வணிக வடிவமைப்பு- 1

வணிக வடிவமைப்பு- 1

The Design of Business- 1



பொறுப்புத்துறப்பு: இந்தப் பதிவு, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்கினை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல. The design of business என்ற கருத்தாக்கத்தை விளக்கும் பொருட்டு ஒரு நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு இது எழுதப்பட்டிருக்கிறது.


       *          *            *


Never invest in any idea you can't illustrate with a crayon- Peter Lynch 


ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.


             *                *               *


Federal Reserve: Plumber of the financial system 


              *                *               *


Tata Investment Corporation- A perpetual closed end mutual fund with 0% management expenses - பூஜ்ய சதவீத மேலாண்மைச் செலவுகளுடன் கூடிய ஒரு நிரந்தர மூடிய நிலை பரஸ்பர நிதி


மூடிய நிலை பரஸ்பர நிதிகள் (Closed end mutual funds) அதன் நிகர சொத்து மதிப்பிற்கும் குறைவாக வர்த்தகமாவது பொதுவான ஒரு நடைமுறையாகும். மூடிய நிலை பரஸ்பர நிதி ஒன்றின் காலம் பத்தாண்டுகள் என்று கொள்ளலாம். பத்தாண்டுகள் கழிந்த பின்னர் தான் பரஸ்பர நிதி நிறுவனம் அதன் சொத்துக்களைப் பணமாக்கம் செய்து முதலீட்டாளர்களுக்கு அவற்றைப் பிரித்துக் கொடுக்கும். இடைப்பட்ட காலத்தில் பங்குச்சந்தையில் இந்தப் பரஸ்பர நிதி அலகுகளை (units) விற்றுப் பணமாக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், அதன் நிகர சொத்து மதிப்பில் (NAV- Net Asset Value) இந்த அலகுகளை விற்க முடியாது. தள்ளுபடி விலையில் தான் அவற்றை விற்க முடியும். இரண்டாண்டு முடிந்த பின்னர் இந்த அலகுகளை ஒருவர் விற்பதாக வைத்துக் கொண்டால் அதனை வாங்குபவர் எட்டாண்டுகள் கழிந்த பின்னர் தான் அவற்றைத் தள்ளுபடியின்றிப் பணமாக்கம் செய்ய முடியும். அந்த வகையில் இடைப்பட்ட காலத்தில் இந்த அலகுகளை வாங்குபவர்கள் அவற்றைத் தள்ளுபடி விலையில் மட்டுமே வாங்க முனைவார்கள். சமயங்களில் இத்தகைய பரஸ்பர நிதிகளுக்கான தேவை குறைவாக இருக்கும் போது இந்தத் தள்ளுபடியைக் கூட்ட வேண்டியதாக இருக்கும். இவ்வளவும் முடிந்து பத்தாண்டுகளின் முடிவில் அந்த மூடிய நிதியை மூடும் போது சந்தை கரடியின் பிடியில் சிக்கியிருந்தால் அது தள்ளுபடியில் இன்னொரு தள்ளுபடியாகி விடும். இந்த சூழ்நிலைகளில் அந்த நிதியை பரஸ்பர நிதி நிறுவனங்கள் இன்னும் சில ஆண்டுகள் மூடிய வகை நிதிகளாகவே நீடிக்க வைத்திருக்கும். காளைச்சந்தையில் அவற்றைத் திறந்த நிலை (open ended) நிதிகளாக்கி விடும். இந்தப் பின்புலத்தைக் கொண்டு Tata Investment Corporation நிறுவனத்தைக் கொஞ்சம் ஆராயலாம்.


