பங்கு கேள்வி பதில் - 7

பங்கு கேள்வி பதில் - 7


கேள்வி : Godrej Consumer Products பங்கு அதன் நேர்ம விளைவுகளை முழுவதும் பிரதிபலிக்கிறது என்றும் அதன் பங்குகளை விற்று விடுமாறும் பங்குத்தரகு நிறுவனம் ஒன்று கூறுகிறதே ?


பதில் : முதலில் நீங்கள் முதலீட்டாளரா அல்லது வணிகரா என்று முடிவு செய்து கொள்ளுங்கள் . இந்த வாங்குதல் மற்றும் விற்றல் பங்கு வணிகர்களுக்கான பரிந்துரை . நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருக்கும் பட்சத்தில் உடைமை மனப்பான்மை (ownership mentality) கொள்ளுங்கள் . Godrej Consumer Products பங்கு அதன் நேர்ம விளைவுகளை முழுவதும் பிரதிபலிக்கிறது என்று Adi Godrej அவர் பங்குகளை விற்று விடுவாரா என்று சற்றே யோசித்துப் பாருங்கள் . நீண்ட கால Godrej Industries உடைமை மனப்பான்மையாளர்களுக்கு Godrej Consumer Products நிறுவனப்பங்கு , நிறுவனப்பிரிப்பு என்ற வகையில் இலவசமாகக் கிடைக்கப்பெற்றது என்பதும் இங்கே கவனம் பெறுகிறது .


கேள்வி : BPCL , HPCL , IOC இந்த மூன்று பங்குகளில் எதை வாங்கலாம் ?


பதில் : கச்சா எண்ணெய் எடுத்தல் (Upstream) மற்றும் அதனை சுத்திகரித்து விற்றல் (Downstream) இரண்டிலும் இயங்கும் ஒரே நிறுவனம் , Speed Petrol மற்றும் Petro Card போன்ற முன்னெடுப்புகளை எடுத்த முதல் நிறுவனம் என்ற வகையில் எனது தேர்வு BPCL .


கேள்வி : Nestle India பங்குகளைத் தற்போது வாங்கலாமா ?


பதில் : Nestle India is a good company , not a good stock . Nestle India ஒரு நல்ல நிறுவனம் , ஒரு நல்ல பங்கு அல்ல . ஒரு பங்கின் மூலமாக நீங்கள் ஈட்டும் வருமானம் அதனை எவ்வளவு குறை விலையில் வாங்குகிறீர்கள் என்னும் புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது . அந்த வகையில் நிறுவனத்தின் விலை-வருவாய் விகிதம் தாங்கத்தக்கதாக வாங்கத்தக்கதாக இல்லை .


கேள்வி : Elcid Investments பங்கு ஒரே நாளில் பன்மடங்காளர் ஆகியிருக்கிறதே ?


பதில் : நீர்மை நிறை (liquidity)இல்லாததால் Elcid Investments பங்குகளை வாங்குவதும் விற்பதும் சிரமம் . இந்தப் பங்குச்சந்தை வாண வேடிக்கைகளை விலகியிருந்து பாருங்கள் .


கேள்வி : Venture Capital ல் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியுமா ?


பதில் : அதற்குக் கோடிகளில் முதலீடு தேவைப்படும் . மேலும் அதற்கான network ஐ கட்டமைக்க வேண்டும் . சிறு முதலீட்டாளர்களின் எல்லையைத் தாண்டியது அது . மாறாக Info Edge போன்ற பங்குகளை அடுத்த கரடிச்சந்தையில் வாங்கி விடுங்கள் . அது venture capital என்ற அடிப்படையில் Zomoto உட்பட ஏராளமான நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது .


கேள்வி : அடுத்த MRF எது ?


பதில் : MRF மாதிரி தனது பங்குகளைப் பிரிக்காமலும் , இலவசப்பங்குகளை வழங்காமலும் இருந்தால் தரமான நிறுவனங்கள் அனைத்துமே MRF தான் .


கேள்வி : VST Industries நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 32 சதவீதம் என்ற குறை அளவுகளில் மட்டுமே உள்ளது ?


பதில் : ஆனால் Ace investor Damani யின் பங்கு 35 சதவீதம் என்று உள்ளதே !


கேள்வி : நான் ஒரு சின்னஞ்சிறு முதலீட்டாளர் . ஐந்து பங்குகள் பத்து பங்குகள் என்று தான் என்னால் வாங்க முடியும் ?


பதில் : எவ்வளவு பங்குகள் வாங்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை . அதனை எவ்வளவு காலத்திற்கு வைத்திருக்கிறீர்கள் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது . காலங்களின் கூடுகையில் ஒரேயொரு HDFC நிறுவனப்பங்கு 168 HDFC வங்கிப் பங்காக மா(ஏ)ற்றம் பெற்றிருக்கிறது .


கேள்வி : GM Breweries நிறுவனம் ஏன் நான்குக்கு ஒன்று குறை விகிதத்தில் மட்டும் இலவசப் பங்குகளை வழங்குகிறது ?


பதில் : உண்மை தான் . ஆனால் அது நான்காவது முறையாக நான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை வழங்கியிருக்கிறது . குறை விகிதத்தில் அது இலவசப் பங்குகளை வழங்கினாலும் தொடர்ந்தவாக்கில் வழங்குவதைத் தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் . இலவசப்பங்குகளை வழங்கிய பின்னர் நிறுவனம் இந்த இலவசப் பங்குகளுக்கும் உயர் விகிதங்களில் பங்காதாயம் வழங்குவதையும் முக்கியமாக இங்கே பார்க்க வேண்டும் . நிறுவனத்தின் 100 பங்குகள் உங்களிடம் இருந்தால் நான்காவது 1:4 இலவசப் பங்களிப்பின் பின்னர் அது 243 பங்குகள் ஆகியிருக்கும் . நிறுவனம் ஐந்தாவதாக 1:4 என்ற விகிதத்தில் இன்னுமொரு இலவசப் பங்களிப்பை மேற்கொண்டால் இந்த 243 பங்குகள் 303 ஆகி விடும் . ஒரு நிறுவனம் அடிக்கடி உயர் விகிதங்களில் இலவசப் பங்களிப்பை மேற்கொண்டால் அதன் முதல் (capital) அதிகரித்து உபரி (Reserves & Surplus) குறைந்து விடும் . பின்னர் நிறுவனத்தால் இலவசப்பங்குகளை வழங்க முடியாது . ஏற்கெனவே வழங்கிய இலவசப்பங்குகளுக்குப் பங்காதாயமும் வழங்க முடியாது . 


கேள்வி : HUL பங்கின் ROCE திடுதிப்பென்று குறைந்து விட்டதே ?


பதில் : HUL நிறுவனம் அதன் 6 சதவீதப்பங்குகளை விட்டுக் கொடுத்து Glaxo Smithkline Consumer Healthcare நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கிறது . இதன் காரணமாக அதன் இருப்பு மற்றும் உபரி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது . அதன் விளைவாக ROCE குறைந்திருக்கிறது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14