வாயை மூடி பேசவும்

வாயை மூடி பேசவும்

எப்படிப்பட்ட வார்த்தைப் பின்னல்களும் தோற்றுவிக்க முடியாத உணர்ச்சியை மிகச் சரியாகக் கையாளப்பட்ட சிறிய மௌனம் உணர்த்தி விடும் - மார்க் ட்வெய்ன்

மனிதன் தோன்றிய புதிதில் தன் உணர்ச்சிகளை ஸ்பரிசத்தினால் தான் வெளியிட்டிருப்பான் என்று தோன்றுகிறது . இன்னமும் கூடத்தான் . மனிதன் பேச்சிலே இவ்வளவு வல்லாளன் ஆன பிறகும் கூடத்தான் - காண்டேகர்

சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை .

            *                   *                    ‌*
அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒரு வழிமுறையாக Max Gunther இந்த Closed Mouth என்ற கருத்தாக்கத்தைச் சொல்கிறார் . அமெரிக்க ஜனாதிபதி Calvin Coolidge ன் கதையைக் கொண்டு அதனைச் சுருக்கமாகப் பார்க்கலாம் .

Coolidge அவசியத்திற்குப் பேசுவாரேயன்றி அனாவசியமாக ஒரு வார்த்தை பேச மாட்டார் . அவரைப் பற்றிய ஒரு பிரபலமான நகைச்சுவை : வாஷிங்டனைச் சேர்ந்த தொகுப்பாளினி ஒருவர் Coolidge இடம் பின்வருமாறு கேட்டுக் கொண்டார் . என் நண்பர் என்னிடம் நீங்கள் இரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டீர்கள் என்று பந்தயம் கட்டியிருக்கிறார் . தயவுசெய்து என்னிடம் கொஞ்சம் பேசுங்கள் . Coolidge ன் பதில் : உனக்குத் தோல்வி .

Coolidge சாதாரண ஒரு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் . 25 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் . நகரத் தலைவர் , மாநில அதிகார சபை அங்கத்தினர் , ஆளுநர் , துணை ஜனாதிபதி , ஜனாதிபதி என்ற அவரது அதிகாரத்திற்கான பயணம் ரொம்பவும் இலகுவானதாகவும் , முன் முயற்சி ஏதுமில்லாமலும் கிடைக்கப் பெற்றது .

முன்னரே சொன்ன மாதிரி Coolidge அனாவசியமாக ஒரு வார்த்தை பேச மாட்டார் . அது பல வழிகளில் அவருக்கு உதவி செய்வதாக அமைந்தது . 1919 ல் அவர் ஆளுநராக இருந்த மாகாணத்தில் காவல் துறை , போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது . பொதுமக்கள் பாதுகாப்புக்கு எதிராகப் போராட யாருக்கும் எப்போதும் எவ்விடத்திலும் உரிமையில்லை என்று Coolidge முழங்கினார் . தேவையின்றி அவர் பேசாததால் எந்தக் குழு அல்லது கருத்து சார்ந்தும் அவருடைய நிலைப்பாடு இல்லை . அவருடைய எண்ணத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்தத் தடை எதுவுமில்லை .

1920 ல் அவர் ஜனாதிபதி ஆக வேண்டியது . Henry Cabot Lodge என்ற (அதிகாரமான) அதிகார சபை அங்கத்தினர் அதற்குத் தடையாக இருந்தார் . Coolidge , மனதிற்குள் அவரைக் கண்டபடி திட்டியிருக்கலாம் . வெளியே ஒரு வார்த்தை ... ம்ஹூம் ...

1924 தேர்தலில் எந்த அதிகார சபை அங்கத்தினர் முந்தைய தேர்தலில் அவரைத் தடுத்தாரோ அவரே Coolidge க்கு ஆதரவு தெரிவிக்கிறார் .

