அகழி
அகழி
Moat
பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்:
1. மிகை முதல் நீர்க்காமை
2. மிகை கடன் இல்லாமை
3. நிறுவனர் பங்கு
4. தரமான வளர்ச்சி
5. அகழி
6. அறம்
இவற்றில் அகழி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
முதலாளித்துவத்தின் (capitalism) பெரும் பிரச்னை என்னவென்றால் ஒரு நிறுவனம் வெற்றி பெற்றால் அதனை நகலெடுக்க ஓராயிரம் நிறுவனங்கள் புற்றீசல் மாதிரி கிளம்பி விடும். இந்த மாதிரி நகலெடுக்க விடாமல், புதிய நிறுவனங்கள் போட்டிக்கு வராமல் தடுக்கும் அரணாக அகழி செயல்படுகிறது. அகழி முதலீட்டின் சில முக்கிய வகைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. வலைப்பின்னல் விளைவு (Network Effect):
CAR TRADE TECHNOLOGIES, INDIAMART INTERMESH, INFO EDGE, MSTC
ஒரு தயாரிப்பு அல்லது சேவையை மிகையான மக்கள் பயன்படுத்தும் போது அதன் மதிப்பு மீமிகைப் பெருக்கத்தில் அதிகரிப்பது வலைப்பின்னல் விளைவு (Network Effect) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு நாட்டில் ஒரேயொரு நபரிடம் மட்டும் தொலைபேசி இருந்தால் அதனால் என்ன பயன் கிடைக்கப்பெறும்? அவர் யாருடனும் பேச முடியாது. அவரிடமும் யாரும் பேச முடியாது. ஆனால் நூறு பேரிடம் தொலைபேசி இருந்தால் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள ஏதுவாகும். அதுவே ஆயிரம் பேரிடம் இருந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகரிக்கும். நாட்டின் ஒவ்வொருவரும் தொலைபேசியைக் கொண்டிருந்தால் இந்தக் கட்டமைப்பின் மதிப்பு மீமிகைப் பெருக்கத்தில் வளர்ந்து செல்லும். இது தான் network effect. ஒவ்வொரு புதிய தொலைபேசியும் இந்த வலைப்பின்னலில் இணையும் போது இந்த வலைப்பின்னலின் மதிப்பு மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகிறது.
Facebook இணையதளத்தை உதாரணமாகக் கொண்டு இந்த அகழியை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்து கொள்ளலாம். சமூக ஊடக இணையதளங்களைப் பொறுத்தவரை நீங்கள் facebook ல் மட்டுமே இணைய விரும்புவீர்கள். இன்னொரு இணையதளம் இதனை விட சிறப்பாக இருந்தாலும் நீங்கள் அங்கு செல்ல விரும்ப மாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் நண்பர்கள் அனைவரும் facebook ல் மட்டுமே இருக்கிறார்கள். அது உலகளாவிய வலைப்பின்னல் ஒன்றைக் கொண்டிருக்கிறது.
Info edge இணைய நிறுவனத்தின் சிகர இணையதளமான naukri.com இந்த வலைப்பின்னல் அகழிக்கான மற்றுமொரு உதாரணம். முதன்முதலில் தொடங்கப்பெற்ற வேலை வாய்ப்பு இணையதளம் என்ற அடிப்படையில் அது ஆரம்ப அனுகூலம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. நிறைய பேர் அவர்களது வேலை வாய்ப்பிற்காக Naukri ல் பதிவு செய்திருக்கிறார்கள். நிறையப்பேர் பதிவு செய்திருப்பதால் நிறைய நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையானவர்களைத் தேர்ந்தெடுக்க வரும் இணையத்தளமாக Naukri இருக்கிறது. நிறைய நிறுவனங்கள் வருவதால் நிறையப்பேர் அங்கு பதிவை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு நேர் பின்னூட்டத்தின் வளையம் (Positive feedback loop) ஒன்று சுழலத் தொடங்குகிறது. இன்று வேலை வாய்ப்பு சந்தையில் Naukri கிட்டத்தட்ட 75 சதவீத பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.
2. திறன்மிகு அளவாக்கம் (Efficient Scale):
ADANI PORTS, POWERGRID
ஒரு துறையில், ஒரு பூகோளப் பரப்பில் ஒரு நிறுவனம் மட்டுமே இயங்க முடியும். மற்றொரு நிறுவனம் இங்கு கால் பதித்தால் அது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் நன்மை பயக்காது என்ற கருத்தாக்கம் திறன்மிகு அளவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
Powergrid நிறுவனத்தை இந்த வகையில் பார்க்கலாம். அதன் மின்கோபுரக் கட்டமைப்புகள் இந்த அடிப்படையில் மட்டுமே இயங்குகின்றன.
மேலும், Powergrid நிறுவனம், அதன் மின் கோபுரக் கட்டமைப்புகளை உருவாக்கத் தொடர்ந்து கடனைத் திரட்ட வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. இவ்வாறு கடன் முதலுக்கான (debt capital) தணியாத தாகத்தை (Rs.143077 Cr) அது கொண்டிருக்கிறது. அதன் பங்கு முதலும் ஆகப்பெரிய அளவுகளில் (Rs.9300 Cr) உள்ளது. இந்த பொறுப்புகளும் (Liabilities) அதன் அகழியாகச் செயல்படுகிறது. பிற நிறுவனங்கள் இந்தக் கடனுக்கு அஞ்சி இந்தத் துறையில் கால் பதிக்கத் தயங்கும்.
3. கட்புலனாகா சொத்துகள் (Intangible Assets):
BRITANNIA INDUSTRIES, COLGATE, PIDILITE INDUSTRIES
கட்புலனாகா சொத்துகள் என்பவை ஒரு நிறுவனத்தின் தொட்டுணர முடியாத கூறுகளால் உருவாகும் ஒரு சக்தி வாய்ந்த போட்டித் திறன் ஆகும்.
பிஸ்கெட் என்பதும் உங்கள் நினைவுக்கு வருவது எது? அது Britannia Milk Bikis என்பதாகவே இருக்கும். இது mind share என்பதாக அழைக்கப்படுகிறது. இந்த mind share என்பது market share க்கு அடிகோலுகிறது. Britannia நிறுவனம் நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. பிஸ்கெட் சந்தையின் 38 சதவீத பங்களிப்பை அது வைத்திருக்கிறது. அதனுடைய சந்தை மதிப்பு ரூபாய் 1,28,033 கோடி. இத்தனை கோடி ரூபாயை ஒருவருக்குக் கொடுத்து Britannia நிறுவனத்துடன் போட்டி போடச் சொன்னாலும் அவர் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பது தான் சிறந்த ஒரு முடிவாக இருக்கும். முன்னரே குறிப்பிட்ட படி Britannia வெறுமனே சந்தைப் பங்களிப்பை மட்டும் கொண்டிருக்கவில்லை. அது நுகர்வோரின் மனதையும் கொள்ளையடித்து வைத்திருக்கிறது.
அதே மாதிரி Colgate பற்பசை கொண்டு தான் நாம் பல் துலக்குகிறோம். Pidilite நிறுவனத்தின் Fevistik கொண்டு தான் நாம் ஒட்டுகிறோம்.
இந்த நிறுவனங்களின் Brand Equity என்று சொல்லப்படும் முத்திரை மதிப்பு அவற்றின் கட்புலனாகாத அகழியாகச் செயல்படுகிறது.
4. செலவுச் சாதகம் (Cost Advantages):
AVENUE SUPERMARTS, COAL INDIA
நிறுவனம் ஒன்றின், ஒரு பொருளை அல்லது சேவையை, அதனுடைய போட்டியாளர்களை விட குறைந்த செலவில் தயாரித்து வழங்கும் தனித்துவமான திறமை, செலவுச் சாதகம் (Cost Advantage) என்று அழைக்கப்படுகிறது.
