பிரார்த்தனை மொழிகள்
பிரார்த்தனை மொழிகள்
1. பேரொளியே கருணையுடன் என்னை வழி நடத்து ... என் காலடிகளைச் சீர்ப்படுத்து ... தொலைதூரக் காட்சிகளை நான் பார்க்க விரும்பவில்லை. அடுத்த அடி தெளிவாகத் தெரிந்தால் போதும்- தேவாலயப் பிரார்த்தனை
2. மாற்றவியலாத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம், மாற்றக்கூடிய நிகழ்வுகளை மாற்றியமைக்கத் தேவையான மனோதிடம், இவையிரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து கொள்ளும் விவேகம் இவற்றை எங்களுக்கு அருள்வாய் இறைவா! - அமைதிப் பிரார்த்தனை
3. ஆண்டவரே, என்னை உமது அமைதியின் கருவியாக ஆக்குவீராக.
வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பையும்,
குற்றம் இருக்கும் இடத்தில் மன்னிப்பையும், முரண்பாடு இருக்கும் இடத்தில் ஒற்றுமையையும், பொய் இருக்கும் இடத்தில் உண்மையையும்,
சந்தேகம் இருக்கும் இடத்தில் நம்பிக்கையையும், இருள் இருக்கும் இடத்தில் ஒளியையும், விரக்தி இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியையும் விதைப்பீராக. ஆண்டவரே, ஆறுதல் பெறுவதற்கு, புரிந்து கொள்ளப்படுவதற்கு, அன்பு செலுத்துவதற்கு, நான் அதிகம் தேடாமல் இருக்க எனக்கு அருள் புரிவீராக. ஏனென்றால், கொடுப்பதில்தான் ஒருவர் பெறுகிறார், தன்னை மறப்பதில் தான் ஒருவர் காண்கிறார், மன்னிப்பதில் தான் ஒருவர் மன்னிக்கப்படுகிறார், இறப்பதில் தான் ஒருவர் நித்திய ஜீவனுக்கு விழித்தெழுகிறார்- புனித பிரான்சிஸ்
4. மழைக்காகப் பிரார்த்தனை செய்யச் சென்றால் குடையை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.
5. உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
6. கடவுள் பூரணத்தையும் நிரப்புகிறார்.
7. உதடுகளின் பிரார்த்தனையை விட உதவும் கரங்கள் சிறந்தது- அன்னை தெரசா
8. உனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டாம். உனக்கு எது நன்மை என்பது உனக்கே தெரியாது.
9. நீங்கள் விரும்புவதில் கவனம் கொள்ளுங்கள். அது உங்களுக்கு அப்படியே கிடைத்து விடலாம்- சீனப் பழமொழி
10. நீங்கள் தேடுவது நீங்கள் எதிர்பார்க்கும் வடிவில் உங்களுக்குக் கிடைக்கப்பெறாது- Haruki Murakami
* * *
கடைசி மூன்று பிரார்த்தனை மொழிகளில் இருக்கும் முரண்பாட்டிற்கான விளக்கம்:
திரெளபதி, தனக்குக் கணவனாக வரப் போகிறவன் தர்மசீலனாக இருக்கவேண்டும், அவன் பலவானாக இருக்க வேண்டும், அவன் ஞானவானாக இருக்க வேண்டும், அவன் ஆணழகனாக இருக்க வேண்டும் மற்றும் அவள் மீது அன்பு செலுத்துபவனாகவும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறாள். இத்தனை கல்யாண குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருவர் கூட இப்பூவுலகில் இல்லை. எனவே, இறைவன் திரெளபதிக்கு ஐந்து கணவர்களை அருளியதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. ஆகவே, பிரார்த்தனைகளில் கவனம் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment