பங்காதாய வளர்ச்சி முதலீடு

பங்காதாய வளர்ச்சி முதலீடு

Dividend Growth Investing 


பங்குச்சாமி அந்த நிறுவனப்பங்குகளை 1990 களின் ஆரம்பத்தில் அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கினார். ஒரு பங்கின் விலை நூறு ரூபாய் என்று நூறு பங்குகளை வாங்கியதாக ஞாபகம். நிறுவனப்பங்கு, சந்தையில் ஐம்பது சதவீத அதிக விலையில் பட்டியலிடப்பட்டது. பங்குச்சாமியின் பெயர் தான் பங்குச்சாமியே தவிர அவருக்குப் பங்குச்சந்தை நெளிவு சுளிவுகள் அவ்வளவாகத் தெரியாது. அவருடைய பங்குச்சந்தை நண்பர் சில நாட்கள் சென்று அவரைச் சந்தித்த போது அந்தப் பங்குகளை விற்று இலாபத்தைப் பிடித்தாயா என்பதாகக் கேட்டார். விற்கவில்லை என்று கூறியதும் ஒருமாதிரி ஙே என்பதாகப் பார்த்தார். நாங்களெல்லாம் அதன் பங்குகளைப் பத்து நாட்களில் விற்று சரிபாதி இலாபம் எடுத்து விட்டோம், இந்த இலாபத்திற்கு ஆண்டாண்டு வருமானம் (Annualised yield) எவ்வளவு தெரியுமா என்றும் கேட்டார். பங்குச்சாமியின் மனதில் பத்து நாட்களில் 50 சதவீதம் இலாபம் என்ற கணக்கில் ஆண்டு முழுவதும் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு எவ்வாறு கிட்டும் என்பதான ஒரு வினா எழுந்தது. இதற்கிடையில் நிறுவனம் அதன் முதல் பங்காதாயத்தை 1994 ஆம் ஆண்டு வழங்கியது. 350 ரூபாய் வந்ததாக ஞாபகம். அவர் முதலீடு செய்த பணத்திற்கு 3.68 சதவீத வருமானம் இவ்வாறு பங்காதாய வடிவில் கிடைக்கப்பெற்றது. பங்குச்சாமி இப்போது ஙே என்பதாக உணர்ந்தார். FD ல் போட்டிருந்தால் கூட இதை விட அதிகமாக வருமானம் வந்திருக்கும்.


காலம், காளையும் கரடியுமாக உருண்டோடியது. பங்குச்சாமிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் உண்டு. Business Line நாளிதழில் அவ்வப்போது அவர் வாங்கிய பங்கின் விலையை நோட்டமிடுவார். சில நாட்கள் பங்கின் விலை கூடியிருக்கும். சில நாட்கள் குறைந்திருக்கும். பங்கின் விலை கூடினால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். பங்கின் விலை குறைந்தால் இனம் புரியாத ஒரு சோகம் நெஞ்சைக் கவ்வும். இலாபத்தில் தானே நஷ்டம் என்பதாக தன்னைத்தானே தேற்றிக் கொள்வார்.


நிறுவனம், 1990 களின் முடிவுக்குள்ளாக மூன்று முறை இலவசப்பங்குகளை வழங்கியது. இந்தப் பங்குகளுக்கும் பங்காதாயம் கிடைக்கப்பெற்றது. இவ்வாறு பங்காதாயம் ஆண்டாண்டு அதிகரித்த வண்ணம் இருந்தது. அவர் இதுவரை பங்காதாயமாகப் பெற்ற தொகை அவர் முதன்முதலில் முதலீடு செய்த தொகையை கிட்டத்தட்ட ஒத்திருந்தது.


