வாழ்க்கை பதில்கள்- 3

வாழ்க்கை பதில்கள்- 3


கேள்வி: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா?


பதில்: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியும். தேவைப்படுபவர்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பணத்தைக் கொடுத்துப் பாருங்கள்.


கேள்வி: எல்லாக் காலத்திற்கும், எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துவதான அறிவுரை ஏதேனும் இருக்கிறதா?


பதில்: இதுவும் கடந்து போகும்!


கேள்வி: நெருப்பால் நெருப்பை அணைக்க முடியுமா?


பதில்: முடியும். காடு ஒன்றில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுகையில் நெருப்பு பரவி வரும் பகுதியை அடுத்து நெருப்பு வைத்து விடுவார்கள். அந்த நெருப்பு, நிலப்பரப்பை மரம் செடி கொடிகளின்றி வெறுமையாக்கி விடும். அதனைத் தாண்டி நெருப்பு பரவாது.


கேள்வி: பணத்தைப் பணமாகப் பார்ப்பது எப்படி?


பதில்: பணத்தை ஒரு கருவியாகப் பாருங்கள். சுத்தியல் ஒரு கருவி. அந்தக் கருவியை எப்போது பயன்படுத்துவீர்கள்? ஆணியை அடிக்க மற்றும் ஆணியை எடுக்கும் போது. அதே மாதிரி பணத்தையும் பாருங்கள். பணம் என்பது நிதி விடுதலை மற்றும் அதன் மூலமான நேர விடுதலைக்கான ஒரு கருவி. அவ்வளவு மட்டுமே. மற்றபடி கையில் எப்போதும் சுத்தியலை வைத்திருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாகவே தெரியும்.


கேள்வி: காலப் பயணம் சாத்தியமா?


பதில்: கதைகளில் சாத்தியம். இன்னும் சொல்லப்போனால் கதாசிரியர்களுக்கு வற்றாத ஒரு ஜீவ நதியாக இந்தக் காலப் பயணக் கதைக்கரு செயல்படுகிறது. காலப் பயணக் கதை எழுதும் போது ஒரேயொரு விஷயத்தில் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறந்த காலத்தில் பயணிக்கையில் எக்காரணம் கொண்டும் நீங்கள் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நேரடியாகக் குறுக்கிடக்கூடாது. ஆனால், பணத்தைக் காலப் பயணம் செய்யலாம். கடன் என்பது எதிர்காலப் பணத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டு வருவது. முதலீடு என்பது நிகழ்காலப் பணத்தை எதிர்காலத்திற்குக் கொண்டு செல்வது.


கேள்வி: ஓஷோ, எதிர்ப்பிலேயே வாழுங்கள் என்பதாகக் கூறுகிறார். எதிர்ப்பிலேயே ஒருவரால் வாழ முடியுமா?


பதில்: உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். கடற்கரை ஓரம் அந்த ஊர் அமைந்திருந்தது. மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடித்து மீண்டும் கரைக்குத் திரும்ப வாரக் கணக்காகி விடும். இவ்வாறு தாமதமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்ட மீன்கள் அவற்றின் இயல்பான சுவையை இழந்து விட்டதாக அவற்றை உண்டவர்கள் புகார் கூறினர். மீனவர்கள் படகில் ஒரு நீர்த்தொட்டியை அமைத்து பிடிபட்ட மீன்களை அதில் நீந்த விட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர். இப்போது சுவை கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்பது மீன் பிரியர்களின் கருத்தாக இருந்தது. மீனவர்கள் இப்போது அந்த நீர்த்தொட்டிக்குள் குட்டிச் சுறா ஒன்றையும் நீந்த விட்டனர். சுறா ஒரு சில மீன்களை உண்டதென்னவோ நஷ்டம் என்றாலும் சுறாவால் சதா துரத்தப்பட்டு உயிர் பிழைத்த மீன்கள் துடிப்புடன் இருந்தன. அவை சுவையுடனும் இருந்ததாக மக்கள் மகிழ்ந்தனர். எதிர்ப்பு சரியானது.


கேள்வி: என் மகன் என்னை மதிக்கவே மாட்டேன் என்கிறான்?


பதில்: கீழ்க்கண்ட பட்டியல் உங்கள் கேள்விக்குப் பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்.


தந்தையைப் பற்றி மகன்கள் கணிப்பது:


5 வயது: என் தந்தைக்கு எல்லா விஷயங்களும் தெரியும்.


10 வயது: என் தந்தைக்குப் பல விஷயங்களைப் பற்றி நன்கு தெரியும்.


20 வயது: ஏதோ கொஞ்சம் தெரியும்.


25 வயது: கிடக்கிறது கிழம். அவரிடம் போய் யோசனை கேட்பதா?


35 வயது: பழைய பஞ்சாங்கம்! காலம் மாறியது அவருக்கு எங்கே தெரிகிறது?


50 வயது: நிறைய விஷயங்களில் என் தந்தை தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்.


60 வயது: அவரின் அறிவும், அனுபவமும் எங்கே? நான் எங்கே?


கேள்வி: முதலீட்டு அடிப்படையில் ஒருவர் எத்தனை வீடுகள் வைத்துக் கொள்ளலாம்?


பதில்: வீடு என்பது நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தை ஒட்டி மட்டுமே வளர்ந்து வரக்கூடிய ஒரு முதலீடு. அந்த வகையில் நாம் வாழ்வதற்கு ஒரேயொரு வீட்டில் முதலீடு செய்வது மட்டும் போதுமானது. மேலும், நாம் கட்டிய வீட்டில் வாழும் போது   Psychic income என்று சொல்லப்படும் மனோரீதியான வருமானமும் கிடைக்கப்பெறும்.


கேள்வி: மனிதர்கள் சாகாவரம் பெற முடியாதா?


பதில்: உயிருடன் இருப்பது வேறு. ஆரோக்கியத்துடன் இருப்பது வேறு. ஒரு பொன்மொழி கூறுவது மாதிரி கரையான் அரித்து நெடுங்காலம் இருப்பதைக் காட்டிலும் பூவாணமாய்ப் பளிச்சென்று கொஞ்ச காலம் இருப்பதை நான் விரும்புகிறேன்.


கேள்வி: அடிக்கடி எதையாவது மறந்து விடுகிறேன்?


பதில்: எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்து விடும். சாவியை அதற்கான இடத்தில் தொங்க விடுவது, புத்தகத்தை அதற்கான அலமாரியில், அதற்கான வரிசைக்கிரமப்படி அடுக்கி வைப்பது ... எப்போதாவது ஒரு செயலைச் செய்யவிருக்கும் பட்சத்தில் உங்கள் தினசரி வாழ்க்கை ஒழுங்கில் ஒரு தடங்கலை ஏற்படுத்தி விடுங்கள். உதாரணமாக அலுவலகத்திற்குச் செல்லும் போது pen drive ஐ எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் உங்கள் காலணியை வெவ்வேறு இடங்களில் போட்டு வைக்கலாம். காலணியைத் தேடும் போது pen drive ஐ எடுத்துச்செல்ல வேண்டுமென்பது நினைவுக்கு வந்து விடும். காலணியை எங்கு வைத்தோம் என்று மறக்காமல் இருப்பது அவசியம்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14