தீதும் நன்றும் பிறர் தர வாரா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
பன்மடங்காளராகும் பங்குகள் அல்லது பரஸ்பர நிதிகளை எவ்வாறு இனங்காண்பது, அவற்றின் மூலமாகக் கோடிகளை எவ்வாறு ஈட்டுவது என்பது நண்பர் ஒருவரின் கேள்வி.
எந்தப் பங்கும் பரஸ்பர நிதியும் உங்களைக் கோடீஸ்வரர் ஆக்காது. நீங்கள் தான் உங்கள் உணர்வுகளை மேலாண்மை செய்து கோடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பரஸ்பர நிதி முதலீடுகளில் கோடிகளைக் குவிக்க அதன் பங்காதாய வழங்கல் திட்டத்தை (Dividend payout option) அல்லாது வளர்ச்சித் திட்டத்தை (Growth option) தேர்வு செய்திருக்க வேண்டும்.
அதனினும் முக்கியமாக வெயிலிலும் மழையிலும், காளைச்சந்தையிலும் கரடிச்சந்தையிலும் இத்தகைய நிதிகளைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும், ஒருமுறை முதலீடுகளை விட தொடர்ந்தவாக்கிலான முதலீடுகள் இந்தக் கோடிகளுக்கான பயணத்தை விரைவுபடுத்தும்.
ஆனால், உண்மையில் நடப்பது என்ன?
பரஸ்பர நிதி ஒன்றில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள். எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. திடுதிப்பென்று கரடியின் தாக்கம் சந்தையில் உணரப்படுகிறது. பரஸ்பர நிதியின் NAV குறையத் தொடங்குகிறது.
இந்த சமயத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி இன்னொரு பரஸ்பர நிதியின் NAV அதிகரித்துச் செல்கிறது.
நீங்கள் இந்த நிதியிலிருந்து அந்த நிதிக்குத் தாவுகிறீர்கள்.
ஆனால், அடுத்த ஆண்டு வேறொரு நிதி நிறைச் செயலாக்கம் புரிகிறது. நீங்கள் மறுபடி ...
இந்த மாற்றங்களுக்கான வரி முதலான உராய்வுச் செலவுகளைக் கணக்கிட்டால் நீங்கள் முதலில் முதலீடு செய்த நிதியிலேயே தொடர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
தனிப்பட்ட பங்குகளுக்கும் இந்தக் கதையைப் பொருத்திப் பார்க்கலாம்.
முதலீட்டாளர்களின் இத்தகைய செயல்பாடுகள் காரணமாக ஒரு முதலீட்டின் வருமானத்திற்கும் முதலீட்டாளர் வருமானத்திற்கும் இடையில் சராசரியாக 6 சதவீத இழப்பு ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
1966 ஆம் ஆண்டிலிருந்து 1982 ஆம் ஆண்டு வரை அமெரிக்க Dow Jones குறியீடு ஒரு குறிப்பிட்ட விலைப்பட்டையைத் தாண்டிச் செல்லவில்லை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அது 1000 என்ற புள்ளியில் தொடங்கி 777 என்ற புள்ளியில் முடிவடைகிறது. ஆனால் இந்தக் கால கட்டத்தில் 187 நிறுவனப்பங்குகள் 100 மடங்காளர் நிலையை எட்டியுள்ளது இங்கே கவனம் பெறுகிறது.
பன்மடங்காளர் பயணம் என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முதலில் பங்குகள் பன்மடங்காளராக அதிக காலம் பிடிக்கும். 20 சதவீதக் கூட்டுப்பெருக்கத்தில் வளர்ந்து வரும் ஒரு பங்கு 100 மடங்காளர் என்ற நிலையை அடைய 25 ஆண்டுகள் ஆகும்.
மேலும், அதன் பன்மடங்காளர் பயணமும் ஏற்ற இறக்கங்களுடன் கரடுமுரடான ஒரு பாதையாக இருக்கும். பன்மடங்காளர் பயணத்திற்கு டன் கணக்கில் பொறுமையும், இரும்பு இதயமும் தேவைப்படும்.
பங்குத்தரகு நிறுவனம் ஒன்றின் ஒரு ஆய்வு முடிவு: தாங்கள் செய்த முதலீடுகளையே மறந்த அல்லது இறந்த முதலீட்டாளர்களின் பங்குத்தொகுப்புகள் சிறப்பாகச் செயல்புரிந்த வண்ணமாக உள்ளனவாம்.
