எழுதுவது எப்படி?

எழுதுவது எப்படி?


Writing is thinking in paper என்று William Zinsser சொன்னதுடன் எனக்கு முழு சம்மதம். எழுதுவது என்பது காகிதத்தில் சிந்திப்பது. அல்லது Google Notes ல் சிந்திப்பது.


கூறியது கூறல் கூடாது. தேவையில்லாத வாசகங்கள் தேவையில்லாத இடங்களில் இடம் பெறக்கூடாது. ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ் கூறியது மாதிரி, திரைப்படத்தில், துப்பாக்கி ஒன்றை சுவரில் மாட்டியிருப்பதாகக் காண்பித்தால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தே ஆக வேண்டும்.


வாசகங்களை அமைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 'கண்டேன் சீதையை' என்பதற்கும் 'சீதையைக் கண்டேன்' என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இராமன் சீதையைக் காணாமல் கண்ணீர் விட்டுக் கவலையே வடிவாய் இருக்கிறான். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் அசோகவனத்தில் சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதனை இராமனிடம் தெரிவிக்க வருகிறான். அனுமன், சீதையைக் கண்டேன் என்று சொல்லியிருக்கலாம். சீதையை முன்னிறுத்திச் சொல்லும் போது அனுமன் சீதையைக் கண்டானா இல்லையா என்பது தொக்கி நிற்கிறது. அந்தத் தொக்கம் ஒரு வினாடி தான் என்றாலும் இராமனுக்கு அந்தக் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடாது என்று அனுமன் 'கண்டேன்' என்ற வார்த்தையை முன்னிறுத்துகிறான். கண்டேன் சீதையை என்று வாசகங்களை அமைத்ததில் கம்பனின் மேதைமை வெளிப்படுகிறது.


எழுதியதை எத்தனை முறை அழித்துத் திருத்தி எழுதினாலும் திருப்தி என்பது வரக்கூடாது. பழைய பதிவுகளைப் படிக்கும் போது இதனை இப்படி எழுதியிருக்கலாம், இதனைத் தவிர்த்திருக்கலாம், இதனைச் சேர்த்திருக்கலாம் என்று தோன்றும். அந்த வகையில் நான் அடிக்கடி உபயோகிக்கும் key ஆக × ஐ சொல்லலாம். ஐன்ஸ்டீன் குறித்த ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஐன்ஸ்டீன் காப்புரிமை சார்ந்த அலுவலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்கையில் தனது அவசியத் தேவைகளாகக் கூறியவை ஒரு நாற்காலி, ஒரு எழுதுமேஜை, நாலைந்து பென்சில்கள் மற்றும் 'ஒரு பெரிய குப்பைக்கூடை'


அழியாத செல்வம் கல்வி என்பது நூற்றுக்கு நூறு உண்மை. என்னிடத்தில் பத்து ரூபாய் இருக்கிறது. அதில் ஐந்து ரூபாயை உங்களுக்கு நான் தந்து விடுகிறேன். நம் இருவரிடமும் இப்போது ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கும். (முதலீட்டு) உத்திகள் என்பவை அப்படியல்ல. என்னிடத்தில் ஒரு உத்தி இருக்கிறது. அதனை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இப்போது நம் இருவரிடமும் அந்த உத்தி இருக்கும். நாம் பத்து நபர்களுடன் பகிர்ந்து கொண்டால் பத்து நபர்களிடமும் இருக்கும் அழியாத செல்வம் கல்வி.


மின்சாரம் மிதமிஞ்சி வரும் போது அதனைத் துண்டிப்பதற்கான எதிர் பின்னூட்ட வளையம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். படிக்கும் பழக்கம் நேர் பின்னூட்ட வளையம் மாதிரி செயல்படும். ஒரு துறை சார்ந்து படிக்கப் படிக்க ஒருபோதும் முடிவு பெறாத அறிவின் ஒரு சங்கிலி மாலையாகச் சேரும். படித்ததை எழுதுவதன் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளும் போது அதுவும் ஒரு தனிப்பட்ட நேர் பின்னூட்ட வளையமாகச் செயல்படும். படித்ததை எழுதுவது ... எழுதுவதற்காகப் படிப்பது ... மீண்டும் படித்ததை எழுதுவது ... அந்த வகையில் Morgan Housel சொன்னது மாதிரி எழுதுவது என்பது படிப்பதன் துணை விளைபொருள். Writing is the by-product of reading.


