மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
கேள்வி : நிறுவனம் ஒன்றின் பங்கு வெறும் 100 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . அதனை மல்டிபேக்கர் என்று எவ்விதம் கூறுகிறார்கள் ?
பதில் : Samvardhana Motherson International Ltd நிறுவனப் பங்கு 93 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . நிறுவனம் 93 ரூபாய் என்ற விலையில் ஒரு மல்டிபேக்கர் .
ஒரு நிறுவனப் பங்கு இரண்டு மடங்கு விலை கூடினாலே மல்டிபேக்கர் என்று அழைக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் Samvardhana Motherson International பங்கு பன்மடங்கு விலைப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது . பன்மடங்கு என்றால் எத்தனை மடங்கு ? வாருங்கள் பார்க்கலாம் .
Samvardhana Motherson International வாகன உதிரி பாகங்கள் (Auto ancillary) உற்பத்தி நிறுவனமாகும் . ஆரம்ப காலத்தில் அதன் பெயர் Motherson Sumi Systems என்பதாக இருந்தது . தொடக்கத்தில் அது rear view mirror மட்டும் தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது . இதற்காக நிறுவனத்தை நாடி வந்த வாடிக்கையாளர்கள் அதன் சேவையினால் கவரப்பட்டு மற்ற வாகன உதிரி பாகங்களையும் தயாரித்தால் என்ன என்பதாகக் கேட்டதும் பின்னர் அவர்களே இன்னின்ன சேவையில் இன்னின்ன நிறுவனங்கள் தலையாயது என்று ஆலோசனை கூறியது மட்டுமின்றி அவர்களில் சிலர் மூலமாகவே அத்தகைய நிறுவனங்களைக் கையகப்படுத்தும் வாய்ப்பும் காலப்போக்கில் நிறுவனத்திற்குக் கிடைக்கப்பெற்றது . இவ்வாறு முப்பதுக்கும் மேற்பட்ட வாகன உதிரி பாக நிறுவனங்களை Samvardhana Motherson International கையகப்படுத்தியிருக்கிறது . கையகப்படுத்துதல் மட்டுமல்ல , இந்த நிறுவனங்களைத் தன்னுடன் செம்புலப்பெயர் நீர் போலக் கலந்திருக்கிறது . அதுவே அதன் அகழியாகச் செயல்படுகிறது . மேலும் 41 நாடுகளில் 250 தொழிலகங்கள் நிறுவனத்திற்கு இருக்கின்றன . இத்தகைய உலகளாவிய வலைப்பின்னல் , நிறுவனம் வெவ்வேறு நாணயங்களில் ஈட்டும் வருமானத்திற்கு இயற்கையான இழப்புக்காப்பு (Hedging) என்ற வகையில் செயல்படுகிறது .
நிறுவனம் , நமது 6 அளவுருக்களான முதல் நீர்க்காமை , கடன் இல்லாமை , தரமான வளர்ச்சி , அகழி , நிறுவனர் பங்கு மற்றும் அறம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதாக இருக்கிறது .
நிறுவனம் ஒரு முறை இரண்டு முறை அல்ல , பத்து முறை இரண்டு பங்குகளுக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை வழங்கியிருக்கிறது . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கை ஐந்து ரூபாயாகவும் பின்னர் இந்த ஐந்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கை ஒரு ரூபாய் என்றும் பிரித்து வழங்கியிருக்கிறது .
1993 ஆம் ஆண்டு நிறுவனம் அதன் முதல் பங்கு வெளியீட்டை (IPO) 10 ரூபாய் முக மதிப்பிலும் 15 ரூபாய் உயர் மதிப்பிலும் (premium) வெளியிட்டது . நிறுவனத்தின் 100 பங்குகளை 2500 ரூபாய்க்கு வாங்கி நாளது தேதி வரை வைத்திருக்கும் நீண்ட கால முதலீட்டாளரிடம் நிறுவன இலவச வெளியீடு மற்றும் பங்குப் பிரிப்பின் காரணமாக தற்போது 57654 பங்குகள் இருக்கும் . பங்கு ஒன்றின் இன்றைய விலை 93 ரூபாய் . 57654 பங்குகளின் விலை ரூபாய் 5361822/- ஆக , IPO விலையான 2500 ரூபாயைக் கொண்டு கணக்கிட்டால் நிறுவனப் பங்கு 2144 மடங்கு கூடியிருக்கிறது .
கதை இதனுடன் முடியவில்லை .
நிறுவனம் 2022 ஆம் ஆண்டு அதன் Wiring Harness (வாகனங்களுக்கான நரம்பு மண்டலம்) பகுதியைத் தனி நிறுவனமாகப் பிரித்து அதனை Motherson Sumi Wiring India என்ற பெயரில் பங்குச்சந்தையில் பட்டியலிட்டது . பின்னர் இந்தப் புதிய நிறுவனம் அதன் 5 பங்குகளுக்கு 2 பங்கு என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை வழங்கியது . இதன் மூலமாக நமது IPO முதலீட்டாளர் Motherson Sumi Wiring India நிறுவனத்தின் 53810 பங்குகளைப் பெற்றிருப்பார் . அதன் ஒரு பங்கின் விலை 63 ரூபாய் . 53810 பங்குகளின் விலை 3390030 ரூபாய் . இதன் மூலமான முதலீட்டுப் பெருக்கம் 1356 மடங்கு .
இந்த இரண்டு பங்குகளின் விலையேற்றம் மூலமாக நிறுவனம் 3500 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது . இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் வழங்கிய பங்காதாயம் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை .
2023 ஆம் ஆண்டு பங்காதாயமாக Samvardhana Motherson International நிறுவனமும் Motherson Sumi Wiring India நிறுவனமும் பங்கு ஒன்றுக்கு தலா 65 காசு என்ற அளவில் பங்காதாயத்தை வழங்கியிருக்கின்றன . ஒரு பங்குக்கு வெறும் 65 காசு என்று இதனைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் . IPO முதலீட்டாளருக்கு இவ்விரு நிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கப்பெறும் 2023 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 72451 ரூபாய் . பங்காதாயம் மூலமான வருமானமே IPO விலையைக் கொண்டு கணக்கிடும் போது வருடத்திற்கு 29 மடங்கு என்ற அளவில் கிடைக்கிறது .
நிறுவனத்தின் IPO விலை 25 ரூபாய் என்று பார்த்தோம் . அதன் பட்டியல் விலை (listing price) 41 ரூபாய் . 41 ரூபாயில் பங்குகளை வாங்கியவர்களுக்கு 3500 மடங்கு முதலீட்டுப் பெருக்கம் கிடைக்கப் பெறாது . அது 2134 மடங்காகக் குறைந்து விடும் . 100 பங்குகளுக்கான வெறும் 1600 ரூபாய் வேறுபாடு 1366 மடங்கு விலைச் சுருக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் கவனிக்கவும் . பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் மற்றும் நீண்ட நெடிய காலம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான் .
பங்குச்சந்தையில் நாம் பங்குகளின் விலையாகப் பார்ப்பது விழுது விட்ட ஆலமரம் ஒன்றின் ஒரு இலையை மட்டுமே .
இந்தக் கண்ணோட்டத்தில் பங்குச்சந்தையைப் பாருங்கள் . அதன் விஸ்வரூப தரிசனத்தைக் காண்பீர்கள் .
Comments
Post a Comment