சில கேள்விகள்

சில கேள்விகள்

பங்குகளை விற்பது குறித்தான சில கேள்விகள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கப்படுகின்றன. அவைகளின் ஒரு சிறு பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

1. ஒரு பங்கை எப்போது தான் விற்பது?

2.பணமாக்கம் (Profit Booking) என்பதே கிடையாதா?

3.திடுதிப்பென்று பங்குச்சந்தை வீழ்ந்து விட்டால் என்ன செய்வது?

4.ஒரு பங்கை வாங்கிய விலையையாவது திரும்பப் பெறும் வகையில் கொஞ்சத்தை விற்று வைக்கலாமே?

5.இந்த இலாபத்தை எப்போது அனுபவிப்பீர்கள்?

6. எல்லாமே காகித இலாபமாக (Paper Profit) இருப்பது ஆபத்து இல்லையா?

7. பங்குச்சந்தையில் இலாபம் ஈட்டுவதன் மூலமாக யாரும் நஷ்டத்தை அடைய மாட்டார்கள் தானே?

கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள்...

ஒவ்வொரு கேள்வியாகப் பார்க்கலாம்.

1.ஒரு பங்கை எப்போது விற்பது?

அடிப்படைப் பகுப்பாய்வை (Fundamental Analysis) மேற்கொண்டு, மதிப்பு முதலீடாக (Value Investing) ஒரு நிறுவனப்பங்கை பார்த்துப் பார்த்து வாங்குகிறீர்கள். நிறுவனம் தீர்க்கவே முடியாத பிரச்னையில் சிக்கித் தவித்தால் விற்று விட்டு வெளியேறி விடலாம். சமீபத்திய உதாரணம் COX & KINGS .

2. பணமாக்கம் என்பதே கிடையாதா ?

HDFC வங்கியின் ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு 4 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. அப்போது பணமாக்கம் செய்தவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை இன்னமும் சபித்துக் கொண்டிருக்கலாம். இன்னும் சிலர் இப்போது பணமாக்கம் செய்து விட்டு மீண்டும் அந்தப் பங்கை விலை குறைந்ததும் வாங்குவேன் என்பதாக ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள். விலை குறையவே குறையாது. அப்படியே குறைந்தாலும் வாங்குவதற்கான பணம் இருக்காது. பணம் இருந்தாலும் மனம் இருக்காது. முன்பே ஒரு பதிவில் பார்த்த மாதிரி HDFC வங்கிப் பங்கை வாங்குவது என்ற ஒரேயொரு முடிவை எடுப்பது எளிது. அதை ஒரு ரூபாய்க்கு வாங்க, நான்கு ரூபாய்க்கு விற்க, மீண்டும் மூன்று ரூபாய்க்கு வாங்க, ஐந்து ரூபாய்க்கு விற்க என்று பல்வேறு முடிவுகளைத் தொடர்ச்சியாக அதே சமயம் சரியாக எடுக்க யாராலும் முடியாது.

3. திடுதிப்பென்று சந்தை வீழ்ந்து விட்டால் என்ன செய்வது?

அதைப் போன்று ஒரு நல்ல விஷயம் இருக்கவே முடியாது. சந்தை ஒரே சீராக உயர்ந்து செல்வதைக் காட்டிலும் குறைந்து பின் கூடுவது மிகுந்த இலாபத்தைத் தரும். ஆனால் சந்தை குறையும் போது நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்வது மிக முக்கியம். மேலும் விலை வேறு. மதிப்பு வேறு. தற்காலிக விலை இழப்பு (Quotational Loss) என்பது வேறு. நிரந்தர மதிப்பிழப்பு என்பது வேறு. COX & KINGS நிறுவனம் நிரந்தரமாக மதிப்பை இழந்து விட்டது. THOMAS COOK நிறுவனம் விலை இழப்பிற்கு உள்ளாகியிருக்கிறது.

4. ஒரு பங்கை வாங்கிய விலையையாவது திரும்பப் பெறும் வகையில் கொஞ்சத்தை விற்று வைக்கலாமே?