இரண்டு நிறுவனங்கள் ஒரே தரத்திலான பொருளை சந்தையில் விற்பதாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு நிறுவனத்தால் மட்டும் சிலபல காரணங்களால் மிகக் குறைந்த செலவில் அதனை வழங்கவோ அல்லது உற்பத்தி செய்யவோ முடிகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்த நிறுவனத்திற்கு இரண்டு சாதகங்கள் கிடைக்கும்.
ஒன்று குறைந்த விலை. சந்தையில் போட்டி அதிகரிக்கும் போது, இந்த நிறுவனம் தன் பொருளின் விலையை மற்றவர்களால் கற்பனை செய்ய முடியாத அளவிற்குக் குறைத்து விற்கும். இதனால் போட்டியாளர்கள் நஷ்டமடைந்து சந்தையை விட்டு வெளியேறுவார்கள்.
மற்றொன்று high profit margin என்று சொல்லப்படும் அதிக இலாப வரம்பு. மற்ற நிறுவனங்கள் விற்கும் அதே விலைக்கு தன் பொருளை விற்று, போட்டியை விட மிக அதிக லாபத்தைச் சம்பாதிக்கும் ஒரு வழிமுறை.
இதற்கான சிகர உதாரணங்களாக Avenue Supermarts மற்றும் Coal India நிறுவனங்களைக் குறிப்பிடலாம்.
Avenue Supermarts, பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை மிகை அளவில் கொள்முதல் செய்கிறது. இந்த மிகை அளவு, மலிவான கொள்முதலுக்கு வழிகோலுகிறது. அதனால் இலாப வரம்பைக் குறைக்காமல் அதன் போட்டியாளர்களை விட மலிவான விலையில் பொருட்களை நிறுவனத்தால் வழங்க முடிகிறது. இந்த மிகை விற்பனை மீண்டும் மிகை கொள்முதலுக்கு இட்டுச் செல்கிறது.
Coal India நிறுவனத்தைப் பொறுத்தவரை அது சொந்தமாகச் சுரங்கங்களை வைத்திருக்கிறது. தற்போதைய அளிப்பின் (supply) படி அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையை (demand) அதனால் வழங்க முடியும்.
5. மாறுதல் செலவு (Switching Costs):
AIA ENGINEERING, CDSL, NSDL
மாறுதல் செலவு (Switching Cost) என்பது வாடிக்கையாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் இருந்து மற்றொரு நிறுவனத்தின் தயாரிப்பிற்கு மாறுவதை கடினமாக்கும் ஒரு பொருளாதார அரண் ஆகும்.
AIA Engineering நிறுவனம், உலகளாவிய சிமென்ட், சுரங்கத் தொழில் மற்றும் வெப்ப மின் தொழில்களுக்கு உயர் குரோமியத்தினால் ஆன அரைக்கும் ஊடகங்கள் மற்றும் தேய்மான எதிர்ப்பு பாகங்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குவதில் கவனம் செலுத்தும் அதன் மூலமாக உயர் இலாபம் தரும் வணிக மாதிரியில் செயல்படுகிறது. இத்தகைய தொழில்களின் செயல்திறனை மேம்படுத்தும் உயர்தர, மிகவும் அத்தியாவசியமான நுகர்பொருட்களை வழங்குவதன் மூலம், இந்நிறுவனம் வலுவான வாடிக்கையாளர் விசுவாசத்தையும், சில சந்தைகளில் ஏறக்குறைய ஏகபோக நிலையையும் பெற்றுள்ளது. இந்தப் பொருட்களை அடிக்கடி வாங்க வேண்டிய தேவை எழும். இந்தத் தொழில்களின் தொடர்ந்த வாக்கிலான உற்பத்திக்கு AIA Engineering நிறுவனத்தின் இத்தகைய பாகங்கள் இன்றியமையாத ஒன்றாகும். வேறு நிறுவனங்கள் குறைந்த விலையில் இவற்றை வழங்கினாலும் அவை அங்கு செல்லாது. தரத்தில் சமரசம் செய்து கொண்டால் இந்தத் தொழில்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு விடும்.
Comments
Post a Comment