Tata Investment Corporation என்பது Tata குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஒரு முதலீட்டு நிறுவனமாகும். நிறுவனம் 1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டு முதல் அது தொடர்ச்சியாக பங்காதாயங்களை வழங்கி வருகிறது. 1959 ஆம் ஆண்டு அது BSE ல் பட்டியலிடப்பட்டது. 1994 மற்றும் 2005 ல் அது இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வழங்கியிருக்கிறது. அது பெரும்பான்மையாக சந்தையில் பட்டியலிடப்பட்ட Tata நிறுவனப் பங்குகளிலும் மற்றும் பிற நிறுவனப்பங்குகளிலும் முதலீட்டை மேற்கொள்கிறது. இது போக Tata மற்றும் இதர நிறுவன பட்டியலிடப்படாத நிறுவனப்பங்குகளையும் அது வைத்திருக்கிறது. மேலும் பத்திர (bond) முதலீடுகளையும் அது வைத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் வழங்கும் பங்காதாயம் அதன் பிரதானமான வருமானமாக இருக்கிறது. நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 73.38 என்ற உயர் அளவுகளில் இருப்பது நிறுவனத்தின் முக்கியத்துவத்தை மறைமுகமாக உணர்த்துவதாக இருக்கிறது. Tata Investment Corporation ஐ, ஒரு போதும் முடிவுறாத மூடிய நிலை பரஸ்பர நிதி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாம். TIC என்பது பிரதானமாக Tata நிறுவனப்பங்குகளையும் பிற நிறுவனப்பங்குகளையும் காலாகாலத்திற்கும் வைத்திருக்கும் ஒரு முதலீட்டு வாகனமாகச் செயல்படுகிறது. அவ்வப்போது profit booking நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.


நிறுவனம் நமது ஆறு அளவுருக்களான மிகை முதல் நீர்க்காமை (Minimum Equity Dilution) மிகை கடன் இல்லாமை (Nil debt/ Low debt) தரமான வளர்ச்சி (Quality Growth) நிறுவனத்தில் நிறுவனர் பங்கு (Skin in the game) அகழி (Moat) அறம் (Corporate Governance) ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதாக இருக்கிறது. இரண்டு இலவசப் பங்களிப்பு மூலமாக மட்டும் அதன் முதல் (capital) விரிவாக்கம் அடைந்திருக்கிறது. ஒருமுறை buyback ஐ மேற்கொண்டிருக்கிறது. நிறுவனத்திற்குக் கடன் எதுவும் கிடையாது. நீண்ட நெடுங்கால சராசரி என்ற அளவில் மிகை ROCE மற்றும் ROE மூலமாக தரமான வளர்ச்சியை அது எட்டியிருக்கிறது. நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 73.38 மற்றும் பொதுமக்கள் பங்கு 23 என்ற அளவீடுகளில் உள்ளது. FII மற்றும் DII பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. அகழியைப் பொறுத்தவரை அது side car investment என்றவாக்கில் செயல்படுவதைக் கூறலாம். மறைமுக அகழியாக அது மூடிய நிலை பரஸ்பர நிதியாக செயல்படுவதைக் கூறலாம். டாடா குழும அறத்தைத் தனியே விளக்க வேண்டியதில்லை.


