சலிப்பு சரியானது
சலிப்பு சரியானது
Boredom Arbitrage
இந்த வலைப்பூவின் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இதில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் மதிப்பு முதலீடு, நீண்ட கால நோக்கு, தாமதமான மனநிறைவு, பயணமே பரிசு முதலான கருத்தாக்கங்கள் சலிப்பூட்டுவதாக இருக்கலாம். ஒரு அயற்சியை, சோர்வை அது தரலாம். இதில் ஒரு முதலீட்டு வாய்ப்பு ஒளிந்திருக்கிறது.
* * *
பரஸ்பர நிதி SIP களைப் போல சலிப்புத் தட்டும் முதலீடு வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவிலான முதலீட்டை ஒரு மாதத்தின் குறிப்பிட்ட வேளையில் இடுகிறீர்கள். அடுத்த மாதத்திலும் அதே அளவிலான முதலீடு. அடுத்த மாதத்திலும் ... அதுவும் வருமான வரியைக் கணக்கில் கொண்டு பரஸ்பர நிதிகளின் வளர்ச்சித் திட்டங்களை (Growth option) தேர்ந்தெடுத்திருந்தால் ஆயிரங்களில் இருக்கும் அதன் NAV காரணமாக அதன் ஒரு அலகை (unit) மட்டுமே வாங்க முடியும். இவ்வாறு நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றால் இலக்கை எப்படி அடைவது?
ஒரு 100 மடங்காளரை (100 bagger) பிடிக்க, அந்த நிறுவனப்பங்கு 20 சதவீதக் கூட்டுப்பெருக்கத்தில் வளர்ந்து வருவதாகக் கொண்டால், 24 நீண்ட நெடிய ஆண்டுகளாகும். ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்வதாகக் கொண்டால் கிட்டத்தட்ட கால் வாசி ஒரு 100 மடங்காளரைப் பிடிப்பதிலேயே முடிந்து விடும்.
பங்காதாயத்தை மறு முதலீடு (Dividend Reinvestment) செய்வது ஒரு ஆமை வேக முதலீட்டு முறை என்று சொன்னால் அது மிகையாகாது. பெரு நிறுவனப் பங்குகளிலிருந்து ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே பங்காதாயம் (பங்கு ஈட்டு விகிதம் - dividend yield) கிடைக்கப்பெறும். இந்தப் பணத்தைக் கொண்டு ஆனை விலை விற்கும் அத்தகைய பங்குகளை தசமங்களில் (fraction) மட்டுமே வாங்க முடியும்.
குறியீட்டு முதலீடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சென்செக்ஸ் குறியீடு முதலீடுகள் என்றால் அதன் முப்பது முன்னணி பங்குகளில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சாரத்தில் முதலீடு செய்வது. நிஃப்டி குறியீடு என்றால் அதன் ஐம்பது பங்குகளில் முதலீடு செய்வது. அப்போதைக்கப்போது இந்தப் பங்குகளில் ஏதேனும் ஒன்றிரண்டு விலக்கப்படும். ஒன்றிரண்டு சேர்க்கப்படும்.
இவ்வாறு பல்லாண்டுகள் அலுப்பிலும் சலிப்பிலும் தோய்ந்து செய்த முதலீடுகளைப் பணவீக்கம் (inflation) பாதி போக்கி விடும்.
அது அவ்வாறு தானா?
சீரான முதலீட்டுத் திட்டம் என்று அழைக்கப்படும் SIP க்களே சிறந்த நிதி மேலாளர் என்று Nick Murray கூறுகிறார். சீரான முதலீட்டுத் திட்டங்களில் தொடர்ந்தவாக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் போது குறைவான அலகுகளையும், சந்தை மதிப்பு குறைவாக இருக்கும் போது அதிக அலகுகளையும் வாங்க ஏதுவாகும். இந்த முதலீட்டு முறை rupee cost averaging என்பதாக அழைக்கப்படுகிறது. சந்தை தின மற்றும் குறுகிய கால அளவில் ஏறி இறங்குவதாக இருந்தாலும் நீண்ட கால அளவில் மனிதத்தின் கூர்மதி (Human Ingenuity) காரணமாக அதன் பாதை ஏற்றம் மட்டுமே. நீண்ட கால அளவில் பன்மய பரஸ்பர நிதிகள் (Diversified equity funds) 20 சதவீத கூட்டுப்பெருக்கத்தைக் கொடுத்திருப்பது இதற்கான சான்று.