1925 முதல் 1929 வரையிலான காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமைந்தது . Coolidge prosperity என்றே மக்கள் அதனை அழைத்தனர் . அமெரிக்காவில் தொழிற்சாலை சம்பளம் ஐரோப்பாவைப் போல் இரண்டு மடங்கு , ரஷ்யாவைப் போல் ஆறு மடங்கு . பங்குச்சந்தை இந்தக் காலகட்டத்தில் விண்ணை முட்டிச் சென்றது . ஜெனரல் மோட்டார்ஸ் பங்குகள் 1923 ஆம் ஆண்டின் குறை விலையிலிருந்து 1929 ஆம் ஆண்டின் உச்சம் வரையிலான கணக்கில் 21 மடங்காளர் .

1928 ஆம் ஆண்டில் , அடுத்த தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது . அதற்கு Coolidge ன் பதில் : இல்லை .

1929 ல் Herbert Hoover அமெரிக்க ஜனாதிபதி ஆகிறார் . பங்குச்சந்தை தலைகுப்புற விழுகிறது . பிரசித்தி பெற்ற அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகிறது .

               *              *                *

Coolidge ன் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் : சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமான் . சொன்ன சொல்லுக்கு சொல் எஜமான் . தேவையில்லாமல் பேசக் கூடாது . தேவைப்படும் போது பேசாமலிருக்கவும் கூடாது . யாரையும் நேரடியாகப் பகைத்துக் கொள்ளக்கூடாது . வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எதற்கெடுத்தாலும் அரிவாளைத் தூக்கிக் கொண்டிருக்கக் கூடாது . எல்லாவற்றிற்கும் தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது . அடுத்தவர் பேசுவதை இரண்டு மடங்கு கேளுங்கள் . ஒரு மடங்கு மட்டும் நீங்கள் பேசுங்கள் . அல்லது Coolidge மாதிரி பெரும்பாலும் பேசாமல் தேவைக்கு மட்டும் பேசுங்கள் .

செவ்விந்தியர்கள் குறித்து படித்த செய்தி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது . செவ்விந்தியர்கள் வேட்டையாடும் போது அம்பு குறி தவறி இலக்கை எட்டாமல் தவறி விட்டதென்றால் அவர்கள் அந்தத் தவறிய அம்பை எப்பாடு பட்டாவது எடுத்து வரவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி . அவ்வாறு எடுத்து வராதவர்களை செவ்விந்தியர்கள் அவர்கள் குழுவில் மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டார்கள் . அந்தத் தவறிய அம்பு திரும்பி வந்து அவர்களைப் பழி வாங்கும் என்பதான ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருந்தது . அதே மாதிரி நாம் பேசும் வார்த்தைகளுக்கும் நம்மைக் கட்டிப் போடும் ஒரு சக்தி இருக்கிறது .

