சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை

சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை .


புரட்சி நடைபெறுவதற்கு முந்தைய ரஷ்யாவில் சைக்கிள் போன்ற வாகனங்களை விரைவாக விற்பதற்கு மோசடியான சில வழிமுறைகளை விற்பனையாளர்கள் கையாண்டனர் . உதாரணமாக நாளிதழ்களில் பின்வருமாறு விளம்பரம் கொடுப்பார்கள் . 


ஒரு சைக்கிள் வெறும் 10 ரூபிள் (ரஷ்ய நாணயம்) மட்டுமே . 50 ரூபிள் மதிப்புள்ள சைக்கிள் 10 ரூபிளுக்கு . முந்துங்கள் . இச்சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே . இலவச விவரங்களுக்கு எங்களை அணுகவும் .


விவரம் என்னவென்றால் , நிறுவனம் நான்கு சீட்டுக்களை (coupon) உங்களுக்குக் கொடுக்கும் . அந்த சீட்டுக்களை நீங்கள் நான்கு நபர்களிடம் தலா பத்து ரூபிளுக்கு விற்க வேண்டும் . பின்னர் உங்களுக்கான பத்து ரூபிளையும் சேர்த்து மொத்தம் ஐம்பது ரூபிள்களை நிறுவனத்திடம் கொடுத்து சைக்கிளைப் பெற்றுக் கொள்ளலாம் . பத்து ரூபிளுக்கு உங்களுக்கு சைக்கிள் கிடைப்பதென்னவோ உண்மை தான் . ஆனால் ...


முதன்முதலில் இந்தத் திட்டத்தில் சேருபவருக்கு சீட்டுக்களை விற்பதில் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது . இந்தத் திட்டத்தில் ஆர்வமுடைய நான்கு பேரை மட்டும் அவர் இனங்கண்டால் போதுமானது . அந்த நால்வர் ஒவ்வொருவரும் நான்கு பேரைத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் . மூன்றாவது நிலையில் மொத்தம் 20 பேர் இந்தத் திட்டத்தில் இணைந்திருப்பார்கள் . நான்காவதில் 100 ... ஐந்தாவதில் 500 ...


அடுத்த ஐந்து நிலைகள் 2500 ... 12500 ... 62500 ... என்று மிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும் . இந்த நிலைகளில் சீட்டுக்களை விற்பது கொஞ்சம் கடினமாகும் .


அடுத்தடுத்த நிலைகள் exponential growth என்று சொல்லப்படும் மீமிகைப் பெருக்கத்தில் செல்லும் . எல்லோரும் சீட்டும் கையுமாக அலைந்து கொண்டிருப்பார்கள் . 


இத்தகைய திட்டங்களை கூம்புக் கோபுரத் திட்டங்கள் (pyramid schemes) என்று அழைப்பது முற்றிலும் பொருந்தும் . கீழ்க்கண்ட , படிநிலைகளின் கோபுரத்தைப் பார்க்கவும் .


                        1

                        4

                       20

                      100

                      500

                     2500

                    12500

                    62500

                   312500

                  1562500

                  7812500

                 39062500


பொருளாதாரத்தின் அடிப்படையான ஒரு கருத்தாக்கம் supply and demand அதாவது அளிப்பு மற்றும் தேவை . ஒரு பொருள் மதிப்பு மிக்கதாக மாற வேண்டுமென்றால் அதன் அளிப்பு குறைவாக இருக்க வேண்டும் . அதற்கான தேவை அதிகமாக இருக்க வேண்டும் . தக்காளி விலை இப்போது உச்சத்தை எட்டியிருக்கிறது . ஏனெனில் அளிப்பு குறைவாக இருக்கிறது . தேவை அதிகமாக இருக்கிறது . விளைவாக விலை கூடுகிறது . 


இந்த சைக்கிள் கதையில் இது தலைகீழாக மாறுகிறது . சைக்கிள் சீட்டுகளுக்கான அளிப்பு அதிகமாக இருக்கிறது . அதற்கான தேவை குறைவாக இருக்கிறது . 


இந்தத் திட்டத்தில் பலன் அடைபவர்கள் , இந்தத் திட்டத்தை நடத்துபவர்கள் மற்றும் இந்தக் கூர்நுனிக் கோபுரத்தின் உச்சாணியில் இருப்பவர்கள் மட்டுமே . இவர்கள் Top of the Pyramid Promoters சுருக்கமாக TOPP என்று அழைக்கப்படுவார்கள் .


இவ்வாறாக நிறுவனத்திற்கு சைக்கிளைக் கூவிக் கூவி விற்கும் துடிப்பான முகவர்கள் கிடைத்து விடுவார்கள் . மேலும் இந்தக் கூர்நுனிக் கோபுரத்தின் உச்சாணியில் இருப்பவர்களுக்கு வெறும் பத்து ரூபிளுக்குச் சைக்கிள் கிடைத்து விடும் . மற்றவர்கள் வெறும் சீட்டையும் அதனை யாரிடமாவது விற்கலாம் என்ற வெற்று நம்பிக்கையையும் மட்டுமே கொண்டிருப்பார்கள் . இந்த TOPP களுக்கு சைக்கிள் விற்றுக் கொடுத்தது மற்றும் வாங்கிக் கொடுத்தது இந்த வெற்று நம்பிக்கையாளர்கள் தான் . 


இத்தகைய திட்டங்களின் இழப்பு விகிதம் சூதாட்டத்தில் பணத்தை இழப்பதற்கான விகிதத்தை விட அதிகமாகும் .


இன்றைய ஏமாற்றுத் திட்டங்களின் முன்னோடியாக இது சரித்திரத்தில் இடம் பெறுகிறது .


குறிப்புதவிய நூல் : Mathematics can be fun by Yakov Perelman , Mir Publishers , Moscow .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14