கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா ?

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா ?

பங்குச்சந்தை உட்பட எதனையும் முன்கணிக்க எனக்குத் தெரியாது . வாரன் பஃபெட் சொன்னது மாதிரி , முன் கணிப்புகள் , முன் கணிப்புகளை விட , முன் கணிப்பாளர்களையே அதிகம் கணிக்கின்றன . ஆனால் , எந்த ஆட்டத்திலும் , கிரிக்கெட் உட்பட , வெற்றி பெறுவதற்கான பொதுவான வழிமுறைகள் உள்ளன . அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம் .



1. களத்தில் நில்லுங்கள் .


எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறுவதற்கான அடிப்படையான ஒரு குணம் இது . கிரிக்கெட்டில் சிறந்த மட்டையாளர்கள் முதன்முதலில் களம் இறங்குவர் . இவர்கள் நீண்ட நேரம் களத்தில் தாக்குப் பிடித்து நின்றால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பிற்கு அது ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் . கிரிக்கெட்டில் இது Partnership என்பதாக அழைக்கப்படும் . முதல் விக்கெட்டிற்கு 50 ஓட்டங்கள் , இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ஓட்டங்கள் ... என்று ஒரு அணியின் ஆட்டம் அமையுமானால் அதன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் .


பங்குச்சந்தையிலும் களத்தில் நிற்றல் என்பது அதிமுக்கியமான ஒரு அடிப்படையாக அமைகிறது . நான் சந்தை சாதகமாக இருக்கும் போது (காளைச்சந்தை என்று படிக்கவும்) ஆடுவேன் , அது பாதகமாகும் (கரடிச்சந்தை) போது ஓடுவேன் என்பதெல்லாம் கதைக்கு ஆகாது . சந்தை , இந்தத் தேதி வரை சாதகம் பின்னர் பாதகம் என்பதான விவரங்கள் எதுவும் முன்னதாக வெளியாகாது . மேலும் சந்தையைப் பொறுத்தவரை பாதகமே சாதகம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் . பன்மடங்காளர் (Multibagger) பங்குகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பது தான் உங்கள் கடைமுடிவான இலக்காக இருக்கும் பட்சத்தில் , பங்குகள் , பன்மடங்காளர் ஆகும் வரை நீங்கள் களத்தில் இருக்க வேண்டும் . இந்த இடைப்பட்ட காலத்தில் அது உயர் மதிப்பில் வர்த்தகமாகிறது என்பதற்காக ஆசை விற்பனையிலும் குறை மதிப்பில் வர்த்தகமாகிறது என்பதற்காக அச்ச  விற்பனையிலும் ஈடுபடக்கூடாது .



2. அடிப்பு மற்றும் தடுப்பாட்டங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை உணருங்கள் .


ஒரு சிறந்த மட்டையாளர் அனைத்துப் பங்குகளையும் அடித்து ஆட முற்பட மாட்டார் . எப்போது அடித்து ஆட வேண்டும் எப்போது தடுப்பு போட வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படியாக இருக்கும் . பந்து வாகாக அவருடைய திறமை வளையத்திற்குள் (circle of competence) வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் தான் நான்கோ அல்லது ஆறோ அடிப்பார் .


பங்குச்சந்தையில் , பங்கின் ஒவ்வொரு விலையையும் உங்களுக்குப் போடப்படும் ஒரு பந்தாகப் பாருங்கள் . IRFC பங்கு , 26  ரூபாய் என்ற விலையில் ஒரு பந்து உங்களுக்குப் போடப்படுகிறது . அதனை நீங்கள் அடித்து ஆடலாம் . அந்த விலையில் பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) மூலமாகவே கிட்டத்தட்ட 5 சதவீதம் கிடைத்து விடும் . ஆனால் அதே பந்தை 76 ரூபாயில் தடுப்பாட்டம் மட்டுமே ஆட வேண்டும் . கிரிக்கெட்டில் போடப்படும் பந்துகளுக்குக் கணக்கு உண்டு . பங்குச்சந்தையில் போடப்படும் பங்குகளுக்குக் கணக்கு எதுவும் கிடையாது . மேலும் சந்தையில் உங்களைத் தோற்கடிக்க எதிரணி ஆட்கள் யாரும் முனைய மாட்டார்கள் . நீங்களாகவே உங்களைத் தோற்கடித்தால் தான் உண்டு .



