பங்கு கேள்வி பதில்- 9
பங்கு கேள்வி பதில்- 9
கேள்வி : IRCTC நிறுவனப்பங்கு நீண்ட காலமாக நகரவே இல்லை?
பதில்: PE, Super Fast Express வேகத்தில் முன் சென்று விட்டது. EPS பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
கேள்வி: 2026 ஆம் ஆண்டுக்கு எந்தப் பங்கை நீண்ட காலம் வைத்துக் கொள்ளலாம்?
பதில்: *^^#
கேள்வி: Infosys Technologies, ITC முதலான பங்குகள் ஏன் நத்தை நடை நடக்கின்றன?
பதில்: பங்கு முதலீடுகள் மூலமாக இரண்டு விதங்களில் பணம் ஈட்டலாம். ஒன்று முதலீட்டுப் பெருக்கம் (capital appreciation) இன்னொன்று பங்காதாயம் (dividend) நிறுவனங்கள், இளமையாக இருக்கும் போது முதலீட்டுப் பெருக்கம் செயல்படும். நிறுவனங்கள், தத்தமது மிகுதிப் பணத்தை பங்காதாயமாக வழங்காமல் அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். அவை பெரிதாக வளர்ந்த பின்னர் பங்காதாயத்தை வழங்கத் துவங்கும். நாட்பட இந்த பங்காதாய வழங்கல் விகிதம் (dividend payout ratio) அதிகரிக்கும். இதற்கான சிகர உதாரணங்களாக Infosys மற்றும் ITC நிறுவனங்களைச் சொல்லலாம். Infosys நிறுவனத்தின் பங்காதாய வழங்கல் விகிதம் 60 சதவீதம். ITC நிறுவனத்திற்கு இது 80 சதவீதம். இந்தக் கட்டத்தில் அவை பங்கு முதலீடுகள் மாதிரி செயல்படாமல் பத்திர (bond) முதலீடுகள் மாதிரி செயல்படத் துவங்கும். வேறு மாதிரி சொல்வதானால் நீங்கள் குறிப்பிட்டவாறு அவை நத்தை நடை நடக்கும்.
கேள்வி: ITC நிறுவன demerger மூலமாக வெறும் பத்து ITC Hotels பங்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன?
பதில்: நூறு ITC பங்குகளை நீங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் கணக்கு சரிதான். ITC நிறுவன IPO வில் நூறு பங்குகளை வாங்கி அதனை இன்றளவும் நீங்கள் வைத்திருந்தால் ITC Hotels பங்குகள் 4131 என்ற எண்ணிக்கையில் கிடைக்கப் பெற்றிருக்கும்.
கேள்வி : நான் ஒரு பங்கை வாங்க முனைகையில் சொல்லி வைத்தது மாதிரி அதன் விலை உயர்ந்து விடுகிறது . நான் அதனை வாங்காமல் விட்டு விடுகிறேன்?
பதில்: நிறுவனப்பங்கின் விலையைப் பார்க்காதீர்கள். அப்படியே பார்த்தாலும் இந்த விலை உயர்வைச் சதவீதக் கணக்கில் பாருங்கள். அதன் PE ஐ பார்ப்பது இன்னும் சிறந்த ஒரு வழிமுறையாக இருக்கும். CAMS நிறுவனப்பங்கு கடந்த ஒரு மாதத்தில் 184.50 ரூபாய் உயர்ந்திருக்கிறது. சதவீதக்கணக்கில் அது 4.87 % மட்டுமே. PE அடிப்படையில் அது 1.05 விகித உயர்வு மட்டுமே. நீண்ட கால அளவில் இவையெல்லாம் வெறும் முழுமையாக்கப் பிழைகள் (rounding error)
கேள்வி: நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இலவசப்பங்களிப்பை மேற்கொள்வது குறித்து?
