உயிர் வாழ்வு சாய்வு

உயிர் வாழ்வு சாய்வு

Survivorship Bias

பரஸ்பர நிதிகளை உதாரணமாகக் கொண்டு உயிர் வாழ்வு சாய்வு என்பதைப் புரிந்து கொள்ள முயலலாம் . பரஸ்பர நிதி நிறுவனங்கள் , வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களது நிதிகளை மட்டும் முன்னிறுத்தும் . பத்து நிதிகள் இருந்தால் ஐந்து நிதிகள் நட்சத்திர நிதிகள் என்பதாகக் கூறிக் கொள்ளும் . அவர்களது சரியாகச் செயல்படாத நிதிகள் சரிவரச் செயல்படும் நிதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் . சில நிதிகள் மூடப்பட்டிருக்கும் . இதனையெல்லாம் நிறுவனம் தெரிவிக்காது . நிறுவனத்தின் உண்மையான செயல்பாட்டைக் கண்டறிய வேண்டுமென்றால் இத்தகைய இணைக்கப்பட்ட மற்றும் மூடப்பட்ட நிதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் . அவ்வாறு கணக்கிடவில்லையென்றால் நாம் உயிர் வாழ்வு சாய்வுக்கு உள்ளாகியிருப்பதாக அர்த்தம் . 

தனிப்பட்ட முதலீட்டாளர்களும் உயிர் வாழ்வு சாய்வின் பக்கம் சாய்ந்திருப்பார்கள் . என்னையே உதாரணமாகக் கொள்ளலாம் . பங்கு முதலீடுகள் குறித்து யார் எப்போது கேட்டாலும் என்னுடைய ICICI வங்கி வெற்றிக் கதையை முன்னிறுத்துவது தொன்றுதொட்டு எனது வழக்கமாக இருந்து வருகிறது . அது எவ்விதம் 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது , அதன் மூலமாக எனக்குக் கிடைக்கப்பெறும் 250 சதவீதப் பங்காதாயம் ... இத்யாதி ... இத்யாதி ... ஆனால் நான் முதலீடு செய்த எத்தனையோ பங்குகள் இருந்த சுவடு இல்லாமல் மறைந்து விட்டன . நானும் அவைகளை சௌகரியமாக மறந்து விட்டேன் . அவைகளின் ஒரு சிறு பட்டியல் ...

Cox and Kings

Cranes Software

Glodyne Technoserve 

Gujarat NRE Coke 

Opto Circuits 

Prajay Engineers Syndicate

Reliance Natural Resources

Satyam Computers

Vishal Information Technologies

கையில் பிடித்து நழுவ விட்டு விட்ட  பங்குகளின் ஒரு சிறு பட்டியல் ...

Apollo Hospitals

Bajaj Electricals

Infosys Technologies

Shriram Transport Finance Company

இந்தியாவின் முதல் மதிப்பு முதலீட்டு பரஸ்பர நிதி , UTI நிறுவனத்தின் Master Value Fund . சந்தையில் சில நேரம் மதிப்பு முதலீட்டு உத்திகள் கை கொடுப்பதாக இருக்கும் . சில நேரம் வளர்ச்சி முதலீட்டு உத்திகள் ... UTI நிறுவனம் ஒரு நீண்ட நெடும் பொழுது வளர்ச்சி முதலீட்டு உத்திகள் கை கொடுத்த கால கட்டத்தில் பொறுமை இழந்து அந்த நிதியை மற்றொரு நிதியுடன் இணைத்து விட்டது . இது போதாதென்று , தனிப்பட்ட முறையில் , நன்றாகச் செயல்படும் பரஸ்பர நிதிகளை வாங்கி சிலபல காரணங்களுக்காக அவைகளை நான் விற்று வைத்ததும் ஞாபகத்திற்கு வருகிறது . Sundaram Midcap Fund ஐ குறிப்பாகச் சொல்லலாம் . ஆரம்ப நாளிலிருந்து இன்று வரை 24 சதவீத CAGR கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த நட்சத்திர நிதியை நான் விற்றதற்கான காரணம் காலத்தில் மறைந்து விட்டது . 

நமது முதலீடுகள் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது என்ற சரியான கணக்கீடுகளுக்கு இந்த உயிர் வாழ்வு பங்குகள் மற்றும் நிதிகள் பக்கம் மட்டும் சாயாது உயிர் வாழாத முதலீட்டுக் கணக்கையும் பார்க்க வேண்டும் . அவற்றின் மீதான வாய்ப்பு விலையையும் (Opportunity cost) போட்டுப் பார்க்க வேண்டும் . 

Abraham Wald குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . உயிர் வாழ்வு சாய்வுக்குச் சிகர உதாரணமாகச் சொல்லப்படும் அவருடைய கண்டுபிடிப்பு குறித்துச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம் . 

Abraham Wald போரில் அடிபட்டுத் திரும்பிய விமானங்களுக்கு எந்தெந்த இடங்களில் கவச உடை பொருத்தலாம் என்பதான ஆராய்ச்சியை ஒரு குழுவாக மேற்கொள்கிறார் . இவ்வாறு குண்டடி பட்டுத் திரும்பிய விமானங்கள் பெரும்பான்மையாக விமானியின் அறை மற்றும் அதன் வால் பகுதி தவிர ஏனைய இடங்களில் அடிபட்டுத் திரும்பியிருக்கின்றன . எனவே இந்த இரண்டு இடங்களைத் தவிர பிற இடங்களில் கவச உடையைப் பொருத்தலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது . ஆனால் அதில் ஒரு சின்னப் பிரச்னை . இவ்வாறு கவச உடை பொருத்தப்பட்டால் விமானத்தின் எடை கூடி அதன் பறக்கும் வேகம் குறைந்து விடும் . Abraham Wald ன் எண்ணப்போக்கு வேறு மாதிரி இருந்தது . நாம் அடிபட்டுத் திரும்பிய விமானங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் . அடிபட்டு ஒருபோதும் திரும்பாத விமானங்கள் எங்கு அடி வாங்கியிருக்கும் ? விமானியின் அறை மற்றும் வால் பகுதி . இந்த இரண்டு இடங்களில் மட்டும் கவசத்தைப் பொருத்தினால் போதும் . இரண்டாம் உலகப் போரின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பதில் அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது . 

Abraham Wald ன் கண்டுபிடிப்பைக் கவனமாகப் படிக்கும் வாசகர்கள் அந்தக் கண்டுபிடிப்பின் பின்புலத்தில் உயிர் வாழ்வு சாய்வு இருப்பதை உணரலாம் . போரில் அடிபட்டு உயிர் வாழும் விமானங்களுடன் அடிபட்டு உயிர் வாழாத விமானங்களையும் இணைத்து ஆராய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தெளிவான முடிவைப் பெற முடியும் . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்