அடுத்த கூகுளை இனங்காண முடியுமா?
அடுத்த கூகுளை இனங்காண முடியுமா?
தேடாதே!
காணாமற் போவாய்!
வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன
- புவியரசு
× × ×
அடுத்த கூகுளை, அதாவது கூகுள் மாதிரி பன்மடங்காளர் ஆகக்கூடிய ஒரு பங்கை முன்னரே இனங்கண்டு முதலீடு செய்வது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும். இவ்வாறான சில வைரங்களை நாம் வசப்படுத்தினால் நமது பங்குத்தொகுப்பு பிரகாசமடையும். பெஞ்சமின் கிரகாமின் பங்குத்தொகுப்பில் GEICO பங்கு இவ்வாறான ஒரு விளைவை ஏற்படுத்தியது. அவருடைய பங்குத்தொகுப்பின் மூலமான வாழ்நாள் வருமானத்தில் பேர்பாதி GEICO பங்கின் மூலமாகக் கிடைக்கப்பெற்றது.
ஆனால், அடுத்த கூகுளை நாம் இனங்காண்பது சாத்தியம் தானா?
அடுத்த கூகுளை நாம் இனங்காண்பது ஒருபுறம் இருக்கட்டும். கூகுள் நிறுவனர்களுக்கே கூகுள் அடையவிருக்கும் உயரங்கள் குறித்த சரியான ஒரு புரிதல் இல்லை என்பது வியப்பான ஒரு விஷயம். சரியான ஒரு புரிதல் இருந்திருந்தால் அதனை அவர்கள் ஒரு மில்லியன் டாலர்களுக்கு விற்க முனைந்திருக்க மாட்டார்கள். பின்னர் கோடி கோடி டாலர்களாகக் கொட்டவிருக்கும் தங்கச்சுரங்கத்தை ஒரு மில்லியன் டாலர் கொடுத்து வாங்க பிற தேடுதல் நிறுவனங்களும் முன்வரவில்லை. விற்பவருக்கும் சரி, வாங்குபவருக்கும் சரி, அதன் உண்மையான மதிப்பு தெரியவில்லை. கூகுள் நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 2.97 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் நாளது தேதியில் கூகுள் 29,70,000 bagger.
இது ஒரு பக்கம். உலகின் தேர்ந்த முதலீட்டாளராகிய வாரன் பஃபெட், கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தவறியதும் இங்கே கவனம் பெறுகிறது. இத்தனைக்கும் அவருடைய GEICO நிறுவன விளம்பரங்கள் மூலம் கூகுள் பற்றிய புரிதல் பஃபெட்டிற்கு இருந்திருக்க வேண்டும்.
அடுத்த கூகுளை இனங்காண்பதே இவ்வாறு கடினமான ஒரு காரியமாக இருக்கிறது. இதனை விடக் கடினமான காரியம் இவ்வாறு இனங்கண்ட பங்கினைக் காலாகாலத்திற்கும் வைத்திருப்பது. HDFC வங்கிப் பங்கு இன்றைய தேதியில் 1900 மடங்காளர். எத்தனை பேர் 1995 ல் அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கப்பட்ட பங்கினை நாளது தேதி வரை வைத்திருந்து அதன் பன்மடங்காளர் பயணத்தைப் பணமாக்கம் செய்திருப்பார்கள்?
HDFC prudence பரஸ்பர நிதியினை 1994 ஆம் ஆண்டு அதன் NFO ல் வாங்கி 2015 ஆம் ஆண்டு வரை வைத்திருப்பவர்கள் குறித்த எண்ணிக்கையை அதன் நிதி மேலாளர் பகிர்ந்திருக்கிறார். அது வெறும் 2500 மட்டுமே. இத்தனை பேரும் தன் உணர்வுடன் அந்த நிதியினை வைத்திருந்திருப்பார்கள் என்று கூறவியலாது. ஒரு சிலர் வாங்கியதையே மறந்திருக்கலாம். தந்தை வாங்கியது தனயனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
முதலீட்டாளர்களின் இன்னுமொரு முக்கியமான கேள்வி: எதிர்வரும் காலங்களில் எந்தப் புதிய துறை சிறப்பாகச் செயல்படும்? அவ்வாறு தெரிந்தால் அந்தப் புதிய துறையின் அலையில் ஏறி சவாரி செய்யலாம்?
