பங்குச்சந்தை பதில்கள் - 17
பங்குச்சந்தை பதில்கள் - 17
கேள்வி: கடவுள் உங்கள் முன் தோன்றி பங்குச்சந்தையைப் பொறுத்து ஒரேயொரு வரம் தருவதாகக் கூறினால் என்ன கேட்பீர்கள்?
பதில்: அடுத்து பன்மடங்காளர் ஆகக்கூடிய பங்குகளின் பட்டியலை எல்லாம் கேட்க மாட்டேன். தற்போது வாராவாரம் செய்யும் பங்குச்சந்தை முதலீடுகளை ஆயுளுக்கும் செய்ய அருளும் படி கேட்டுக் கொள்வேன்.
கேள்வி: பங்குச்சந்தை நகைச்சுவை ஏதேனும்?
பதில்: இரண்டு ரூபாய்க்கும் குறைவாக வர்த்தகமாகும் பென்னி பங்கு அதன் பங்குகளை 1:2 என்ற விகிதத்தில் பிரிக்க பதிவுத்தேதியை அறிவித்தது.
(நகைச்சுவை தொடர்கிறது)
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதன் பங்குகள் 5 சதவீதம் விலை உயர்வு!
கேள்வி: முதலீடுகளில் Macro பார்வை அல்லது Micro பார்வை - எது சரியானது?
பதில்: பேரளவு (macro) என்பது சிற்றளவு (micro) களால் ஆகப்பெற்றது.
கேள்வி: Berkshire Hathaway பங்கு 1964 லிருந்து 2024 வரை 5502284% வருமானம் கொடுத்திருக்கிறதே?
பதில்: இது absolute return என்று சொல்லப்படும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளுக்கான மொத்த வருமானம். Annualised return என்று சொல்லப்படும் ஆண்டாண்டு வருமானத்தைக் கணக்கிட்டால் 20 சதவீத கூட்டுப்பெருக்கத்தை BRK பங்குகள் கொடுத்திருக்கின்றன. 60 ஆண்டுகளுக்கு 20 சதவீத CAGR என்பது ஒரு அளப்பரிய சாதனை தான்.
கேள்வி: Hindsight bias ஐ கொஞ்சம் புரியும் படி விளக்க முடியுமா?
பதில்: Bajaj Finance நிறுவனம் சமீபத்தில் அதன் இரண்டு ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை ஒரு ரூபாய் என்று பிரித்திருக்கிறது. மேலும் இலவசப்பங்குகளை ஒன்றுக்கு நான்கு என்று வழங்கியிருக்கிறது. அதனுடைய 8700 என்ற விலையைக் கொண்டு கணக்கிட்டால் நிறுவனத்தின் இந்த செயல்பாடு தவிர்க்க முடியாதது போல் இப்போது தோன்றுகிறது. ஆனால் இந்த நிகழ்வு நடப்பதற்கு முன்னால் இதனை உய்த்துணர முடியாது. Hindsight bias அதாவது பின்னோக்கு சாய்வு என்பதைப் பின்வருமாறு கூறலாம். ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்னர் அதனைக் கூற முடியாது. அந்த நிகழ்வு நடந்த பின்னர் அது தவிர்க்க முடியாத ஒன்று போல் தோன்றும். முன்னோக்கி அதனைக் கூறமுடியாது. பின்னோக்கிக் கூறலாம்.
கேள்வி: நிறுவனம் ஏதாவது தவறு செய்து விட்டால் பங்குதாரர் என்ற முறையில் நாம் பொறுப்பேற்க வேண்டுமா?
பதில்: தேவையில்லை. மிஞ்சிப் போனால் பங்குகளின் விலை குறையும். மிதமிஞ்சிப் போனால் பங்குகளின் விலை பூஜ்யமாகி விடும். Limited Liability என்ற இந்த அடிப்படையில் தான் பங்குச்சந்தை இயங்குகிறது.
கேள்வி: Mad money என்ற வாக்கில் ஒரு பத்து சதவீதப் பணத்தைப் பங்குச்சந்தை ஊக வணிகங்களில் இடுவது குறித்து?
பதில்: முதலீடுகளில் இடுவதாக இருந்தாலும் சரி அல்லது ஊக வணிகங்களில் இடுவதாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் பணத்தின் நிறம் ஒன்று தான்.
கேள்வி : ஒரு பங்கின் 52 வாரக் குறைந்த பட்ச விலைக்கும் 52 வார அதிக பட்ச விலைக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் ?
பதில் : நிச்சயமாகப் பங்குகளின் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic value) ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய ஊசலாட்டத்திற்கு உள்ளாகாது . முதலீட்டாளர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பே இதற்கான முழுமுதற்காரணம்.
கேள்வி: 100 மடங்காளரைக் கைப்பற்றுவதற்குப் பொறுமை, டன் கணக்கில் தேவைப்படும் போலிருக்கிறதே?
பதில்: 100 மடங்காளர் ஆகும் வரை பொறுமை கொள்ளுங்கள். அதன் பின்னர் அதன் 500 மற்றும் 1000 மடங்காளர் பயணம் அதிவிரைவில் நிகழும்.
கேள்வி: ஒரு பங்கினை நான் வாங்கிய பின்னர் சொல்லி வைத்தார்ப்போல அதன் விலை குறைகிறது?
பதில்: அது தரமான நிறுவனப்பங்காக இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு கூடி விடுமே?
Comments
Post a Comment