விலையும் மதிப்பும்
விலையும் மதிப்பும்
Price and Value
பங்குச்சந்தையில் விலை உயர்ந்த பங்குகள் எவை என்றால் சுலபமாகச் சொல்லி விடலாம். MRF (ரூ.1,46,195) Page Industries (ரூ.35,650) Shree Cement (ரூ.27,350) மதிப்பு மிகுந்த பங்குகள் என்றால் அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது. சற்று யோசித்து, கணக்கிட்டுத் தான் சொல்ல முடியும். மதிப்பு என்ற கருத்தாக்கத்தில் நகரும் பகுதிகள் நிறைய வந்து விடும். எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டாலும் விடை சரியானது தானா என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. பங்குகளின் விலை மற்றும் பங்குச்சந்தை குறியீடு போன்றவை விலை குறித்த அளவீடுகள். அளவீடு செய்ய இவை சுலபமாக இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு நாம் முதலீட்டு முடிவுகள் எதனையும் எடுக்கக்கூடாது. உண்மையான மதிப்பைக் கண்டறிய நாம் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். முதலில் குறிப்பிட்ட MRF நிறுவனப்பங்கையே எடுத்துக் கொள்ளலாம். நிறுவனம் இதுவரை பங்குப் பிரிப்பு எதுவும் மேற்கொள்ளவில்லை. இரண்டு முறை மட்டும் இலவசப்பங்களிப்பை மேற்கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு சார் முதல் (equity capital) 4.24 கோடி ரூபாய் மட்டுமே. பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 42,40,000 பங்குகள். இருப்பு மற்றும் உபரி (reserves & surplus) 19,437 கோடி ரூபாய். நிறுவனத்தின் ஒரு பங்கு வருவாய் (earnings per share) 4407 ரூபாய். நிறுவனம், விலை வருவாய் விகிதம் (PE Multiple) 33.17 என்ற அளவீட்டில் வர்த்தகமாகிறது. ஒரு பங்கு வருவாய் × விலை வருவாய் விகிதம் = பங்கின் விலை. 4407 × 33.17 = 1,46,195. இந்த சமன்பாட்டை நன்கு கவனிக்க வேண்டுகிறேன். ஒரு நிறுவனம் இலவசப்பங்குகளை வழங்காமலும் பங்குப்பிரிப்பை மேற்கொள்ளாமலும் மேலும் இலாபகரமாகவும் இயங்குமானால் அதன் ஒரு பங்கு வருவாய் உயர் அளவில் மட்டுமே இருக்கும். இந்த உயர் அளவிலான ஒரு பங்கு வருவாயை விலை வருவாய் விகிதத்துடன் பெருக்கும் போது உயர் விலையிலான பங்கு விலை கிடைக்கப்பெறும் என்பது தெளிவு. நிறுவனத்தின் விலை வருவாய் விகிதத்தைக் கொண்டு மட்டுமே நாம் அதன் மதிப்பைக் கணக்கிட முடியும். அதுவும் ஓரளவு மட்டுமே. மற்றபடி உயர் விலையில் வர்த்தகமாகும் பங்குகள் எல்லாம் தரமான பங்குகள் என்று சொல்லி விடமுடியாது. ஒரு பங்கின் விலை நமக்கு எதையும் தெரிவிக்காது. பங்கின் விலை எவ்வளவு என்ற கேள்வியே தவறானது. பங்கின் PE எவ்வளவு என்ற கேள்வியே ஓரளவு சரியானது. Anuh Pharma, Sundram Fasteners போன்ற நிறுவனங்கள் இலவசப்பங்குகளை அவ்வப்போது வழங்கிய வண்ணம் உள்ளன. மேலும் பங்குப்பிரிப்பையும் மேற்கொண்டிருக்கின்றன. ஒருவேளை அவை இலவசப்பங்குகளை வழங்காமலும், பங்குப்பிரிப்பை மேற்கொள்ளாமலும் இருந்திருக்குமானால் அவைகளின் ஒரு பங்கின் விலை கீழ்க்கண்டவாறு வர்த்தமாகிக் கொண்டிருக்கும்.