3. ஆட்டப்புள்ளிகளில் அல்லாது

ஆட்டத்தில் கவனம் கொள்ளுங்கள் .


எந்த விளையாட்டிலும் ஆட்டப் புள்ளிகளில் கவனம் கொள்ளாது ஆட்டத்தில் மட்டும் கவனம் கொள்ளுங்கள் . ஆட்டத்தில் கவனம் கொண்டால் ஆட்டப் புள்ளிகள் தானாக வரும் . ஒரு நாள் கிரிக்கெட்டில் , முதல் பத்து ஓவர்களில் , சராசரியாக 80 ஓட்டங்கள் எடுக்கப்படுவதாகக் கொள்ளலாம் . உடனே 50 ஓவர்களில் 400 ஓட்டங்கள் எடுக்கப்படும் என்று சொல்லி விட முடியாது . ஆட்டத்தின் போக்கு எப்போது வேண்டுமானாலும் திசை மாறிச் செல்லலாம் . நாலைந்து மட்டையாளர்கள் வீழ்ந்து விடலாம் . விளைவாக ஓட்ட விகிதம் குறைந்து விடலாம் .


பஃபெட் , பங்குச்சந்தை என்ற ஒன்றே இல்லை என்று கொண்டு பங்குகளை வாங்குங்கள் என்று கூறுகிறார் . தாமஸ் பெல்ப்ஸ் , பங்குகளின் விலையில் கவனம் கொள்ளாமல் ROIC மற்றும் ROCE போன்ற நிதி விகிதங்களில் கவனம் கொள்ளுங்கள் என்பதாகக் கூறுகிறார் . நாளும் ஏறி இறங்கும்  பங்கின் விலைகள் வெறும் இரைச்சல் . ஆண்டாண்டு கூடிச் செல்லும் நிதி விகிதங்கள் ஒரு முக்கியமான குறியீடு . ஒரு நிறுவனப் பங்கு தொடர்ந்து அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுத்து அதன் பங்காதாய வழங்கல் விகிதமும் (Dividend Payout ratio) கட்டுக்குள் இருக்குமானால் இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்கின் விலைகளும் கூடியே தீரும் .



4. நீங்களே உங்கள் எதிரி .


கிரிக்கெட்டில் உங்களைத் தோற்கடிக்க எதிரணியினர் கங்கணம் கட்டுவார்கள் . ஆனால் நீங்களே உங்கள் உணர்வுகளை மேலாண்மை செய்து அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் தடுக்க வேண்டிய பந்துகளைத் தடுத்தும் ஆடினால் உங்களைத் தோற்கடிப்பது அரிதினும் அரிதாகி விடும் .


பங்குச்சந்தை முதலீடுகளிலும் உங்கள் முக்கியமான எதிரி நீங்கள் மட்டுமே . உங்கள் உணர்வுகள் மட்டுமே . இந்த உணர்வுகளை மேலாண்மை செய்ய பஃபெட் கூறியது மாதிரி அடுத்தவர்கள் பேராசை கொள்ளும் போது நீங்கள் அச்சம் கொள்ளுங்கள் . அடுத்தவர்கள் அச்சம் கொள்ளும் போது நீங்கள் பேராசை கொள்ளுங்கள் .



5. சிறிய அலகுகளில் கவனம் கொள்ளுங்கள் .


கிரிக்கெட்டில் நான்குகளுக்கும் ஆறுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு . ஆனால் அவ்வப்போது கிடைக்கும் ஒன்றுகளையும் இரண்டுகளையும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் .


பங்குச்சந்தையிலும் முதலீட்டுப் பெருக்கத்தைத் தான் நாம் முக்கியமாகப் பார்க்கிறோம் . பங்காதாயம் , பாடப்படாத ஒரு பாடலாகத் தான் உள்ளது . அதிகரித்து வரும் பங்காதாயம் அதிகரித்து வரும் பங்கு விலைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் .



