கதைகளின் கதை- 2

கதைகளின் கதை - 2

Narrative Fallacy - 2


'வாரன் பஃபெட், Berkshire Hathaway என்கிற நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, இன்று, பல்வேறு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வெற்றிகரமான ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. அதன் சந்தை மதிப்பு 95.353 டிரில்லியன் அமெரிக்க டாலர். அது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பஃபெட், அதன் பங்குகள் மூலமாக உலகப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்'


Berkshire Hathaway நிறுவனத்தைக் குறித்து இவ்வாறு விளக்குவது narrative fallacy ன் பாற்பட்டது.


எந்த ஒரு நிறுவனமும் இவ்வாறு நேர் கோட்டில் பயணித்திருக்காது.


நாம் Berkshire Hathaway நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இன்று வரையிலான கதையை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம். 


பஃபெட், அவர் முதலீட்டாளர்களுக்கு வருடாவருடம் எழுதும் கடிதத்தில் அவருடைய தவறுகளை முதலில் பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில் பஃபெட்டின் முக்கியமான சில தவறுகளை முதலில் பார்க்கலாம்.  


Berkshire Hathaway ஜவுளி ஆலையை வாரன் பஃபெட், cigar butt முதலீடு என்ற கணக்கில் வாங்குகிறார். Cigar butt முதலீடு என்றால் ஒரு பங்கின் முதலீட்டுப்பெருக்கம் (capital appreciation) மூலமாக ஒருமுறை மட்டும் வருமானம் பெறலாம். மற்றபடி அதனைக் காலாகாலத்திற்கும் வைத்திருந்து அது தரும் பங்காதாயம் மற்றும் அதன் மூலமான முதலீட்டுப்பெருக்கம் போன்றவைகளை அடைய முடியாது. இன்னும் சொல்லப்போனால் Cigar butt என்பது ஒரு பங்கு முதலீட்டு உத்தி அல்ல, அது பங்கு வியாபார உத்தி. இந்த நிலையில் Bershire Hathaway நிறுவனம் அதன் பங்குகளைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. பஃபெட், BRK நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருப்பவர் என்ற அடிப்படையில் BRK தலைமையதிகாரி, பஃபெட்டிடம் எந்த விலையில் அவர் பங்குகளைத் திரும்ப ஒப்படைக்க விரும்புவதாக வினவுகிறார். பஃபெட்டின் ஒப்படைப்பு விலை 11.5 டாலர்கள். BRK நிறுவனம் அதனை ஒப்புக் கொள்கிறது. ஆனால் BRK நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தில் ஒப்படைப்பு விலை 11.375 என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விலை வித்தியாசம் வெறும் 0.125 டாலர்கள் மட்டுமே. இருந்தாலும் பஃபெட் சினம் கொண்டவராக BRK நிறுவனப்பங்குகளைச் சந்தையில் வாங்கி அதன் பெரும்பான்மைப் பங்குதாரர் ஆகி விடுகிறார். சிறிது நாட்களில் BRK நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பஃபெட் BRK நிறுவனத்தை வாங்கியது ஒரு சரியான முடிவு அல்ல. ஆனால் அதனை அவர் ஒரு முதலீட்டு நிறுவனமாக மாற்றியதும் அப்புறம் நடந்ததும் வரலாறு. 


National Indemnity Company ஐ, பஃபெட் 8.6 மில்லியன் டாலருக்கு BRK நிறுவனம் மூலமாக வாங்குகிறார். அதனை அவர் மேலாண்மை செய்யும் Buffett Partnership மூலமாகவே வாங்கியிருக்கலாம். அப்படி வாங்கியிருந்தால் பஃபெட்டிற்கும் அவரின் தெரிந்த பங்குதாரர்களுக்கும் மட்டும் NIC யின் 100 சதவீதமும் கிடைக்கப் பெற்றிருக்கும். BRK மூலம் வாங்கியதால் NIC யின் 61 சதவீதம் மட்டுமே பஃபெட் வசம் வந்தது. மீதி 39 சதவீதம் BRK நிறுவனத்தின் முகம் தெரியாத பொதுப் பங்குதாரர்களுக்குச் சென்று விட்டது. முதல் கட்டமைப்பின் (capital structure) முக்கியமான பாடத்தை பஃபெட் இவ்விதம் கற்றுக் கொள்கிறார்.


