பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி ?
பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி ?
பங்குச்சந்தையில் முதலீடு செய்யக் கற்றுக் கொள்ளச் சிறந்த வழி பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தான். The best way to invest in the stock market is to invest in the stock market . அரசியலில் குதிக்க வேண்டும், காதலில் விழ வேண்டும், ஆன்மிகத்தில் இறங்க வேண்டும் என்பதாகச் சொல்வார்கள். பங்குச்சந்தையில் குதிப்பது தான் பங்குச் சந்தையைக் குறித்துக் கற்றுக்கொள்ள ஒரேயொரு சரியான வழி. கரையில் நின்று கொண்டு காலை நனைப்பது எல்லாம் கதைக்கு உதவாது.
இப்போது பங்குச்சந்தை குறித்து வகுப்புகள் எல்லாம் கூட நடத்துகிறார்கள். அவர்கள் கற்றுக் கொடுப்பது பெரும்பாலும் தினசரி வணிகம் (Day Trading) தொழில்நுட்பப் பகுப்பாய்வு (Technical Analysis) மற்றும் Futures and Options போன்ற பெறுதி (Derivative) வகைகளைத் தான். தினசரி வணிகம் செய்தால் பன்மடங்காகக் கூடிய பங்குகளைக் கைக்கொள்ளும் வாய்ப்புகளை இழக்கிறீர்கள். தொழில்நுட்பப் பகுப்பாய்வை, அடிப்படைப் பகுப்பாய்வுடன் (Fundamental Analysis) சேர்த்து ஊறுகாய் மாதிரி தான் தொட்டுக்கொள்ள வேண்டும். F & O என்பது உங்கள் முதலீட்டுக்கான காப்பீடு மட்டுமே. முதலீடே இல்லாமல் காப்பீடு எதற்காக எடுக்க வேண்டும்? பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஒரேயொரு சரியான வழி மதிப்பு முதலீடு (Value Investing) மட்டுமே. அதாவது , ஒரு ரூபாய் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) உள்ள பங்கை ஐம்பது காசுக்கு வாங்குவது. இன்னும் சிலரோ காகித வியாபாரம் (Paper Trading) என்றெல்லாம் ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள். அதாவது ஒரு பங்கை இன்ன விலைக்கு வாங்குவதாக காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இன்ன விலைக்கு விற்று விட வேண்டும். எல்லாம் பாவனை (simulation) விமான ஓட்டிகளுக்கு இந்தப் பாவனை முறையில் தான் விமானம் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்தக் காகிதப் புலிகள், காகித வியாபாரத்தைக் கற்றுக் கொண்டு விட்டு நிஜமாகப் பங்குச்சந்தைக்கு வந்ததும் காளைக்கும் கரடிக்குமான உணர்ச்சிப்பிரவாகத்தில் காணாமல் போய் விடுவார்கள். தெனாலிராமனின் பூனை பாலைக் குடித்த கதை தான்.
பங்குத் தரகர்களிடமும் நீங்கள் நிறையக் கற்றுக் கொள்ள முடியாது. அடிப்படையிலேயே நமக்கும் தரகருக்கும் ஒரு ஆர்வ மோதல் (conflict of interest) உள்ளது. நீங்கள் பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமாக இருத்தலில் தான் தரகரின் ஆர்வம் குடி கொண்டிருக்கும். அவ்விதம் செய்யாமல் இருத்தலில் தான் உங்கள் ஆர்வம் இருக்க வேண்டும். வாரன் பஃபெட் don't ask a barber for a haircut என்பதாகக் கூறியிருக்கிறார். முடி திருத்துபவரிடம், முடி வெட்டிக் கொள்ள ஆலோசனை கேட்டால், குறையத்தான் இருக்கிறது , அடுத்த மாதம் வாருங்கள் என்பதாகவா கூறுவார்? அப்படிக் கூறினால் அடுத்த மாதம் அவர் கடையே இருக்காது. விதிவிலக்காக சில தரகர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். அப்புறம் எப்படித்தான் முதலீடு செய்வது ?
