செயற்பாடு சாய்வு
செயற்பாடு சாய்வு
Action Bias
செயற்பாடு சாய்வு (Action Bias) என்பது செயலற்ற தன்மையை விட செயல்பாட்டை விரும்பும், அவ்வாறு செய்வது எந்த முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்லாது என்பதை உணர்ந்தும் அதனையே தொடர்ந்தும் செய்வதான உளவியல் சார்ந்த ஒரு நிலையாகும்.
கால்பந்து விளையாட்டு ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கலாம். அது உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி. இரண்டு அணிகளும் புள்ளி எதுவும் போடவில்லை. ஆட்டத்தின் இறுதியில் ஒரு அணிக்குத் தண்டனை உதை (penalty kick) அடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது எதிரணி இலக்குக் காப்பாளரின் (goal keeper) மனநிலையைக் கணக்கில் கொண்டு பாருங்கள். அந்தப் போட்டியில் வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது இப்போது அவர் கையில், காலில், அசைவில் இருக்கிறது. அவர் குறியிலக்குக் கம்பங்கள் (goal post) நடுவில் நிலையாக நிற்காமல் வலது இடதாக அசைந்து கைகளையும் கால்களையும் வீசி தடுப்பு வேலி அமைத்துத் தயார் நிலையில் இருப்பதாகக் காட்டிக் கொள்வார். ஆனால் இலக்குக் காப்பாளர்கள் வெறுமனே நடுவில் நிலையாக நின்றால் பெரும்பான்மையான தடுப்பாட்டத்திற்கு அதுவே போதுமானதாக இருக்கும். இலக்குப் பகுதியை மூன்றாகப் பிரித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் 33.33 என்ற அளவில் இருக்கும் என்பது தெளிவு. நடுவில், இலக்குக் காப்பாளர் அணை கட்டி நின்றால் கைகள், கால்கள் மற்றும் உடலசைவின் மூலமாக 60 சதவீதத் தடுப்பாட்டத்தை வெற்றிகரமாக ஆடி விடலாம். இதன் அடுத்த கட்டமாகப் பந்து எந்தப்பக்கம் விழ யத்தனிக்கிறதோ அந்தப்பக்கம் மட்டும் சாய்ந்தால் போதுமானது. பின்னர் ஏன் இலக்குக் காப்பாளர்கள் இவ்வாறு நானாவித அசைவினை மேற்கொள்கிறார்கள்? சற்று யோசித்துப் பாருங்கள். இலக்குக் காப்பாளர்கள் வெறுமனே நடுவில் நின்று ஒருவேளை பந்தைத் தடுக்க முடியாவிட்டால் அவர் நிலைமை என்னவாகும்? போட்டியின் முக்கியமான கட்டத்தில் அவர் வெறுமனே அசைவற்று நின்று விட்டதாக உலகம் அவரைக் குற்றம் சாட்டும். அதுவும் கால்பந்து விளையாட்டில் அந்த நாடு செயலாக இருந்தால் வேறு வினையே வேண்டாம். இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: அவரின் செயல்பாடே அவருக்கு எதிராகச் செயலாற்றுகிறது.
முதலீடுகளில், அதுவும் முக்கியமாகப் பங்குச்சந்தை முதலீடுகளில், பகுப்பாய்வு செய்து முதலீடு செய்த பின்னர், பெரும்பாலான சமயங்களில் நாம் வெறுமனே நின்று கொண்டிருந்தால் மட்டும் போதுமானது. ஒரு வேளை செயலற்ற தன்மை எதிர்ம முடிவுகளுக்கு உங்களைச் சில சமயம் இட்டுச் சென்றாலும் முதலீடு என்பது தனிப்பட்ட ஒரு செயலாக இருப்பதால் சமூக அழுத்தங்களுக்கு நாம் ஆளாக வேண்டிய அவசியம் எதுவும் இருக்காது.
