விதைக்குள் கானகம்
விதைக்குள் கானகம்
பங்குச்சந்தை என்றால் என்ன என்று உழவர் சந்தை நண்பர் ஒருவர் கேட்டார்.
பங்குச்சந்தை என்பது உழவர் சந்தை மாதிரி தான். காய்கறிகள் மாதிரி இங்கு பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்யலாம்.
இந்தியாவில் இரண்டு இடங்களில் தான் இந்தச்சந்தை இயங்குகிறது. BSE என்று அழைக்கப்படும் மும்பை பங்குச்சந்தை மற்றும் NSE என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தை.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 0915 முதல் மாலை 0330 வரை சந்தை செயல்படும். சனி, ஞாயிறு விடுமுறை. மற்றும் முக்கியமான பண்டிகைகளின் போதும் சந்தைக்கு விடுமுறை.
பங்குகளை வாங்க வங்கிக் கணக்கும், மின்னணுக்கணக்கும் அவசியம் தேவை.
காய்கறிகளை உழவரிடமிருந்து வாங்குவது மாதிரி பங்குகளைத் தரகர் மூலமாக (மட்டுமே) வாங்க முடியும். யாரிடமிருந்து பங்குகளை வாங்குகிறோம் அல்லது யாருக்கு விற்கிறோம் என்று நமக்கும் தெரியாது. தரகருக்கும் தெரியாது. எல்லாமே மின்னணுப் பரிமாற்றங்கள் தான்.
பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் தரகர் தரகு, பங்குப் பரிவர்த்தனை வரி எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு சதவீதம் தரகுக் கட்டணமாகக் கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்குள் வாங்கிய பங்குகளை இலாபத்தில் விற்றால் இலாபத்திற்கு 15 சதவீத வரி கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்குள்ளான இலாபத்தையும் நஷ்டத்தையும் சமன் செய்து கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு மேல் பங்குகளை வைத்திருந்து இலாபத்தில் விற்றால் இலாபத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒரு இலட்சம் வரை வரி கிடையாது. அதற்கு மேல் 10 சதவீத வரி கட்ட வேண்டும். பங்காதாயம் ஒரு வருடத்திற்கு 5000 ரூபாய்க்கு மேல் என்றால் 10 சதவீத வரி .
விலை குறைந்த அதே சமயம் மதிப்பு மிக்க காய்கறிகளைத் தேடித்தேடி வாங்குவது போல் பங்குகளையும் அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீட்டு அடிப்படையில் வாங்குவது தான் பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான ஒரேயொரு சரியான வழி.
சில காய்கறி(பங்கு)கள் குறுகிய காலத்தில் கூடும் என்று வேக முதலீட்டை ( momentum investing) மேற்கொள்பவர்களும் உண்டு. மனிதரில் இத்தனை நிறங்களா என்பது மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி.
வாங்கிய பங்குகளைப் பாதுகாப்பாக மின்னணுக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம். காய்கறிகளை வாங்கிப் பாதுகாப்பாகக் குளிர்பதனப் பெட்டியில் வைத்தாலும் ஒரு காலகட்டத்திற்குள் பயன்படுத்தி விடவேண்டும். பங்குகளுக்கு அப்படிக் காலக்கெடு எதுவும் கிடையாது. தரமற்ற பங்குகள் காய்கறிகள் மாதிரி வாடி வதங்கி மதிப்பிழந்து போவதுண்டு. ஆனால், தரமான பங்குகளைத் தலைமுறை தாண்டியும் வைத்துக் கொள்ளலாம்.
உழவர் சந்தையில் முயல் எல்லாம் விற்கிறார்களா என்ன? இந்தப் பங்குகளும் முயல் மாதிரி குட்டி போடும் ( இலவசப்பங்கு/ பங்குப் பிரிப்பு) தாய்ப் பங்கே இரண்டாகப் பிரியும் ( நிறுவனப்பிரிப்பு) பங்குகளை ஒரு மரமாகக் கற்பனை செய்து கொண்டால் பங்காதாயங்கள் அதன் கனிகள். மரம் அது பாட்டிற்கு நெடுநெடுவென்று வளர்ந்து கொண்டேயிருக்கும். அதற்கு வானமே எல்லை ( முதலீட்டுப் பெருக்கம்)
சந்தையின் ஒரு மூலையில் இது என்ன கூட்டம்? ஓ... ஊக வணிகர்களா? பங்குச்சந்தையிலும் இம்மாதிரி ஊக வணிகர்களின் பெருங்கடல் ஒன்று உள்ளது. பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களை விட இவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். F&O வணிகர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் பங்குகள் எதனையும் வாங்க மாட்டார்கள். மாறாக வெங்காய நிறுவனத்தின் விலை கூடுமா (call option) தக்காளி நிறுவனத்தின் விலை சரியுமா ( put option)என்று பந்தயம் கட்டி விளையாடுபவர்கள். இவர்கள் மட்டுமல்ல, காலையில் பங்குகளை வாங்கி மாலைக்குள் விற்பவர்கள் (day trading)பங்குகளே கையில் இல்லாமல், பங்குகள் விலை குறையும் என்பதாக யூகித்து, இல்லாத பங்குகளை விற்று வைத்து விட்டுப் பின் மாலைக்குள் வாங்கி கணக்கை நேர் செய்பவர்கள் (short selling) என்று பலவகையினர் உண்டு. இவர்களால் தான் பங்குச்சந்தை சூதாடிகளின் கூடாரம் என்று அழைக்கப்படுகிறது.
