படித்ததில் பிடித்தது- 3

படித்ததில் பிடித்தது - 3


[சுஜாதா பதில்கள்- முதல் மற்றும் இரண்டாம் பாகம் (உயிர்மை வெளியீடு) மற்றும் இணையத்திலிருந்து தேர்ந்தெடுத்த சில கேள்வி பதில்கள். சில பதில்கள் உங்களைச் சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும்]


கேள்வி: இணையத்தளங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்?


பதில்: சுய விளம்பரங்களுக்குப் பயன்படும்.


கேள்வி: கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?


பதில்: கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை.


கேள்வி: வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்?


பதில்: கற்றது போதாது என்பதை.


கேள்வி: ஆண்கள், பெண்கள்- பொய் சொல்வதில் யார் கில்லாடி?


பதில்: பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதைச் சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள்.


கேள்வி: கதைகள் எப்போது காவியமாகின்றன?


பதில்: நூறு வருஷம் பிழைத்திருந்தால்.


கேள்வி: உங்களுக்கு எந்த அளவு கடவுள் நம்பிக்கை உண்டு?


பதில்: கடவுள் இருக்கிறார் என்ற அளவுக்கு.


கேள்வி: ஒரு கதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?


பதில்: சாதாரணமாக சில மணி நேரம் போதும். சில கதைகள் எழுதுவதற்கு வருஷங்கள் கூட ஆகும்.


கேள்வி: சந்தோஷம் என்பது ஆளுக்கு ஆள் மாறிக்கொண்டேயிருக்கிறது. சந்தோஷங்கள் பொதுவாகி விட்டால் வாழ்க்கை சீரடையும் அல்லவா?


பதில்: சந்தோஷம் பொதுவாகி விட்டால் அது சந்தோஷமல்ல. போர் அடிக்கும்.


கேள்வி: சொர்க்கம் எங்கே கிடைக்கும்?


பதில்: நல்ல வெயிலில் ரோட்டோர தர்பூசணியில் சில நேரம் சொர்க்கம் கிடைத்து விடுகிறது.


கேள்வி: ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க விரும்பிய நான் நீங்கள் சொன்னபடி ஆங்கில அகராதியை வாங்கி விட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்?


பதில்: Serendipity என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கவும்.


கேள்வி: கனவுகள் நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்குமா?


பதில்: இல்லை. நிஜ வாழ்க்கை கனவுகளில் பிரதிபலிக்கும்.


கேள்வி: நேரம் என்பது என்ன?


பதில்: நேரம் என்பது தூரத்தின் மறு வடிவம்.


கேள்வி: நீங்கள் எப்படி இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?


பதில்: தொடர்ந்து படிப்பதால்.


கேள்வி: நீங்கள் விரும்பிக் கும்பிடும் கடவுள் யார்?


பதில்: கடவுள்.


கேள்வி: காதலித்தால் தான் கவிதை வருமா?


பதில்: ஆம். கவிதையைக் காதலித்தால்.


கேள்வி: நிறைய எழுதுவது - அதிகமாகப் படிப்பது. இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம்?


பதில்: நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.


கேள்வி: ஒரு கேள்விக்கு ஒரு கேள்வியையே பதிலாகச் சொல்ல முடியுமா?


பதில்: ஏன் முடியாது?


கேள்வி: வெற்றியின் விலாசம் என்ன?


பதில்: தோல்வி.


கேள்வி: ஙா முதல் ஙெள வரையிலான 11 எழுத்துக்களைப் பயன்படுத்தியது உண்டா?


பதில்: கைக்குழந்தையாக இருந்த போது பயன்படுத்தியிருக்கிறேன்.


கேள்வி: கதை எழுதிய பின் தலைப்பு வைப்பீர்களா? இல்லை தலைப்பு வைத்த பின் கதை எழுதுவீர்களா?


பதில்: இரண்டும் உண்டு.


கேள்வி: பழைய படப் பாடல்கள் போலப் புதிய படப் பாடல்கள் கேட்பதற்குச் சுகமாக இல்லையே?


பதில்: சரி, சரி. எப்போது உங்களுக்குச் சதாபிஷேகம்? அடுத்த வாரமா?


கேள்வி: மனிதனால் ஞாபக மறதியைப் போக்க முடியாதா? 


பதில்: போக்கக் கூடாது. மறக்க வேண்டியது மனித வாழ்வின் முக்கியமான அம்சம்.


கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத் தான் ஆக வேண்டுமா?


பதில்: சரி தான் ... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?


கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?


பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதி பூண்டு செயல்பட்டுப் பாருங்கள் .


கேள்வி: உலகில் மிகவும் அத்தியாவசியமான மொழி ஆங்கிலம் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


பதில்: அந்தப் பட்டியலில் மௌனம், பார்வை மற்றும் கணினி மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


கேள்வி: வியாபாரத்திற்கு முதல் தேவை எது?


பதில்: முதல்.


கேள்வி: இலக்கியத்துறையில் உங்களது இமாலய இலக்கு எது?


பதில்: கடைசி வரை எழுதிக் கொண்டிருப்பது.


கேள்வி: கடவுளைப் பார்த்திருக்கிறீரா?


பதில்: பார்த்ததில்லை. உணர்ந்திருக்கிறேன்.


கேள்வி: வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?


பதில்: நழுவிப் போனதும் தெரிந்து விடும்.


கேள்வி: நீங்கள் எப்போது எழுதுவதை நிறுத்துவீர்கள்?


பதில்: நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்