அதற்காக எழுதுவது என்பது படிப்பதை அப்படியே நகலெடுப்பது என்பதாக ஆகி விடாது. எண்ணங்களின் கூடுகையில் புதிய எண்ணக் கருக்கள் கிடைக்கப்பெறும்.


பேசுவது வேறு. எழுதுவது வேறு. எழுதும் போது புள்ளி விவரங்களைச் சரியாகக் கொடுக்க வேண்டும். வாரன் பஃபெட்டின் float குறித்து எழுதும் போது அதன் மதிப்பு எவ்வளவு என்பது எனக்கு ஒரு புதிய தகவல் (தற்போதைய float 176 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ரூபாய்க் கணக்கில் 1613075 கோடி) அதே மாதிரி வாரன் பஃபெட்டின் காப்பீட்டு நிறுவனங்கள் ஆயுட்காப்பீட்டில் கவனம் செலுத்துவதில்லை என்ற தகவலும் புதியது. பஜாஜ் ஆட்டோ பங்கு ஒரு பன்மடங்காளர் என்பது தெரியும். ஆனால் எவ்வளவு பெரிய பன்மடங்காளர் என்பது பஜாஜ் ஆட்டோ சார்ந்த ஒரு பதிவை எழுதும் வரை எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அது சார்ந்த எனது அறிவும் விருத்தியாவதைக் கவனியுங்கள். பிறருக்காக ஒரு தீபத்தை ஏற்றும் போது உங்கள் பாதையும் பிரகாசமடைகிறது.


இந்தப் பதிவுகளை எழுதும் போது serendipity என்று சொல்லப்படும் இனிய விபத்துகள் ஏராளம் நிகழ்ந்தன. ஒரு வாரம் எழுத முடியாமல் போன போது பதிவுகளின் தொடர் கண்ணி அறுந்து விடக்கூடாது என்பதற்காக பத்து பொன்மொழிகளைப் பதிவிட்டேன். ஒரு சிலருக்கு இந்தப் பொன்மொழிகள் மிகவும் பிடித்துப் போனது ஒரு இனிய திருப்பம். வாசகர்கள் கேள்வி கேட்டு நான் பதில் சொல்வது மாதிரி ஒரு பதிவை எழுத ஆரம்பித்தது முடிவேயில்லாமல் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. சமயங்களில் ஒரு கேள்விக்கான பதில் விரிவாக அமைந்து அதுவே தனிப்பட்ட ஒரு பதிவாகி விடுவதும் உண்டு. 'ஒரு கேள்வி ஒரு பதில்' என்பதான பதிவுகள் அவ்விதம் அமைந்தவை தான். இது போக கேள்வி கேட்பதற்கும், நக்கீரன் மாதிரி தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கும் சில நண்பர்கள் அமையப் பெற்றது என் பாக்கியம். அவர்களுக்கான பதில்களாக நிறையப் பதிவுகள் மலர்ந்தன. அந்த வகையில் என்னைத் துதி பாடுபவர்களை விட விமர்சனம் செய்பவர்களால் தான் வளர்ந்திருக்கிறேன் என்று காந்தியடிகள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருந்த ஜென் கதைகளைப் பங்குச்சந்தைப் பார்வையில் எழுத ஆரம்பித்தது ... பின்னர் இவ்வாறு எழுதவேண்டும் என்பதற்காக ஜென் கதைகளைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தது இன்னொரு நேர் பின்னூட்ட வளையம். அதே மாதிரி பங்குக் கதைகள் மற்றும் வேதாளக் கதைகள் என்பதான ஒரு தொடர்ச்சி ... கலைச்சொல் அகராதி ... நகைச்சுவை அகராதி ...


Earnest Hemingway கூறியது மாதிரி எழுதுவது சில சமயம் எளிமையாக இருக்கும். சில சமயம் பாறையைக் கடைவது மாதிரி அது கடினமாக இருக்கும்.


ஒரு கருத்தாக்கத்தை உங்களால் எளிமையாக விளக்க முடியவில்லையென்றால் அதனை நீங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதாக அர்த்தம் என்று ஐன்ஸ்டீன் சொன்னது நூறு சதவீதம் உண்மை. அந்த வகையில் வெவ்வேறு கருத்தாக்கங்களைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியே இந்தப் பதிவுகள்.


பகிர்ந்த துன்பம் பாதியாகிறது, பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது, பகிர்ந்த ஞானம் பன்மடங்காகிறது.


என்னுடைய சிறந்த பதிவு இன்னும் எழுதப்படவில்லை .

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14