சுந்தர ராமசாமி அவர்களின் சிறுகதைகளில் ' ரத்னாபாயின் ஆங்கிலம் ' என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை . ரத்னா பாய் தன் சிநேகிதிக்குக் கடிதம் ஒன்றை வரைகையில் , சமீபத்தில் அவள் படித்த புத்தகத்தின் பாதிப்பில் பின்வருமாறு எழுதுகிறாள் : ராதையின் அழகையும் கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனைக் கலைஞன் என்று நான் கூசாமல் அழைப்பேன் , வண்ணக் கலவைகளில் இத்தனை கனவுகளைச் சிதறத் தெரிந்தவன் கலைஞன் தான் . ரத்னா பாய் அவள் வாங்கிய புடவை குறித்து இவ்வாறு எழுதுகிறாள் . பிரச்னை என்னவென்றால் அவள் அவ்வாறு புடவை எதனையும் வாங்கவில்லை . அவள் சிநேகிதி அவளுக்கும் அவள் சிநேகிதிகள் இருவருக்குமாக அதே மாதிரி மொத்தம் மூன்று புடவைகள் வாங்கி வைக்கச் சொல்கிறாள் . வாழ்க்கையில் பிரச்னைகள் எப்படி வருகிறது என்று பாருங்கள் . அவள் கையில் அப்போது மூன்று பட்டுச் சேலைகள் வாங்குவதற்கான பணமும் இல்லை . முன் பணம் செலுத்தி தவணையில் சேலை வாங்கக் கடைக்குச் செல்கிறாள் . கடைப்பையன்கள் முன்னால் வந்து நின்றதும் ' அன்று நான் எடுத்துக்கொண்டு போன மாதிரி சேலை வேண்டும் ' என்கிறாள் .  அவள் மனம் குறுகுறுக்கிறது . ' கடவுளே ! எதற்காக இப்படி நான் சொல்கிறேன் ? என் புத்தி பேதலித்து விட்டதா ? ' கடைப் பையன்கள் விழிக்கிறார்கள் . ஒவ்வொருவராய் வந்து அவளைப் பார்த்து விட்டுப் போகிறார்கள் . ' யார்ரா அன்னைக்குக் கொடுத்தது ? ' என்று முதலாளி அதட்டுகிறார் . நான் எடுக்காத சேலையை இவர்கள் எப்படிக் காட்ட முடியும் என்று ரத்னா பாய் தெளிந்து மூன்று சேலைகளை எடுத்துக் கொண்டு செல்வதாகக் கதை முடிகிறது . எழுதிய வார்த்தைகள் எவ்விதம் நம்மைச் சிறைப்படுத்தும் என்பதற்கு இந்தக்கதை ஒரு உதாரணம் .

முதலீடுகளிலும் இறுக்கமான கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் நெகிழ்வாக இருங்கள் . தங்கத்தில் நான் ஒருக்காலும் முதலீடு செய்ய மாட்டேன் என்று எங்கும் எப்போதும் முழங்கி வைக்காதீர்கள் . Investing is a fluid process with new ideas adding to the mix all the time என்ற Addison Wiggin ன் வார்த்தைகள் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . முதலீடு என்பது நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய புதிய எண்ணக் கருக்கள் அதனுடன் நித்தமும் சேர்வதான ஒரு செயல்முறையாகும் .

இந்திரனின் கவிதை ஒன்றுடன் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம் .

புதர் புதராய் வார்த்தைகள்

வார்த்தைகள் மீதே எனக்கு
நம்பிக்கை அற்றுப் போச்சு .
நான் சொல்ல மற்றவன்
வேறொன்றாய்ப் புரிந்து கொள்ள
விளக்கம் மறு விளக்கம்
விளக்கத்திற்கு விளக்கமென
புதராய் மண்டி
புற்றாய் வளரும்
வார்த்தைகள் .

தூங்குகிறவன் உடம்பில்
வெளிச்சத்தால் தட்டி எழுப்புவது போல
வீணாகிப் போச்சு எல்லாம் .
'என் உயிர் நண்பனே '
என்பதன் பொருள்
' நீ அதிகம் தேவைப்படுகிறாய் '
என்பதாய் இருப்பின்
வார்த்தைகள் ஏன் இன்னும்
வழக்கொழிந்து போகவில்லை ?

பார்வையை மேலும் துலக்கமாகக்
காட்டுமென்று
எடுத்தணிந்த கண்ணாடி
முக அடையாளத்தையே மறைக்கும்
முக மூடியாய்ப் போக ...
வார்த்தைகள் மீதே எனக்கு
நம்பிக்கை அற்றுப் போச்சு .

கண்ணாடித் தொட்டிக்குள்
மீன்கள்
தண்ணீரில் துப்பும்
காற்றுக்குமிழிகளைப் போல
வார்த்தைகள் ...

பஸ்ஸில் , பள்ளியில்
பார்லிமென்ட்டில்
படுக்கை அறையிலும்
வெறுமனே உடைந்து
வீணாய்க் கரையும் .

வரவர வார்த்தைகள் மீதே எனக்கு ...

குறிப்புதவிய நூல்கள் :
1. How to get lucky ? - Max Gunther
2. சுந்தர ராமசாமி சிறுகதைகள் - முழுத் தொகுப்பு
3. இந்திரன் கவிதைகள்

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்