பழைய புத்தகச்சந்தை பாடங்கள்

பழைய புத்தகச்சந்தை பாடங்கள்


The Perfect Store என்று ஒரு புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் பார்க்கிறீர்கள் . அந்தப் புத்தகம் எதைக் குறித்தது என்பதான ஒரு புரிதல் உங்களுக்குக் கட்டாயம் இருக்க வேண்டும் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு . இணையவழி வியாபாரத்தின் முதல் வெற்றிக்கதை eBay நிறுவனம் . வலிமையான நேர் பின்னூட்ட அகழியின் சிகர உதாரணம் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு என்ற தகவல் உங்கள் மன தரவுத்தளத்தில் (mental database) சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் . இது மிகவும் அடிப்படையானது . இந்த மாதிரி நிறுவன(ர்) வரலாறுகள் , முதலீட்டு உத்திகள் , பொருளாதாரக் குமிழிகள் இத்யாதி இத்யாதி குறித்த புத்தகங்களின் அன்றாடம் புதுப்பிக்கப்படுவதான ஒரு தரவுத்தளம் உங்களிடம் இருக்க வேண்டும் . மேலும் இந்த மாதிரி புத்தகங்களை எழுதும் ஆசிரியர்கள் குறித்த ஒரு பட்டியலும் உங்கள் மன வரைபடத்தில் இருக்க வேண்டும் . அப்போது தான் நீங்கள் அப்புத்தகத்தை இனங்கண்டு வாங்க ஏதுவாகும் . 20 டாலர் மதிப்புள்ள புத்தகங்களை கிட்டத்தட்ட ஒன்றரை டாலர் என்ற விலையில் மதிப்பு முதலீடாக வாங்கலாம் . Charles Brandes எழுதிய Value Investing Today என்ற புத்தகத்தை 100 ரூபாய்க்கு நான் வாங்கியது ஒரு annuity மாதிரி ஆண்டாண்டு எனக்கு மதிப்பை வாரி வழங்கிய வண்ணம் இருக்கிறது . இவ்வாறாக பழைய புத்தகக் கடையை பணவீக்கம் இல்லாத ஒரு உலகமாகப் பார்க்கலாம் . சில சமயம் பழைய புத்தகங்களைப் புத்தம் புதிதான நிலையில் பக்கங்கள் பழுப்பேறாமல் , அடிக்கோடு இடப்படாமல் வாங்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்பெறும் . சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெறும் 45 ரூபாய்க்கு வாங்கும் பாக்கியம் கிடைத்தது . அதன் புதிய பதிப்பின் விலை 250 ரூபாய் . பெஞ்சமின் கிரகாமின் மதிப்பு முதலீடு மற்றும் margin of safety உத்திகள் பின்புலத்தில் இயங்குவதைக் கவனிக்க வேண்டுகிறேன் . இந்த 45 ரூபாய் முதலீட்டை ஒரு பன்மடங்காளர் (multibagger) என்று தான் நான் பார்க்கிறேன் . ஒருமுறை Fortune India இதழை 150 ரூபாய்க்கு வாங்கி வந்த போது நண்பர் ஒருவருடன் விவாதம் ஏற்பட்டது . இந்த 150 ரூபாயை எவ்விதம் நியாயப்படுத்துவீர்கள் என்பது தான் அவருடைய கேள்வி . அந்த இதழின் பங்குப் பரிந்துரை வாயிலான ஒரு முதலீடு இன்னமும் சிறப்பாகச் செயல்பட்ட வண்ணம் உள்ளது . அந்த இதழ் வாயிலாக ஒரு புத்தக அறிமுகம் கிடைத்தது . அதன் இணையவழி இலவசப் பதிவிறக்கம் பைசா செலவில்லாமல் புதிய முதலீட்டு உத்திகளைக் கற்றுக் கொடுத்தது . அந்த உத்திகள் வாயிலான பங்காதாயங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமாக உள்ளது . இவ்வாறாக அந்த 150 ரூபாய் என்பது என்னைப் பொறுத்தவரை வளர்ச்சி முதலீடு (capital expenditure)