பங்குச்சந்தை வகுப்புகளுக்குச் செல்வதையோ, பாவனை வியாபாரம் பயில்வதையோ அல்லது தரகரிடம் ஆலோசனை கேட்பதையோ வேண்டாமென்று சொல்லவில்லை. வகுப்புகளுக்கு வெளியே தான் உண்மையான பாடம் தொடங்குகிறது. அனுபவமே சிறந்த ஆசான். ஆயிரம் வேரைக் (பேரை அல்ல) கொன்றவன் அரை வைத்தியன் என்பதாகச் சொல்வார்கள். பாலகுமாரனின் ஒரு கவிதை...
பிறப்பில் வருவது
யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென
இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது
யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென
இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில்
யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென
இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான்
அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ
எதற்கெனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே
அருகினில் வந்து
அனுபவம் என்பதே
நான் தான் என்றான்
The power of starting something stupid- ஒன்றைத் தொடங்குவதன் சக்தி அளப்பரியது. கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுங்கள். Waiting can make you older not richer . காத்திருத்தல் உங்கள் வயதைக் கூட்டுமே தவிர வளமையைக் கூட்டாது. ஒன்றின் மேல் நீங்கள் தீராக்காதல் (passion) கொண்டால் உங்களுக்கு உதவ இந்தப் பிரபஞ்சமே ஓடி வரும். உங்கள் அறிவு பெருகப் பெருக அறியாமை வெளியாகும். இதில் அறிந்து கொள்ள இன்னமும் இவ்வளவு இருக்கிறதா என்று மென்மேலும் புரிந்து கொள்ளத் தூண்டப்படுவீர்கள். அறிவின் ஒரு நேர் பின்னூட்ட வளையம் சுழலத் தொடங்கும். அப்புறம் முதலீட்டுப் பாடங்களின் வாழ்நாள் மாணவனாக மாறி விடுவீர்கள்.
Stay Hungry Stay Foolish புத்தகத்தில் படித்த நிஜக்கதை ஒன்றுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன்.
காட்டு வாழ்க்கைப் படம் பிடிப்பில் (Wild Life Photography) ஒருவனுக்குத் தீராக்காதல். பட்டப்படிப்பு முடித்த கையோடு அப்பா வாங்கிக் கொடுத்த கேமிராவுடன் மனதில் பேரவாவுடன் கொடிய மிருகங்கள் உலாவும் காட்டிற்குள் செல்கிறான். மிருகங்களையும் மற்றும் பறவைகளையும் புகைப்படம் மற்றும் காணொளிப் படம் எடுப்பது, அதை வலைப்பூவில் (blog) பதிவேற்றம் செய்வது என்பதாக வாழ்க்கை நகர்கிறது. அங்குள்ள ஆதிவாசிகள் முதலில் அவனை ஏற்றுக் கொள்ளாத போதும் காலப்போக்கில் அவனுடைய தீராக்காதலை உணர்ந்து தங்களில் ஒருவனாக அவனை ஏற்றுக் கொள்கிறார்கள். பாம்பு கடித்தால் என்ன மருந்து , கொடிய மிருகங்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்பதான யுக்திகளையெல்லாம் அவனுக்குக் கற்றுத் தருகிறார்கள். இதற்கு நடுவில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் தங்களது இந்தியப் பிரதிநிதியாக ஒருவரை நியமிக்க கூகுள் தேடுபொறியில் தேடும் போது அவனுடைய வலைப்பூ தேடுதலில் முதலாவதாக வருகிறது. அவன் தான் டிஸ்கவரி தொலைக்காட்சியின் முதல் இந்திய ஊழியர். அவன் காட்டிற்குள் செல்லும் போது டிஸ்கவரி வேலை என்பது அவன் கனவிலும் இல்லை. வழிமுறைகளில் கவனமாயிருங்கள். வாழ்க்கை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும்.
அந்தக் கதை இப்படி முடிகிறது. அவனைச் சந்திக்கும் அனைவரும் அவனிடம் கேட்கும் ஒரே கேள்வி: டிஸ்கவரி சானலில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? அவன் பதில் : மொதல்ல காட்டுக்குப் போங்க .
Comments
Post a Comment