சந்தை மாயைகள்- 1

ந்தை மாயைகள்- 1

Market Myths- 1


1. In the stock market you can't go broke by booking profits.

பங்குச்சந்தையில் இலாபமீட்டுவதன் மூலமாக யாரும் நஷ்டமடைய முடியாது.


HDFC வங்கிப் பங்கின் முதல் பொது வெளியீடு (IPO) 1995 ஆம் ஆண்டில் அதன் முக மதிப்பான பத்து ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது. அதன் பட்டியல் விலை 40 ரூபாய். கிட்டத்தட்ட 15 நாட்களில் 300 சதவீதம் இலாபம். பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் 3 bagger. பட்டியல் விலையில் இந்தப் பங்குகளை விற்று இலாபமீட்டுவதன் மூலம் எவ்விதம் நஷ்டமடைய முடியும்? இன்றைய தேதியில் HDFC வங்கிப் பங்கு 1963 மடங்கு கூடியிருக்கிறது. அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கப்பட்ட 100 பங்குகளுக்கான இந்த வருட பங்காதாயம் 22000 ரூபாய். பங்காதாயம் மூலமாக மட்டும் 2200 சதவீதம் இலாபம் கிடைத்திருக்கிறது. பன்மடங்காளர் கணக்கில் 22 bagger. HDFC வங்கிப் பங்கை பட்டியல் விலைக்கு விற்றவர்கள் அவர்கள் தொடர்ந்தவாக்கிலான பங்கு முதலீடுகள் மூலம் இத்தனை சதவீத இலாபம் ஈட்டியிருப்பார்கள் என்று கூறவியலாது. HDFC வங்கிப் பங்கு மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான பங்குகள் இம்மாதிரி பன்மடங்காளர்கள் ஆகியிருக்கின்றன. அந்த வகையில் பங்கு முதலீடுகள் என்பது யானை வேட்டை மாதிரி. யானை வேட்டையாடச் செல்லும் போது போகிறபோக்கில் குருவிகளைச் சுட்டுக் கொண்டிருக்கக்கூடாது. 


2. Stocks of good companies are good stocks. 

தரமான நிறுவனங்களும் அவற்றின் பங்குகளும் ஒன்று தான். 


இன்ஃபோசிஸ் பங்கு 2000 ஆவது ஆண்டில் 500 என்ற மீமிகை விலை-வருவாய் விகிதத்தில் (PE ratio) வர்த்தகமானது. அந்த விலையில் அதன் பங்குகளை வாங்கியவர்கள் இலாபம் அல்லது நஷ்டம் இல்லாத நிலையை அடைய (break even point) பல்லாண்டுகள் பிடித்தது. Nestle India நிறுவனத்தின் கடந்த ஐந்து வருட ROCE சராசரி 149.76 சதவீதம். அதன் ஐந்து வருட ROE சராசரி 109.12 சதவீதம். ஆனால் அதன் விலை வருவாய் விகிதம் 72.21 மடங்கு. இவ்வளவு அதிக PE கொடுத்து அதன் பங்குகளை வாங்கினால் எவ்வளவு அதிக ROCE யும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நிறுவனப்பங்கின் கடந்த ஐந்து வருட CAGR வெறும் 8.78 சதவீதம் மட்டுமே. ஆக, தரமான நிறுவனம் என்பது வேறு. அவற்றின் பங்குகள் என்பது வேறு. தரமான நிறுவனங்களை மீமிகை விலை வருவாய் விகிதங்களில் (PE multiple) வாங்கியவர்கள், அத்தகைய நிறுவனங்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் பங்கு பெற இயலாமல் போவது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. 


3. During selling stocks your profit is determined. 

பங்குகளை விற்கும் போது உங்களுக்கான இலாபம் தீர்மானிக்கப்படுகிறது. 