நிறுவனர்கள் கூட நிறுவனங்களின் பன்மடங்காளர் பயணத்தில் முழுவதுமாகப் பயணித்து செல்வத்தை உருவாக்கிக் கொள்வார்கள் என்று ஒருபோதும் அறுதியிட்டுக் கூறமுடியாது. Infosys நிறுவனத்தில் அதன் நிறுவனர் பங்கு தற்போது 13.9% என்ற குறை அளவீட்டில் மட்டுமே உள்ளது. அந்த வகையில் Wipro நிறுவனம் தனித்துவமாக உள்ளது. 1946 ஆம் ஆண்டு அது பட்டியலிடப்பட்டது. அதன் நிறுவனர் பங்கு இன்றும் 72.59% என்ற உயர் அளவீட்டில் உள்ளது.
தனிப்பட்ட முதலீட்டாளர்களும் நிறுவனங்களின் பன்மடங்காளர் பயணத்தில் பெரும்பாலும் முழுவதும் பயணித்திருக்க மாட்டார்கள்.
ICICI வங்கியின் பன்மடங்காளர் பயணத்தில் அதன் முதல் பொது வெளியீட்டிலிருந்து (அதன் 1:10 இலவசப்பங்குகளை விற்றது போக) அடியேன் பங்கு பெற்றிருக்கிறேன். இன்றைய தேதியில் அது 226 மடங்காளர்.
இந்த செல்வ உருவாக்கப் பயணத்தைச் சிலர் பாதியிலேயே முடித்திருக்கலாம். அதற்கு நியாயமான காரணங்களும் இருந்திருக்கலாம்.
ஒரு சிலர் நஷ்டத்திற்கு உள்ளாகி அச்சத்தில் வெளியேறியிருக்கலாம்.
இவ்வாறு ஒரே பங்கு ஒருவருக்குப் பன்மடங்காளராகவும் மற்றொருவருக்கு எதிர்மடங்காளராகவும் ஆவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
பன்மடங்காளர்களை இனங்காண்பதில் இன்னொரு நுட்பமான சிக்கலும் உள்ளது.
தற்போது பன்மடங்காளர்கள் ஆகியிருக்கும் Eicher Motors முதலான பங்குகள் அவற்றின் பன்மடங்காளர் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் வாங்க ஆளில்லாமல் வர்த்தமாகிக் கொண்டிருந்தன. வேறு மாதிரி சொல்வதென்றால் அவை பன்மடங்காளர் ஆவதற்குரிய எந்த ஒரு சிறு அறிகுறியையும் தெரிவிப்பதாக இல்லை. ஆனால் இந்தக் கம்பளிப்பூச்சிகள் தான் இன்று பட்டாம்பூச்சியாக மாறி சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றன.
Eicher Motors நிறுவனத்தின் அன்றைய சந்தை மதிப்பு வெறும் 46 கோடி. அதன் இன்றைய சந்தை மதிப்பு 2 இலட்சம் கோடி.
இன்று நாம் பன்மடங்காளர் பங்குகளை இனங்காண முயற்சி செய்தால் இதே கதை தான் தொடரும்.
கடவுளே நேரில் வந்து நாளைய பன்மடங்காளர்கள் பட்டியலைக் கொடுத்தால் கூட அவற்றில் நம்பிக்கை கொண்டு நாம் ஒருபோதும் முதலீடு செய்ய மாட்டோம். முதலீடு செய்ய முடியாதவாறு தான் அவை இப்போது தோற்றமளிக்கும்.
பின்னர் பன்மடங்காளர் பங்குகளை இனங்காண்பது தான் எப்படி?
தரமான பங்குகளை மதிப்பு முதலீடாகக் காலப் பன்மயமாக்க முறையில் வாங்குவதான வழிமுறைகளில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். வளமை தானாக வரும். பன்மடங்காளர்கள் பல்கிப் பெருகும்.
ஆக, பங்குச்சந்தையில் பன்மடங்காளர்களுக்குப் பஞ்சமில்லை. பன்மடங்காளர்களை உருவாக்குவதற்கான சரியான மனப்பாங்கைக் கொண்ட முதலீட்டாளர்களுக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது.
Comments
Post a Comment