மூடிய நிலை பரஸ்பர நிதிகள் தள்ளுபடி விலையில் வர்த்தகமாகும் என்று பார்த்தோம். TIC பங்கும் அதன் NAV வில் இருந்து தள்ளுபடி விலையில் முன்பு வர்த்தகமானது. தற்போது Tata Sons நிறுவனம் ஒருவேளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அதன் தள்ளுபடி குறைந்து கிட்டத்தட்ட அதன் NAV ஐ ஒட்டியே அது வர்த்தகமாகிறது. TIC நிறுவன 2024 -25 ஆண்டறிக்கையின் படி, Tata Sons நிறுவனத்தின் 326 பங்குகள் அதன் வசம் உள்ளன. இந்த 326 பங்குகளை வெறும் 326 என்ற எண்ணிக்கையில் மட்டும் பார்க்காதீர்கள். இவற்றின் முக மதிப்பு 1000 ரூபாயாகும். Tata Sons நிறுவனத்தின் இந்தப் பங்குகளை வாரன் பஃபெட்டின் Berkshire Hathaway நிறுவன A பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது சரியான ஒரு பார்வையாக இருக்கும். இது போக Tata Motors மற்றும் Tata Chemicals மூலமாக cross holdings என்ற வகையிலும் Tata Sons நிறுவனப்பங்குகள் TIC வசம் உள்ளன. இது மட்டுமின்றி அதன் பங்குத்தொகுப்பில் இடம் பெற்ற Tata Technologies நிறுவனம் சமீபத்தில் பட்டியலிடப்பட்டது. Tata Capital நிறுவனம் விரைவில் பட்டியலிடப்பட உள்ளது. அதன் 81860748 பங்குகள் TIC வசம் உள்ளன. மேலும், NSE ன் 5490000 பங்குகளையும் அது வைத்திருக்கிறது. NSE ன் முதல் பொது வெளியீடும் விரைவில் வெளிவரவுள்ளது. Tata AMC பங்குகளையும் அது கணிசமான அளவில் வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் Tata AMC பங்குகள் பட்டியலிடப்படலாம். இந்தத் தொடர்ந்த வாக்கிலான மதிப்புத்திறப்பு வாய்ப்புகளின் காரணமாக TIC பங்குகளுக்கான தேவைப்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. 


மேலும், பட்டியலிடப்படாத இன்னும் சில Tata நிறுவனப்பங்குகளிலும் (Tata Auto Components, Tata Industries) TIC பங்குகளை வைத்திருக்கிறது. நாளை இந்த நிறுவனங்கள் பட்டியலிடப்படும் போது மதிப்புத் திறப்பின் மூலம் அதன் NAV கூடக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 


NAV எப்படிக் கூடும் என்பதற்கான ஒரு எளிய விளக்கம்: TIC நிறுவனம் பட்டியலிடப்படாத நிறுவனங்களை fair value என்ற அடிப்படையைக் கொண்டு கணக்கிட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடப்படுகையில் market value என்ற கணக்கீட்டின் படி வந்து விடும். Tata Capital நிறுவனப்பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டு அதன் பங்குகளுக்கான தேவை அதிகரிக்கும் போது அதன் சந்தை மதிப்பு அதிகரிக்கும். விளைவாக நிறுவன NAV கூடும்.


இன்று அதன் NAV யான ரூ.6086 க்கும் மேலாக வர்த்தகமாகும் அதன் பங்குகள் நாளை அதன் NAV ல் இருந்து தள்ளுபடியில் வர்த்தகமானாலும் நிறுவனத்தின் பங்குத்தொகுப்பு தொடர்ந்து வளர்ந்து அதன் NAV கூடி வருகையில் TIC பங்கு விலைகளும் கூடும் என்பது தெளிவு. 


பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் போது அதற்கான மேலாண்மைச் செலவுகளை நாம் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்ற அளவில் அது இருக்கும். குறியீட்டு நிதிகளாக இருந்தால் கூட அது ஒரு சதவீதமாக இருக்கும். ஆனால் TIC பங்குகளைப் பொறுத்தவரை இந்தச் செலவு இல்லை. நீண்ட கால அளவில் இந்த ஒரு சதவீத மேலாண்மைச் செலவு கூட கூட்டு வட்டியின் காரணமாக எதிர்மைப் பெருக்கத்திற்கு உள்ளாகும். 


முன்னரே குறிப்பிட்ட படி TIC பங்குகளை Side Car Investment என்ற அடிப்படையில் பார்க்கலாம். அதன் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் முதலீட்டு வாகனத்தை இயக்க வேண்டிய அவசியமில்லை. எந்தப் பங்குகளை வாங்குவது எதனை விற்பது எதனை வைத்திருப்பது எவ்வளவு காலம் வைத்திருப்பது போன்ற அனைத்து முடிவுகளும் நிறுவனத்தைச் சார்ந்தது. நீங்கள் அதன் பங்குகளை வாங்க வேண்டும் என்ற ஒரேயொரு முடிவை எடுத்தால் மட்டும் போதுமானது.


நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 73.38 சதவீதம் என்ற அளவீட்டில் உள்ளது என்று பார்த்தோம். இந்தப் பங்குகள் விற்பனைக்கு வராது. நீண்ட கால முதலீட்டாளர்களின் பங்கும் விற்பனைக்கு வராது. இவை போக அன்றாடம் விற்பனைக்கு வரும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. TIC பங்கு உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாவதற்கு அதன் இந்தக் குறைவான நீர்மை நிறையும் (liquidity) ஒரு காரணமாக இருக்கிறது. இந்த உயர் விலையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலையைக் குறைக்கும் பொருட்டு நிறுவனம் பங்குப் பிரிப்பை மேற்கொண்டிருக்கிறது. விரைவில் அதன் முக மதிப்பு பத்து ரூபாய் உள்ள பங்குகள் முக மதிப்பு ஒரு ரூபாய் என்ற அளவில் பிரிக்கப்படவுள்ளன. மேலும் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இருப்பு மற்றும் உபரி (reserves and surplus) அதன் capital ஐ கொண்டு கணக்கிடும் போது 607 மடங்கு என்ற உயர் அளவில் உள்ளது. இது எதிர் வரும் காலங்களில் அதன் இலவசப் பங்களிப்பிற்கு சாதகமாக இருக்கும். 


இப்போது Tata Investment Corporation பங்குகளை வாங்கலாமா? இந்தப் பதிவு TIC பங்குகளை வாங்குவதற்கான பரிந்துரை இல்லை. இந்த மாதிரியான முதலீட்டு நிறுவனங்களை எந்த மாதிரியான பார்வையில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப்பதிவு எழுதப்பட்டுள்ளது. இப்போது அதன் நிகர சொத்து மதிப்பை ஒட்டி அதன் பங்குகள் வர்த்தகமாகிறது. முன்னரே பார்த்த படி நாளை இந்த மதிப்பிலிருந்து தள்ளுபடி விலையில் அதன் பங்குகள் வர்த்தகமானாலும் நீண்ட கால அளவில் அதன் NAV அதிகரித்து வருகையில் அதனை அடியொற்றிச் செல்லும் பங்கின் விலைகளும் அதிகரிக்கும். அந்த வகையில் அதன் பங்குகளைக் காலப் பன்மயமாக்கம் என்ற முறையில் வாங்கலாம். தள்ளுபடி அதிகரிக்க அதிகரிக்க வாங்கும் பங்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். மற்றபடி இத்தகைய முதலீட்டு நிறுவனப்பங்குகளை PE என்ற கணக்கில் பார்க்கக்கூடாது. ஏனென்றால் TIC வருமானம் அதன் முதலீட்டு நிறுவனங்கள் வழங்கக்கூடிய பங்காதாயம் மற்றும் அது அரிதாக விற்கும் பங்குகளின் முதலீட்டுப்பெருக்கம் என்ற இந்த இரண்டு தரவுகளை மட்டும் சார்ந்துள்ளது. இதனால் அதன் EPS குறைவாகவும் PE அதிகமாகவும் மட்டுமே இருக்கும். இத்தகைய முதலீட்டு நிறுவனப்பங்குகளைப் பொறுத்தவரை அதன் NAV எவ்வளவு, இந்த NAV யிலிருந்து எவ்வளவு தள்ளுபடி விலையில் அதன் பங்குகள் வர்த்தகமாகிறது என்ற தரவுகளை மட்டும் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.


Tata investment Corporation நிறுவனப்பங்குகளின் எனக்கான சராசரி விலை 489 ரூபாய். தற்போதைய விலை 7361 ரூபாய். 2006 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான CAGR 15.34 சதவீதம். பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் 15 bagger. நிறுவனம் ஆண்டாண்டு வழங்கிய பங்காதாயப் பலன்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்