தவறு. பங்குகளை எவ்வளவு குறை விலையில் வாங்குகிறீர்கள் என்னும் புள்ளியில் உங்களுக்கான வருமானம் தீர்மானிக்கப்படுகிறது. Sundaram Tax Saver பரஸ்பர நிதியின் NAV ஒரு கரடிச் சந்தையில் 5 ரூபாய் வரை இறங்கியது. அந்தக் குறை விலையில் அதன் மதிப்பு வாய்ப்பை இனங்கண்டு முதலீடு செய்தவர்களுக்கு பரஸ்பர நிதி வழங்கும் பங்காதாயம் இரட்டிப்பாகி விடும். பங்காதாயம் நிதியின் முக மதிப்பான 10 ரூபாய்க்கு வழங்கப்படும். பரஸ்பர நிதி 10 சதவீதம் பங்காதாயம் வழங்கினால் 10 ரூபாய்க்கு நிதியை வாங்கியவர்களுக்கு 1 ரூபாய் கிடைக்கும். 5 ரூபாய்க்கு வாங்கியவர்கள் 10 ரூபாய்க்கு இரண்டு பரஸ்பர நிதி அலகுகளை (unit) வாங்கியிருப்பதால் அவர்களுக்கான பங்காதாயம் இரட்டிப்பாகி விடும். இது மட்டுமல்ல, நீண்ட கால அளவில், நிதி, 15 சதவீத CAGR கொடுத்திருக்கிறது என்றால் 5 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு இது 30 சதவீதம் ஆகி விடும். 30 சதவீத CAGR என்பது 15 CAGR என்பதன் இரட்டிப்பு அல்ல. கூட்டு வட்டியின் காரணமாக அது கூடுதல் வருமானத்தைத் தரும். Britannia Industries பங்கின் தற்போதைய விலை 5820 ரூபாய். அதன் IPO விலை 15 ரூபாய். 15 ரூபாய் என்று சொல்வது கூட ஒரு கணக்கில் தவறு. நிறுவனம், இலவசப் பங்களிப்பு மற்றும் பங்குப் பிரிப்பின் மூலமாக ஒரு பங்குக்கு 88 பங்குகளை வழங்கியிருக்கிறது. அதைக் கணக்கில் கொண்டால் ஒரு பங்கின் விலை வெறும் 17 காசுகள் மட்டுமே வருகிறது. இவ்வளவு குறை விலையில் வாங்கியவர்களுக்கு நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு பங்கு ஈட்டு விகிதம் மூலமாக மட்டும் 44100 சதவீத வருமானம் கிடைத்து விடும். Britannia நிறுவனப்பங்கு இன்றைய தேதியில் 35191 bagger.


4. For every winner there is a loser .

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒரு தோல்வியாளர் இருப்பார்.


தின அளவில் இது உண்மையாகவும், குறுகிய கால அளவில் ஓரளவும் இது உண்மையானது. ஆனால் நீண்ட கால அளவில் உயர்ந்து வரும் பங்குச்சந்தையால் அனைவருமே வளமை அடைகின்றனர். சிப்லா பங்கை அதன் IPO ல் வாங்கியவர் 100 மடங்கானதும் அதனை ஏதோ ஒரு தேவை கருதி விற்று விடுவதாகக் கொள்ளலாம். அதனை வாங்கியவருக்கும் அதன் பங்கு 100 மடங்காளர் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. Baking the pie என்று கூறப்படும் இந்தக் கருத்தாக்கமே சந்தையின் அடிநாதமாகும்.


5. Stocks are cheap during IPO.

முதல் பொது வெளியீட்டின் போது பங்குகள் மலிவு விலையில் கிடைக்கப்பெறும்.


பொதுவாகக் காளைச் சந்தையில் மட்டுமே முதல் பொது வெளியீடுகள் வெளியிடப்படும். அவைகளை விலை மலிவு என்று சொல்ல முடியாது (HDFC வங்கி முதலான பங்குகள் விதிவிலக்கு) இந்த மலிவு விலை மாயை, பங்கின் IPO விலைகளை மட்டும் பார்ப்பதால் நிகழ்கிறது. பங்கின் விலைகளை மட்டும் பார்க்கக்கூடாது. விலையுடன் அவை வெளியிடப்படும் விலை வருவாய் விகிதத்தையும் (PE Ratio) சேர்த்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் அவைகளை விலை மலிவு என்று சொல்ல முடியாது. Aditya Birla Sunlife AMC முதல் பொது வெளியீடு 38.97 என்ற விலை வருவாய் விகிதத்தில் வெளி வந்தது. பங்கின் விலை 712 ரூபாய். தற்போதைய அதன் விலை 766 ரூபாய். ஆனால் தற்போதைய விலை வருவாய் விகிதம் 22.81 என்ற மடங்கில் உள்ளது. IPO வின் விலை வருவாய் விகிதத்தை விட அதன் தற்போதைய விலை வருவாய் விகிதம் குறைவு. என்ன நிகழ்ந்தது? நிறுவனத்தின் EPS அதிகரித்து PE குறைந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் அதன் பங்குகள் 766 என்ற உயர் விலையில் மலிவு என்று ஆகிறது. 