இதற்கான பதிலையும் பார்த்து விடுவோம். 2000 ஆவது ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறை முதலீட்டு வெளிச்சத்தில் இருந்தது. ஒருவர் இந்தத் துறையைச் சரியாக இனங்கண்டால் மட்டும் போதாது. இந்தத் துறையில் எந்தப் பங்கு வெற்றி பெறும் என்பதையும் அவர் சரியாகக் கணிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் Infosys நிறுவனம் பெரிய ஒரு பன்மடங்காளராக இருந்தது. ஆனால் ஒரு Infosys நிறுவனத்துடன் நூற்றுக்கணக்கான Pentamedia Software முதலான பங்குகளும் கலந்து கிடந்தன. இதில் Infosys, நிறுவனத்தை இனங்காண்பதற்கான நிகழ்தகவு என்ன?
எனில் அடுத்த கூகுளை எவ்வாறு தான் இனங்காண்பது? இவ்வாறு இனங்கண்ட பங்கினை எவ்வாறு காலங்களுக்கும் கையில் வைத்திருப்பது?
Process not a product என்பதான ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. அதாவது பன்மடங்காளர் பங்கு என்ற விளைபொருளை மறந்து விடுங்கள். பன்மடங்காளர் ஆகக்கூடிய பங்குகளை இனங்காணும் வினைவகைகளில் கவனம் கொள்ளுங்கள். தரமான பங்குகளை இனங்கண்டு அவற்றை மதிப்பு முதலீடாக காலப் பன்மயமாக்க முறையில் வாங்குங்கள். இவ்வாறு வாங்கப்பட்ட பங்குகளை ஆண்டாண்டு பேணிப் பாதுகாத்து வாருங்கள். இவற்றில் சில ஆயிரம் மடங்காளராகும். சில ஐநூறு மடங்காளராகும். பாதிக்கு மேல் நூறு மடங்காளராகும். இந்தப் பன்மடங்காளர்களின் சராசரி என்ற அடிப்படையில் உங்கள் பங்குத்தொகுப்பு சந்தைக் குறியீட்டை விட அதிகமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மேலும், இந்தப் பங்குகளின் மூலமாகப் பங்கு ஈட்டு விகிதம் வழி ஒரு பணப்பாய்ச்சல் கிடைக்கப்பெறும். இவற்றையும் மறு முதலீடு செய்வது கடைமுடிவான ஒரு முதலீட்டு உத்தியாக இருக்கும்.
Coffee can investing என்ற கருத்தாக்கம் இந்த முறையில் தான் கட்டப்பட்டுள்ளது. பெஞ்சமின் கிரகாமிற்கு GEICO நிறுவனம் மாதிரி முதல் Coffee can investor க்கு XEROX நிறுவனப்பங்கு.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? போதுமான காலம் கொடுக்கப்பட்டால் தரமான பங்குகள் அனைத்தும் பன்மடங்காளர் பங்குகளே. கூடுதலான CAGR ல் வளர்ந்து செல்லும் பங்குகள் விரைவில் பன்மடங்காளராகும். குறைவான CAGR ல் வளரும் பங்குகள் தாமதமாக இந்த நிலையை எட்டும். மேலும், கரடிச்சந்தை மூலமாக இத்தகைய பங்குகளை வாங்கும் வாய்ப்பு மீண்டும் மீண்டும் கிடைக்கப்பெறும். ஆக, பன்மடங்காளர் பங்குகளுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. சந்தை வழங்கும் இத்தகைய வாய்ப்புகளைப் பணமாக்கம் செய்வதற்கான பொறுமை, தாமதமான மனநிறைவு, நீடிப்புத்திறன், இலாப நஷ்டங்களைச் சமமாகப் பாவிக்கும் திறன், எளிமை, பணிவு போன்ற குணங்களை வளர்த்துக் கொள்வது மட்டுமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இலக்கில் ஒரு கண் இருந்தால் பாதையில் ஒரு கண் மட்டுமே இருக்கும். இலக்கில் கவனத்தைக் குவிக்காமல் பாதையில் கவனம் கொள்ளுங்கள். இலக்கு எளிதாக வசப்படும்.
மகிழ்ச்சியை நேரடியாக அடைய முடியாது. அதனை நீள்வட்ட சுற்றுச்சாலையில் சென்று மறைமுகமாக மட்டுமே அடைய முடியும். பங்குகளையும் அவ்வாறே இனங்காண முடியும்.
ஆக, பங்குகளைத் தேடாமல் தேடுங்கள். வாங்காமல் வாங்குங்கள். பார்க்காமல் பாருங்கள்.
Comments
Post a Comment