1993 ஆம் ஆண்டு, பஃபெட், Dexter Shoe நிறுவனத்தை 443 மில்லியன் டாலர்களுக்கு BRK class A பங்குகளைக் கொடுத்து வாங்குகிறார். 1999 ஆம் ஆண்டு அமெரிக்கா அதன் 93 சதவீத காலணி தேவைகளை இறக்குமதியின் மூலம் எட்டுகிறது. ஆறு ஆண்டுகளில் Dexter Shoe நிறுவனத்தை வாங்கியது ஒரு தவறான செயலாக மாறுகிறது. BRK பங்குகளைக் கொடுத்து Dexter Shoe நிறுவனத்தை வாங்கியதன் மூலமாக இந்தத் தவறு தவறின் மேலான தவறாக மாறுகிறது. 1993 ஆம் ஆண்டின் இந்த 443 மில்லியன் தவறு 2007 ஆம் ஆண்டு 220 பில்லியன் தவறாக மாறுகிறது. தற்போது இந்தத் தவறின் விலை இன்னும் கூடியிருக்கும். நாளை இன்னும் கூடும். Equity is priceless, பங்குகள் விலை மதிப்பற்றவை என்ற பாடத்தைப் பஃபெட் கற்றுக் கொள்கிறார். அதுவும் தரமான நிறுவனப்பங்குகளைக் கொடுத்து தரமற்ற நிறுவனப்பங்குகளை வாங்குவது இன்னும் இமாலயத்தவறு என்ற பாடத்தையும் அவர் தேர்ந்து தெளிகிறார்.


பஃபெட், McDonalds  நிறுவனத்தை இனங்கண்டு வாங்கி அதனைக் குறுகிய கால அளவில் விற்று விடுகிறார். McDonalds நிறுவனத்தை இரண்டு வடிவங்களில் பார்க்கலாம். அடிப்படையில் அது உணவு நிறுவனமாக இயங்குகிறது. இன்னொரு வகையில் அதனை real estate நிறுவனமாகவும் பார்க்கலாம். உலகம் முழுவதும் கேந்திரமான இடங்களில் அது உணவகத்தை அமைத்திருக்கிறது. அந்த உணவகம் இயங்கும் நிலமும் அதற்குச் சொந்தமானது. நாட்பட இந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்து செல்லும். பஃபெட், எளிமையின் மேல் கொண்ட காதல் காரணமாக McDonalds பங்குகளை நழுவ விட்டிருக்கலாம். பஃபெட் குறுகிய காலத்தில் விற்ற மற்றொரு நிறுவனம் Walmart. அதன் வருமானம் தற்காலிகமாகக் குறைந்த ஒரு பொழுதில் பஃபெட் அதன் பங்குகளை ஏனோ விற்று விடுகிறார்.


General Reinsurance Corporation ன் பங்குகளை 21.8 சதவீத BRK நிறுவனப்பங்குகளைக் கொடுத்து பஃபெட் வாங்கியது அவருடைய இன்னொரு தவறு. Gen Re நிறுவனத்தின் பெறுதித்தொகுப்பை (derivative portfolio) பஃபெட் குறை மதிப்பீடு (under estimate) செய்து வாங்கி விடுகிறார். இந்தப் பெறுதித்தொகுப்பின் அபாயங்களைக் களைவதற்கு ஏகப்பட்ட பண விரயமும் நேர விரயமும் ஆகி விடுகிறது. ஒருவழியாக நிறுவனத்தை நிலைநிறுத்தி இப்போது அதன் float (இதைப்பற்றிய விளக்கம் பின்னர்) பஃபெட் வசம் வந்து கொண்டிருக்கிறது.


அடுத்ததாக Errors of omission என்று சொல்லப்படும் பஃபெட்டின் விடுபிழைகள் சில ...


