கதைகளின் கதை

கதைகளின் கதை

Narrative fallacy


' Jeff bezos , அமேசான் என்கிற இணையவழி , பொருட்கள் விற்கும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் . புத்தகம் விற்பதாகத் தொடங்கப்பட்ட அமேசான் இன்று பொங்கல் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களையும் விற்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது . அதன் சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் அமெரிக்க டாலர் . அது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது . Bezos , அதன் பங்குகள் மூலமாக உலகப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார் '


அமேசான் நிறுவனத்தைக் குறித்து இவ்வாறு விளக்குவது narrative fallacy ன் பாற்பட்டது .


எந்த ஒரு நிறுவனமும் இவ்வாறு நேர்கோட்டில் பயணித்திருக்காது .


நாம் அமேசான் நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இன்று வரையிலான கதையை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம் . Bezos , அமேசான் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் D E Shaw என்கிற நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் . அப்போது இணையத்தளங்கள் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாவதைக் குறித்த வரைபடம் ஒன்று அவருக்குப் பார்க்கக் கிடைக்கிறது . இப்போது Bezos முன்னர் இரண்டு வாய்ப்புகள் ... ஒன்று தான் ஏற்கெனவே வேலை பார்க்கும் நிறுவனத்தின் நிச்சயமான பணியைத் தொடர்வது . மற்றொன்று மூடுபனியாக இருக்கும் நிச்சயமில்லாத எதிர்காலத்திற்குள் காலடி எடுத்து வைப்பது . Bezos ஆல் சட்டென்று ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை . அப்போது regret minimalisation framework அவருக்கு உதவுகிறது . அதென்ன regret minimalisation framework ? இப்போது நான் பார்க்கும் இந்த வேலையைத் துறந்து இணையத்தள வியாபாரத்தில் இறங்காவிட்டால் 60 வயதில் இதற்காக நான் வருத்தப்படுவேனா , மாட்டேனா ? கண்டிப்பாக வருத்தப்படுவேன் . மறுகணம் வேலையைத் துறக்க முடிவெடுக்கிறார் .


நிறுவனத்திற்குப் பெயர் சூட்டுவது கூட ஒரு பெரிய வழிமுறையாக இருந்திருக்கிறது . பெயரில் என்ன இருக்கிறது ? ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் மணக்கத் தானே செய்யும் என்பதெல்லாம் சரி . ஆனால் பெயரில் நிறைய இருக்கிறது . இணையத்தளங்களின் பெயர் உங்களை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் . சிறியதாக இருக்க வேண்டும் . ஆங்கில அகராதியில் அகர வரிசைப்படி முதலில் வந்தால் இன்னும் சிறப்பு . அமேசான் நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் : aard ,  awake , bookmall , browse , cadabra , relentless . கடைசியில் Jeff , அமேசான் என்கிற பெயரைத் தேர்ந்தெடுக்கிறார் . அமேசான் உலகின் ஆகப்பெரிய நதி (புத்தகக் கடை) அமேசான் உலகின் ஆகப்பெரிய நதி மட்டுமல்ல , அடுத்த ஆகப்பெரிய நதியை விட அது பன்மடங்கு பெரியது . மேலும் அகர வரிசையில் முதலில் தொடங்குவது மேலும் சிறப்பு . 


Long tail என்ற கருத்தாக்கம் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் .  இணையத்தள புத்தகக் கடையில் long tail என்ற வகையில் முடிவேயில்லாத எண்ணற்ற புத்தகங்களைக் காட்சிப்படுத்தலாம் . இந்த இணையத்தளக் கடையில் Top 100 புத்தகங்கள் தான் அதிகமாக விற்பனையாகும் என்றாலும் Top 1000 , Top 10000 புத்தகங்களும் விற்பனையாகும் . என்ன , Top 1000 புத்தகங்கள் Top 100 எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணத்தில் விற்பனையாகும் . இந்தக் குறை எண்ணில் விற்பனையாகும் புத்தகங்களின் கூட்டுத்தொகை Top 100 எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . Top 10000 என்பது கூட ஒரு உதாரணம் மட்டுமே . உண்மையில் இது முடிவேயில்லாத புத்தகங்களின் ஒரு சங்கிலி மாதிரி செயல்படும் . ஒரு இலட்சம் , பத்து இலட்சம் என்ற அளவில் சென்றாலும் அங்கும் அங்கொன்று இங்கொன்று என்ற அளவில் புத்தகங்கள் விற்பனையாகிய வண்ணமே இருக்கும் . இது தான் Long tail . இந்த Long tail கருத்தாக்கத்தைப் பணமாக்கம் செய்த நிறுவனங்களில் அமேசான் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது . 


