விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம்
விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம்
All about PE
Price Earning multiple என்பதாக அழைக்கப்படும் விலை வருவாய் விகிதம் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வில் (Fundamental Analysis) ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
நிறுவனத்தின் ஒரு பங்கு, 15 ரூபாய் வருவாய் (Earnings Per Share - EPS) ஈட்டுவதாகக் கொள்ளலாம். சந்தையில் நிறுவனப் பங்கின் விலை 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது என்றால் அதன் விலை வருவாய் விகிதம் (Price Earning multiple - PE) 300 ÷ 15 அதாவது 20.
இதற்கான சமன்பாடு PE = Share price ÷ EPS
ஒவ்வொரு துறைக்கும் இது மாதிரி ஒவ்வொரு PE இருக்கிறது. இது போக ஒரு துறை சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு PE இருக்கிறது. அப்புறம் காளைச்சந்தை PE. கரடிச்சந்தை PE. Forward PE என்று சொல்லப்படும் முன்னோக்கு PE. பின்னோக்கு PE. வரலாற்று PE (Historic PE) முதலீட்டாளர்களின் தலை சுழன்றடிக்க இந்த PE விகிதம் மட்டுமே போதுமானது. எனில் எந்த PE ல் கவனம் கொள்வது? வாருங்கள், பார்க்கலாம்.
ஒரு பங்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். அல்லது 10000 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். 100 ரூபாய் மலிவு என்றோ 10000 ரூபாய் உயர்வு என்றோ நாம் தீர்மானிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய் என்ற விலையில் ஒரு பங்கின் விலை 10000 ரூபாயை விட அதிகமாக இருக்கலாம். இது எவ்வாறு சாத்தியம் எனில் நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் ஒரு ரூபாய் என்று கொண்டால் அதன் விலையான 100 ரூபாயை வைத்துக் கணக்கிடும் போது விலை வருவாய் விகிதம் 100 வருகிறது. 10000 ரூபாய் என்ற விலையில் ஒரு பங்கின் விலை மலிவாக இருக்கலாம். இது எவ்வாறு எனில் நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் 1000 ரூபாய் என்று கொண்டால் அதன் விலையான 10000 ரூபாயை வைத்துக் கணக்கிடும் போது விலை வருவாய் விகிதம் 10 மட்டுமே வருகிறது. பங்குச்சந்தை தலைகீழ் விகிதங்களில் (inverse relationship) இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
ஆக, ஒரு பங்கின் விலை எவ்வளவு என்று கேட்பதை விட அதன் விலை வருவாய் விகிதம் எவ்வளவு என்று கேட்பது தான் அறிவார்ந்த ஒரு கேள்வியாக இருக்க முடியும். ஒரு நிறுவனத்தின் விலை வருவாய் விகிதம் 20 என்றால், நிறுவனம் தற்போது சம்பாதிக்கும் ஒரு பங்குச் சம்பாத்தியத்தைப் போன்று 20 வருடங்களுக்கும் சம்பாதிக்கும் என்று கொண்டு, இந்த 20 வருட சம்பாத்தியத்தையும் மொத்தமாக இப்போதே கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானதாகும். 20 வருட சம்பாத்தியத்தையும் இப்போதே மொத்தமாகக் கொடுத்துப் பங்குகளை வாங்கி நாம் 20 வருடம் கையைக் கட்டிக்கொண்டு சும்மாவேனும் இருக்கவேண்டும் என்பதாக இதற்கு அர்த்தமில்லை. நிறுவனம் தொடர்ந்தவாக்கில் இலாபம் சம்பாதித்து வரும். இவ்வாறு சம்பாதிக்கும் இலாபம், ஆண்டாண்டு அதிகரித்து வரும் கூட்டுப் பெருக்கத்திற்கு உள்ளாவதாகக் கொள்ளலாம். எனில், நிறுவனம், 20 வருட சம்பாத்தியத்தை பத்தே வருடங்களில் எட்டி விடும். சந்தை இந்த மாதிரியான நிறுவனங்களுக்குக் கூடுதல் விலை வருவாய் விகிதத்தை வழங்கும். இது PE விரிவாக்கம் (PE expansion) என்பதாக அழைக்கப்படும். நிறுவன சம்பாத்தியம் ஆண்டாண்டு குறைந்து வந்தால் சந்தை அதற்கு வழங்கும் விலை வருவாய் விகிதம் குறைந்து விடும். இது PE குறுக்கம் (PE contraction) என்று அழைக்கப்படும். இது போக காளைச் சந்தையில் விலை வருவாய் விகிதம் அதிகரித்தும் கரடிச் சந்தையில் அது குறைந்தும் வரும். நிறுவனம் தற்காலிகமாக, காலப்போக்கில் தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கையில் அது குறை PE மதிப்பில் வர்த்தகமாகும். அது அத்தகைய பங்குகளை வாங்குவதற்கான ஒரு தருணமாகும். பங்குகளை இவ்வாறு வெவ்வேறு கால அளவில் வெவ்வேறு விலை வருவாய் விகிதங்களில் வாங்குவது காலப் பன்மயமாக்கம் (Time diversification) என்று அழைக்கப்படும். சந்தையின் ஆதாரமான குணமாக அதன் ஏறி இறங்கும் தன்மையைச் சொல்லலாம். இந்த ஏற்ற இறக்கத்தைப் பணமாக்கம் செய்வதே காலப் பன்மயமாக்கம்.