பங்குச்சாமிக்கு வட்டிக்கு விடும் பழக்கமும் இருந்தது. பெரும்பாலான சமயங்களில் இந்தப் பணம் திரும்பி வராது. பணத்தைக் கொடுத்தவர்களிடம் பல்லைக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தால் பணம் எப்படித் திரும்பக் கிடைக்கும்? வட்டிக்கு விட்ட முதல் பணத்தை மட்டும் (வட்டியை அல்ல) சிலரிடம் நடையாய் நடந்து திரும்பப் பெற்றிருக்கிறார். கையால் கொடுத்ததைக் காலால் வாங்க வேண்டும் என்ற பழமொழி பங்குச்சாமியின் விஷயத்தில் உண்மையாகி விட்டது. அந்த வகையில் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தைப் பங்காதாய வடிவில் திரும்பப் பெற்றதில் அவருக்கு ஒரு மனநிறைவு.


2000 ஆவது ஆண்டில் நிறுவனம் ஒரு பங்குப்பிரிப்பை மேற்கொண்டது. பங்குச்சாமியின் வசம் இருந்த பங்குகளின் எண்ணிக்கை முதன்முறையாக நான்கு இலக்கத்தை எட்டியது.


2000 ஆண்டில் இன்னொரு சம்பவமும் நடந்தது. பங்குச்சந்தையில் தகவல் தொழில்நுட்பக்குமிழி வெடிக்கப் பெற்றது. அது தகவல் தொழில் நுட்பப் பங்குகளை மட்டுமின்றி மொத்த சந்தையையும் ஆட்டம் காண வைத்தது.


அப்போதிலிருந்து பங்குச்சாமி பங்கின் விலைகளைப் பார்ப்பதை அடியோடு நிறுத்தி விட்டார். 


ஆனால் பங்குச்சாமிக்கு ஒன்று மட்டும் புரியாத புதிராக இருந்தது. 


பங்கின் விலைகள் தரையைத் தட்டின. ஆனால் பங்காதாயம் விண்ணை முட்டியது.


நாளும் ஏறியிறங்கும் பங்கின் விலைகளில் கவனம் கொள்வதைக் காட்டிலும் நிறுவனம் வழங்கும் பங்காதாயங்களில் கவனம் கொள்வது சற்று ஆறுதலாக இருந்தது. பங்காதாயமும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது என்பதென்னவோ உண்மை தான். ஆனால் பங்கின் விலைகளுக்கு இது எவ்வளவோ மேல். மேலும், பங்கு விலைகள் மாதிரியில்லாமல் பங்காதாயம் ஆண்டுக்கு ஒருமுறை சமயங்களில் இருமுறை மிக அரிதாக சிறப்புப் பங்காதாயம் என்ற வகையில் மட்டுமே வெளியிடப்படும். பங்கு விலை உயர்வைப் பணமாக்கம் செய்ய பங்குகளை விற்க வேண்டியது அவசியமாகிறது. பங்காதாயம் அவ்வாறு அல்ல. பங்கு விலைகள் சந்தையின் மனமாச்சரியங்களுக்கு உட்பட்டது. பங்காதாயம் நிறுவனத்தின் கையில் உள்ளது. இவ்வாறாக பங்குச்சாமி பங்காதாயப் பலன்களில் நிலை நிறுத்தச் சாய்வினை மேற்கொண்டார். ஆண்டாண்டு உயர்ந்து வரும் பங்காதாயம், இந்த உயர் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் முதலீட்டுப் பெருக்கம் இவை தான் பங்குச்சந்தை என்றெல்லாம் பங்குச்சாமிக்குத் தெரியாது.


இதற்கிடையில் நிறுவன அளவில் அவ்வப்போது பிரச்னைகள் எழுந்த வண்ணமே இருந்தன. ஒருமுறை CEO வை முன்னிட்டு ஒரு பிரச்னை எழுந்தது. நிறுவனம் dinosaur கணக்காக வளர்ந்து விட்டது, அதன் பங்குகளை விற்று விட்டு வளர்ந்து வரும் சிறிய நிறுவனத்தில் முதலீடு செய்வது உகந்ததாக இருக்கும் என்று பங்குத்தரகு நிறுவனங்கள் பக்கம் பக்கமாக எழுதின. காலப்போக்கில் நிறுவனர்கள் அவர்களது பங்குகளை விற்று சிறுபான்மைப் பங்குதாரர்கள் ஆகி விட்டனர். ஒரு சமயம் தசாப்தங்களின் (decade) கணக்கில் பங்கின் விலை ஒரு குறிப்பிட்ட விலைப்பட்டையில் (price band) சிக்குண்டு இருந்தது. இதெல்லாம் நல்லவேளையாக பங்குச்சாமிக்குத் தெரியாது.


