தாழப் பறத்தல்
தாழப் பறத்தல்
மாத வருமானம் 10000 ரூபாய். மாத செலவு 9999 ரூபாய். மகிழ்ச்சி. மாத வருமானம் 10000 ரூபாய். மாத செலவு 10001 ரூபாய். துக்கம். சொன்னவர். சார்லஸ் டிக்கன்ஸ். சொல்லிய ஆண்டு 1850. சில சொற்கள் இவ்விதம் சாகாவரம் பெற்று விடுகின்றன. இந்த செலவை எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக ஆக்குகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதுவே தாழப் பறத்தல்.
செலவைக் குறைப்பது என்பது பட்டினியாக வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு படுப்பதல்ல. மூன்று வேளை தேநீர் அருந்தாமல் இரண்டு வேளை மட்டும் அருந்தியெல்லாம் யாரும் பணக்காரர் ஆக முடியாது. பொதுவாக சுற்றுலா செல்வதெல்லாம் ஒரு ஆடம்பரச் செலவு என்று தான் பார்க்கப்படுகிறது. அதுவும் டிஸ்னிலேண்ட்டிற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பது வடிகட்டிய ஆடம்பரம் தானே? அது அவ்வாறு அல்ல. ஒருவர் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து குடும்பத்துடன் டிஸ்னிலேண்ட் செல்கிறார். அந்த சுற்றுலாவினால் அகத்தூண்டலுக்கு (inspiration) உள்ளாகி அவரின் பால்ய மகன் இப்போது டிஸ்னிலேண்ட்டில் ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அது ஒரு கண்ணிற்குத் தெரியாத முதலீடு. நான் சொல்ல வருவது என்னவென்றால் எந்தச் செலவையும் தன் உணர்வுடன் (conscious) செய்யுங்கள்.
உங்கள் வருமானம் முழுவதையும் செலவழித்து ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறீர்கள். திடுதிப்பென்று உங்களுக்கு 60 வயது ஆகி விடுகிறது. திடுதிப்பென்று எல்லாம் ஆகாது. வருமானம் முழுவதையும் நீங்கள் செலவழிப்பவர் என்றால் இதையெல்லாம் கவனிக்க உங்களுக்கு நேரம் இருக்காது. அல்லது திடுதிப்பென்று VRS கொடுத்து விடுகிறீர்கள். அப்போது ஓய்வூதியம் என்று பாதி தான் வருமானம் கிடைக்கப்பெறும். முதலிலேயே நீங்கள் தாழப் பறப்பவராக இருந்தால் பிழைத்து விடுவீர்கள். மேலும் உங்களிடம் கட்டாயமாக ஒரு முதலீட்டுத் தொகுப்பும் இருந்தே தீரும். அதில் நிறுவனப் பங்குகள் இருந்தால் இன்னும் சிறப்பு.
இந்த தாழப் பறத்தல் என்னும் கருத்தாக்கம் தனி நபர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் பொருந்தும். உலகளாவிய அளவில் பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் பெரும்பான்மையான சமயங்களில் தோல்வியில் முடிவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இணைப்பு என்பது பெரும்பாலும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் உள்ளது. இருவேறு நிறுவனங்கள் இணையும் போது முரண்பாடுகள் எழுவது இயற்கை. அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களை வெற்றிகரமாகக் கையகப்படுத்துதல் என்பது குதிரைக்கொம்பு. அந்த வகையில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களை வெற்றிகரமாகக் கையகப்படுத்திய மதர்சன் சுமி போன்ற நிறுவனங்களை தனித்துவமானவை (outlier) என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி அடுத்த நிறுவனங்களைக் கையகப்படுத்தும் ஒவ்வொரு நிறுவனமும் தனது துறை சார்ந்த நிறுவனங்களை மட்டுமே கையகப்படுத்துதல் வேண்டும். மதர்சன் சுமி வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். அது வாகன முகப்பு விளக்கு தயாரிக்கும் நிறுவனத்தைக் கையகப்படுத்தலாம். மாறாக தொலைபேசி துறையில் இறங்கக்கூடாது. ஒவ்வொரு நாட்டின் சட்ட திட்டங்களும் ஒவ்வொரு மாதிரி. அமெரிக்காவில் கார் ஓட்டினால் keep left கிடையாது. அங்கு keep right. சீனாவில் வலமிருந்து இடமாகத் தான் எழுதுவார்கள். நகைச்சுவையான ஒரு விஷயம். சலவைத்தூள் தயாரிக்கும் ஒரு இந்திய நிறுவனம் சீனாவில் விளம்பரம் ஒன்று கொடுத்தது. நமது பாணியில் இடமிருந்து வலமாக அழுக்கான ஆடையை ஒருவர் கையில் விரித்துக் காட்டுவதாக ஒரு படம். இரண்டாவதாக அவர்களின் சலவைத்தூளில் அந்த ஆடையை முக்கி எடுப்பதாக ஒரு படம். மூன்றாவது படத்தில் ஆடை புத்தாடை ஆகி விடுகிறது. சீனாவில் வலமிருந்து இடமாகப் பார்த்து அவர்கள் சற்றே துணுக்குற்றதாகக் கேள்வி. அவ்வளவேன், நீங்கள் தயாரிக்கும் பொருளுக்குப் பெயர் வைப்பதாக இருந்தால் கூட அது உலகளாவிய (universal) பெயராக இருக்கவேண்டும். உலகத்தின் எந்த மொழியிலும் அது திட்டு வார்த்தையாக (abusive words) இருந்து விடக்கூடாது.
