பங்குச்சந்தை பதில்கள் - 5
பங்குச்சந்தை பதில்கள் - 5
கேள்வி : Turn around நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா ?
பதில் : Turn around நிறுவனங்கள் குறித்து வாரன் பஃபெட் சொன்னது : Turn around seldom turns . திருப்பங்கள் அரிதாகவே திரும்பும் . நான் இந்த குழம்பிய குட்டைகளில் மீன் பிடிப்பதில்லை .
கேள்வி : பட்டியல் இலாபம் (Listing gain) பெறும் நிறுவனங்கள் IPO ஒதுக்கீட்டில் கிடைப்பதில்லை . கிடைக்கும் ஒன்றிரண்டு நிறுவனங்களும் பட்டியல் இலாபம் பெறுவதாக இல்லை ?
பதில் : வாழ்க்கையில் இரண்டு விதமான சோகங்கள் உண்டு . ஒன்று , விரும்பியது விலகிப் போவது . இன்னொன்று விரும்பியது மிக நெருங்கி வந்து விடுவது என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார் .
கேள்வி : பங்குகளை எப்போது வாங்கலாம் ? எப்போது விற்கலாம் ?
பதில் : கையில் பணம் இருக்கும் போது பங்குகளை வாங்கலாம் . பணம் தேவைப்படும் போது பங்குகளை விற்கலாம் . இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆசிர்வாதமான ஒரு புறக்கணிப்பை (Benign neglect) மேற்கொள்ளலாம் .
கேள்வி : இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் எவரேனும் இருக்கிறார்களா ?
பதில் : ஒரேயொருவர் இருக்கிறார் . படிப்பது மட்டுமின்றி அவருடைய பாணியில் அதனை எடையும் போடுவார். அவர் திருவாளர் கூகுள் .
கேள்வி : Standard deviation , Beta ... போன்ற சில பதங்கள் எத்தனை முறை படித்தாலும் புரியாத புதிராகவே இருக்கிறது ?
பதில் : கையைக் கொடுங்கள் . நீங்கள் அடிப்படை முதலீட்டுப் பாடங்களில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் !
கேள்வி : லாட்டரி இருந்தால் ஒரு சிலராவது பணக்காரர்கள் ஆகி விடுவார்கள் தானே ?
பதில் : நிறையப் பேர் ஏழைகளாகி விடுவார்களே ? இந்த ஒரு சில பணக்காரர்களும் நாளடைவில் ஏழைகளாகி விடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .
கேள்வி : நிறுவனங்கள் ஏன் பெயர் மாற்றத்தில் ஈடுபடுகின்றன ?
பதில் : பெரும்பாலான சமயங்களில் அவைகளுடைய இறந்த காலத்தை மறைத்து வைக்கும் பொருட்டு ... சில சமயங்களில் புதிய நிதி அலையில் பங்கு பெறும் பொருட்டு ... 2000 ஆவது ஆண்டு பங்குச்சந்தையில் தகவல் தொழில்நுட்ப அலை சுழன்றடித்த போது ஏகப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பெயரை அந்த அலைக்கேற்றவாறு மாற்றிக் கொண்டன . அல்லது வெறுமனே அவைகளின் பெயருக்குப் பின்னால் .com என்று சேர்த்துக் கொண்டன . எவ்வாறாயினும் பெயர் மாற்ற நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது ஒரு சிறந்த உத்தியாகும் .
கேள்வி : காலா காலத்துக்கும் இருக்கக்கூடியதான ஒரேயொரு பங்கைப் பரிந்துரைக்க முடியுமா ?
பதில் : Sensex மற்றும் Nifty
கேள்வி : பிட் காயின் ஊக வணிகங்கள் தழைத்தோங்குகிறதே ?
பதில் : பிட் காயின் ஊக வணிகங்கள் மட்டுமல்ல , தினசரி மற்றும் குறுகிய கால வணிகங்கள் , F & O , Algo trading அனைத்தும் செழிப்பாக வளர்ந்த வண்ணம் உள்ளன . ஆனால் முதலீட்டாளர்களின் பணம் வளர்கிறதா ?
கேள்வி : பங்குச்சந்தையில் எனக்குப் பத்து இலட்சம் ரூபாய் நஷ்டமாகி விட்டது ?
பதில் : தீதும் நன்றும் பிறர் தர வாரா .
Comments
Post a Comment