நிறுவனம், தொடர்ந்தவாக்கில் இலவசப்பங்குகளை வழங்கிய வணணம் இருந்தது. இப்போது பங்குச்சாமியின் வசம் நிறுவனத்தின் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகள் இருந்தன. அதன் மூலம் பங்காதாயம் பெருமழையாகக் கொட்டியது.


பங்குச்சாமியின் நாட்குறிப்பிலிருந்து நிறுவன பங்காதாய விவரங்களின் பட்டியல் ஒன்று கிடைக்கப்பெற்றது. அது பின்வருமாறு:


ஆண்டு- பங்காதாயப் பணம்- பங்காதாய சதவீதம்


1994 - 350 - 3.68%

1995 - 900 - 9.47

1996 - 700 - 7.36

1997 - 1100 - 11.57

1998 - 2400 - 25.26

1999 - 3000 - 31.57

2000 - 2400 - 25.26

2001 - 16000 - 168.42

2002 - 20000 - 210.52

2003 - 23200 - 244.21

2004 - 207200 - 2181.05

2005 - 73600 - 774.73

2006 - 288000 - 3031.57

2007 - 147200 - 1549.47

2008 - 425600 - 4480

2009 - 300800 - 3166.32

2010 - 320000 - 3368.42

2011 - 768000 - 8084.21

2012 - 601600 - 6332.63

2013 - 537600 - 5658.94

2014 - 806400 - 8488.42

2015 - 1523200 - 16033.68

2016 - 1241600 - 13069.47

2017 - 1318400 - 13877.89

2018 - 2227200 - 23444.21

2019 - 2201600 - 23174.73

2020 - 1792000 - 18863.15

2021 - 2764800 - 29103.15

2022 - 3174400 - 33414.73

2023 - 3481600 - 36648.42

2024 - 4710400 - 49583.15

2025 - 4403200 - 46349.47


பங்காதாயம் என்ற வகையில் மட்டும் அவருக்கு 3.33 கோடி கிடைத்திருக்கிறது. மேலும், முன்னரே குறிப்பிட்டது போல நாளும் ஏறியிறங்கும் பங்கு விலைகள் மாதிரியில்லாமல் பங்காதாயம் குறித்த விவரம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே கிடைக்கப்பெறும். பங்காதாயம் சிற்சில ஆண்டுகளில் குறையப் பெற்றது என்னவோ உண்மை தான். ஆனால் பொதுவாக அது ஏறுமுகத்தில் மட்டுமே இருக்கிறது. அது மூன்று இலக்கத்தில் தொடங்கி தற்போது ஏழு இலக்கத்தில் கிடைக்கிறது. இந்தப் பங்காதாயம் வெறும் 3.68 சதவீதத்திலிருந்து 46349 சதவீதம் ஆகிய பாங்கைக் கவனிக்க வேண்டுகிறேன். இந்த 46349 சதவீத பங்காதாயத்தைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலையும் கூட வேண்டும். பங்குச்சாமியின் கைவசம் உள்ள பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 15 கோடி. Multibagger என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒரு பங்கு இரட்டிப்பானாலே அது இப்போது Multibagger. அந்தக் கணக்கில் சொல்வதானால் பங்குச்சாமிக்கு அது 15789 bagger.


