நீள் வட்ட சுற்றுச் சாலை
நீள் வட்ட சுற்றுச் சாலை
Obliquity
உங்கள் முன்னர் இரண்டு பாதைகள் இருக்கின்றன . ஒரு பாதை மேடு பள்ளங்கள் இன்றி சமதளமாக இருக்கிறது . வாகன நெரிசல் குறைவாகவும் ஒரே சீராகவும் இருக்கும் . அவவப்போது எவ்வளவு பாதையைக் கடந்திருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளக்கற்கள் ஆங்காங்கே பதிக்கப் பட்டிருக்கும் . உங்கள் இலக்கை அடைவதற்கான நேரடியான பாதை இது .
இன்னொரு பாதை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது . வாகன நெரிசலும் அதிகம் . பெரும்பாலான சமயங்களில் வண்டி ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும் . அரிதான சந்தர்ப்பங்களில் தெருவே காலியாக வாகன நெரிசல் இன்றி இருக்கும் . அப்போது வண்டி பின்னால் செல்வது போன்ற ஓர் விசித்திரமான உணர்வு ஏற்படும் . ஆனால் வண்டி உண்மையில் முன்னேறித் தான் செல்கிறது . இவ்வாறு முன்னேறிச் செல்வதை அடுத்த நெரிசலின் போது தான் உங்களால் உணர முடியும் . இது மட்டுமல்ல , நீங்கள் உண்மையிலேயே இலக்கை நோக்கித் தான் பயணிக்கிறீர்களா என்பதை உங்களால் தீர்மானமாகச் சொல்ல இயலாது . அடையாளக் கற்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மாற்றி வைக்கப்பட்டிருப்பதான ஒரு தோற்றப் பிழை அவ்வப்போது ஏற்படும் . மேலும் உங்கள் இலக்கை அடைய இது ஒரு சுற்றுப் பாதை . இந்த இரண்டு பாதைகளில் எதனை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் ?
நேரடிப் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் பயணத்தின் முடிவில் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் . ஆம் ! நீங்கள் முதலில் புறப்பட்ட இடத்திலேயே இன்னமும் நின்று கொண்டிருப்பீர்கள் . சுற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால் நீங்கள் கணிசமான தூரத்தைக் கடந்திருப்பீர்கள் .
• * *
எனது பங்கு முதலீடுகள் மூலம் ஆண்டு சராசரியாக 3 சதவீத பங்கு ஈட்டு விகிதம் கிடைக்கப்பெறுகிறது . பங்குகள் மூலமான முதலீட்டுப் பெருக்கம் தனி . முதலீட்டுப் பெருக்கம் ஒரே சீராகக் கிடைக்கப்பெறாது . காளைச்சந்தையில் இது பெருகவும் கரடிச்சந்தையில் இது குறுகவும் செய்யும் . ஆண்டாண்டுகளின் கணக்கில் இது கூடிச் சென்றாலும் ஆண்டுக்காண்டு இது கூடாது . எனது பங்குத் தொகுப்பை முழுவதும் விற்று விட்டு அதனை நிரந்தர வருமான முதலீடுகளில் (Fixed Income Investments) இட்டால் அடுத்த வினாடியே எனக்குக் கிடைக்கும் வருமானம் 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகி விடும் . பங்குகள் மூலமாக இந்த 6 சதவீத பங்கு ஈட்டு விகித வருமானத்தை அடைய நான் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும் . தரமான நிறுவனப் பங்குகள் கரடிச் சந்தையில் கூட உயர் விலையில் மட்டுமே வர்த்தகமாகும் . அதனால் அவை தரும் பங்கு ஈட்டு விகிதமும் குறை அளவுகளில் மட்டுமே இருக்கும் . எனவே இந்த 3 சதவீத சராசரியை 6 சதவீதம் என்று இரட்டிப்பாக்குவதற்கு தசாப்தங்கள் (decade) ஆகும் . இதற்கிடையில் சந்தையின் ஏற்ற இறக்கங்களையும் சமாளித்தாக வேண்டும் . நிரந்தர வருமான முதலீடுகள் , பங்கு முதலீடுகள் மாதிரி ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகாது . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் . சரியா ? தவறு !
