நேர் பின்னூட்ட வளையம்
நேர் பின்னூட்ட வளையம்
Positive Feedback Loop
எதிர் பின்னூட்ட வளையம் (Negative Feedback Loop) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் Heater ல் எதிர் பின்னூட்ட வளையம் உள்ளது. மின்சாரம் அதிக அழுத்தத்தில் வந்தாலோ அல்லது Heater ஐ அமர்த்த மறந்தாலோ எதிர் பின்னூட்ட வளையம் செயல்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும்.
நேர் பின்னூட்ட வளையம் என்பதற்கு உதாரணமாக நான் தொடர்ந்து எழுதும் இந்தப் பங்குச்சந்தை பற்றிய பதிவுகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பதிவுகள் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் விளையாட்டாகத் தான் தொடங்கப்பட்டது. சும்மாவேனும் தேநீர்க்கடையில் நின்று பங்குச்சந்தை குறித்துப் பேசுவது வேறு. எழுதும் போது புள்ளி விவரங்களுடன் தெளிவாக எழுத வேண்டும். மேலும் தமிழில் எழுதுவது ஒரு சவாலான விஷயம். சரியாக மொழி பெயர்த்து எழுத வேண்டும். அந்த வகையில் கூகுள் தேடுபொறி ரொம்ப உதவிகரம். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது தான் உத்தமம். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை நகைச்சுவையாகச் சொல்லியிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. BASIC என்பது ஒரு கணினி மொழி. அது Beginners All Purpose Symbolic Instruction Code என்பதன் சுருக்கமாகும். இதனை ஆரம்பிப்போரின் பல்திறமை குறியீட்டுச் சங்கேதம் - ஆபகுசம் என்பதாக மொழி பெயர்க்கக் கூடாது. இந்த உதாரணத்தைப் பதிவிடும் போதே நேர் பின்னூட்ட வளையம் செயல்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. சுஜாதாவின் இந்த ஆபகுசம் நகைச்சுவையை நான் படிக்கும் போது எனக்கு இருபது வயது இருக்கலாம். இந்த உதாரணம் என் மனதின் அடியாழத்திலிருந்து வெளிப்படுவது சற்றே வியப்பாக உள்ளது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வியப்படைய ஏதுமில்லை. நாம் படித்தது பார்த்தது கேட்டது உணர்ந்தது எல்லாம் நம் மன அடுக்கில் பத்திரமாக உள்ளது. நம் அறிவு பெருகப் பெருக நம் அறியாமை வெளியாகிறது. இன்னும் இதில் தெரிந்து கொள்ள இவ்வளவு உள்ளதா என்று மென்மேலும் தெரிந்து கொள்வதற்கான ஒரு தூண்டுதல் உருவாகிறது. பிறகு அறிவின் நேர் பின்னூட்ட வளையம் செயல்படத் தொடங்கி விடும். என்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதனை எழுதவில்லை. உதாரணத்திற்காக மட்டும் எழுதப்பட்டது.
உலகின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படும் கூட்டுப் பெருக்கம் நேர் பின்னூட்ட வளையத்திற்கான இன்னுமொரு உதாரணம். வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனமான பெர்க்சயர் ஹாத்வே நேர் பின்னூட்ட வளையத்திற்கான மற்றுமொரு உதாரணம். இந்த இடத்தில் அவருடைய முதலீட்டு நிறுவனத்தின் பிரம்மாண்டத்தை உணரும் விதமாக ஒரு சிறிய தகவலைக் குறிப்பிட விழைகிறேன். வாரன், அவருடைய முதலீட்டு நிறுவனத்தில் பணமாகக் கொஞ்சம் சில்லறை வைத்திருக்கிறார். அதனுடைய மதிப்பு நம் இந்தியப் பங்குச்சந்தையின் #1 நிறுவனமான TCSன் சந்தை மதிப்பை விடச் சற்றே கூடுதலாக உள்ளது. TCS ன் சந்தை மதிப்பு ரூபாய் 812428 கோடி (புள்ளி விவரம் எடுக்கப்பட்ட நாள் 16.8.2019)
நேர் பின்னூட்ட வளையம் கொண்ட ஒரு நிறுவனம் இந்திய .com நிறுவனங்களில் முதலாவதும் முதன்மையானதுமான
INFO EDGE . இந்தியாவின் #1 வேலை வாய்ப்பு இணையதளமான naukri.com, திருமணப்பொருத்த இணையதளமான jeevansathi.com, ரியல் எஸ்டேட் இணையதளமான 99acres.com, மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த இணையதளமான shiksha.com போன்ற இணையதளங்களின் தாய் நிறுவனம். உணவு நிறுவனமான zomato.com லும் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்திருக்கிறது. Naukri ஐ பொறுத்த அளவில் வேலை வாய்ப்பு இணையதளமாக இருப்பதால் ஆரம்ப அனுகூலம் என்ற அடிப்படையில் நிறையப் பேர் பார்வையிடும் இணையதளமாக இருக்கிறது. நிறையப் பேர் பார்வையிடும் வேலை வாய்ப்பு இணையதளமாக இருப்பதால் நிறைய நிறுவனங்கள் வேலை வாய்ப்பு விளம்பரங்களை Naukri ல் பட்டியலிடுகின்றன. நிறைய நிறுவனங்கள் வேலை வாய்ப்பு விளம்பரங்களை Naukri ல் பட்டியலிடுவதால் நிறையப் பேர் Naukri ஐ பார்வையிடுகிறார்கள். இவ்வாறாக ஒரு நேர் பின்னூட்ட வளையம் சுழலத் தொடங்குகிறது. இவ்வாறான நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்வது அகழி முதலீடு (Moat Investing) என்று அழைக்கப்படுகிறது. இந்த அகழியை உடைப்பது மிகவும் கடினமான விஷயம். ஒரு நிறுவனம் வெற்றி பெற்றால் அதனை நகல் எடுக்க ஓராயிரம் நிறுவனங்கள் புற்றீசல் மாதிரி முளைத்து விடும். அந்த வகையில் நிறுவனங்களைக் காக்கும் அரண் இந்த அகழி.
2006 ஆம் வருடம் INFO EDGE நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டில் 100 பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ.320 என்ற விலையில் ஒருவர் வாங்கி நாளது தேதி வரை வைத்திருப்பாரேயானால் அந்த 100 பங்கு 400 பங்குகளாகப் பெருகியிருக்கும் (இரண்டு முறை ஒன்றுக்கு ஒன்று இலவசப்பங்கு) அதன் மதிப்பு இன்றைய நிலவரப்படி 1980400/- ரூபாய் . 2006 லிருந்து நாளது தேதி வரையான கூட்டுப் பெருக்கம் 31.66 சதவீதம்.
Comments
Post a Comment