ஆக்கபூர்வமான மடமைகள்
ஆக்கபூர்வமான மடமைகள்
Constructive Supernaturalism
அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளில் ஒன்று இந்த ஆக்கபூர்வமான மடமைகள். அதிர்ஷ்டசாலிகள் அனைவரும் இந்த ஆக்கபூர்வமான மடமைகளில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை அவர்களுக்கு எந்த வகையில் நன்மை செய்கிறது? வாருங்கள், பார்க்கலாம்.
வாழ்க்கையில், சில சமயங்களில் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்படுவோம். பிரச்னை என்னவென்றால் எந்த முடிவு நமக்கு நன்மையைத் தரப்போகிறது என்பதை நம்மால் தீர்மானமாகக் கணிக்கவியலாது. மேலும் இந்த முடிவினை உடனடியாக நாம் எடுக்க வேண்டியதாக இருக்கும். காற்றில் வைத்த கற்பூரம் மாதிரி இந்த முடிவெடுக்க வேண்டிய கால அளவு குறைந்து கொண்டே வருவதாக இருக்கும்.
சூதாட்ட நிலையத்தில் மூன்று இலக்க எண் ஒன்றில் பணம் கட்டி விளையாடும் ஒரு ஆட்டத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த மூன்று இலக்க எண்ணை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? எந்த எண் அடுத்த போட்டியாளரை விட ஒரு படி மேலாக உங்கள் வெற்றிக்கு உதவுவதாக இருக்கும்? எவ்வளவு யோசித்தாலும் இந்தப் புதிருக்கு விடை காணவே இயலாது.
ஆனால் அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் கொண்ட மடமை காரணமாக ஒரு மூன்று இலக்க எண்ணை உடனடியாகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அவர்கள் சூதாட்டத்தில் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை. இங்கே முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது அவர்களின் உடனடி முடிவெடுக்கும் முறையை மட்டுமே.
வாழ்க்கையில், இந்த முக்கியத்துவமற்ற சூதாட்ட முடிவுகள் மாதிரியில்லாமல் பல்வேறு முக்கியமான முடிவுகளைக் கூட சில சமயங்களில் ஒரு பனிமூட்டத்தின் ஊடாகக் கணிக்க வேண்டியிருக்கும். அப்போது நாம் முடிவு செயலிழப்புக்கு (decision paralysis) ஆளாகாமல் இந்த உடனடி முடிவெடுக்கும் திறன் நம்மைக் காப்பதாக இருக்கும்.
The lady and the tiger கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ராஜாவின் மகள் மேல் கொண்ட காதல் காரணமாக அவரின் கோபத்திற்கு கதாநாயகன் உள்ளாகிறான். ராஜா அவனுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளிக்கிறார். அரங்கம் ஒன்றுக்கு இரண்டு வெளி வாசல்கள் உள்ளன. ஒன்றைத் திறந்தால் பூலோக ரம்பை. மற்றொன்றைத் திறந்தால் பசித்த புலி. கதாநாயகன் உடனடியாக இரண்டு வாசல்களில் ஒன்றைத் திறக்க வேண்டும். தாமதித்தால் உடனே மரணம். இந்த சூழ்நிலையை இன்னும் கொஞ்சம் சிக்கலாக்கும் விதமாக கதாநாயகனின் காதலியான இளவரசி ஒரு கதவைத் திறக்குமாறு அவனுக்கு சைகை காட்டுகிறாள். அவள் உண்மையிலேயே அவன் மீது கொண்ட அன்பினால் அவனைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாளா? எந்தக் காதலியாவது தனது காதலனை இன்னொரு பெண்ணிற்கு விட்டுக் கொடுப்பாளா? எவ்வளவு யோசித்தாலும் இந்தப் புதிருக்கு உங்களால் விடை காணவே இயலாது. இந்த நிலையில் முடிவெடுக்க இயலாமல் மரணத்தைத் தழுவுவதை விட பூவா தலையா போட்டுப் பார்த்து இரண்டில் ஒரு கதவைத் திறப்பது தான் சரியான முடிவாக இருக்கும். உயிர் பிழைப்பதற்கு 50-50 என்ற வாய்ப்பாவது மிஞ்சும்.
பங்குச்சந்தையிலும் சில சமயங்களில் தின மற்றும் குறுகிய கால அளவில் ஒரு பங்கை வாங்க (விற்க) முடிவெடுக்க முடியாமல் தராசின் இரண்டு பக்கங்களும் சமமாக இருக்கும் போது இந்த இரண்டில் ஒன்று உத்தி உதவுவதாக இருக்கும். அதனால் நீங்கள் இலாபமோ நஷ்டமோ அடைவது இங்கே கணக்கில் வராது. குறைந்தபட்சம் நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள் என்பதையே இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பங்குகளை வாங்குவது எனது ஆக்கப்பூர்வமான மடமைகளில் ஒன்று. ஏன் செவ்வாய்க்கிழமை? ஜாதக ரீதியாக எனக்கு அது சாதகமான நாள். இந்த மடமை எனக்குப் பல வழிகளில் உதவுகிறது. சந்தை தினமும் ஏறி இறங்குவதாகவும் கூச்சல் குழப்பமுமாகவே இருக்கும். வாரத்தின் ஒரு நாளில் பங்குகளை வாங்குவது (விற்பது) எனது சந்தை குறித்த கவனச்சிதறலை அறவே விலக்குகிறது. இந்த மாதிரி வாரம் ஒருமுறை செயல்பாடு சில சமயங்களில் பங்குகளை உயர் விலையில் வாங்குவதற்கும் குறை விலையில் விற்பதற்கும் இட்டுச்செல்கிறது என்பது உண்மை தான் என்றாலும் நீண்ட கால அளவில் இந்த விலை ஏற்ற இறக்கங்கள் வெறும் முழுமையாக்கப் பிழைகள் (rounding error) மட்டுமே. இந்தக் காலப் பன்மயமாக்க உத்தியினால் சந்தையில் என்னால் 'செயல்படாமல் செயல்பட' முடிகிறது. சந்தையின் மூலமான பணத்தின் கூட்டுப் பெருக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும் அறிவின் கூட்டுப்பெருக்க செயல்களில் என்னால் ஈடுபட முடிகிறது.
வாழ்க்கை என்ற சீட்டு விளையாட்டில் சில சீட்டுகள் உங்களுக்கு பேரதிர்ஷ்டத்தைத் தரும். சில நன்மை செய்யும். சில தீமை பயக்கும். இந்த அதிர்ஷ்டத்தை நீங்கள் எவ்விதம் கையாள்கிறீர்கள், தரவுகள் தெளிவாக இல்லாத போது எவ்விதம் முடிவுகளை ஆக்கபூர்வமாக எடுக்கிறீர்கள் என்பதில் உங்கள் வெற்றிக்கான சூத்திரம் அடங்கி உள்ளது.
A superstition won't do you any harm as long as you don't use as a substitute for thinking என்ற Charles Goren ன் வார்த்தைகள் இங்கே கவனம் பெறுகின்றன. மூடநம்பிக்கையை சிந்தனைக்கு ஒரு மாற்றாகப் பயன்படுத்தாத வரை பிரச்னை ஏதுமில்லை.
(Inspiration from the book 'How to get lucky' by Max Gunther)
Comments
Post a Comment