நிரந்தர வருமான முதலீடுகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் வருமானம் ஒரு வரம்புக்கு உட்பட்டது . அதனால் தான் அவை அவ்வாறு அழைக்கப்படுகின்றன . மேலும் இந்த மாறா நிலை வருமானத்தைத் தரும் முதலீடுகளும் மாறா நிலையில் மட்டுமே இருக்கும் . பங்குகள் தின அளவில் ஏறி இறங்கினாலும் அவை தரும் பங்கு ஈட்டு விகிதம் ஆண்டாண்டுகளின் கணக்கில் அதிகரித்த வண்ணம் இருக்கும் . இந்த அதிகரித்து வரும் வருமானத்தைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலையும் அதிகரித்துச் செல்லும் . தரமான நிறுவனங்களால் கட்டப்பட்ட பங்குத் தொகுப்பின் மூலமான வருமானத்திற்கு வானமே எல்லையாகும் .
வாழ்க்கையில் , மகிழ்ச்சி போன்ற சில விஷயங்களை நேரடியாக அடைய முடியாது . அவைகளை சுற்றுப் பாதையில் சென்று தான் அடைய முடியும் . பங்கு முதலீடுகளும் அவற்றில் ஒன்று . அதிகரித்து வரும் பங்காதாயம் , அதன் மூலமாக அதிகரித்து வரும் பங்கு ஈட்டு விகிதம் , அதன் மூலமாக அதிகரித்து வரும் பங்கு விலைகள் என்பதான சுற்றுப் பாதையில் சென்று தான் பங்கு முதலீடுகளில் இலாபம் பெற முடியும் . பங்குச்சந்தையில் பங்கு பெறுவது என்பதை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு உபாயமாகப் பார்க்காமல் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு பெறுவது என்பதான உயரிய ஒரு நோக்கமாகப் பாருங்கள் .
உங்களின் ஒரே இலட்சியம் பணக்காரர் ஆவது என்றால் நீங்கள் அதை ஒருபோதும் அடைய மாட்டீர்கள் , அதனை விட மேம்பட்ட இலக்கு ஒன்றை நீங்கள் கைக்கொள்ள வேண்டும் என்பது ராக்பெல்லரின் மணி வாசகம் . கண்டுபிடிப்புகளின் கதாநாயகனான தாமஸ் ஆல்வா எடிசன் , நான் நிறையப் பணம் சம்பாதிக்க விரும்புகிறேன் ; அதன் மூலம் நிறையக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் . கார்களின் பிதாமகன் ஹென்றி போர்டு , வியாபாரம் ஒன்றின் மூலமாகப் பணம் ஈட்டுவதற்கான சிறந்த வழிமுறை பணம் ஈட்டுவதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பது என்று இதனை வேறு மாதிரி விளக்குகிறார் . கேளிக்கைகளின் தந்தை வால்ட் டிஸ்னி , நாங்கள் திரைப்படம் எடுப்பது பணம் ஈட்டுவதற்காக அல்ல , அந்தப் பணத்தைக் கொண்டு மேலும் திரைப்படங்களை எடுப்பதற்காக என்பதாகச் சொல்லியிருக்கிறார் . முதலீட்டு குரு வாரன் பஃபெட் : ஆட்டப் புள்ளிகளில் கவனத்தைச் சிதற விடாமல் ஆட்டத்தில் கவனத்தைக் குவியுங்கள் , புள்ளிகள் வந்தே தீரும் .
இவர்களின் கூற்றில் ஒரு இயற்கை நியதி இருக்கிறது . அது தான் அவர்களை அத்தனை உயரங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறது .
Comments
Post a Comment