Anuh Pharma - Rs.92,160/-
Sundram Fasteners - Rs.1,37,788/-
Anuh Pharma நிறுவனத்தின் ஒரு பங்கு அதன் இலவசப்பங்களிப்புகள் மற்றும் பங்குப்பிரிப்பின் பின்னர் 1152 பங்குகள் ஆகியிருக்கும். அதன் ஒரு பங்கின் தற்போதைய விலை 80 ரூபாய். 1152 பங்குகளின் விலை 92,160 ரூபாய்.
Sundram Fasteners நிறுவனத்தின் ஒரு பங்கு அதன் இலவசப்பங்களிப்புகள் மற்றும் பங்குப்பிரிப்பின் பின்னர் 148 பங்குகள் ஆகியிருக்கும். அதன் ஒரு பங்கின் தற்போதைய விலை 931 ரூபாய். 148 பங்குகளின் விலை 1,37,788 ரூபாய்.
இதே மாதிரி கணக்குகளைப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் அனைத்துப் பங்குகளுக்கும் போட்டுப் பார்க்கலாம்.
ஆக, MRF நிறுவனத்தின் அதிக அளவிலான பங்கின் விலை ஒரு தோற்றப்பிழை மட்டுமே.
MRF நிறுவனம் தற்போது 33.17 என்ற விலை வருவாய் விகிதத்தில் வர்த்தகமாகிறது. வேறு மாதிரி சொல்வதானால் நிறுவனம் கடந்த வருடம் ஈட்டிய ஒரு பங்கு வருவாயைப் போன்றே அடுத்த 33 வருடங்களுக்கும் ஈட்டும் என்பதாகக் கற்பிதம் செய்து கொண்டு அந்த 33 வருட ஒரு பங்குச் சம்பாத்தியத்தையும் மொத்தமாகக் கொடுத்து நிறுவனப் பங்கை வாங்குகிறோம். 33 வருடங்களில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் நாம் கணக்கிட்ட மாதிரி வளராமல் போகலாம். அல்லது நாம் அந்தப் பங்குகளைப் பணமாக்கம் செய்ய முனைகையில் சந்தை கரடியின் பிடியில் சிக்குண்டு நிறுவன விலை வருவாய் விகிதம் 16 என்ற அளவீட்டில் வர்த்தகமாகலாம். இந்த இடத்தில் தான் வாரன் பஃபெட்டின் குரு பெஞ்சமின் கிரகாமின் margin of safety என்ற கருத்தாக்கம் கை கொடுக்கிறது. நாம் MRF நிறுவனப் பங்கை இப்போது வர்த்தகமாகும் அதன் விலையின் பாதியில், அதாவது விலை வருவாய் விகிதம் 16 என்ற அளவீட்டில் மதிப்பு முதலீடாக வாங்கினால் ஒரு வேளை நிறுவனம் நாம் கணக்கிட்ட மாதிரி வருவாய் ஈட்டாமலும் மற்றும் கரடியின் பிடியில் சிக்குண்டு கிடந்தாலும் நாம் கீறல் விழாமல் தப்பித்து விடலாம். MRF நிறுவனம் 16 என்ற PE அளவுகளில் வர்த்தகமானால் பங்கின் விலை பாதியாகி விடும். பங்கின் மதிப்பு உயர் விலையில் குறைவாகவும், குறை விலையில் உயர்வாகவும் உள்ளது. பங்குச்சந்தை தலைகீழ் விகிதங்களில் இது தலையாயது. Infosys பங்கு 1500 என்ற விலையில் மலிவு. IL & FS Investment Managers பங்கு 8 ரூபாய் என்ற விலையில் உயர்வு. வாரன் பஃபெட் விலைக்கும் மதிப்பிற்குமான இந்தப் புதிரை எளிமையாகப் பின்வருமாறு விளக்குகிறார். Price is what you pay. Value is what you get. விலை என்பது நீங்கள் கொடுப்பது. மதிப்பு என்பது நீங்கள் பெறுவது.