பங்குச்சந்தையில் நிறையப்பேர் சூதாடுவதால் நாம் ஒட்டு மொத்தமாகப் பங்குச்சந்தையையே புறந்தள்ளக் கூடாது. Liquidity என்று சொல்வார்கள். இவர்கள் சூதாடுவதால் தான் பங்குச்சந்தையில் நிறையப் பங்குகள் வர்த்தகமாகிறது. அதனால் தாக்கச்செலவு ( வாங்கும் போது பங்கு விலை கூடுதல், விற்கும் போது குறைதல்) மட்டுப்பட ஏதுவாகிறது. வாங்குபவர் கவனம் (buyer beware) என்பது மாதிரி நாம் சூதாடாமல், பங்குகளைத் துள்ளிக்குதிக்கும் காகிதங்களாகப் பார்க்காமல், நம்பத்தகுந்த வருமானத்துக்குரிய ஒரு ஆதார சுருதியாகக் கருத வேண்டும்.
தோட்டத்தைப் பராமரிப்பதில் எத்தனையோ நுணுக்கங்கள் இருப்பது மாதிரி பங்குச் சந்தையிலும் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. முக மதிப்பு (face value) விலை வருவாய் விகிதம் (pe multiple) ஒரு பங்குச் சம்பாத்தியம் (earnings per share) பங்காதாயம் (dividend) பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) முதலீட்டுப்பெருக்கம் (capital appreciation) இருப்பு நிலைக் கணக்கு (balance sheet) இலாப நட்டக் கணக்கு (profit and loss account) நிதி விகிதங்கள் (financial ratios) என்று அடிப்படைப் பகுப்பாய்வில் (fundamental analysis) ஆரம்பித்து மதிப்பு முதலீடு (value investing)அகழி முதலீடு ( moat investing) என்பதாகப் பற்பல கருத்தாக்கங்கள் (concepts) உண்டு. போகிற போக்கில் தான் அவைகளைக் கற்றுத் தெளிய முடியும். அனுபவமே சிறந்த ஆசான்.
என்னது? ஸ்டாப் லாஸ், இலக்கு விலை பற்றி எதுவும் சொல்லவில்லையா? இந்த இரண்டையும் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் பங்குச்சந்தை பரீட்சையில் பாதி மதிப்பெண் வாங்கி விட்டதாக அர்த்தம். ஸ்டாப் லாஸ் என்பது நமது கால்களை நாமே வெட்டிக்கொள்வது... இலக்கு விலை என்பது நம்மை நாமே வெட்டிக்கொள்வது... ஐயா, நீங்கள் பார்த்துப் பார்த்து ஒரு கன்றை ஊன்றி வைக்கிறீர்கள். அது கொஞ்சம் வளர்வதற்குச் சுணங்கினால் உடனே வேரோடு வெட்டி எறிந்து விடுவீர்களா? அது தான் ஸ்டாப் லாஸ். சரி, செடி கொஞ்சம் வேர் பிடித்து வளர்ந்ததும் வெட்டி விற்று விடுவீர்களா? அது தான் இலக்கு விலை. நேரம் என்ற உரம் போட்டு வளர்ப்பது தானே முறை? இன்னும் சிலரோ செடி ஒழுங்காக வளர்கிறதா என்று தினமும் வேரை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலத்தில் benign neglect என்று ஒரு அருமையான வாசகம் இருக்கிறது. தமிழில் நலம் தரும் புறக்கணிப்பு என்று சொல்லலாம். பங்குச்சந்தையிலும் இந்த மாதிரி ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட புறக்கணிப்பு என்பதை மேற்கொள்வது நலம் தரும் .
' முதலீடு என்பது புல் வளர்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றது 'என்று பொருளாதாரத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற பால் சாமுவேல்சன் கூறியிருக்கிறார். தரமான பங்குகள் வாழை மாதிரி. பூவிலிருந்து தொடங்கி இலை, தண்டு, மரம், காய், பழம் என்று எல்லா நிலைகளிலும் பலன் தரும்.
இதென்ன? உழவர் சந்தையின் அருகில் ஒரு டாஸ்மாக் கடை? சொல்ல மறந்து விட்டேனே? தரமான பங்குகள் ஒயின் மாதிரி. நாளாக நாளாக அதன் மதிப்பு கூடிக்கொண்டேயிருக்கும்.
நீங்கள் அடிப்படையில் ஒரு விவசாயி. உங்களால் புரிந்து கொள்ள முடியும். பங்குகளை வாங்கிப் பராமரிப்பது என்பது ஒரு தோட்டத்தைப் பயிரிடுவது மாதிரி தான். ஒரு மரம் ஒரே நாளில் வளர்ந்து காய்களையும் கனிகளையும் தந்து விடாது. பங்குகளையும் பல்லாண்டுகள் வைத்திருப்பதில் தான் வெற்றிக்கான விதை சூட்சுமமாக இருக்கிறது. அந்த விதைக்குள் ஒரு கானகமே ஒளிந்திருக்கிறது. எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் சில பங்குகள் நாம் எதிர்பார்த்த மாதிரி வளராது. சில பட்டுப் போய் விடும். எழுந்தால் மரம். இல்லையேல் உரம். நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு மரத்திற்குச் சுதந்திரம் ஆகாது. ஆகவே ஆகாயத்தில் கோட்டை கட்டாமல், பறப்பதைப் பிடிக்கிறேன் என்று இருப்பதைக் கை விட்டு விடாமல் இயற்கையோடு இணைந்து பொறுமை காத்தால் தொடுவானம் என்பது தொட்டு விடும் தூரம் தான்.
Comments
Post a Comment