பதில்: Buyer beware. வாங்குபவர் கவனம். Penny stocks என்று அழைக்கப்படும் ரூபாய் பங்குகள் இவ்வாறு இலவசப் பங்களிப்பை மேற்கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. நீண்ட கால அளவில் இலவசப் பங்களிப்பின் முக்கியமான பலாபலனே இந்த இலவசப் பங்குகளுக்கும் நிறுவனங்கள் வழங்கும் பங்காதாயம் மட்டும் தான். இவ்வாறு ஆண்டாண்டு அதிகரித்து வரும் பங்காதாயம் அதிகரித்து வரும் பங்கின் விலைகளுக்கு இட்டுச் செல்லும். Wealth creation எனப்படும் செல்வ வளம் பங்குச்சந்தையில் இவ்வாறு தான் உருவாகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வாறு பங்காதாயங்களை வழங்கும்? ஒருவேளை இருப்பு மற்றும் உபரிப் பணத்திலிருந்து பங்காதாயங்களை வழங்கினாலும் வழங்கலாம். கலிகாலம். பெயர் தெரியாத நிறுவனங்கள் இலவசப்பங்குகளை வழங்கும் போது அவற்றின் promoter holding மற்றும் public holding போன்ற தரவுகளை ஆராய்வது எனது ஒரு பழக்கம். அவை பெரும்பாலும் 1:99 என்ற அளவில் மட்டுமே இருக்கும்.
கேள்வி: Infosys பங்கு 2000 ஆவது ஆண்டுவாக்கில் 500 என்ற PE விகிதத்தில் வர்த்தகமானது. அந்த விலையில் அதன் பங்குகளை வாங்கியவர்கள் இலாபம் அல்லது நஷ்டம் இல்லாத நிலையை அடையப் பல்லாண்டுகள் பிடித்தது. இதனை எப்படி எடுத்துக் கொள்வது?
பதில்: அது எந்த நிறுவனப்பங்காக இருந்தாலும் சரி, எவ்வளவு மீமிகைப் பெருக்கத்தில் நிறுவனம் வளர்ந்து வந்தாலும் சரி, 500 என்ற PE விகிதமெல்லாம் ரொம்பவே அதிகப்படியானது. 500 என்ற விலை-வருவாய் விகிதத்தின் அர்த்தம் என்னவென்றால் நிறுவனம் தற்போது ஈட்டும் வருவாயைப் போல எதிர்வரும் 500 ஆண்டுகளுக்கும் ஈட்டும் என்று கணக்கிட்டு இந்த 500 வருட வருமானத்தையும் மொத்தமாகக் கொடுத்து அதன் பங்குகளை வாங்குவது. 500 என்ற PE ஒரு பக்கம் இருந்தாலும் பங்குகளைக் காலப் பன்மயமாக்கம் செய்வது இதற்கு ஒரு மாற்றாக இருக்கும். காலப்போக்கில் சந்தை தன்னிலை அடையும் போது இந்த 500 என்ற PE எப்படியாகினும் குறைந்து கொண்டே வரும். முதலீட்டாளர்களின் உணர்வுகள் காரணமாக சந்தை ஊசலாடி வரும் போது பங்குகள் இந்த உயர் PE ன் எதிர் துருவத்திற்கு வந்து குறை PE அளவுகளில் வர்த்தகமாகக் கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்தப் பங்குகளைத் தொடர்ந்து வாங்குவது இலாபம் அல்லது நஷ்டம் இல்லாத நிலையை விரைவில் எட்டவும், மேலும், இலாபப் பாதைக்குத் திரும்புவதற்கும் வழிவகை செய்வதாக இருக்கும். இந்த வழிமுறை Infosys போன்ற தரமான பங்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
கேள்வி: பெரு நிறுவனப் பங்குகள் மூலமாக 0.5 சதவீதம் என்ற அளவுகளில் மட்டுமே பங்காதாயம் கிடைக்கப்பெறுகிறது. ITC முதலான நிறுவனங்கள் கூட மூன்று சதவீதம் என்ற பங்கு ஈட்டு விகிதத்தில் தான் வர்த்தகமாகிறது. இதனை ஒரு வருமானமாக எவ்விதம் சொல்ல முடியும்?