சரி, நிறுவனங்கள் ஏன் இலவசப்பங்குகளை வழங்காமலும், பங்குப்பிரிப்பை மேற்கொள்ளாமலும் இருக்கின்றன? புதிய முதலீட்டாளர்கள் வருவதையும் பழைய முதலீட்டாளர்கள் வெளியேறுவதையும் தவிர்ப்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. MRF நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளலாம். அதன் ஒரு பங்கின் விலை 1,46,195 ரூபாய். பெரும்பாலான முதலீட்டாளர்கள் இவ்வளவு பணம் கொடுத்து அதுவும் ஒரே சமயத்தில் ஒரு பங்கை வாங்கத் துணிய மாட்டார்கள். பங்குகளை விற்கும் போதும் ஒரு பிரச்னை வரும். MRF முதலீட்டாளர் ஒருவருக்கு 10000 ரூபாய் தேவைப்படுவதாகக் கொள்ளலாம். ஆனால் குறைந்த பட்சமாக அவர்
1,46,195 ரூபாய் பெறுமானமுள்ள பங்கை விற்றாக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.
வாரன் பஃபெட்டின் Berkshire Hathaway முதலீட்டு நிறுவனம் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம். ஒரு BRK நிறுவன class A பங்கின் விலை 7,62,569 US டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பங்கின் விலை கிட்டத்தட்ட 7 கோடி. Class B பங்குகளின் விலை 508 US டாலர்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 46,000 ரூபாய்.
MRF நிறுவனம் ஏன் பங்குப் பிரிப்பு மற்றும் இலவசப்பங்களிப்பு (அதன் ஆரம்ப கால இரண்டு இலவசப் பங்களிப்புகள் தவிர்த்து) போன்றவைகளை மேற்கொள்ளவில்லை என்று நமக்குத் தெரியாது. ஆனால் BRK நிறுவனம் ஏன் இவையிரண்டையும் மேற்கொள்ளவில்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வாரன் பஃபெட் அவருடைய முதலீட்டு நிறுவனம் அதனுடைய உள்ளார்ந்த மதிப்பை (intrinsic value) அடியொற்றியே வர்த்தகமாக வேண்டும் என்று எண்ணுகிறார். அதாவது PE மதிப்பு அபரிமிதமான அளவிலும் இருக்கக்கூடாது. அதே சமயம் அது குறைவாகவும் இருக்கக்கூடாது. இதற்கான ஒரு தீர்வு, உயர் அளவிலான பங்கின் விலை. பங்கின் விலை உயர்வாக இருந்தால் ஊக வணிகர்கள் உள்ளே வருவதைத் தடுக்கலாம். வாரன் பஃபெட், உணவகம் ஒன்றை நடத்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உணவகத்துக்கு நீண்ட கால மதிப்பு முதலீட்டு மனப்பாங்கு உள்ளவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று பஃபெட் விரும்புகிறார். அந்த உணவகத்தில் நுழைவதற்கான நுழைவுச்சீட்டின் மதிப்பு 7 கோடி ரூபாய். பஃபெட் class B பங்குகளை உருவாக்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, பஃபெட், BNSF Railway நிறுவனத்தை BRK நிறுவனப் பங்குகளைக் கொடுத்து வாங்கும் போது BNSF நிறுவன சிறு முதலீட்டாளர்களுக்கு BRK நிறுவனப் பங்குகளை சிறிய மதிப்பில் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக class B பங்குகள் உருவாக்கப்பட்டன. Class B பங்குகளை உருவாக்கியமைக்கு இன்னொரு காரணம் BRK நகலிகள் (clone) என்ற அடிப்படையில் BRK நிறுவன மாதிரியில் சில பரஸ்பர நிதிகள் உருவாக்கப்பட்டன. பஃபெட் முதலீட்டுத் தொகுப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அவை செயல்படும். அவற்றிற்கான மேலாண்மைச் செலவுகள் அதிகபட்சமாக இருந்தன. இதனைக் களையும் பொருட்டும் பஃபெட் class B பங்குகளை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
