வாசிக்கும் பழக்கம்
வாசிக்கும் பழக்கம்
பங்குச்சந்தை குறித்த வலைப்பூவில் வாசிக்கும் பழக்கத்திற்கு என்ன இடம் என்று வியக்க வேண்டாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்ததின் மூலமாக மட்டும் பணக்காரரான உலகின் ஒரே ஒருவர் வாரன் பஃபெட் தினமும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ள வலியுறுத்துகிறார். முதலீட்டில் பணம் எப்படி கூட்டுப்பெருக்கம் அடைகிறதோ அது மாதிரி படிக்கப் படிக்க அறிவும் கூட்டுப் பெருக்கம் அடைகிறது. இன்னும் சொல்லப்போனால் பணத்தின் கூட்டுப் பெருக்கத்திற்கே அறிவின் கூட்டுப் பெருக்கம் தான் அடிப்படை. நன்றாக யோசித்துப் பாருங்கள் , ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றால் முதலில் அதன் ஆண்டறிக்கையைப் (Annual Report) படிக்க வேண்டும். வாரன் பஃபெட்டிடம் ஒருவர், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருக்கிறதே எவ்விதம் படிப்பது என்பதாகக் கேட்டாராம். அதற்கு பஃபெட்டின் பதில்: Start with 'A'
வாரன் பஃபெட்டின் Destiny Partner (தமிழில் விதியான பங்குதாரர் என்று சொல்லலாம்) சார்லஸ் மஞ்சர் கை கால் முளைத்த ஒரு புத்தகமாகவே கருதப்படுகிறார்.
பஃபெட்டின் இளமைக்காலத்தில் இந்தக் காலம் மாதிரி இணையத்தளங்கள் எல்லாம் கிடையாது. ஒரு நிறுவனத்தின் ஆண்டறிக்கை வேண்டுமென்றால் நீங்கள் அந்நிறுவனத்தின் ஒரேயொரு பங்கையாவது கட்டாயம் வாங்க வேண்டும். இப்போது நிறுவன இணையத்தளங்களில் நீங்கள் அதன் ஆண்டறிக்கையை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிப்பதற்கான மனம் மட்டுமே வேண்டும். கொஞ்சம் புரிதலும் தேவைப்படும். படிக்கப் படிக்க புரிதல் தானாக வந்துவிடும்.
எல்லோருமே கதைகளை வாசிப்பதன் வாயிலாகத் தான் இந்த வாசிக்கும் பழக்கத்தை நோக்கி ஈர்க்கப்படுவோம். பிரச்னை என்னவென்றால் நிறையப் பேர் இந்தக் கதை வாசிப்பு என்ற தளத்திலேயே ஒரு குட்டை மாதிரி தேங்கி நின்று விடுவார்கள். கதை களைந்த (non fiction) புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தால் தான் நீங்கள் உண்மையிலேயே வளரத் தொடங்குவதாக அர்த்தம். ஒருவர் 20 வருடங்களாக வெறுமனே கதைப் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்தால் அவருடைய வாசிப்புப் பழக்கத்திற்கு 20 வயது என்று சொல்ல முடியாது. அது 1×20 வயது என்பதையே குறிக்கும்.
பங்குச்சந்தையில் வெற்றி பெற கணக்கில் ரொம்ப புலமை தேவையில்லை. அடிப்படை இயற்கணிதம் (Algebra) மட்டும் போதுமானது. சிக்கலான கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. வாரன் பபெட் கூறியது மாதிரி ஒரு அடி உயர தடையை மட்டும் தாண்டினால் போதுமானது. ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் முதலான டெரிவேட்டிவ் கணக்குகள் எல்லாம் தெரியாமல் இருப்பது சாலச் சிறந்தது. டெரிவேட்டிவ் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? அது தான் சொன்னேனே, தெரியாமல் இருப்பதே நல்லது என்று ...
உளவியல் குறித்துக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். Thinking Fast and Slow புத்தகம் அந்த வகையில் முதலிடம் பெறுகிறது. முதலீட்டாளர் உளவியல் குறித்து Why Smart People Make Big Money Mistakes என்றெல்லாம் கூட தனிப்பட்ட புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆங்கிலம் என்ற ஜன்னல் மூலமாகத் தான் நாம் அந்த உலகத்தைப் பார்க்க முடியும்.
அப்புறம் நிறுவன வரலாறு சம்பந்தமான புத்தகங்கள். ஜெப்ரி ஆர்ச்சரின் திகில் கதைகளை விட The Google Story புத்தகம் திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டிருக்கும். நான் விரும்பிப் படிக்கும் திகில் கதைகள் இந்த மாதிரியான நிறுவன வரலாறுகள் தான்.