பதில்: இத்தகைய பெரு நிறுவனங்கள் சிறிய அளவிலிருந்து வளர்ந்து இந்த நிலையை எட்டியிருக்கின்றன. நீங்கள் ITC நிறுவனப்பங்கு குறித்துக் குறிப்பிட்டிருப்பது உண்மை தான். தற்போது ITC பங்குகளை வாங்கினால் வெறும் 3 சதவீதம் மட்டுமே பங்காதாயமாகக் கிடைக்கப்பெறும். ஆனால் ITC நிறுவன IPO முதலீட்டாளருக்கான பங்காதாயக் கணக்கு 39520 சதவீதம் வருகிறது. நீங்கள் படித்தது உண்மை தான். அது 39520 சதவீதம். இத்தனை சதவீத வருமானம் கொடுக்கக்கூடிய ஒரு பங்கின் விலை கூடியே தீர வேண்டும். ITC அதன் IPO விலிருந்து 11142 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது. அதிகரித்து வரும் பங்காதாயம் மற்றும் இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைத் தரக்கூடிய பங்குகளின் முதலீட்டுப்பெருக்கம் இந்த இரண்டு மட்டுமே பங்குச்சந்தையின் அடிநாதமாகும்.
கேள்வி: பங்குச்சந்தை ஏன் குடிகாரனின் நடையாக இருக்கிறது?
பதில்: Marginal buying என்று சொல்லப்படும் குறைவான எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளே நிறுவனத்தின் மொத்த மதிப்பையும் தீர்மானிக்கின்றன. Tata Investment Corporation ன் 75 சதவீதப் பங்குகள் நிறுவனர்கள் வசம் உள்ளன. இவை விற்பனைக்கு வராது. நீண்ட கால சிறு முதலீட்டாளர்களின் பங்கும் விற்பனைக்கு வராது. ஆக, அன்றாடம் விற்பனைக்கு வரும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். இந்தக் குறைவான பங்குகளே நிறுவனத்தின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பைத் தீர்மானிக்கின்றன. தின அளவில் நிறுவனப்பங்கு ஒன்று ஆயிரங்களில் வர்த்தகமாவதாகக் கொள்ளலாம். திடுதிப்பென்று இலட்சம் பங்குகளுக்கான தேவைப்பாடு ஏற்பட்டால் பங்கின் விலை கூடி விடும். இது தலைகீழாகவும் நடக்கும். ஆனால், நீண்ட கால சராசரி என்ற அளவில் இந்தத் தள்ளாட்டங்கள் சமன் செய்யப்பட்டு பங்குகளின் விலை அதன் மதிப்பை நோக்கி நகரும்.
கேள்வி: ஒரு நிறுவனப் பங்கு 5000 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது. நான் ஒரு சிறு முதலீட்டாளர். என்னால் அதன் ஒரு பங்கினை மட்டுமே வாங்க இயலும். இந்த அளவீட்டில் ஒரு அர்த்தமுள்ள பங்குத் தொகுப்பை என்று நான் உருவாக்குவது?
பதில்: அது அவ்வாறு அல்ல. HDFC முதல் பங்கு வெளியீட்டின் (IPO) ஒரு பங்கு, இலவசப்பங்களிப்பு (bonus issue) பங்குப்பிரிப்பு (stock split) மற்றும் தலைகீழ் இணைப்பின் (reverse merger) பின்னர் 336 HDFC வங்கிப் பங்குகளாக மாறியிருக்கும். 2010 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட Balkrishna Industries நிறுவனத்தின் 10 பங்குகள் பங்குப் பிரிப்பு / இலவசப்பங்களிப்பின் பின்னர் 100 பங்குகளாக உருப்பெருக்கம் அடைந்திருக்கும். என்னுடைய அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன். 2008 ஆம் ஆண்டு நான் வாங்கிய ஐம்பது V Guard நிறுவனப் பங்குகள் தற்போது 700 என்ற இலக்கத்தில் உள்ளன. எவ்வளவு பங்குகளை வாங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. வாங்கிய பங்குகளை எவ்வளவு காலம் வைத்திருக்கிறீர்கள் என்பது மட்டுமே முக்கியமானது. 1946 ல் வாங்கப்பட்ட விப்ரோ நிறுவனத்தின் மூன்றே மூன்று பங்குகள் 1857275 பங்குகளாக மலர்ந்து மணம் வீசுவதை மறந்து விட வேண்டாம். நீங்கள் இன்று வாங்கும் ஒவ்வொரு பங்கையும் ஒரு விதையாகப் பாருங்கள். மிகவும் முக்கியமாக அறுவடைகளைக் கணக்கில் கொள்ளாதீர்கள். தினசரி விதைக்கும் விதைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment