நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ?
நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ?
உங்கள் விருப்பப் பங்குகள் (Favourite Stocks) குறித்து இந்தப் பதிவுகளில் ஊடும் பாவுமாக எழுதுகிறீர்கள் . உங்கள் பங்குத் தொகுப்பை (Stock Portfolio) அவ்வப்போது முழுமையாகப் பகிரலாமே ; அது பலருக்கும் பயன்படுவதாக இருக்குமே என்பதாக நண்பர் ஒருவரின் கேள்வி . இந்தப் பங்குத் தொகுப்பு பகிர்வு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் .
பல்லாண்டுகளின் காலப் பன்மயமாக்கத்தில் ( Time Diversification) இந்தப் பங்குத் தொகுப்பு உருவாக்கம் பெற்றிருக்கிறது . ஒரு நூறு மடங்காளர் (100 bagger ) சிற்சில ஐம்பது மடங்காளர்கள் , சில பத்து மடங்காளர்கள் , பல ஐந்து மடங்காளர்கள் , பற்பல இரண்டு மடங்காளர்கள் என்பதாக இந்தத் தொகுப்பு இருக்கிறது . சில பங்குகள் வாங்கிய விலைக்கே ஊசலாடிய வண்ணமாக இருக்கின்றன . இன்னும் சில வாங்கிய விலைக்கும் கீழே வர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன .
நூறு மடங்காளர் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்காதாயம் குறைந்த பட்சம் 20 % என்ற அளவில் இருக்கிறது . ஐம்பது மடங்காளர் என்றால் 10 % பத்து மடங்காளர் என்றால் 5 % என்ற வாக்கில் இது குறைந்த வண்ணமாக இருக்கிறது . பங்குத் தொகுப்பின் தற்போதைய மொத்த மதிப்புக்குக் கிடைக்கப்பெறும் வருட பங்காதாயம் சராசரியாக 3 % என்ற அளவில் உள்ளது .
நீண்ட காலமாகக் குறைச் செயலாக்கம் புரியும் பங்குகளின் ஒரு பட்டியல் இருக்கிறது . ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி பங்குகளின் ஒரு வரிசை சேர்ந்து விடுவது தவிர்க்க இயலாத ஒன்று . பங்குத் தொகுப்பில் இத்தகைய பங்குகள் சராசரியாக 2 % என்ற அளவில் எப்போதும் இருக்கும் .
எனது பங்குத் தொகுப்பை இன்றைய தேதியில் மறு உருவாக்கம் செய்வதாகக் கொள்ளலாம் . எனது பங்குத் தொகுப்பின் மூலமாகக் கிடைக்கப்பெறும் பங்காதாயம் இந்த மறு உருவாக்க பங்குத் தொகுப்பின் மூலம் கிடைக்கப் பெறாது . இது ஒரு முக்கியமான வேறுபாடு . இதனை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம் . Sundram Fasteners நிறுவனப் பங்கை நான் 34 ரூபாய் என்ற விலையில் வாங்கியிருக்கிறேன் . இந்த வருடப் பங்காதாயம் 645 சதவீதம் . ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்று , 6 ரூபாய் 45 பைசா வழங்கியிருக்கிறது . நான் வாங்கிய 34 ரூபாய்க்கு இது 19 சதவீதம் வருகிறது . தற்போது Sundram Fasteners பங்கின் விலை 880 ரூபாய் . இந்த விலையில் வாங்குபவருக்கு பங்காதாயம் ( பங்கு ஈட்டு விகிதம் ) வெறும் 0.73 சதவீதம் மட்டுமே கிடைக்கும் .
ஒரு பங்கு ஒரே நாளில் நான் வாங்கிய விலையை விட ஒரு மடங்கு விலை கூடுவதாக இருக்கும் . மீண்டும் Sundram Fasteners பங்கினையே உதாரணமாகக் கொள்ளலாம் . பங்கின் விலை ஒரு நாளில் 4 சதவீதம் அதிகரித்தால் ஒரே நாளில் ஒரு மடங்காளர் என்ற வகையில் கூடி விடும் . பல்லாண்டுகளின் காத்திருத்தலில் மட்டுமே இது நிகழும் .
அதே மாதிரி ஒரு நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று இலவசப் பங்களிப்பை மேற்கொண்டால் எனக்கு ஒன்றுக்கு நான்கு என்ற கணக்கு . சமயங்களில் ஒன்றுக்கு எட்டு . ஏன் இவ்விதம் அதிகரிக்கிறது என்பதற்கான ஒரு எளிய விளக்கம் : நிறுவனம் ஒன்றின் 50 பங்குகள் உங்களிடம் இருப்பதாகக் கொள்ளுங்கள் . நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் இலவசப் பங்களிப்பை மேற்கொள்கிறது . இப்போது உங்களிடம் 100 பங்குகள் இருக்கும் . நிறுவனம் மீண்டும் ஒரு இலவசப் பங்களிப்பை ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மேற்கொண்டால் உங்களிடம் இப்போது 200 பங்குகள் இருக்கும் . ஆரம்பத்தில் உங்களிடம் இருந்த 50 பங்குகளுக்கான இந்த விகிதம் ஒன்றுக்கு நான்கு .
பங்குகளில் மட்டுமல்ல , பரஸ்பர நிதி ஒன்று பங்காதாயம் வழங்கும் போது எனக்கான பங்காதாயம் இரட்டிப்பாகக் கிடைக்கும் . இது எங்ஙனம் சாத்தியம் ? பரஸ்பர நிதி அலகுகளை (unit) ஐந்து ரூபாய்க்கு வாங்கினால் அதன் முக மதிப்பான பத்து ரூபாய்க்குப் பங்காதாயம் அளிக்கும் போது பங்காதாயம் இரட்டிப்பாகி விடும் .
ஒரு முக்கியமான இடைக்குறிப்பு : என் கதையை விவரிக்க வேண்டும் என்பதற்காக இத்தனை விலாவாரியாக இதனை எழுதவில்லை . நீண்ட கால அளவில் பங்குச்சந்தையில் மதிப்பு முதலீட்டை மேற்கொண்டால் என்ன நிகழும் என்ற கோணத்தில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன் . மேலும் பங்குகளைப் பொறுத்த எனது வெற்றி விகிதம் (striking rate) 60 சதவீதம் மட்டுமே என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் . அதாவது பத்து பங்குகளை வாங்கினால் அதில் ஆறில் மட்டுமே வெற்றி . மற்ற நான்கில் தோல்வி . வெற்றிப் பட்டியலைத் தவிர்த்து Cranes Software , Gujarat NRE Coke , IL & FS Investment Managers , Opto Circuits ... என்பதாக ஒரு நீண்ட நெடிய தோல்விப் பட்டியல் உள்ளது . நீண்ட கால அளவில் சராசரியாக பணவீக்கத்தை விஞ்சிய 20 சதவீதத்திற்கு மட்டுமே 'முயன்று' கொண்டிருக்கிறேன் . முயன்று என்ற வார்த்தையில் கவனம் கொள்ளவும் . இன்னும் அடையவில்லை . வெறும் முயற்சி மட்டுமே .
ஒரு நிறுவனம் ஆண்டுக்கணக்காக முதலீட்டுப் பெருக்கத்திற்கு உள்ளாகாமல் குறிப்பிட்ட ஒரு விலைப்பட்டையிலேயே உழன்று கொண்டிருந்தாலும் நான் அதனை விற்பதில்லை . ஏனென்றால் பங்காதாயம் மூலமாக வருமானம் வந்த வண்ணமாகவே இருக்கும் .
ஒரே நதியில் இரண்டு முறை குளிக்க முடியாது . நதி அதன் போக்கில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று சென்ற வண்ணமாகவே இருக்கும் . பங்குத் தொகுப்பும் அது போன்றது தான் . நீண்ட கால அளவில் குறைச் செயலாக்கம் புரியும் பங்குகள் விற்கப்பட்டிருக்கும் . பங்குத் தொகுப்பின் சமநிலை கருதி நிறைச் செயலாக்கம் புரியும் பங்குகள் கூட சமயங்களில் விற்கப்படும் . பணத்தேவை கருதி சில விற்பனைகள் ... அதே மாதிரி புதிய துறை நிறுவனங்களிலான முதலீடு இன்னொரு பக்கம் ... இது தொடர்ந்த வாக்கிலான ஒரு செயல்பாடு . இதனைப் பகிர்வது இயலாத ஒன்று . அப்படியே பகிர்ந்தாலும் அது படிப்பவர்களுக்கு எவ்விதம் பயன்படும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி .
என்னுடைய நிதி முதலீடுகள் பெரும்பான்மையாக பங்குகளிலும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளிலும் இருந்தாலும் என்னுடைய நிதி அல்லாத பிற முதலீடுகளைக் கணக்கில் கொண்டால் அது சிறுபான்மையாகி விடும் . வேறு மாதிரி சொல்வதானால் பங்கு முதலீடுகளைப் பொறுத்த எனது அபாய விகிதம் அதிகமாக இருப்பது வெறும் தோற்றம் மட்டுமே . பிற முதலீடுகளைக் கொண்டு கணக்கிட்டால் அபாய விகிதம் பேர்பாதி குறைந்து விடும் .
இன்னொன்று , நான் பங்கு முதலீட்டு அபாயங்களைக் கைக்கொள்ளும் விதம் இன்னொருவருடன் ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்க முடியாது . எனது பங்குத் தொகுப்பின் சந்தை மதிப்பு பாதி ஆவியாகிக் காற்றில் கரைந்தாலும் சந்தை மதிப்பு வேறு உள்ளார்ந்த மதிப்பு வேறு என்ற வகையில் நான் தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்வேன் . எல்லோரும் அப்படி இருப்பார்கள் என்று எண்ண முடியாது . அந்த வகையில் ஒவ்வொரு முதலீட்டாளரும் தனித்துவம் (unique) கொண்டவர்கள் .