மேலும் நிறுவனங்களுக்கு இடையிலான இந்த இணைப்பு மற்றும் பிணைப்பு (Merger & Amalgamation) என்பதற்கான ஆலோசனை சொல்வதற்கு என்று ஒரு தனிப்பட்ட துறையே உள்ளது. அவர்களிடம் ஆலோசனை கேட்டால் M & A வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அவ்வாறு தொடர்ந்து உண்மை விளம்பியாக இருந்தால் அப்புறம் அவர்கள் நிறுவனமும் நலிவடைந்து வேறு நிறுவனத்துடன் M & A க்கு உள்ளாக நேரிடும்.
கடன் இல்லாப் பெருவாழ்வு என்று சொல்வார்கள். முட்டாள்தனமாக எதையாவது செய்து விட்டால் புத்தியைக் கடன் கொடுத்து விட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடன் இல்லாமல் வாழ்வதே வாழ்வு. முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று விரும்பினால் சிறுகச் சிறுக காசு சேர்த்துத் தான் அந்தப் பொருளை வாங்குவார்கள். பெரும்பாலான தருணங்களில் இந்த மாதிரி ஆறப் போடுவது நம்மை ஆற்றுப் படுத்தும். அந்தப் பொருளை உண்மையிலேயே நாம் விரும்புகிறோமா என்பதான ஒரு கேள்வி எழுந்து விடும். இப்போதெல்லாம் கடன் அட்டை வந்து விட்டது. ஒரு பொருளை நினைத்தால் அடுத்த கணத்தில் அடைந்து விடலாம். இப்போது கடைகளில் பொருட்களின் மேல் விலையை யாரும் எழுதி வைப்பதில்லை. மாறாக EMI கட்டணத்தை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். கைபேசியிலிருந்து அனைத்தும் EMI ல் கிடைக்கும். தீபாவளி இனிப்பிற்கு ஒரு சீட்டு. ஏன், தீபாவளி வெடி பண்டு கூட ஆரம்பித்து விட்டார்கள். சின்ன வயசில் காசைக் கரியாக்காதே என்று திட்டு வாங்கியிருக்கிறேன். காசைக் கரியாக்கும் பொருட்டு வருடம் முழுவதும் சீட்டுக் கட்டுவதை என்னவென்று சொல்ல? EMI ல் ஒரேயொரு கடனை மட்டுமே வாங்கலாம். அது வீட்டுக்கடன். காலப்போக்கில் உயர் மதிப்பை அடையக்கூடிய ஒரு சொத்தை நாளும் தன் மதிப்பை இழந்து வரும் பணத்தைக் கொண்டு அடைக்கும் ஒரு வாய்ப்பு மற்றும் leverage என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு கருத்தாக்கம்... நாம் வீட்டுக்கடனுக்கு முன் பணமாக வீட்டின் மதிப்பில் 20 சதவீதம் என்ற அளவில் தான் கட்டுகிறோம். ஆனால் 100 சதவீத சொத்தையும் அனுபவிக்கிறோம். கடன் பத்திரத்தில் வாழ முடியாது. ஆனால் கடன் வாங்கி அந்த வீட்டில் வாழலாம்.
தனி நபர்களுக்கான இந்த கடன் விதிமுறைகள் நிறுவனங்களுக்கும் பொருந்தும். கடன் வாங்கி காணாமல் போன நிறுவனங்களின் பட்டியலுக்கு முடிவே கிடையாது. பதிவை முடிப்பதற்கு முன் ஒரு கேள்வி. உங்களுடைய வீட்டின் மதிப்பு உங்களின் நிகர சொத்து மதிப்பில் ( networth) எத்தனை சதவீதம்? வாரன் பஃபெட்டின் வீட்டின் மதிப்பு அவருடைய நிகர சொத்தின் மதிப்பில் 0.01 சதவீதம் மட்டுமே. மனுஷன் எவ்வளவு தாழப் பறக்கிறார்?! அதனால் தான் அவர் பூவுலகின் #1 முதலீட்டாளர் ஆக இருக்கிறார்.
Comments
Post a Comment