6. This time it's different.

இந்த முறை வித்தியாசமானது.


ஒவ்வொரு முறை காளைச்சந்தையின் போதும் சந்தை தறி கெட்டு உயரும் போது சொல்லப்படும் ஒரு வாசகம். ஆனால் சந்தை மீண்டும் குப்புற விழும் போது மட்டுமே ஒரு வித்தியாசமும் இல்லை என்பது உணரப்படும். 2000 ஆவது ஆண்டில் தகவல் தொழில்நுட்பக் குமிழி வெடிப்பதற்கு முன்னர் PE முதலான கருவிகளையெல்லாம் முதலீட்டாளர்கள் புறக்கணித்து விட்டு eyeball முதலான கருவிகளைக் கையிலெடுத்துக் கொண்டனர். அதென்ன eyeball? நிறுவனங்களின் இணையதளத்தை எத்தனை பேர் பார்வையிடுகிறார்கள் என்ற தரவுகளைக் கொண்டு அவை மதிப்பிடப்பட்டன. Men is not a rational animal but a rationalizing one. மாந்தர்கள் நியாயமானவர்கள் இல்லை அவர்கள் எதனையும் நியாயப்படுத்துபவர்கள். அப்புறம் என்ன நடந்தது என்பது இப்போது எல்லோருக்கும் தெரியும். சந்தையின் ஆபத்தான முதல் நான்கு வார்த்தைகளாக this time it's different ஐ சொல்லலாம். எப்படிப் பார்த்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை. சரித்திரம் மீண்டும் மீண்டும் நிகழ்வதாக இருக்கிறது. சந்தையின் பிரதானமான நிதிக்(நீர்க்)குமிழிகள் சில: Tulip Mania, South Sea bubble, Japanese Asset price bubble, Black Monday, Dot Com bubble , Sub Prime ...


7. To book profit we should sell Stocks.

பங்குகளை விற்றுத் தான் இலாபத்தைக் கைப்பற்ற முடியும்.


ITC பங்குகளை உதாரணமாகக் கொள்ளலாம். ITC நிறுவன IPO முதலீட்டாளருக்கான இன்றைய பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) 39520 சதவீதம். இத்தனை சதவீத இலாபத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நீங்கள் அதன் ஒரு பங்கைக் கூட விற்காமல் கையில் வைத்திருக்க வேண்டும். இது போக விற்காமல் கையில் வைத்திருக்கும் அதன் நூறு IPO பங்குகளின் இன்றைய மதிப்பு 1.66 கோடி. Capital appreciation is vanity. Dividend payout is reality. Reality leads to Vanity. முதலீட்டுப்பெருக்கம் என்பது வெற்றாரவாரம். பங்காதாயமே முதலீட்டுப் பெருக்கத்திற்கான உண்மையான ஆதாரம். 


8. Stock market is a Casino.

பங்குச்சந்தை ஒரு சூதாட்டக்களம்.