மீமிகை பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலை கூடுவதற்கான காரணத்தைக் கொஞ்சம் ஆராயலாம். பங்குச்சாமியின் பங்கு கடந்த நிதியாண்டுக்கு 46349 சதவீத பங்காதாயத்தைக் கொடுத்திருப்பதாகப் பார்த்தோம். வங்கி நிரந்தர வைப்பு முதலீடுகளுக்கான தற்போதைய வட்டி விகிதம் 8 சதவீதம். இந்த 8 சதவீதத்தையும் 46349 சதவீதத்தையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த 46349 சதவீத வருமானத்தைக் கொடுக்கவல்ல பங்குகளுக்கான தேவைப்பாடும் மீமிகை அளவில் இருக்கும். விளைவாகப் பங்குகளின் விலை கூடும். பங்குகளின் விலையும் அதன் பங்காதாயமும் எதிரெதிர் விகிதத்தில் கட்டப்பட்டுள்ளன. பங்குகளின் விலை கூடக்கூட அது வழங்கக்கூடிய பங்காதாயம் குறைந்து கொண்டே வரும். தற்போது இந்தப் பங்கு அதன் முதல் பொது வெளியீட்டுப் பங்காதாயத்தை ஒட்டி 2.87 சதவீதம் என்ற அளவீட்டில் வர்த்தகமாகிறது. பங்கின் விலை 15789 மடங்கு கூடியிருக்கிறது.


முன்னரே குறிப்பிட்ட படி பங்காதாயம் என்பது ஆண்டாண்டு உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கக்கூடிய உண்மையான ஒரு பணம். மாறாக, முதலீட்டுப்பெருக்கம் என்பது சந்தையின் போக்கைச் சார்ந்தது. அது காளைச்சந்தையில் வீறு கொண்டு எழும். கரடிச்சந்தையில் உங்கள் பங்குகளை அது கூறு போட்டு விடும். மேலும், முதலீட்டுப்பெருக்கத்தைப் பணமாக்கம் செய்ய பங்குகளை விற்க வேண்டும். பங்காதாயம் என்பது you can eat the cake and have it என்ற வகையைச் சார்ந்தது. அதனினும் முக்கியமாக பங்குச்சந்தையே உயர்ந்து வரும் பங்காதாயம், இந்த உயர்ந்து வரும் பங்காதாயத்தைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் முதலீட்டுப்பெருக்கம் என்பதில் நிலை கொண்டுள்ளது.


பங்குச்சாமி, பங்குகளில் இட்ட முதலீட்டைப் பங்காதாய வடிவில் திரும்பப்பெற எட்டாண்டுகள் ஆனது என்று பார்த்தோம். தற்போது 2025 ஆம் ஆண்டிற்கான பங்காதாயம் மூலமாக தின அளவில் அவருக்கு 12000 ரூபாய் கிடைத்துக் கொண்டிருக்கிறது.


பங்குச்சாமிக்கு அடிப்படைப் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வு இவை எதுவும் தெரியாது. அவருடைய கணக்கெல்லாம் ஒன்றே ஒன்றில் தான் கட்டப்பட்டிருந்தது. நிறுவனம் இன்றைய தேதியில் 46349 சதவீதப் பங்காதாயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வேறு பங்கை இனங்கண்டு அது இந்த அளவு மீமிகை  பங்காதாயத்தைக் கொடுப்பதற்கான நிகழ்தகவு என்ன? அப்படியே இனங்கண்டாலும் அந்தப் பங்கு  இவ்வளவு அதிக பங்காதாயத்தைக் கொடுப்பதற்கான கால அளவு எவ்வளவு? பொன் முட்டையிடக்கூடிய இந்த வாத்தை யாராவது அறுப்பார்களா?


பங்குச்சாமி, வேறு பங்குகளில் முதலீடு செய்திருக்கிறாரா என்ற தகவல் எதுவும் தெரிய வரவில்லை. இந்தப் பங்காதாயப் பணத்தை வேறு எங்கு முதலீடு செய்திருக்கிறார் என்பதையும் நான் நாகரிகம் கருதி கேட்கவில்லை. இந்தப் பங்காதாய வளர்ச்சி முதலீட்டு (Dividend Growth Investing) உத்தியை நான் தேர்ந்து தெளியவே வெகு நாட்கள் பிடிக்கும் என்பதாகத் தோன்றியது.


பின்குறிப்பு: Infosys Technologies பங்கை உதாரணமாகக் கொண்டு இந்தப் பதிவு எழுதப்பட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்