பங்குச்சந்தை பதில்கள் - 13

பங்குச்சந்தை பதில்கள் - 13


கேள்வி : பங்குச்சந்தை சரிவு , முதலீட்டாளர் பணம் இலட்சம் கோடி மாயம் என்று பத்திரிகை செய்தியைப் படிக்கும் போது உங்களை நினைத்துக் கொள்வேன் ?


பதில் : பங்குச்சந்தை உயர்வு , முதலீட்டாளர் பணம் இத்தனை கோடி வரவு என்று பத்திரிகை செய்தியைப் படிக்கும் போதும் என்னை நினைத்துக் கொள்ள வேண்டுகிறேன் .


கேள்வி : பரஸ்பர நிதி SIP க்களுக்கான பணத்தை முன்னதாகச் செலுத்தலாமா ?


பதில் : வழி முறைகளில் களி கொள்ளுங்கள் .


கேள்வி : பங்கு வியாபாரத்தில் இறங்குவதற்கு முன்னரான பாவனை வியாபாரம் (paper trading) சிறந்த ஒரு உத்தி தானா ?


பதில் : காகிதக் காளைகள் ஒருபோதும் காங்கேயம் காளைகள் ஆக முடியாது . 


கேள்வி : ஏமாற்று முதலீட்டுத் திட்டங்களை எப்படிக் கண்டறிவது ?


பதில் : அபாயமும் வெகுமதியும் எப்போதும் நேர் கோட்டில் இணைந்திருக்கும் . அபாயம் அதிகரிக்க அதிகரிக்க வெகுமதியும் அதிகரிக்கும் . யாராவது அபாயமே இல்லாத வெகுமதி முதலீடுகள் என்று மாற்றிச் சொன்னால் அது ஏமாற்றுத் திட்டம் என்று அறிந்து கொள்ளுங்கள் . அத்தகையவர்களைக் கண்டால் அருகாமை சந்துகளில் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் .


கேள்வி : பயிற்சியே தேவைப்படாத துறை ஏதேனும் இருக்கிறதா ?


பதில் : இருக்கிறதே ? பங்குச்சந்தை முதலீடுகள் ?!


கேள்வி : கொந்தளிப்பான பங்குச்சந்தையில் பணம் பண்ணுவது எப்படி ?


பதில் : நீங்கள் கொந்தளிப்பாகாமல் இருப்பதன் மூலமாக .


கேள்வி : பங்குச்சந்தை ஏறி இறங்கிய வண்ணமாகவே இருக்கிறது . கடன் சந்தை ஒரே சீராக உள்ளது . நிலையற்ற பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை விட நிலையான கடன் சந்தையில் முதலீடு செய்வது தானே சிறந்தது ?


பதில் : நிலையான சந்தை நிலையற்றது . நிலையற்ற சந்தை நிலையானது .


கேள்வி : பிட் காயின் முதலீட்டில் எனக்கு நஷ்டமாகி விட்டது . அதை மீட்டெடுக்க ஏதேனும் வழிவகைகள் உள்ளதா ?


பதில் : குழிக்குள் விழுந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குழியை இன்னும் ஆழமாகத் தோண்டாமல் இருப்பது .


கேள்வி : சந்தை சரிவதற்கு முன்னர் பங்குகளை விற்று வைப்பது அறிவார்ந்த ஒரு செயல் தானே ?


பதில் : நிச்சயமாக . ஆனால் சந்தை சரியப் போவதை யாரும் முன்னதாக அறிந்து கொள்ள முடியாதே ? அதே மாதிரி அது உயரப் போவதையும் முன்னதாகத் தெரிந்து கொள்ள முடியாது .


கேள்வி : F & O மூலமான நஷ்டங்களைத் தவிர்ப்பது எப்படி ?


பதில் : ரொம்பவும் சுலபம் . அவற்றில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதீர்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14