அது பங்குச்சந்தையை நீங்கள் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது. அது சூதாட்டக்களம் என்பதாக நீங்கள் பார்த்தால் அது சூதாட்டக்களம். அது சொத்து உருவாக்கும் களம் என்பதாக நீங்கள் பார்த்தால் அது சொத்து உருவாக்கும் களம். நிறையப் பேர் அதனை சூதாடும் களம் என்று பார்ப்பதால் அது சூதாடும் களமாகி விடாது. குறைவான பேர் அதனை சொத்து உருவாக்கும் களம் என்று பார்ப்பதால் அது சொத்து உருவாக்கும் களமாக ஆகாமலும் இருக்காது. தின மற்றும் குறுகிய கால வணிகம், F & O மட்டுமின்றி முதலீட்டு வருமானத்தைத் துரத்துவதும் ஒரு வகையான ஊக வணிகமே. இத்தகைய கூட்டு வட்டியை விரைவு படுத்தும் செயலே மறைமுகமாக கூட்டு வட்டியைக் குறைக்கிறது. ஒரு பங்கிலோ அல்லது பரஸ்பர நிதியிலோ அடங்கி அமராமல் இருப்பது பல்வேறுபட்ட உராய்வுச் செலவுகளுக்கு உங்களைக் கொண்டு செல்லும். முதலீட்டு வருமானத்திற்கும் முதலீட்டாளர் வருமானத்துக்கும் ஆகப்பெரிய இடைவெளி உருவாவதற்கு இதுவே காரணம். Howard Marks இதனை இவ்வாறு விளக்குகிறார். பங்கு வணிகர் ஒருவர் நிறுவனப்பங்கு ஒன்றை 100 ரூபாய்க்கு வாங்கி 110 ரூபாய்க்கு விற்கிறார். சில நாட்கள் சென்று அதே பங்குகளை 150 ரூபாய்க்கு வாங்கி 165 ரூபாய்க்கு விற்கிறார். இன்னும் சில நாட்கள் சென்று அதே பங்குகளை 180 ரூபாய்க்கு வாங்கி 198 ரூபாய்க்கு விற்கிறார். இந்த வணிகரின் பார்வையில் உள்ள பழுதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?


9. Stock market is rich man's club.

பங்குச்சந்தை பணக்காரர்களுக்கானது. 


அது அவ்வாறு அல்ல. இன்னும் சொல்லப்போனால் பங்குச்சந்தை முதலீடுகளைப் பொறுத்தவரை நிறையப் பணம் இருப்பது நிறைய வகைகளில் இடைஞ்சலாக இருக்கும். வாரன் பஃபெட் அவருடைய முதலீட்டு வாழ்க்கையின் தொடக்க காலத்தில் முதலீடு செய்வதற்கான பணம் மில்லியன்களில் இருந்த காலகட்டம் முதலீட்டுக்கு உகந்ததாக இருந்ததை நினைவு கூர்கிறார். சிறிய அளவுகளில் பணத்தை முதலீடு செய்யும் போது சந்தையில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். நினைத்த போது பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம். வாரன் பஃபெட்டால் அவ்விதம் செய்ய முடியாது. மேலும், பஃபெட் நிறுவனப் பங்கு ஒன்றை வாங்க முற்படுகிறார் என்கிற செய்தி வெளி வந்தாலே அதன் பங்குகள் விலை உயர ஆரம்பித்து விடும். அதே மாதிரி விற்க முனைகையில் பங்குகள் விலை குறைந்து விடும். முகேஷ் அம்பானியின் பெரும்பாலான சொத்தின் மதிப்பு ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளுடன்  கட்டப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் அவ்விதமின்றி பரவலாக பங்குப் பன்மயமாக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சிறு முதலீட்டாளர்கள் பணவீக்கத்தை விஞ்சிய உண்மையான வருமானத்தைப் பெற பங்குச்சந்தை முதலீடுகள் ஆதாரமான ஒன்றாகும். 


10. In the long run we are all dead.

நீண்ட காலத்தில் நாம் எல்லோரும் இறந்து விடுவோம். 


அது என்னவோ உண்மை தான். ஆனால் நீண்ட காலத்தில் நம் வாரிசுகள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருவார்கள். நிறுவனங்களும் நூறாண்டு இளமையாக (100 years young) Britannia Industries, ITC, KVB போல வாழ்ந்து வரும். இவ்வாறு முதலீடுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் generational investing என்பது கடைமுடிவான ஒரு முதலீட்டு முறையாகும். Wipro நிறுவன முதல் பொது வெளியீடு 1946 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் IPO வில் வாங்கப்பட்ட மூன்று பங்குகளை தலைமுறைகளைத் தாண்டி வைத்திருந்தால் அதன் மதிப்புப் பெருக்க சாத்தியக்கூறுகளைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். Wipro இன்றைய தேதியில் 1857275 மடங்காளர். அதன் 2025 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 8419546 சதவீதம்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14