பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி?

பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி?


பங்குச்சந்தையில் தொடர்ந்தவாக்கிலான முதலீடுகளுக்குச் சிறு முதலீட்டாளர்களிடம் போதுமான பணம் இருக்கப்பெறாது என்பது உண்மை தான். அதுவும் buy and hold முதலீட்டு உத்திகளைத் தவம் போல் கடைப்பிடிப்பவர்களுக்கு இது இன்னும் கடினமான ஒன்றாக இருக்கும். மேலும், பங்குச்சந்தை முதலீடுகளுக்கு பூஜ்ய அல்லது குறை சதவீத வட்டியில் float money கிடைக்கப்பெற நாம் ஒன்றும் வாரன் பஃபெட் இல்லை. எனில், தொடர்ந்தவாக்கிலான பங்கு முதலீடுகளுக்கான பணத்தைத் திரட்டுவது எப்படி? வாருங்கள், பார்க்கலாம்.


Ford நிறுவனத்திற்கு ஒருமுறை பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகள் Ford நிறுவனத்திற்குக் கடன் வழங்கத் தயாராக இருந்தன. ஆனால், Henry Ford க்குக் கடன் என்ற வார்த்தையே பிடிக்காது. Henry Ford, அவரது நிறுவனத்தைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தார்.  தொழிற்சாலையில் வேண்டாத பொருட்களைக் கழிக்கும் வேலை மும்முரமாக நடைபெற்றது. அதன் மூலமாக நிறுவனத்திற்குத் தேவைக்கு அதிகமாகவே பணம் கிடைக்கப்பெற்றது. அதே மாதிரி நீங்கள் உங்கள் பங்குத்தொகுப்பையும் அவ்வப்போது பழுது பாருங்கள். அதன் மூலமாகவே உங்களுக்குப் புதிய முதலீடுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கப்பெறலாம். ஆனால் இது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய காரியம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இனி தேறவே தேறாது என்பதான பங்குகளை விற்கலாம். அடுத்ததாக குறைச் செயலாக்கம் புரியும் பங்குகளை விற்று வைக்கலாம். மற்றபடி இலாபத்தில் இருக்கும் பங்குகளை விற்று வைக்கக்கூடாது. இலாபத்தில் இருக்கும் பங்குகளை அவ்வப்போது விற்று வைத்தால் பன்மடங்காளர் பங்குகளை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. மேலும், இலாபத்தில் இருக்கும் பங்குகளைத் தொடர்ந்து விற்று வந்தால் உங்கள் பங்குத்தொகுப்பு நாளடைவில் குப்பைகளின் கூளமாகி விடும்.


நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் உங்கள் பங்குத்தொகுப்பின் மூலமாக ஒன்று முதல் ஒன்றரை சதவீதம் பங்கு ஈட்டு விகிதமாகக் கிடைக்கப்பெறும். பங்கு ஈட்டு விகிதப் பங்குகளில் அதிகப்படியான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலமாக இதனை நீங்கள் இரட்டிப்பாக்கிக் கொள்ளலாம். இந்த ஒன்றிரண்டு சதவீதப் பங்கு ஈட்டு விகிதங்களைக் குறைவாக மதிப்பிட்டு விட வேண்டாம். ITC நிறுவன 1976 ஆம் ஆண்டு முதல் பொது வெளியீட்டின் 100 பங்குகள் மூலமான இன்றைய பங்காதாயம் ஆண்டுக்கு ரூபாய் 592798/- மாதத்திற்கு 49399/- என்ற அளவில் கிடைக்கிறது. Working capital என்ற வகையில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த நிலையை அடைய தசாப்தங்கள் ஆகும். அதுவரை பொறுமை காக்க வேண்டும்.


Balmer Lawrie Investments மற்றும் Coal India போன்ற பங்குகள் தற்போது 6 சதவீத பங்கு ஈட்டு விகிதத்தைத் தரவல்லவையாக உள்ளன. இத்தகைய 

பங்கு ஈட்டு விகிதப் பங்குகளில் (dividend yield stocks) பெருவாரியாக முதலீடு செய்து அதன் மூலமாகப் பங்கு ஈட்டு விகிதப் பங்குத்தொகுப்பு ஒன்றைக் கட்டுவதன் மூலம் பணப்பாய்ச்சலை உடனடியாக உருவாக்கிக் கொள்ளலாம். 


பணத்தை இவ்வாறு திரட்டுவது ஒருபுறம் இருக்க பங்குத்தொகுப்பைப் பேணுவதற்கான உராய்வுச் செலவுகளைக் குறைப்பதும் பல்வேறு வகைகளில் பலன் தருவதாக இருக்கும். பங்குகளைப் பகுத்தாய்வு செய்து வாங்குவது மற்றும் ஆண்டாண்டு காலமான அதன் பன்மடங்காளர் பயணத்தில் பங்கு பெறுவதன் மூலமாக உராய்வுச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ளலாம். உராய்வுச்செலவுகள் என்று இங்கு குறிப்பிடப்படுவது தரகர் தரகு, வாங்குதல் விற்றல் பரவல் (bid ask spread) மற்றும் அரசாங்க வரி ஆகியவற்றால் ஆகப்பெற்றது. நீண்ட கால அளவில் வெறும் ஒரு சதவீத உராய்வுச்செலவுகள் கூட உங்கள் பங்குத்தொகுப்பைப் பதம் பார்த்து விடும். அதனினும் முக்கியமாக அடிக்கடி பங்குகளை வாங்குவதும் விற்பதும் தவறான வாங்குதல் மற்றும் விற்றலுக்கான நிகழ்தகவை அதிகரிக்கும். 


ஒரு சிலர் பங்குத்தொகுப்பை அடமானம் வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைப் பங்கு முதலீட்டுக்குப் பயன்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். பங்குச்சந்தையில் கரடியின் தாக்குதல் எப்போது நடைபெறும் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இப்போது சந்தை போர்த் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. இந்த மாதிரி சமயங்களில் mark to market என்ற அடிப்படையில் நீங்கள் அடமானம் பெற்ற பணத்தை உடனடியாகக் கட்ட வேண்டிய சூழ்நிலைகள் எழும். மேலும், பங்குகள் போன்ற மாறும் நிலை முதலீடுகளை மாறா நிலைக் கடனுடன் ஒருபோதும் இணைக்கக்கூடாது. கடன் இல்லாமை என்பது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் பொருந்தும்.


மற்றபடி தின வணிகம், குறுகிய கால வணிகம், பங்குகளை விற்று வாங்குவது, F & O முதலான பெறுதிகள் மூலமாகப் பணத்தை விரைவுபடுத்த முயல்வது முதலுக்கே மோசத்தை விளைவித்து விடும். கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையில்லாமல் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும்.


செல்வம் சேர்ப்பது முக்கியம். அதனை மன நிம்மதியுடன் சேர்ப்பது அதனினும் முக்கியம்.


முன்னரே கூறிய படி பன்மடங்காளர் பங்குகளை மறு முதலீட்டுக்காக விற்று வைப்பது விலையுயர்ந்த தவறாகி விடும். Peter Lynch ன் வார்த்தைகளில் சொல்வதானால் Don't cut your flowers and water your weeds. மலர்களைக் கொய்து களைகளுக்கு நீர் ஊற்றாதீர்கள்.


பங்குத்தொகுப்பின் மதிப்பில் பத்து சதவீதம் பணமாக வைத்துக் கொள்வதும் கேந்திரமான ஒரு உபாயமாக இருக்கும். ஏனெனில் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் எப்போது கதவைத் தட்டும் என்று யாராலும் கூறவியலாது.  


பெரும்பாலான முதலீட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது வேலையிலோ அல்லது தொழிலிலோ ஈடுபட்ட வண்ணமே இருப்பார்கள். இதன் மூலமாகக் கிடைக்கும் உபரிப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். செலவு போக மீதமிருக்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை விடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் போக மீதமிருக்கும் பணத்தை செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.


இவ்வாறு ஓரளவு பணத்தைத் திரட்டிய பின்னர் அதனை உடனே சந்தையில் முதலீடு செய்து விடக்கூடாது. சந்தையின் முடியையும் அடியையும் சரியாக யாராலும் கணிக்க முடியாது. ஒரு சீரான இடைவெளியில் சந்தை முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் உபரியாக கையில் இருக்கும் பணத்தை Liquid Bees முதலான ETF திட்டங்களில் போட்டு வைக்கலாம். அது சராசரியாக 4 முதல் 6 சதவீத வருமானத்தைத் தருவதாக இருக்கும்.


முதலீட்டுச் சமன்பாடு என்பது முதலீடு செய்யும் பணம், முதலீடுகளுக்கான கால அளவு மற்றும் முதலீடுகளின் மூலமான வருமானம் என்ற மூன்று அளவீடுகளால் ஆகப்பெற்றது. முதலீடு செய்வதற்கான பணம் குறைவாக இருந்தாலும், முதலீடுகளின் கால அளவை அதிகரிப்பது மற்றும் அவற்றுக்கான உராய்வுச்செலவுகளைக் குறைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் அதனை உயர் அளவுகளில் நிலை நிறுத்தலாம்.


பங்குச்சந்தையின் ஆதாரமான தன்மை என்னவென்றால் நீண்ட நெடுங்கால அளவில் பங்குகளின் விலையும் அவற்றின் மதிப்பும் ஒன்றிணையும். நம்முடைய செயல்பாடுகளையும் இதற்கு ஒத்திசைவாக அமைத்துக் கொண்டால் சந்தை மதிப்பை நம்மால் பணமாக்கம் செய்ய முடியும்.


Investment is a process not a product. முதலீடு என்பது ஒருமுறை வாங்குவதான பொருள் அல்ல. அது ஒரு செயல்முறை.


ஒருமுறை முதலீடுகளை விட தொடர்ந்த வாக்கிலான முதலீடுகள் தான் எப்போதும் பலன் தருவதாக இருக்கும். பங்குச்சந்தை முதலான மாறும் நிலை முதலீடுகளில் (Variable investment) இந்தத் தொடர்ந்த வாக்கிலான காலப் பன்மயமாக்க முதலீடுகள் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரே அளவு பணத்தைத் தொடர்ந்து முதலீடு செய்யும் போது சந்தை ஏறும் காலங்களில் குறைந்த அளவிலான பங்குகளையும் அது இறங்கும் காலங்களில் அதிக அளவிலான பங்குகளையும் வாங்க இயலும். மாறாக, மழைக்கு ஒதுங்குவது மாதிரி பங்குச்சந்தை முதலீடுகளை மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு சந்தையில் ஒரே அளவிலான பணத்தை ஒரே சீரான கால இடைவெளியில் முதலீடு செய்வதன் மூலமாக பணம் போதிய அளவு இல்லாமை என்ற தடைக்கல்லைப் படிக்கல்லாக மாற்றிக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14