மீண்டும் HDFC வங்கிப் பங்கையே எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் 5000 பங்குகளை 5000 ரூபாய்க்கு IPO வில் வாங்குகிறார். பங்கு 4 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டவுடன் 5000 ரூபாய் பெறுமானமுள்ள பங்குகளை விற்று வைக்கிறார். அது சரியான ஒரு முடிவு தானா என்று கொஞ்சம் யோசிக்க வேண்டுகிறேன்.

5. இந்த இலாபத்தை எப்போது அனுபவிப்பீர்கள்?

இது ஒரு பயணம். இந்த பயணத்தில் கலந்து கொள்வதே ஒரு பரிசு தான். Journey is the destination . பயணமே இலக்கு . பயணமே நமக்கான பரிசு.இது நமக்காகவே நாம் வரைந்த ஒரு ஓவியம். மேலும் இந்த ஓவியம் இன்னும் முற்றுப் பெறவில்லை. வண்ணம் தீட்டும் வேலை இன்னும் பாக்கியிருக்கிறது. நமது காலத்தில் இந்த ஓவியம் முற்றுப்பெறுமா என்று தெரியவில்லை. பங்குச்சந்தையில் வழிமுறைகளில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். வளமை அதனுடைய துணை விளைபொருள்.

6. எல்லாமே காகித இலாபமாக இருப்பது ஆபத்து இல்லையா?

முகேஷ் அம்பானி இந்தியாவின் ஆகப்பெரிய பணக்காரர். அவருடைய சொத்தின் மதிப்பு இத்தனை கோடிகள் என்று படித்திருப்பீர்கள். அவர் அத்தனை பணத்தையும் பணமாக வைத்திருக்கவில்லை. மாறாக ரிலையன்ஸ் பங்குகளாக வைத்திருக்கிறார். அவருடைய சொத்தின் மதிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் கட்டப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டில் தான் அவருடைய கவனம் இருக்கும். நிறுவனம் நன்கு செயல்பட்டால் துணை விளைபொருளாகப் பணம் வந்தே தீரும். பங்கின் விலையும் கூடும். நாளும் தன் மதிப்பை இழந்து வரும் பணத்தைப் பணமாக வைத்திருப்பது தான் மிகப்பெரிய ஆபத்து.

7. பங்குச்சந்தையில் இலாபம் ஈட்டுவதன் மூலமாக யாரும் நஷ்டமடைய மாட்டார்கள் தானே?

HDFC வங்கிப்பங்கு 100 மடங்கு ஆகிய பின்னர் விற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

HDFC வங்கிப் பங்கு இப்போது 1500 bagger. 5000 பங்குகளை அதன் IPO வில் 5000 ரூபாய்க்கு வாங்கி 100 bagger ஆனதும் விற்று விட்டு வெளியேறிவர்களுக்கான நஷ்டம் அல்லது வாய்ப்பு விலை (Opportunity Cost) 25 இலட்சம் ரூபாய். இந்த வாய்ப்பு விலை அல்லது நஷ்டம் இன்றைய தேதிக்கானது. எதிர்காலத்தில் HDFC வங்கிப் பங்கின் விலை கூடக்கூட இந்த நஷ்டமும் கூடும். அதே மாதிரி 5000 ரூபாய் முதலீடு செய்து 5000 HDFC வங்கிப் பங்குகளை IPO வில் வாங்கி, வங்கி பட்டியலிடப்பட்டதும் 5000 ரூபாய்க்கான பங்குகளை விற்றவர்களுக்கான இன்றைய தேதிக்கான வாய்ப்பு விலை ரூபாய் 1875000.

சமீபத்திய உதாரணம் என்ற HDFC வங்கிப் பங்கைக் குறித்து எழுதியிருக்கிறேன். இந்த மாதிரி நூற்றுக்கணக்கான பன்மடங்காளர்கள் (Multibaggers) நமது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன.

பின் குறிப்பு : HDFC வங்கி IPO வில் வெளியிட்ட 10 ரூபாய் முக மதிப்புள்ள தனது பங்குகளை 2 ரூபாயாகவும் பின்னர் 1 ரூபாயாகவும் குறைத்திருக்கிறது . எளிமையின் பொருட்டு IPO விலை ஒரு ரூபாய் என்று கொண்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14