ஆண்டாண்டு காலமாக தரமான வளர்ச்சி என்ற தடை தாண்டும் பந்தயத்தில் வெற்றி கொள்ளும் நிறுவனங்களின் விலை வருவாய் விகிதம் வேறு வீச்சில் இருக்கும். இம்மாதிரியான தனித்துவமான நிறுவனங்களின் விலை வருவாய் விகிதம் கரடிச்சந்தையில் கூட ஓரளவிற்கு மேல் இறங்காது.
ஒவ்வொரு துறைக்கும் சந்தை ஒவ்வொரு மதிப்பிலான PE ஐ வழங்கும். Cyclical Industries என்று அழைக்கப்படும் இரும்பு மற்றும் எஃகு முதலான துறைகளின் PE மதிப்பு மிகக் குறைந்த அளவீட்டிலும், நுகர்பொருள் துறை (consumer goods) சார்ந்த துறைகளின் PE மதிப்பு உயர் அளவீட்டிலும் வர்த்தகமாகும். Cyclical துறை பங்குகளை நுகர்பொருள் துறை பங்குகளுடன் ஒப்பிட்டு விலை மலிவு என்று வாங்கி விடக்கூடாது.
மேலும் ஒரு துறை சார்ந்த தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் சந்தை வெவ்வேறு மதிப்பிலான விலை வருவாய் விகிதத்தை வழங்கும். உதாரணமாக Pidilite Industries நிறுவன விலை வருவாய் விகிதம், கடந்த ஆண்டு, குறைந்தபட்சமாக 68 என்ற அளவிலும், அதிகபட்சமாக 90 என்ற அளவிலும் உள்ளது. இத்தகைய அளவுகள் காலங்களின் போக்கில் அந்தந்த நிறுவனங்களின் செயல்பாட்டைக் கணக்கில் கொண்ட சந்தையின் கூட்டு அறிதிறனால் (collective intelligence) தீர்மானம் செய்யப்படுகின்றன.
Cyclical துறை சார்ந்த பங்குகளில் PE எதிர்மறையாக இயங்கும். இந்தக் கருத்தாக்கத்தைக் சற்று கவனமாகப் படிக்க வேண்டுகிறேன். நிறுவனப் பங்குகளை வாங்கும் போது குறை விலை வருவாய் விகிதங்களில் வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. Cyclical துறை சார்ந்த நிறுவனப் பங்குகளை வாங்கும் போது இது தலைகீழாக மாறுகிறது. Cyclical துறை நிறுவனங்களின் வருவாய் ஒரே சீராக இல்லாமல் ஏறி இறங்கும் தன்மை கொண்டதாக இருக்கும். உதாரணமாக Tata Steel நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். Steel விலை ஏற்ற இறக்க சுழற்சிக்கு உட்பட்டது. Tata Steel நிறுவன வருவாய் இந்த சுழற்சியைச் சார்ந்தே இருக்கும். Steel விலை அடிமாட்டு விலையைத் தொடும் போது நிறுவன வருவாயும் தரை தட்டி விடும். விளைவாக EPS மிகவும் குறை அளவுகளில் இருக்கும். EPS மற்றும் PE எதிரெதிர் தொடர்பு கொண்டவை. EPS குறைந்தால் PE கூடி விடும். நிறுவனம் இந்த மாதிரி அதிகப்படியான PE அளவுகளில் வர்த்தகமாகும் போது நாம் அவற்றை வாங்க வேண்டும். காலச் சுழற்சியில் Steel விலை விண்ணைத் தொடும். இது EPS அதிகரித்து PE குறையும் வேளை. இந்தக் குறை PE க்களில் பங்குகளை விற்று விட்டு வெளியேறி விடவேண்டும்.
