அளவைச் சாய்வு

அளவைச் சாய்வு

Quantitative Bias


அளவைகளின் பக்கம் அதீதமாகச் சாய்வு கொள்வது அளவைச் சாய்வு (Quantitative bias) என்று அழைக்கப்படுகிறது.


பங்குச் சலிப்பான்களை (stock screener) ரொம்பவும் இறுக்கமாக (rigid) வைத்திருக்கக் கூடாது. உதாரணமாக நிறுவனங்கள் அடிக்கடி பங்குச்சந்தைக்கு வந்து நிதி திரட்டி முதல் நீர்க்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது, அதற்குக் கடன் இருக்கக்கூடாது, ROCE அதிகமாக இருக்க வேண்டும், அதற்கு ஆகப்பெரிய அகழி இருக்க வேண்டும், நிறுவனத்தில் நிறுவனர் பங்கு பெரும்பான்மையாக இருக்க வேண்டும், அது அறவழியில் செயல்படுவதாக இருக்க வேண்டும், அது குறைவான PE மதிப்பிலும் வர்த்தகமாக வேண்டும், அது பங்காதாயங்களை அதிக அளவில் வழங்க வேண்டும், அது இலவசப்பங்குகளை அள்ளி வழங்குவதாகவும் பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பை மேற்கொள்வதாகவும் இருக்க வேண்டும் என்று சலிப்பானை வைத்திருந்தால் அதில் எந்தப் பங்கும் தேறி வராது. அதற்காகச் சலிப்பான்களை ரொம்பவும் தளர்வாகவும் (lenient) வைத்திருக்கக் கூடாது. தளர்வாக வைத்திருந்தால் எல்லாப் பங்குகளும் தேறி வந்து விடும்.


Sundram Fasteners நிறுவனப் பங்குகளை, அது தொடர்ந்தவாக்கில், தரத்திற்குக் கொடுக்கப்படும் உலகின் உயரிய விருதான டெமிங் விருதுகளை வாங்கிக் கொண்டிருக்கிறது என்ற தகவலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு வாங்கியதை இங்கே குறிப்பிட விழைகிறேன். Sundram Fasteners இன்றைய தேதியில் எனது 23 மடங்காளர் (bagger)


Unique stock என்ற ஒரு அளவுருவை மட்டும் கொண்டு வாங்கிய Balkrishna Industries நிறுவனப்பங்கு சிறப்பாகச் செயல்புரிந்த வண்ணம் உள்ளது. Network Effect என்ற வகையில் வாங்கிய Info Edge நிறுவனமும் சிறப்பாகச் செயல்பட்ட வண்ணம் உள்ளது.


நாம் நிறுவனப் பங்குகளின் மதிப்பை தசம அளவில் 1268 ரூபாய் 87 பைசா என்றெல்லாம் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நிறுவனர்களுக்கே நிறுவனங்களின் உயரம் தெரிய வராது. Google நிறுவனர்கள் அவர்களது தேடுதல் இயந்திரத்தை ஒரு மில்லியன் டாலருக்கு விலை பேசியது ஒரு பக்கம். அதனை அந்த விலைக்கு மற்ற தேடுதல் இயந்திர நிறுவனங்கள் வாங்க முன் வராதது மற்றொரு பக்கம். இன்று Google நிறுவனத்தின் மதிப்பு 328.88 trillion அமெரிக்க டாலர்கள். பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் அது  32,88,80,000 மடங்காளர். அதே மாதிரி Titan நிறுவனத்தில் TIIC (Tamilnadu Industrial Investment Corporation) வைத்திருந்த பங்கை அது முன்பொரு சமயம் விற்க முன்வந்தது. Tata குழுமம் அதனை வாங்க மறுத்து விட்டது. TIIC பார்வையில் அது Titan பங்குகளை விற்க முனைந்ததும் தவறு, Tata குழுமம் பார்வையில் அது Titan பங்குகளை வாங்க மறுத்ததும் தவறு என்பதைக் காலம் பின்னர் உணர்த்தியது. Titan நிறுவனப்பங்கு இன்றைய தேதியில் ஒரு பன்மடங்காளர். நாளது தேதியில் TIIC, Titan நிறுவனத்தின் 25 சதவீதப் பங்குகளைத் தன்வசம் கொண்டுள்ளது. TIIC ன் இலாபகரமான முதலீடுகளில் Titan முதலிடம் பெறுகிறது.


எவ்வளவு தான் அளந்து அளந்து பங்குகளை வாங்கினாலும் சில சமயம் நமது கணக்குகள் கை நழுவிச் செல்வது இயல்பானது. எனது கணக்கில், நல்லவர்கள், ஆனால், வல்லவர்கள் அல்ல என்பதான ஒரு பங்குகளின் பட்டியல் (Gujarat NRE Coke, Opto Circuits) உள்ளது. கெட்டவர்கள் (Cox and Kings, Satyam Computers) மற்றும் நான் கை நழுவ விட்ட சில பன்மடங்காளர்கள் (Indian Hotels, Shriram Transport Finance Corporation) என்பதான ஒரு வரிசையும் உள்ளது. இதைப் புரிந்து கொள்ள Quantitative bias பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இது Mcnamara bias என்றும் அழைக்கப்படும். 


Mcnamara அமெரிக்கப் போர்ப்படைத் தளபதி. வியட்நாமிற்கு எதிரான போரைத் தலைமையேற்று நடத்தியவர். அவருடைய அணுகுமுறை, அளவைகளால் ஆகப்பெற்றது. வியட்நாம் போருக்கு எத்தனை போர் வீரர்கள் வேண்டும், எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்படும், போர் எவ்வளவு நாட்கள் நடக்கும், எப்போது முடியும் என்றெல்லாம் துல்லியமாகக் கணக்கீடு செய்கிறார். அவரைப் பொறுத்தவரை முக்கியமான விஷயங்கள் அனைத்தும் அளவீடு செய்யப்பட வேண்டும். ஒன்றை அளவீடு செய்ய இயலவில்லை என்றால் அது முக்கியமான ஒன்றல்ல என்பது அவரது எண்ணப்போக்காக இருந்தது. ஆனால், இந்த அளவீடு செய்ய இயலாத ஒரு அளவுரு (parameter) தான் வியட்நாம் போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியக் காரணியாக அமைந்தது. அது வியட்நாம் மக்களின் மனவுறுதி.


தற்போது, அமெரிக்க ஈரான் போரில் ஹார்முஸ் நீரிணை ஈரானுக்கு புவி சார்ந்த ஒரு ஆயுதமாக (geographical weapon) பயன்படுவது யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம்.


அளவைகள் முக்கியம் தான். எது அளக்கப்படுகிறதோ அது முன்னேற்றம் காண்கிறது என்பதும் உண்மை தான். ஆனால், வாழ்க்கையில் சிலவற்றை அளவைக்கு உட்படுத்த முடியாது. அதற்கான விலையையும் கணக்கிட முடியாது. ஒரு வானவில்லின் மதிப்பு என்னவாக இருக்கும்? உங்கள் இதயத்தின் மதிப்பு என்ன? ஒரு உறவின் மதிப்பை எவ்விதம் கணக்கிடுவது? சில சமயங்களில் வாழ்க்கையில் சிலவற்றின் மதிப்பை நீங்கள் முழுமையாக உணர வேண்டுமென்றால் அதனை இழந்து தான் பார்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14