6. தகவமைப்பைத் தக்க வையுங்கள் .


ஆட்டத்திற்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் குழுக்களே எந்த விளையாட்டிலும் வெற்றி பெறுகின்றன . உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் அது ; முதல் ஐந்து ஓவர்களில் பத்து ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்து விடுவதான சூழ்நிலை ஒன்றைக் கற்பனை செய்யுங்கள் . எடுக்க வேண்டிய இலக்கோ 300 ஓட்டங்கள் என்ற எட்டாத உயரத்தில் உள்ளது . அப்போது களத்தில் இருக்கும் மட்டையாளர்களின் மனநிலையைக் கொஞ்சம் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள் . தடுப்பாட்டமும் ஆட வேண்டும் . ஒன்று இரண்டு என்று ஓட்டங்களும் எடுக்க வேண்டும் . அவ்வப்போது நான்கு ஆறு என்று அடித்தும் ஆட வேண்டும் . ஆட்டமிழக்காமலும் இருக்க வேண்டும் . அது புயலுக்கு நடுவே தோணியைச் செலுத்துவது போன்றதாகும் . 


பங்குச்சந்தையிலும் இத்தகைய சூழ்நிலைகள் அவ்வப்போது எழுந்த வண்ணமே இருக்கும் . பல்லாண்டுகளின் கணக்கில் பார்த்துப் பார்த்துக் கட்டிய கோட்டை நிமிடக் கணக்கில் நொறுங்கும் . என்ன தான் விலை வேறு மதிப்பு வேறு என்று கூறிக் கொண்டாலும் , மதிப்பு திரும்பவும் கட்டப்படும் என்றாலும் இந்த இடைப்பட்ட போர்க்களத்தை நாம் கடந்து சென்றே ஆகவேண்டும் . இந்த நெருப்பு ஆற்றில் நாம் நீந்தியே ஆகவேண்டும் . பஃபெட்டின் முதலீட்டு நிறுவனப்பங்கு இதுவரை நான்கு முறை தன் விலையில் ( மதிப்பில் அல்ல) பாதியை  இழந்திருக்கிறது . அரபிந்தோ பார்மா மற்றும் மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் போன்ற பன்மடங்காளர் பங்குகள் ஒரே நேர்கோட்டில் இந்த நிலையை அடையவில்லை . ஏறி இறங்கி ஏறி இறங்கித் தான் இந்த நிலையை எட்டிப் பிடித்திருக்கின்றன . அவ்வப்போது பங்கு விலைகள் குறைவதால் நீங்கள்  அடையும் மனவருத்தம் , பங்குகள் மூலமாக நீங்கள் அடையவிருக்கும் பணப்பெருக்கத்திற்கான உணர்வுரீதியான வரி என்று கொள்ளுங்கள் .



7. விளையாட்டே ஒரு வெற்றி .


இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நல்லது . வெல்லாவிட்டாலும் நல்லது . விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள் . விளையாட்டில் வென்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பது நமது இறுதியான இலக்காக இருந்தாலும் அதற்கும் மேலாக ஒன்று உள்ளது . விளையாட்டில் பங்கு பெறுவதே அது . அதுவே நமது வெற்றி . மேலும் எந்த விளையாட்டிலும் ஒருவரோ அல்லது ஓர் அணியோ மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறந்து விடாதீர்கள் .


பங்குச்சந்தையிலும் எல்லோராலும் பஃபெட் ஆக முடியாது . சந்தையில் நீங்கள் ஒரு சராசரி வெற்றியைப் பெற்றாலும் , நிதி விடுதலை பெற , அதுவே போதுமானது .


எந்த ஆட்டத்திலும் அதன் வெற்றியில் அல்லாது பயணத்தில் பரவசம் கொள்ளுங்கள் . மலையுச்சியை விட மலையேற்றத்தில் தான் சுவாரஸ்யமே .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்