பஃபெட்டின் விடுபிழைகளில் Google நிறுவனம் முதலிடம் பெறுகிறது. இத்தனைக்கும் பஃபெட்டின் GEICO நிறுவனம் மூலமாக Google பற்றிய சரியான ஒரு புரிதல் பஃபெட்டிற்கு இருந்திருக்க வேண்டும். GEICO நிறுவனம் Google தேடுபொறியில் விளம்பரம் செய்து ஏகப்பட்ட காப்பீடுகளை விற்றிருக்கிறது. ஆனால் இந்தத் தகவலை Google நிறுவனத்தில் முதலீடு செய்து பணமாக்கம் செய்யும் வாய்ப்பை பஃபெட் தவற விட்டு விடுகிறார். அதே மாதிரி Amazon நிறுவனத்திலும் அவர் முதலீடு செய்யவில்லை. Conventional metrics என்று சொல்லப்படும் மரபொழுங்கு சார்ந்த அளவீடுகள் எல்லா நேரமும் சரியாக இருக்காது. அது Amazon நிறுவனத்தைப் பொறுத்தவரை உண்மையாகி விட்டது. தொழில்நுட்ப நிறுவனங்களின் மேலான பஃபெட்டின் ஒவ்வாமையும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


இத்தனை தவறுகளைச் செய்திருந்தாலும் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனம் நீண்ட கால அளவில் 20 சதவீதக் கூட்டுப்பெருக்கத்தைக் கொடுத்திருப்பது இங்கே கவனம் பெறுகிறது. அதற்கான ஐந்து காரணங்கள் ...


1. மதிப்பு முதலீடு (Value investing) 


மதிப்பு முதலீடு என்பது ஒரு ரூபாய் மதிப்புள்ள பங்கை ஐம்பது காசுக்கு வாங்குவது. ஒரு பங்கிலிருந்து நீங்கள் பெறும் வருமானம் அதனை விற்கும் விலையில் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக அதனை எவ்வளவு குறை விலையில் வாங்குகிறீர்கள் என்னும் புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் மதிப்பு முதலீடு பஃபெட்டின் முதலாவதும் முக்கியமானதுமான உத்தியாகச் செயல்படுகிறது.


2. Float 


பஃபெட்டின் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் வாழ்க்கைக் காப்பீடு (Life Insurance) தவிர மற்ற காப்பீடுகளை margin of safety உடன் வழங்கி underwriting profit என்ற நிலையை எட்டியுள்ளன. உதாரணமாக ஒரு காப்பீட்டு நிறுவனம் 1000 கோடி முனைமத் தொகை (premium) வசூலிக்கிறது என்று கொள்வோம். 900 கோடி உரிமைத்தொகை (claims) மற்றும் இதர செலவுகள். அதன் underwriting profit 100 கோடி. இதில் முனைமத்தொகை முதலீட்டு வருமானம் சேர்க்கப்படாது. முதலீடு செய்வது வாரனுக்குக் கை வந்த கலை. இந்த முனைமத்தொகை தற்போது 176 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. வேறு மாதிரி சொல்வதானால் இத்தனை பணமும் பஃபெட்டிற்கு ஆண்டாண்டு குறைந்த வட்டியில் சில ஆண்டுகளில் பூஜ்ய சதவீத வட்டியில் கிடைக்கப்பெறுகிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்க அரசாங்கத்தை விடக் குறைந்த வட்டியில் பஃபெட்டிற்குக் கடன் கிடைக்கிறது. மேலும், இந்தக்கடன் நிரந்தரமாக பஃபெட்டிடம் தங்கியிருக்கிறது. அவருடைய காப்பீட்டு நிறுவனங்கள் இலாபகரமாகச் செயல்படும் வரை இந்தக் கடனை அவர் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை.


3. முதலீட்டு நிறுவன மாயப்பணம் (BRK stock virtual money)


பஃபெட்டின் முதலீட்டு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பதால் அதன் மூலமாகப் பங்குச்சந்தை மாயப்பணத்தை அவரால் பெற முடியும். இந்தப் பணத்தைக் கொண்டு அதாவது பங்குகளைக் கொண்டு அவர் அவ்வப்போது பிற நிறுவனங்களை மதிப்பு முதலீடாக வாங்குகிறார்.