குறுகிய கால முதலீட்டாளர்கள் PE குறுக்கத்தின் போது வாங்கியும் PE விரிவாக்கத்தின் போது விற்றும் இலாபம் ஈட்ட முனைந்து கொண்டிருப்பார்கள். இந்தக் கணிப்பு எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக, தரமான நிறுவனங்களுடன் நாமும் வளர்ந்து வருவது தான் சரியான ஒரு செயலாகும்.
முதலீட்டாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் நாளும் உயர்ந்தும் குறுகியும் செல்லும் விலை வருவாய் விகிதங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலும். குறை PE க்களில் buyback என்ற அடிப்படையில் பங்குகளைத் திரும்ப வாங்குதல், உயர் PE க்களில் புதிய பங்குகளை வெளியிட்டு (Qualified Institutional Placement - QIP) கடனை அடைத்தல் மற்றும் பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் என்ற வாக்கில் இது நிகழும். இன்னும் சொல்லப்போனால் buy low, sell high என்பதன் உண்மையான பொருள் நிறுவனங்களின் இந்த buyback மற்றும் QIP செயல்பாடுகள் மட்டுமே.
இந்த இடத்தில் வாரன் பஃபெட்டால் capital allocation guru என்று பாராட்டப்பட்ட Telydyne நிறுவன CEO, Singleton குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம். Singleton இந்த buy low மற்றும் sell high உத்திகளைப் பணமாக்கம் செய்ததில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராகப் பார்க்கப்படுகிறார். சந்தை, காளைத்தனமாக இருக்கும் போது மிகை PEக்களில் ஆன (சராசரி PE 25) Telydyne நிறுவனப்பங்குகளைக் கொடுத்து பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துகிறார். ஒன்றல்ல இரண்டல்ல, 128 தனித்தேவை நிறுவனங்களை (niche companies) இவ்வாறு வாங்கியிருக்கிறார். சந்தை, கரடித்தனமாக மாறுகையில், நிறுவனப்பங்குகளை buyback என்ற வகையில் (சராசரி PE 8) திரும்பப் பெற்றுக் கொள்கிறார். இந்த முறையில் நிறுவனத்தின் 90 சதவீதப் பங்குகள் திரும்பப் பெறப்படுகின்றன. ஒரு திரும்ப வாங்குதல் நிகழ்வின் போது மிகை அளவில் வந்த பங்குகளை, கடன் பத்திர வெளியீட்டின் மூலம் Singleton திரும்பப் பெறுகிறார். சிறிது காலத்தில் வட்டி விகிதம் உயர்ந்து கடன் பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. இந்தக் குறை விலையிலான கடன் பத்திரங்களை, நிறுவனம், அதன் பணி ஓய்வு நிதியின் வழி திரும்பப் பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு பெறப்படுகையில் அதற்கு வருமான வரி கிடையாது என்பது இங்கு கவனம் பெறுகிறது. ஆக, Singleton முதலில் buyback அடிப்படையில் பங்குகளை வாங்குகிறார். பின்னர், buyback ன் பொருட்டுப் பெற்ற கடனை buyback செய்கிறார். 1963 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் Telydyne நிறுவனம் 20.4 சதவீத CAGR என்ற அளவிலான வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. இதே கால அளவில் S&P குறியீடு 11.6 சதவீத CAGR மட்டுமே கொடுத்திருக்கிறது.
Singleton னிடம், உங்கள் நிறுவனத்தை மேலாண்மை செய்வதற்கான கேந்திரமான உத்தி என்ன என்பதாக ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவரின் பதில்: Steering the boat, daily.
அன்றன்றைக்குப் படகைத் தேவைக்கேற்ப திசை மாற்றுவது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் இந்த உத்தி உபயோகமான ஒன்று.
தொடர்ந்து சீரான இலாபம் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்வது PE கணக்கீடுகளுக்கு உதவுவதாக இருக்கும். Pidilite Industries நிறுவன CAGR ஒரே சீரான வகையில் வளர்ந்து வருவதால் பத்தாண்டுகள் கழித்த அதன் EPS ஐ கணக்கிட்டு விடலாம். அதன் மூலமாக நிறுவனத்திற்கு சந்தை வழங்கும் PE ஐ கொண்டு அதன் எதிர்கால விலையை அனுமானிக்கலாம்.
பொதுவாக குறை விலை வருவாய் விகிதத்தில் பங்குகளை வாங்க வேண்டும் மற்றும் மிகை விலை வருவாய் விகிதத்தில் பங்குகளை விற்க வேண்டும் என்பது பொதுவான ஒரு நடைமுறையாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. ஒருமுறை Balkrishna Industries விரிவாக்கத்தின் போது தற்காலிகமாக அதன் இலாபம் குறைந்து PE அதிகரித்தது. அத்தகைய பங்குகளை வாங்க வேண்டிய தருணம் அது.