பன்மடங்காளர்களைப் பொறுத்தவரை 100 மடங்காளரைப் பிடிப்பது மட்டுமே கடினமானது. அடுத்த பத்தாண்டுகளில் இந்த 100 மடங்காளர் 500 மடங்காளர் ஆகி விடும். அதற்கடுத்த மூன்றாண்டுகளில் அது 1000 மடங்காளராகி விடும்.
நீண்ட கால அளவில் வெறும் அரை சதவீத அதிகக் கூட்டுப்பெருக்கம் கூட ஆகப்பெரிய வருமானத்தைத் தரவல்லதாக இருக்கும். அந்த வகையில் பங்காதாய மறுமுதலீட்டைக் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.
குறியீட்டு நிதிகளையும் குறை சொல்ல முடியாது. சென்செக்ஸ் அதனை நிறுவிய நாளிலிருந்து நாளது தேதி வரை 18.77 சதவீத CAGR கொடுத்திருக்கிறது. மேலும், பிற பரஸ்பர நிதிகளுடன் ஒப்பிடும் போது, குறியீட்டு நிதிகளுக்கான உராய்வுச் செலவுகள் (frictional costs) குறைவு. ஆக, பரஸ்பர நிதி சரியானது.
பணவீக்கம் முதலீட்டு வருமானத்தைக் குறைத்து விடும் என்பது உண்மை தான். அதற்காகத் தான் முதலீடுகளை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும். முதலீடுகளின் அடிப்படையே பணவீக்கத்தை வெல்வது தான்.
Benign neglect என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தமிழில் அதனைப் பட்டினத்தார் கூறுவது மாதிரி பார்க்காமல் பார்ப்பது என்று சொல்லலாம். அலுப்பு முதலீடுகளின் ஆதாரம் இந்த பார்க்காமல் பார்க்கும் பார்வை தான்.
இன்னொரு வகையில் பார்த்தாலும் பங்கு முதலீடுகளை passive முதலீடுகள் என்று தான் சொல்ல முடியும். பங்குகள் என்பவை நிறுவனர்களுக்கு மட்டுமே பங்குகள். ரிலையன்ஸ் நிறுவனப்பங்குகள் அம்பானிக்கு மட்டுமே பங்குகள். நமக்கு அவை derivative என்று சொல்லப்படும் பெறுதிகள் மட்டுமே. நாம் பங்குகளின் passive owner மட்டுமே.
* * *
வாரன் பஃபெட் முதலீட்டு நிறுவன ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு மூன்று முறை சென்றவர், அடுத்த முறை செல்லவில்லை. பஃபெட் ஒவ்வொரு முறையும் சொன்னதையே சொன்னதாக அவர் அலுத்துக் கொண்டாராம். நாளும் மாறும் இந்த முதலீட்டு உலகில் பஃபெட்டின் மாறாத தன்மையே அவருடைய கேந்திரமான அனுகூலம் (competitive advantage)
முதலீடு என்பது புல் முளைப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றது அல்லது பூச்சு உலர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பது போன்றது என்று பொருளாதார நிபுணர் பால் சாமுவேல்சன் கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: முதலீடுகள் மூலமாக உங்களுக்குக் கிளர்ச்சியும் எழுச்சியும் வேண்டுமென்றால் பங்குச்சந்தைக்கு வராதீர்கள்; பணத்தை எடுத்துக் கொண்டு சூதாட்ட நிலையத்துக்குச் செல்லுங்கள்.
Buy right and sit tight என்பது John Bogle ன் வேத வாக்கு. சரியாக வாங்குங்கள், அடங்கி அமருங்கள்.
அலுப்பும் சலிப்புமே என் முதலீட்டு பந்தங்கள் என்று பஃபெட் கூறியிருக்கிறார். பஃபெட் தசாப்தங்களில் (decades) சிந்தித்து ஒருநாள் செயல்படுவார். ஒரு நிறுவனப்பங்கை முப்பதாண்டுகள் காத்திருந்து பின்னர் வாங்கியிருக்கிறார். அத்தனை காலத்திற்குப் பிறகு தான் அந்தப் பங்கு மதிப்பு முதலீட்டு வளையத்திற்குள் அவர் வாங்குவதற்கு வாகாக வருகிறது.
எல்லோரும் ஓடிக்
கொண்டிருக்கும் போது நம்மால் நின்று கொண்டிருக்க முடிவது உபயோகமான ஒரு திறமையாகும்.
Comments
Post a Comment