பங்குச்சந்தை கிரிக்கெட்டில், திருவாளர் சந்தை (Mr Market) அவர்கள் நிறுவனப்பங்கு ஒன்றை 1000 ரூபாய் என்ற விலையில் உங்களை நோக்கிப் போடுவார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்தப் பங்கை நீங்கள் வாங்கலாம். இல்லாவிட்டால் வெறுமனே விட்டு விடலாம். இத்தனை பங்குகள் என்ற கணக்கெல்லாம் எதுவும் கிடையாது. மேலும் உங்களை ஆட்டமிழக்கச் செய்ய யாரும் முனைய மாட்டார்கள். திருவாளர் சந்தை உத்வேகமான மனநிலையில் வீசும் பங்குகளை வாங்காமல் அவர் சோர்வான மனநிலையில் வீசும் பங்குகளை ஆறுக்கு அடித்து விரட்டலாம். மற்றபடி நீங்கள் வெறுமனே நின்று கொண்டிருந்தால் மட்டும் போதுமானது.
பஃபெட், தசாப்தங்களில் (decades) சிந்தித்து கண நேரத்தில் செயலாற்றுவார் என்பது இங்கே கவனம் பெறுகிறது.
பங்குத்தரகு நிறுவனம் ஒன்றில், அவர்கள் பரிந்துரைத்த முதலீடுகள் மூலம் அதிகமான இலாபம் ஈட்டிய முதலீட்டாளர்கள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. முதலீடு செய்ததையே மறந்த முதலீட்டாளர்கள் அந்தப் பட்டியலில் முதலிடம் பெற்றனர்.
வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனத்தில் அதன் ஆரம்ப காலத்தில் முதலீடு செய்து இன்னமும் அவர்கள் முதலீட்டை வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் அவர்கள் ஈட்டிய வருமானம் எத்தனை சதவீதம் என்பதாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோனோரின் பதில் 'தெரியாது' என்பதாக இருந்தது.
செயல்பாடுகள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவதில் செயல்பாடுகளுக்கான உராய்வுச் செலவுகளும் (frictional costs) ஒரு காரணமாக அமைகிறது.
பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாகப் பன்மடங்காளர்களைக் கைப்பற்றுவது உங்கள் கடைமுடிவான இலக்காக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செயற்பாடு சாய்வின் பக்கம் சாயாமல் இருந்தே ஆகவேண்டும். நிறுவனப்பங்கு ஒன்று 20 சதவீத கூட்டுப்பெருக்கத்தில் வளர்ந்து வருகிறதென்றால் அது 100 மடங்காளராக 24 நீண்ட நெடிய ஆண்டுகளாகும். அந்த நிறுவனப்பங்கு Infosys ஆக இருந்தாலும் 15 ஆண்டுகள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.
ஆலிஸின் அற்புத உலகத்தில் (Alice in wonderland) ஒருவர் நிலையாக நிற்க ஓடிக் கொண்டிருக்க வேண்டும். பங்குச்சந்தையில் வெற்றிகரமான ஓட்டத்தை மேற்கொள்ள ஒருவர் நிலையாக நிற்க வேண்டும். ஏனெனில் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை நாளை நடப்பது பனிமூட்டத்தின் ஊடாக உள்ளது. நான்கு தசாப்தங்கள் குறித்து நடக்கப்போவது திட்டவட்டமாக உள்ளது. தசாப்தங்களின் கணக்கில் சென்செக்ஸின் மதிப்பைத் துல்லியமாகச் சொல்லி விடலாம். நாளை சென்செக்ஸ் கூடும் அல்லது குறையும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலாது.
செயலற்ற தன்மை என்பது வெறுமனே செயலற்று இருப்பதல்ல என்பதையும் கணக்கில் கொள்ளவும். அது பார்க்காமல் பார்ப்பது. கேட்காமல் கேட்பது. பட்டினத்தார் பாடுவது மாதிரி அது தூங்காமல் தூங்குவது.
இவ்வாறு பங்குச்சந்தை தலைகீழ் விகிதங்களில் (Inverse Relationships) இந்த செயற்பாடு சாய்வு ஒரு கேந்திரமான இடத்தை வகிக்கிறது.
எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கும் போது நம்மால் நிற்க முடிவது உபயோகமான ஒரு திறமையாகும்.
Comments
Post a Comment