ஆக , கண்ணிற்குத் தெரியும் பங்குத் தொகுப்பு என்பது வேறு . கண்ணிற்குத் தெரியாத அபாயங்களை ஒருவர் எதிர்கொள்ளும் விதம் என்பது வேறு . You can borrow someone's ideas but you will never able to borrow their conviction என்று Gautam Baid கூறுவது மாதிரி அடுத்தவர்களின் எண்ணக்கருவை நீங்கள் கடன் வாங்கலாம் . ஆனால் அவர்களின் பற்றுறுதியை ஒருக்காலும் கடன் வாங்க முடியாது .
கட்புலனாவதை கட்புலனாகாதவற்றுடன் இணைத்து முழுமையாகப் பார்த்தால் மட்டுமே பிரச்னைக்கான தீர்வை எட்ட முடியும் என்பது குறித்த உண்மை நிகழ்வு ஒன்றுடன் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம் .
Abraham wald 1902 ஆம் ஆண்டு ஹங்கேரியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தவர் . சின்ன வயதிலிருந்தே கணிதத்தில் பேரார்வம் . பொறியியல் படித்த அவருடைய அண்ணன் அவருக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் குருவாக இருக்கிறார் . Karl Menger என்ற அந்தக் காலத்துக் கணித மேதை Abraham wald ன் இன்னொரு குரு . இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது . அப்போது ஏற்கெனவே அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்த Menger , Abraham wald ஐயும் அமெரிக்காவுக்கு தருவித்துக் கொள்கிறார் . இதற்கிடையில் ஹங்கேரியில் Wald ன் பெற்றோர்களும் சகோதரிகளும் நாஜிப் படைகளால் விஷ வாயு அறையில் ( gas chamber ) அடைத்துக் கொல்லப்படுகிறார்கள் . அவருக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்த பொறியாளர் அண்ணண் மேற்கு ஜெர்மனியில் அடிமை வேலையாளாக இருந்து அனுதினமும் இறந்த வண்ணமாக இருக்கிறார் . இதெல்லாம் Abraham க்குப் பின்னர் தான் தெரிய வருகிறது .
அமெரிக்காவில் எதிரி நாட்டிற்குச் சென்று தாழப் பறந்து குண்டு போடும் விமானங்களுக்கான கவச உடை குறித்து ஆராய்ச்சி நடைபெறுகிறது . இந்தக் கவச உடை விமானத்தின் அடிப்பாகத்தில் அதுவும் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் இடத்தில் மட்டுமே பொருத்தப்பட வேண்டும் . இல்லாவிட்டால் விமானத்தின் எடை கூடி அதனுடைய பறக்கும் வேகம் குறைந்து விடும் . இதன் பொருட்டுக் குண்டடி பட்டுத் திரும்பிய விமானங்களைத் தீவிரமாக ஆராய்கிறார்கள் . விமானியின் அறை (cockpit) மற்றும் விமானத்தின் வால் பகுதி தவிர மற்ற இடங்களில் விமானங்கள் குண்டுத் தாக்குதல் அடைந்திருக்கின்றன . விமானியின் அறை மற்றும் வால் பகுதி தவிர ஏனைய இடங்களில் கவசத்தைப் பொறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது . அது ஒரு தர்க்கரீதியான முடிவும் கூட . ஆனால் இதன் காரணமாக விமானத்தின் எடை கூடி விடும் . Abraham wald ன் எண்ணப்போக்கு வேறு மாதிரியாக இருந்தது . நாம் அடிபட்டுத் திரும்பிய விமானங்களை மட்டும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் . இது கண்ணிற்குத் தெரிவதான பிரச்னையின் ஒரு பக்கம் . கண்ணிற்குத் தெரியாமல் பிரச்னைக்கு இன்னொரு பக்கம் உள்ளது . அது அடி பட்டு ஒருபோதும் திரும்பாத விமானங்கள் . அடிபட்டுத் திரும்பாத விமானங்கள் எந்த இடங்களில் அடி வாங்கியிருக்கும் ? விமானியின் அறை மற்றும் வால் பகுதி ! அந்த இடங்களில் மட்டும் கவசத்தைப் பொருத்தினால் போதும் . விமானத்தின் எடை ரொம்பவும் கூடாது . அதன் வேகத்திற்கும் பங்கம் வராது . இரண்டாம் உலகப் போரின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பதில் Abraham wald ன் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது . அவரது குடும்பத்தை அழித்த நாஜிப் படைகளுக்கு எதிரான ஒரு காவிய நீதி ...
மீண்டும் அடுத்த வாரம் ச(சி)ந்திப்போம் .
குறிப்புதவிய நூல் : Black Box Thinking by Matthew Syed
Comments
Post a Comment