Amazon Prime வாடிக்கையாளர்களுக்கு உடனடி இலவச விநியோகம் , கூடுதல் தள்ளுபடி , இலவச காணொளி உள்ளிட்ட பல்வேறு பலன்கள் இருந்தாலும் அமேசானுக்கு இதனால் என்ன ஆதாயம் ? எதற்காக அது இவ்வளவு இலவசங்களை அள்ளிக் கொடுக்கிறது ? ஏனெனில் அது ஆதாரமாக நிறுவன வாடிக்கையாளர்கள் பிற போட்டி நிறுவனங்களுக்குச் செல்லாமல் கட்டிப்போடும் கட்புலனாகாத ஒரு சங்கிலியாகச் செயல்படுகிறது .


அமேசான் அதனது கூடுதல் கணினி ஆற்றல்களை (computing power) மேகக் கணிமை (cloud computing) வழி தேவையானவர்களுக்கு தேவைப்படும் அளவுகளில் கொடுத்ததில் (Amazon Web Services) அதன் மேதைமை வெளிப்படுகிறது . நீங்கள் ஒரு சிறிய நிறுவனத்தை நடத்துவதாகக் கொள்ளலாம் . வழங்கிகள் , மற்றும் மென்பொருள் முதலான கணினி சார் உபகரணங்கள் உங்களுக்குத் தேவைப்படும் . நிறுவனம் வளர வளர கூடுதல் அளவீடுகளில் இது தேவைப்படும் . அமேசான் நிறுவனம் இதனைத் தேவையான போது தேவையான அளவுகளில் வழங்குகிறது . நமது வீடுகளுக்கு மின்சாரம் எவ்வளவு தேவைப்படுகிறதோ அதை நாம் நுகர்வது மாதிரி அமேசானின் இந்த சேவை பயன்படுகிறது . மேலும் உங்கள் நிறுவனத் தகவல்கள் அமேசானின் வழங்கிகளில் (servers) வெவ்வேறு இடங்களில் சேகரம் செய்யப்படுவதால் அவை பத்திரமாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது .


அதே மாதிரி Amazon market place என்ற உத்தியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் . Third party vendors அமேசானில் கடை விரிக்கலாம் . அவர்கள் வியாபாரத்தின் ஒரு பகுதியைத் தரகாக அமேசான் பெற்றுக் கொள்கிறது . அதனினும் முக்கியமாக எந்தப் பொருள் விற்பனையாகிறது என்ன trend என்பதை அறிவதற்கான ஒரு களமாக இது செயல்படுகிறது .


ஆக்க அழிவு (creative destruction) என்பதற்கான சிகர உதாரணமாக Kindle ஐ சொல்லலாம் . உங்கள் வியாபாரத்தை நீங்களே கலைத்துப் போடுங்கள் , இல்லாவிட்டால் யாராவது கலைத்துப் போட்டு விடுவார்கள் என்ற வகையில் தான் Kindle கண்டறியப்பட்டது . நன்றாக யோசித்துப் பாருங்கள் . அமேசான் அடிப்படையாக ஒரு புத்தகக்கடை . அந்தப் புத்தக விற்பனைக்கே உலை வைப்பதான Kindle ஏன் அறிமுகம் செய்யப்பட்டது ? ஏனென்றால் வேறு நிறுவனங்கள் அதனை அறிமுகம் செய்து மின் புத்தகச் சந்தையை அவர்கள் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு . 


Long tail , Prime மற்றும் AWS உத்திகள் தற்செயலாகக் கண்டறியப்பட்டன . இந்த வெற்றிகரமான உத்திகளின் பின்னே வெற்றியடையாத கைவிடப்பட்ட உத்திகள் ஏராளம் உள்ளன . அத்தகைய தவறுகளுக்கான விலையையும் அமேசான் கொடுத்திருக்கிறது . Firephone இதற்கான சிகர உதாரணம் . அது ஒரு , டாலர் 170 மில்லியன் தவறு .


Always day one என்பது Bezos ன் பிடித்த வாசகங்களுள் ஒன்று . இவ்வாறாக அமேசான் ஒரு தொடங்கல் (startup) மனநிலையிலேயே என்றென்றும் உள்ளது . அதன் வெற்றியின் இரகசியமும் அது தான் . 


இவ்வாறாக எந்த நிறுவனமும் அ என்ற புள்ளியிலிருந்து ஆ என்ற புள்ளிக்கு நேர்க்கோட்டில் பயணித்திருக்காது . அது ஒரு நீள் வட்ட சுற்றுச் சாலையாகவே இருக்கும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14