EPS மற்றும் அதனைத் தொடரும் PE ஐ உருவகம் ஒன்றின் மூலம் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். EPS என்பது தந்தை. PE என்பது அவருடன் நடை பயிலும் நான்கு வயது தனயன். தந்தையும் தனயனும் நடைப்பயிற்சி செய்கிறார்கள். தனயன் அங்குமிங்கும் ஓடுவதாகப் போக்குக் காட்டிய வண்ணம் இருக்கிறான். ஒரு சமயம் தந்தையைத் தாண்டி வெகு தூரம் ஓடி விடுகிறான் (high PE) இன்னொரு சமயம் தந்தையைத் தயங்கித் தயங்கிப் பின் தொடர்கிறான் (low PE) இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தனயன், தந்தையை விட்டு விலகிச் செல்ல முடியாது. தந்தையும் தனயனும் கட்புலனாகாத ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றனர்.
இலாபம் சம்பாதிக்காத நிறுவனங்களுக்கு EPS கிடையாது. PE என்ற கேள்விக்கும் இடமில்லை. சந்தையில் பட்டியலிடப்பட்டு நீண்ட நெடுங்காலமாக இயங்கும் நிறுவனங்கள் கூட சமயங்களில் இந்த மாதிரியான சூழ்நிலைக்குத் தள்ளப்படும். அத்தகைய நிலைகளைத் தனிப்பட்டு ஆராய்ந்து முதலீடு செய்வது ஒரு கலை. அதற்காக ஒரு போதும் இலாபம் ஈட்டாத, எதிர் வரும் நாட்களில் இலாபப் பாதைக்குத் திரும்பலாம் என்ற மாதிரியான நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வது ஊகத்தின் பாற்பட்டது. 2000 ஆவது ஆண்டு தகவல் தொழில் நுட்பக்குமிழி அதன் உச்சத்தில் இருந்த போது E குறித்து யாரும் கவனம் கொள்ளவில்லை. பின்னர் என்ன நடந்தது என்பது யாவரும் அறிந்ததே.
நிறுவனம் ஒன்றை இனங்கண்டு காளைச்சந்தையிலும் கரடிச்சந்தையிலும் அதனை வெவ்வேறு PE அளவுகளில் வாங்குவது ஒரு முறை. நிறுவனம் ஒன்று மிகவும் தற்காலிகமான பிரச்னையில் சிக்கித் தவிக்கும் போது அதனைக் குறை PE க்களில் வாங்கி வைப்பது இன்னொரு முறை.
நிறுவனப் பங்குகளின் மூலமாக நீங்கள் ஈட்டும் இலாபம் அந்தப் பங்குகளை விற்கும் விலையில் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக பங்குகளை எவ்வளவு குறை மதிப்பில் வாங்குகிறீர்கள் என்னும் புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது. அத்தகைய பங்குகளைக் கையில் வைத்திருக்கும் காலத்தில் அது நிலை கொண்டுள்ளது. கரடிச்சந்தையில், குறைவான PE மதிப்பில் Asian Paints போன்ற தரமான பங்குகளைக் கூட 3 சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் (dividend yield) வாங்கலாம். நிறுவனம், ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வழங்குவதாகவும் மேலும் இந்த அதிகரிக்கப்பட்ட மூலதனத்திற்கும் அதே பங்காதாயத்தைத் தொடரும் என்று கொண்டால் பங்கு ஈட்டு விகிதம் இரட்டிப்பாகி விடும். இதன் தொடர்ச்சியாக பங்கின் விலைகளும் கூடும்.
நீண்ட கால அளவில் தரமான பங்குகளின் விலை கூடுவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று உயர்ந்து வரும் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) மற்றொன்று இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைத் தொடரும் விலை வருவாய் விகிதம். நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் வளர்ச்சி மேல் வளர்ச்சி காணும் போது அதனைத் தொடரும் PE, மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும். பங்குச்சந்தையில் இவ்விதம் தான் செல்வ வளம் என்பது உருவாகிறது. Multibagger பங்குகள் இவ்வாறு தான் பிறக்கின்றன.
