மூழ்கு செலவு மாயை
மூழ்கு செலவு மாயை
Sunk cost fallacy
தள்ளுபடி போக 7000 ரூபாய்க்கு புதிய மிக்ஸி ஒன்றை மனைவி வாங்கியிருந்தார் . அந்த மாடல் மிக்ஸியை வாங்கியதற்கான முக்கியமான காரணம் அதன் சிறிய ஜாடி . அடிக்கடி குறைந்த அளவில் உணவுப் பொருட்களை அரைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை . அதன் பொருட்டு சிறிய அளவுகளில் அரைக்கும் மிக்ஸியை வாங்கியாகி விட்டது .
அந்த சிறிய ஜாடியைத் தலைகீழாகப் போட்டு அரைக்கும் வகையில் அந்த மிக்ஸி வடிவமைக்கப்பட்டிருந்தது . ஒவ்வொரு முறை அரைக்கும் போதும் மிக்ஸியின் அடிப்பகுதியில் பொருட்கள் ஒட்டிக் கொண்டு பாதி வீணாகி விடும் . அதைச் சுத்தம் செய்து பயன்படுத்துவது ஒரு கூடுதல் வேலையானது . பின்னர் விசாரித்த போது அந்த சிறிய ஜாடி உலர் பொருட்களை அரைப்பதற்கானது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது . மற்றபடி அந்த மிக்ஸி 7000 ரூபாய்க்கு மதிப்பு முதலீடு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் . எங்கள் அன்றாடத் தேவைக்கு அது பொருந்தி வரவில்லை .
மிக்ஸியில் அரைத்தல் என்பது தின அளவில் செய்வதான ஒரு வேலையாகும் . இதனை இவ்வாறு பயன்படுத்த பயன்படுத்த தினமும் மன அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது .
வேறு மிக்ஸியை வாங்குவதற்கு பணத்தடை இல்லாவிட்டாலும் மனத்தடையாக இருந்தது . இந்த மிக்ஸியில் 7000 ரூபாய் முதலீடு செய்து விட்டோம் . மிக்ஸிக்காக மீண்டும் எப்படி முதலீடு செய்வது ?
கொஞ்ச நாட்கள் இப்படியே ஓடிக் கொண்டிருந்தது .
மிக்ஸிக்காக செலவழிக்கப்பட்ட இந்த 7000 ரூபாய் மூழ்கிய செலவு என்று அழைக்கப்படுகிறது . இந்த மூழ்கிய செலவு திரும்பி வராது .
இப்போது இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன . ஒன்று , இந்த மிக்ஸியுடன் சேர்ந்து நாமும் தினமும் அரைபட வேண்டும் . அல்லது இந்த மூழ்கு சாய்வைப் புறக்கணித்து நமது தேவைக்குப் பொருத்தமான மிக்ஸி ஒன்றை வாங்க வேண்டும் .
புதிய மிக்ஸி ஒன்றை வாங்காமல் பழைய மிக்ஸியுடன் சேர்ந்து தினமும் அரைபடுவது மூழ்கு செலவு மாயை என்று அழைக்கப்படுகிறது .
பிடிக்காத ஒரு திரைப்படத்தைக் கடைசி வரை பார்ப்பது முதல் பிடிக்காத ஒரு மண வாழ்க்கையைக் கடைசி வரையில் வாழ்வது வரை மூழ்கு செலவு மாயையின் பாதிப்பு பல்வேறு விதங்களில் வெளிப்படும் .
பங்குச்சந்தைக்கு வருவோம் . தரமான பங்கு என்று பார்த்து வாங்கியது தரமற்றதாகி விட்டது . தற்காலிக மதிப்பிழப்பு என்றில்லாமல் நிரந்தரமாக அது தனது மதிப்பை இழந்து விட்டது . ஒரு கவிஞரின் வார்த்தையில் சொல்வதானால் மொட்டு வைக்கும் என்று நட்டு வைத்த ரோஜா பட்டுவிட்டது . எனில் அதனிலிருந்து விட்டு விடுதலையாகி விடுதல் தான் சரியான ஒரு முடிவாக இருக்க முடியும் . மாறாக average down என்ற வாக்கில் அத்தகைய பங்குகளைத் தொடர்ந்து வாங்குவது அல்லது காலத்தின் கோலத்தில் ரூபாய் பங்காக உருமாற்றம் பெற்ற அதனைத் தொடர்ந்து வைத்திருப்பது மூழ்கு செலவு மாயையின் பாற்பட்டது . இந்த மாதிரி பங்குகளை விற்று அதனை வேறு மதிப்பு வாய்ப்புகளில் முதலீடு செய்தால் இழந்த பணத்தை மீண்டும் பெற ஏதுவாகும் .
மிக்ஸியின் கதை என்னவாயிற்று என்றும் பார்த்து விடுவோம் . மனைவி இப்போது 3000 ரூபாய்க்கு புதிய மிக்ஸி ஒன்றை வாங்கி விட்டார் . அதன் சிறிய ஜாடி அவர் விரும்பிய வகையில் இருக்கிறது . மிக்ஸியின் கணக்கில் ரூபாய் 3000 ஐ கூட்டி 10000 என்பதாக எழுதி விட்டோம் .
சில சமயங்களில் இழப்பது தான் பெரிய ஆதாயமாய் இருக்கும் .
Comments
Post a Comment