டுமென்று விரும்பினால் linkedin தளத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.
பங்குச்சந்தைக்கு வருவோம். பங்குச்சந்தையில் உங்கள் முதலீடுகள் இலாபகரமாக இருக்க வேண்டுமென்றால் பங்கு சார்ந்த இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும். அதற்காக மும்பைக்குச் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை. குறைந்த பட்சம் முதலீட்டாளர் சங்கம் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். இவ்வாறான fast flow இடங்களுக்குச் செல்லும் போது கிடைக்கப்பெறும் ஒரு idea உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைப்பதாக இருக்கும். வாரன் பஃபெட்டின் மதிப்பு முதலீட்டு உத்திகளின் மேல் நான் கண்டதும் காதல் கொண்டதையும், அவர் முதலீட்டாளர்களுக்கு ஆண்டாண்டு எழுதும் கடிதங்களை காதல் கடிதம் மாதிரி படித்து என் உளப்பாங்கை வடிவமைத்துக் கொண்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நம் வாழ்க்கையில் நமக்கான ஆகப்பெரிய அதிர்ஷ்டத்தை strong links என்று சொல்லப்படும் நமது வலுவான இணைப்புகள், அதாவது நம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் உற்ற நண்பர்கள் வழங்குவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது அவ்வாறு தானா? பொதுவாக நம் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நட்புகள் நம்மைப் போன்ற சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கும். அவர்களுக்குத் தெரிந்தவர்கள் நமக்கும் தெரிந்தவர்களாக இருப்பார்கள். Weak links என்று சொல்லப்படும் வலுவற்ற இணைப்புகள் தான் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குவதாக இருக்கும். நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது பரிச்சயமானவர்கள், உங்கள் மகனின் ஆசிரியர், கோயிலில் அடிக்கடி சந்திக்கும் ஒரு நபர் ... என்று இந்த weak links எண்ணற்று இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை முறை வேறுபட்டதாக இருக்கும். உதாரணமாக நீங்கள் புதிய வேலை அல்லது வணிக முன்னெடுப்புகளை முயலும் பட்சத்தில் இவர்கள் மூலம் அது நிறைவேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். கணிப்பு ஒன்றின் படி ஒருவர் 500 வலுவான மற்றும் வலுவற்ற இணைப்புகள் கொண்டவராக இருக்கிறார்.
Small world phenomenon என்பதான ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு பரிசோதனை ஒன்று 1960 ஆம் ஆண்டு நடத்தப் பெற்றது. ஒருவரின் பெயர், வேலை மற்றும் ஊர் முதலிய தகவல்களை மட்டும் கொண்ட கடிதத்தை உரியவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் அவரைத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் நபரிடம் அந்தக் கடிதத்தை ஒப்படைக்க வேண்டும். உதாரணமாக, திரு.ரெங்கநாதன், Technical Analyst, மதுரை என்ற முகவரி எழுதப்பட்ட கடிதத்தை டெல்லியில் ஒருவரிடம் கொடுக்க வேண்டும். அது திரு.ரெங்கநாதனை சராசரியாக ஐந்து இணைப்புகள் அதிகபட்சமாக பத்து இணைப்புகளில் வந்தடையும். ஒருவருக்கு வலுவான மற்றும் வலுவற்ற 500 இணைப்புகள் இருக்கும் என்பதாகப் பார்த்தோம். இதனை 300 என்ற குறைந்த அளவில் வைத்துக் கொண்டால் கூட இந்த 300 பேர்களுக்கும் 300 பேரைத் தெரியும் என்ற கணக்கில் அடுத்த படிநிலை 90,000 (300×300) என்று வருகிறது. அதற்கடுத்த படிநிலை 2,70,00,000 (300×300×300) ஆகிறது. 300 நபர்களைத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு நபரின் மூன்றாவது படிநிலை 27 மில்லியனாக இருக்கும் போது கடிதம் திரு.ரெங்கநாதனை விரைவாகக் கண்டடைவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தற்போதைய முகநூல் உலகில், கடிதம், அதற்கு உரியவரை இன்னும் விரைவாகக் கண்டடைந்து விடும்.
Finding the fast flow ஐ பங்குச்சந்தை சார்ந்த புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவும், பங்குச்சந்தை சார்ந்த இணையத்தளங்களைத் தொடர்வதன் மூலமாகவும் அடையப் பெறலாம். புத்தகம் படிப்பது என்பது தனிமைத் தீவில் இருந்து கொண்டு பிறரிடம் தொடர்பு கொள்வதான ஒரு அதிசய நிகழ்வு. இந்தப் பதிவிற்கான அகத் தூண்டல் (Inspiration) Max Gunther எழுதிய How to get lucky புத்தகம் மூலமாகக் கிடைக்கப்பெற்றது.
அடுத்த முறை நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது எதிரே வருபவரைப் பார்த்து சற்றே புன்னகைக்க வேண்டுகிறேன். யார் கண்டது? அதிர்ஷ்ட தேவதை அவர் மூலமாகக் கூட உங்கள் கதவைத் தட்டலாம்.
Comments
Post a Comment