BRK பங்கு ஒன்றின் விலை 7 கோடி ரூபாய் என்று பார்த்தோம். நம் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இதுவரை அதிக அளவிலான இலவசப்பங்குகளிப்பை மேற்கொண்ட நிறுவனம் என்ற வகையில் Wipro முதலிடம் பெறுகிறது. இது போக அது பல்வேறு பங்குப்பிரிப்புகளையும் ஒருமுறை நிறுவனப் பிரிப்பு ஒன்றையும் மேற்கொண்டிருக்கிறது. ஒருவேளை அது BRK நிறுவனம் மாதிரி இத்தகைய செயல்களைச் செய்யாமலிருந்தால் அதன் ஒரு பங்கின் விலை என்னவாக இருந்திருக்கும் தெரியுமா? அது 17.63 கோடி. நீங்கள் படித்தது உண்மை தான். இந்தக் கணக்கீட்டின் படி ஒரு Wipro பங்கு 7,65,413 பங்குகளாக வளர்ந்திருக்கிறது. தற்போதைய அதன் ஒரு பங்கின் விலை 230 ரூபாய் 40 காசுகள். 7,65,413 பங்குகளின் விலை ரூ.17,63,51,155.20/-
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் பார்ப்பது பங்குகளின் அன்றன்றைய விலைகளை மட்டுமே. பங்குகளின் உள்ளார்ந்த மதிப்பு என்பது வேறு. விலைக்கும் மதிப்பிற்குமான இந்த வேறுபாட்டை உணராமல் தான் நாம் காளைச்சந்தையில் பங்குகளை அதிக விலை (குறை மதிப்பு) கொடுத்து வாங்கியும் மற்றும் கரடிச்சந்தையில் குறைந்த விலைக்கு (உயர் மதிப்பு) வாங்காமலும் மேலும் அச்ச விற்பனை (panic selling) செய்பவர்களாகவும் இருக்கிறோம். உலகிலேயே, விலை அதிகமாக இருக்கும் போது, மக்கள் மகிழ்ச்சியாக வாங்கும் ஒரே பொருள், நிறுவனப் பங்குகள் என்று வாரன் பஃபெட் கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்.
உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு தனிப்பட்ட எண் அல்ல. உதாரணமாக Range of values என்ற அடிப்படையில் ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பு 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்குள் என்பதாகத் தான் அதனைச் சொல்ல முடியும். பெஞ்சமின் கிரகாம் இதனை பின்வருமாறு விளக்குகிறார். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்மணியைப் பார்த்து அவருடைய சரியான எடையை நாம் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஆனால், அவருடைய உயரத்திற்கு கொஞ்சம் அதிகமான எடை என்று சொல்லலாம். ITC பங்கின் உள்ளார்ந்த மதிப்பை நாம் 326 ரூபாய் என்று அதன் தற்போதைய விலையைக் கொண்டு ஒருக்காலும் கணிக்க முடியாது. கணிக்கவும் கூடாது. ஆனால் அதன் இன்றைய விலையான 326 ரூபாயில் அது ஒரு மதிப்பு முதலீடு என்று சொல்லலாம்.
விலைக்கும் மதிப்பிற்குமான இந்த தலைகீழ் உறவு, அதாவது, பங்குகள் விலை கூடும் போது மதிப்பு குறைதல் மற்றும் பங்குகள் விலை குறையும் போது மதிப்பு கூடுதல், பங்குகள் குறித்த புரிதலில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. நிறுவனங்கள் மீமிகை (extreme) கரடிச்சந்தையில் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கும் (buyback) ஆதாரமான காரணம் இந்த மதிப்பு உருவாக்கம் மட்டுமே. கரடிச்சந்தையில் (தரமான பங்குகளை வாங்கியிருக்கும்) முதலீட்டாளர்களின் பங்குத் தொகுப்பின் (portfolio) விலை குறையும். ஆனால் அதன் மதிப்பு கூடும். விலையை நாம் கண்ணால் பார்க்கலாம். மதிப்பை மனக்கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். It is only with the heart that one can see rightly; what is essential is invisible to the eye என்று Antoine de exupery கூறியிருக்கிறார். முக்கியமானது கண்களுக்குப் புலப்படாது; அதனை இதயத்தால் மட்டுமே உணர முடியும்.
Comments
Post a Comment