The best investment writing புத்தகத்தில் Jason Zweig எழுதிய கட்டுரை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . Jason Zweig அவர்களின் தந்தை பழைய கலைப்பொருட்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வந்தார் . சிறுவன் Jason Zweig அவருடன் கலைப்பொருட்களைக் கொள்முதல் செய்யச் செல்வது வாடிக்கை . அந்தக் காலத்தில் கூகுள் எல்லாம் கிடையாது . சிறுவன் Jason க்கு என்ன பொழுதுபோக்கு என்றால் அந்தக்காலக் கலைஞர்களின் பிறந்த தேதி , ஓவியர் என்றால் முதன்முதலாக அவர்கள் வரைந்த ஓவியம் எந்த ஆண்டு , அவர்கள் வரைந்த புகழ்பெற்ற ஓவியங்கள் எவை மற்றும் எப்போது வரைந்தார்கள் என்ற தகவல்களைச் சேகரித்து மனப்பாடம் செய்து கொள்வது ... கலைப்பொருட்களைச் சேகரிக்கச் செல்லும் போது இந்தத் தகவல்கள் பேருதவியாக இருக்கும் . ஒரு முறை கலைப்பொருளகம் ஒன்றிற்குத் தந்தையும் தனயனும் செல்கிறார்கள் . தந்தை பொருட்களைத் தேடுகையில் சிறுவன் அங்கு சுவரில் மாட்டியிருந்த ஒரு ஓவியத்தை வெறித்த வண்ணம் இருக்கிறான் . அந்த ஓவியம் தூசி படிந்து மங்கலாக இருக்கிறது . வெகு காலமாக யாரும் வாங்காமல் அங்கேயே தொங்கிக் கொண்டிருந்திருக்கும் போல ... ஆனால் அந்த ஓவியத்தின் சட்டம் விலையுயர்ந்த மரத்தினால் செய்யப்பட்டிருக்கிறது . சிறுவனுக்கு ஏதோ ஒரு பொறி தட்டுகிறது . பொதுவாக மதிப்பு மிக்க ஓவியங்களுக்குத் தான் இம்மாதிரி சட்டமிடுவார்கள் . சிறுவன் அந்த ஓவியத்தைத் துடைக்கிறான் . அந்த ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெறுகிறது . ஓவியத்தின் பின்னால் வரைந்தவர் பெயர் மற்றும் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்கிறது . அது சிறுவனின் மன வரைபடத் தகவலுடன் ஒத்துப் போகிறது . அது புகழ்பெற்ற ஓவியர் ஒருவரின் தலைசிறந்த படைப்பு . யாராலும் கவனிக்கப்படாமல் அந்த வைரம் ஒரு கூழாங்கல்லாக சுவரின் ஒரு மூலையில் ஒடுங்கியிருக்கிறது . தந்தையும் தனயனுமாக அந்த ஓவியத்தை அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார்கள் . Retainer (பழைய கலைப்பொருட்களைப் பழைமை மாறாமல் புத்தாக்கம் செய்பவர்) ஒருவரிடம் கொடுத்து அந்த ஓவியத்தைப் புதுப்பிக்கிறார்கள் . தற்போது அந்த ஓவியம் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் சுவரை அலங்கரித்த வண்ணம் உள்ளது . அந்தக் கட்டுரை இவ்விதம் முடிகிறது . 'அந்த ஓவியத்தை நாங்கள் இலாபகரமாக விற்றது முக்கியமில்லை . பணம் ஒரு துணை விளைபொருள் மட்டுமே . Money is only a byproduct . நாங்கள் அன்று அந்த ஓவியத்தை இனங்கண்டு வாங்காமல் இருந்திருந்தால் அது அந்தக் கலைப்பொருளகத்தின் நிலவறையில் என்றென்றைக்குமாக மறைந்திருக்கும் . இப்போது அந்த ஓவியம் மதிப்பாக இருப்பதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி' 


படிக்கும் பழக்கம் ஒரு புகழ்பெற்ற ஓவியத்தைக் கண்டடைய உதவும் பாங்கைக் கவனியுங்கள் . 


பங்குச்சந்தை மூலமான பணத்தின் கூட்டுப் பெருக்கத்திற்கு படிக்கும் பழக்கம் மூலமான அறிவின் கூட்டுப் பெருக்கமே ஆதாரமாக இருக்கிறது . இவ்வாறாக படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் Jason Zweig மாதிரி ஒரு வைரம் மட்டுமல்ல , 

ஓராயிரம் வைரங்களை பங்குச்சந்தையில் நாம் அகழ்ந்தெடுக்கலாம் .


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14