ebay.com என்று ஒரு இணையவழி ஏலம் நடத்தும் நிறுவனம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதால் நிறையப் பேர் அதன் உறுப்பினர்களாகி நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டது. இம்மாதிரி நிறுவனங்களுக்கு அளவு (scale) என்பது மிகவும் முக்கியமானது. நிறையப் பேர் ஏலத்தில் பொருட்களை வாங்கவும் விற்பதுமாக இருந்தால் அதனால் கவரப்பட்டு இன்னும் நிறையப் பேர் அங்கு வருவார்கள். இணையவழி ஏலத்தில் உறுப்பினர்களின் இடையிலான நம்பிக்கை (trust) என்பதும் மிகவும் முக்கியமானது. ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினர்கள் சக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து + ஆகவோ அல்லது - ஆகவோ இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். நிறையப் பேர் உங்களைப் பற்றி + ஆக பதிவிட்டிருந்தால் நீங்கள் ஏலத்தில் பொருட்களை விற்கும் போது அது உங்களுக்கு சாதகமாக அமையும். இவ்வாறாக ஈபே நிறுவனத்திற்கு யாராலும் உடைக்க முடியாத ஒரு வலைப்பின்னல் ( Network) அமைந்து விடுகிறது. இன்னொரு ஏல நிறுவனம் குறைந்த தரகு என்ற அடிப்படையில் தொடங்கப் பெற்றாலும் யாரும் அங்கு செல்ல விரும்ப மாட்டார்கள். அங்கு சென்றால் நீங்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் பூஜ்யத்திலிருந்து எழுப்ப வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு நேர் பின்னூட்டக் கண்ணி (Positive Feedback Loop) சுழலத் தொடங்கி விடுகிறது. இவ்வாறாக ஈபே ஒரு அகழி முதலீடு ஆகி விடுகிறது. இதன் வரலாறு The Perfect Store என்று தனிப்பட்ட புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்தது INFO EDGE மற்றும் INDIAN ENERGY EXCHANGE பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்ய பேருதவியாக இருந்தது. இந்த இரண்டு நிறுவனங்களுமே வலிமையான நேர் பின்னூட்ட அகழிப் பங்குகள்.
அமெரிக்கப் பங்குச்சந்தை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. அந்த வகையில் அமெரிக்கப் பங்குச்சந்தை இந்தியப் பங்குச்சந்தையின் பெரியண்ணன். இந்தியப் பங்குச்சந்தையின் எதிர்காலப் போக்கை அமெரிக்கப் பங்குச்சந்தையைக் குறித்துப் படிப்பதன் வாயிலாக ஓரளவு தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட நிறுவனங்கள் எவ்விதமாக வளரும் என்பதைக் கூட இவ்விதமாகக் கணிக்கலாம். அமெரிக்க PHILIP MORRIS நிறுவனம் குறித்துப் படிப்பதன் வாயிலாக இந்திய ITC நிறுவனம் எவ்விதமாக வளரும் என்று யூகிக்கலாம்.
மதர்சன் சுமி நிறுவனம், அதனுடைய பங்கின் விலை 600 ரூபாய்க்கு மேல் வர்த்தகமானால் இலவசப்பங்குகளை வழங்கும் என்ற தகவல் அதனுடைய ஒரு ஆண்டறிக்கையில் பொடி எழுத்துக்களில் மறைந்திருந்தது. அதே மாதிரி கரூர் வைஸ்யா வங்கி capital adequacy ratio ஐ வலுப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது மலிவு விலையில் உரிமை மற்றும் இலவசப்பங்குகளை வழங்கும் என்ற தகவலும் அதன் ஆண்டறிக்கையில் தான் பொதிந்திருந்தது. பங்கின் விலை தினசரி எவ்விதம் ஏறி இறங்குகிறது என்று தொழில்நுட்பப் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கு மாறாக இந்த மாதிரி ஆய்வுகளை மேற்கொள்ளலாம். தினசரி ஏறி இறங்கும் பங்கு விலை வெறும் இரைச்சல் (noise) இந்த மாதிரியான தகவல்கள் குறியீடு (signal)
பொருளாதாரக் குமிழிகள் (economic bubbles) குறித்த வரலாறுகளைப் படிப்பதன் வாயிலாக அடுத்த குமிழியை எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொள்ளலாம். இம்மாதிரி நம்முடைய அனுபவங்களிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது. மின்சார வேலியைத் தொட்டால் மின் அதிர்ச்சி அடிக்கும் என்பதை நாமே தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மதியீனம் ஆகும்.
இவ்வாறாக வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், உளவியல், தத்துவம் முதலான பல்வேறு துறைகளைப் படிப்பதன் வாயிலாக multi disciplinary thinking என்று சொல்லப்படும் ஒரு பரந்து பட்ட அறிவைப் பெறலாம்.
Standing on the shoulders of giants என்று சொல்வார்கள். படிப்பது என்பது அறிவு அரக்கர்களின் தோள்களில் நின்று உலகைப் பார்ப்பதற்கு ஒப்பானதாகும். அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்கும் போது மற்றவர்களுக்குப் பார்க்கக் கிடைக்காத கோணம் உங்களுக்குக் கைக்கெட்டும் மன்னிக்கவும் கண்ணிற்கெட்டும் தூரத்தில் இருக்கும்.
எனவே வாசிக்கும் பழக்கம் கொள்வோம் . வாழ்வை வளமாக்குவோம்.
Comments
Post a Comment