விலை வருவாய் விகிதம் குறித்து இவ்வாறு விலாவாரியாக விளக்கினாலும் அது ஒரு கணிப்பு மட்டுமே. பொருளாதாரத்தில் நகரும் பகுதிகள் நிறைய இருக்கும். இந்தப் பொருளாதாரத்திற்கு முன்னர் செல்லும் பங்குச்சந்தையும் இந்த நகரும் பகுதிகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகும். மேலும் முதலீட்டாளர்களின் உணர்வுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். நிறுவனர்களுக்கே அவர்கள் நிறுவன அடுத்த வருட EPS சரிவரத் தெரியாத போது அதை நாம் துல்லியமாகக் கணிக்க முயல்வது அறிவுடைமை ஆகாது. 2026 quarter 2 PE என்பதெல்லாம் உட்டாலக்கடி. சரி, சரியாகக் கணிக்க இயலாத விலை வருவாய் விகிதத்திற்காக எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும்? வாரன் பஃபெட்டின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் to be approximately right than precisely wrong. முழுவதும் தவறு என்பதை விட ஏறக்குறைய சரி என்பது மேல். அந்த வகையில் விலை வருவாய் விகிதம் என்பது ஒரு approximation ஒரு அனுமானம் என்பதை அறிக.
Elon musk ன் சொத்து மதிப்பு இந்த மிகை PE (202.63) ல் தான் கட்டப்பட்டுள்ளது. Tesla நிறுவனம் எதிர் வரும் காலங்களில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் அதன் PE மதிப்பு காற்றில் கரைந்து விடும். அந்த வகையில் வாரன் பஃபெட் தனித்துவம் கொண்டவர். அவரது முதலீட்டு நிறுவனத்தின் PE மதிப்பு 17.01 என்ற அளவில் மட்டுமே உள்ளது. மேலும், வாரனின் முதலீட்டு நிறுவனம் தனிப்பட்ட நிறுவனமாக இல்லாமல் பற்பல நிறுவனங்களின் கலவையாக இருப்பதால் அபாய வெகுமதி விகிதம் (risk reward ratio) அதற்குச் சாதகமாக உள்ளது.
பன்மடங்காளர் பங்குகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றால் இவ்வாறு நாளும் மாறும் நிறுவனப்பங்குகளின் விலை வருவாய் விகிதங்களை நாம் கடந்து செல்ல வேண்டும்.
Tata Investment Corporation முதலான முதலீட்டு நிறுவனப்பங்குகளைப் பொறுத்தவரை PE முதலான தரவுகளைப் பார்க்கக்கூடாது. அவற்றைப் பொறுத்தவரை அதன் NAV என்னவென்று பார்க்க வேண்டும். இந்த NAV யிலிருந்து அதன் பங்குகள் எவ்வளவு மடங்கு குறைவாக அல்லது அதிகமாக வர்த்தகமாகிறது போன்ற தரவுகளை ஆராய்ந்து முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
வாரன் பஃபெட்டின் காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை அவை சிறியதாவதன் மூலமாக வளரும். காப்பீடுகளுக்கான முனைமத்தொகை (premium) சாதகமாக இல்லாத போது அவருடைய நிறுவனங்கள் காப்பீடுகளை வழங்காது. அத்தகைய சூழ்நிலையில் அதன் EPS குறைந்து PE அதிகரிக்கும். உடனே அதன் பங்குகளை விற்று வைக்கக்கூடாது.
எந்த நிறுவனமும் ஆண்டாண்டு ஒரே சீராக எப்போதும் வளர்ந்து வராது. அப்படி ஒரு நிறுவனம் வளர்ந்து வருகிறதென்றால் அது வருமானத்தை மேலாண்மை (earnings management) செய்யும் செயல்களில் ஈடுபடுவதாக ஒரு கருத்து உள்ளது.
நிறுவனத்தில் நிறுவனர் பங்கு (promoter holding) மற்றும் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் பங்குகள் (floating stocks) போன்ற நீர்மைநிறை (liquidity) சார்ந்த காரணிகளும் ஒரு பங்கின் விலை-வருவாய் விகிதத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கை வகிக்கி்ன்றன.
நீண்ட கால அளவில், பங்குகளின் PE விரிவாக்கமும் அதன் குறுக்கமும் சமன் செய்யப்பட்டு பங்குகள் அவற்றின் உள்ளார்ந்த PE மதிப்பை நோக்கி நகரும் என்பது எழுதப்படாத ஒரு பங்குச்சந்தை விதியாகும்.
PE ஐ மையமாக வைத்து பங்குச்சந்தையைச் சுருக்கமாக இவ்விதமாகவும் விளக்கலாம் என்று தோன்றுகிறது. பங்குச்சந்தை என்பது சரியான விலை வருவாய் விகிதத்தைக் கண்டறிவதற்கான ஒருபோதும் முற்றுப்பெறாத ஒரு தேடல் ...
Comments
Post a Comment