4. BRK - தரமான நிறுவனங்களின் கடைசிப் புகலிடம் (Last resort for reputed companies) 


தரமான வருமானத்தை (quality earnings) ஈட்டும் சிறிதும் பெரிதுமான நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டும் ஏராளமான எண்ணிக்கையில் இயங்கிய வண்ணம் உள்ளன. இவற்றின் நிறுவனர்கள் இத்தகைய நிறுவனங்களை அவர்களின் அந்திம காலத்தில் பணமாக்கம் செய்யவும் மற்றும் அவற்றை நீடித்த நிலையில் (permanence) வைத்திருக்கவும் பஃபெட்டை அணுகுகின்றனர். அவர்கள் பெரும்பான்மைப் பங்குகளைப் பஃபெட்டிற்கு விற்று சிறுபான்மைப் பங்குதாரர் என்ற வகையில் நிறுவனத்தைத் தொடர்ந்தவாக்கில் வழிநடத்திச் செல்கின்றனர். பஃபெட் இத்தகைய நிறுவனங்களை முறையாகப் பேணிப் பாதுகாப்பதால் நிறைய நிறுவனர்கள் அவரைத் தேடி வருகின்றனர். இவ்வாறு தரமான நிறுவனங்களின் கடைசிப் புகலிடமாக BRK செயல்படுகிறது. 


5. பணமாக்கம் செய்யப்படாத பங்குகளும் அதன் மூலமான வரி சேமிப்பும் (Unrealized gains and tax advantage)


ஒரு நிறுவனத்தை முறையாகப் பகுப்பாய்வு செய்து வாங்கியிருந்தால் அதனை விற்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அந்த வகையில் பஃபெட் மிக அரிதாகவே பங்குகளை விற்பனை செய்கிறார். எனவே விற்பனை மூலமான வரிச் செலவுகள் குறைவிலும் குறைவு. இதுவும் பஃபெட்டிற்கு ஒரு அனுகூலமாகச் செயல்படுகிறது.


நிறுவனங்கள் இந்த மாதிரி மேடு பள்ளமான பாதைகளில் மட்டுமே பயணிக்கும் என்பதை அறிவது பல வகைகளில் நமக்கு உதவுவதாக இருக்கும். அவை தற்காலிகமாக ஒரு பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கையில் சந்தை அதற்கு ஆற்றும் அபரிமிதமான எதிர்வினையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாம் அவற்றின் பங்குகளை மதிப்பு முதலீடாக வாங்கலாம். நிறுவனங்கள் மாதிரி தனிப்பட்ட முதலீட்டாளர்களின் முதலீட்டுப் பயணமும் சமதளமற்றே இருக்கும் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது.


கதைகளின் கதையைத் தெரிந்து கொள்வதன் மூலம் நிறுவனங்கள் zig zag பாதையில் பயணம் செய்யும் என்று பார்த்தோம். இவற்றை அடித்தொடரும் அதன் பங்குகளும் இதே பாதையில் மாந்தர்களின் உணர்ச்சி மேலீடு காரணமாக இன்னும் அதீத ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பங்கு முதலீடுகள் ஏற்ற இறக்கங்களால் ஆகப்பெற்றவை. யாராவது பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக ஏற்ற இறக்கமில்லாத வருமானத்தைத் தருவதாகக் கூறினால் அது ஏமாற்றுத் திட்டம் என்று அறியவும்.


இவ்வாறாக எந்த நிறுவனமும் அ என்ற புள்ளியிலிருந்து ஆ என்ற புள்ளிக்கு நேர்கோட்டில் பயணித்திருக்காது. அது ஒரு நீள் வட்ட சுற்றுச்சாலையாகவே இருக்கும்.


குறிப்புதவிய நூல்:

The Intelligent Investor's Mistakes - Balaji Kasal

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14