விருப்பமில்லாத் திருப்பங்கள்

விருப்பமில்லாத் திருப்பங்கள்

நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 100 ரூபாய் என்று கொள்ளலாம் . குறுகிய காலத்தில் அந்தப் பங்கின் விலை 110 ரூபாயை எட்டும் என்பதாக நீங்கள் கணிக்கிறீர்கள் . உங்கள் கையில் இப்போது 1000 ரூபாய் இருக்கிறது . பங்குகளாக வாங்கினால் உங்களால் 1000 ரூபாய்க்கு 10 பங்குகளை மட்டுமே வாங்க முடியும் . அதனையே call option முறையில் அழைப்பு நிலைப்பாடு (110 call) ஒன்றை எடுத்துக் கொண்டால் ஒரு அழைப்பு விருப்பம் 2 ரூபாய் என்ற கணக்கில் 1000 ரூபாய்க்கு 5 விருப்ப ஒப்பந்தங்களை (ஒவ்வொரு ஒப்பந்தமும் 100 அழைப்பு விருப்பங்களை உள்ளடக்கியது) வாங்கிக் கொள்ளலாம் . பங்கின் விலை நீங்கள் எதிர்பார்த்த மாதிரி 10 ரூபாய் உயர்ந்தால் ஒரு அழைப்புக்கு 110 - (100 + 2) = 8  என்ற கணக்கில் 500 அழைப்புகளுக்கு (5 விருப்ப ஒப்பந்தங்களுக்கு) 4000 ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும் . நீங்கள் 1000 ரூபாய்க்கு வாங்கிய விருப்பத் தேர்வு செலவைக் கழித்தால் உங்களுக்கான இலாபம் 3000 ரூபாய் . இதில் உராய்வுச் செலவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை .

பங்குகளாக வாங்கினால் உங்களுக்கான இலாபம் வெறும் 10 சதவீதம் மட்டுமே . அதே சமயம் பங்குகள் உயரும் என்பதாக விருப்பத் தேர்வில் நிலைப்பாடு எடுத்துக் கொண்டால் உங்களுக்கான இலாபம் 300 சதவீதம் . அதாவது 30 மடங்கு கூடுதல் இலாபம் கிடைக்கப்பெறும் .

பங்குகள் குறையும் என்பதான நிலைப்பாடு put option என்று அழைக்கப்படும் . தமிழில் சொல்வதானால் தவிர்ப்பு விருப்பம் . உங்கள் கணக்கு சரியாக இருந்து பங்கின் விலை பத்து சதவீதம் குறைந்தாலும் உங்களுக்கு 300 சதவீத இலாபம் கிடைக்கப்பெறும் .

எதற்காகப் பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து அவற்றை மதிப்பு முதலீடாக வாங்கி அதனைப் பத்திரப்படுத்தி அவை அவ்வப்போது தரும் ஒரு சதவீத பங்கு ஈட்டு விகிதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இடையிடையில் அவை நீங்கள் வாங்கிய விலைக்கும் குறைவாக வர்த்தகமாகும் போது மனச்சோர்வு அடைந்து ... எதற்கு ?

மாறாக அழைப்பு விருப்பங்களிலும் , தவிர்ப்பு விருப்பங்களிலும் பங்கு பெற்று 300 சதவீத வருமானத்தைப் பெற்றால் என்ன ?

மூன்று மாதத்திற்கு 300 சதவீதம் என்றால் ஆண்டாண்டு வருமானம் எவ்வளவு ? இப்படியே போனால் சில வருடங்களில் வாரன் பஃபெட் ஆகி விடலாம் . உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று விடலாம் . ஆனால் இந்த விருப்பத் தேர்வுகளில் நிலைப்பாடு மேற்கொண்டு எவரும் உலகப் பணக்காரர் ஆகவில்லை . பங்குச்சந்தை முதலீடுகள் வாயிலாக உலகப் பணக்காரராகிய ஒரேயொருவர் வாரன் பஃபெட்டின் நீண்ட கால சராசரி கூட்டு வருமானம் 20 சதவீதம் மட்டுமே என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .

முதலில் இந்த விருப்பங்களுக்கான உராய்வுச் செலவுகளைப் பார்க்கலாம் . எப்படிப் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் உராய்வுச் செலவுகள் உங்களை உரசிப் பார்க்கிறதோ அதே மாதிரி இந்த விருப்பத் தேர்வுகளுக்கும் உராய்வுச் செலவுகள் உண்டு . தரகுச் செலவுகளில் தொடங்கி பங்குப் பரிவர்த்தனை வரி (STT) , சரக்கு மற்றும் சேவை வரி (GST) , முத்திரைத் தீர்வை (stamp duty) மற்றும் செபி செலவுகள் என்று கொஞ்சம் அதிகமாகவே உண்டு . மேலும் இந்த விருப்பங்களின் மூலமான வருமானம் வர்த்தக வருமானம் என்ற கணக்கில் வரும் . அதற்கேற்ற படி வருமான வரி உண்டு .

பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கான பங்காதாயம் உள்ளிட்ட பணப்பலன்கள் எதுவும் இந்த விருப்பத் தேர்வுகளுக்குக் கிடையாது . நிறுவனம் இலவசப் பங்குகளை வழங்கினால் அவை உங்களுக்குக் கிடையாது . வெறுமனே பங்கின் விலை கூடும் அல்லது குறையும் என்று பந்தயம் கட்டி நீங்கள் பணம் ஈட்ட முனைகிறீர்கள் . அவ்வளவே !

மேலும் இவைகளின் இன்னொரு சிக்கல் என்னவென்றால் இந்த விருப்பங்கள் நீங்கள் விரும்பிய வண்ணம் கூடவோ அல்லது குறையவோ செய்ய வேண்டும் . அதையும் மூன்று மாதங்கள் என்ற குறுகிய கால அளவில் செய்வதாக அவை இருக்க வேண்டும் . நீண்ட கால அளவில் தரமான நிறுவனப் பங்குகளின் விலை கூடிச் செல்வது என்பது வேறு . குறுகிய காலத்தில் இது நடப்பதற்கான வாய்ப்பு என்பது வேறு . அதே மாதிரி குறை விருப்பமும் குறை காலத்தில் கை கூடுவதற்கான வாய்ப்பும் அரிது . நீங்கள் எதிர்பார்த்த பங்கின் விலை எதிர்பார்த்த காலத்தில் எட்டப்படவில்லை என்றால் நீங்கள் அழைப்பு மற்றும் தவிர்ப்பு விருப்பத்தின் பேரில் கட்டிய பணம் காற்றில் கரைந்து விடும் .

முன்னர் குறிப்பிட்ட உராய்வுச் செலவுகளைத் தவிர இன்னொரு முக்கியமான செலவும் உள்ளது . அது கண்ணிற்குப் புலப்படாத ஒன்று . அது emotional tax . உணர்வு ரீதியான ஒரு வரி . சூழ்நிலை ஒன்றைக் கற்பனை செய்து பாருங்கள் . பங்கு விலைகள் கூடும் (அல்லது குறையும்) என்பதாக இலட்சங்களில் நிலைப்பாடு ஒன்றை எடுத்திருக்கிறீர்கள் . சந்தை ஒரு நாள் கூடுவதும் மறு நாள் குறைவதுமாகப் போக்குக் காட்டிய வண்ணம் இருக்கிறது . சந்தை கூடுமா அல்லது குறையுமா ? உங்கள் நிலைப்பாடு வெல்லுமா அல்லது கொல்லுமா ?

செல்வம் சேர்ப்பது முக்கியம் . மன நிம்மதியுடன் செல்வம் சேர்ப்பது அதனினும் முக்கியம் .

பங்குகளை நீங்கள் வாங்கும் போது அதனை உங்களுக்கு விற்பவர் ஒருவர் இருப்பார் . வாங்குபவரும் விற்பவரும் இருந்தால் தான் ஒரு வர்த்தகம் நிறைவு பெறும் . இந்த விருப்பங்களை நீங்கள் வாங்கும் போதும் அதனை உங்களுக்கு விற்பவர் ஒருவர் இருப்பார் . அவரிடமிருந்து தான் இந்த விருப்பங்களை நீங்கள் வாங்க முடியும் . அவர் option writer என்று அழைக்கப்படுவார் . நீங்கள் Option seller . Option seller ன் இலாபம் Option writer ன் நஷ்டத்தில் முடியும் . அதே மாதிரி Option seller ன் நஷ்டம் Option writer ன் இலாபத்தில் முடியும் . அதனால் தான் Futures and Options சுழி விளைவு வினை (zero sum game) என்பதாக அழைக்கப்படுகிறது .

பங்குகளில் இது win - win என்றவாக்கில் இருக்கும் . தரமான நிறுவனப் பங்குகளை இனங்கண்டு நீண்ட கால அளவில் முதலீடு செய்பவர்கள் அனைவருமே அதனால் வளமை அடைகின்றனர் .

இந்த விருப்பங்கள் பங்குத் தொகுப்புக்கு இழப்புக்காப்பு (Hedging) என்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டன . உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பு இலட்சங்களில் இருக்கிறது என்று கொள்ளுங்கள் . சந்தை ஒரு உச்சத்தில் இருக்கிறது . குறுகிய காலத்தில் சந்தை குறைவதற்கான வாய்ப்பு அதிகம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் பங்குத் தொகுப்பின் இழப்பைக் காக்கும் பொருட்டு put option எடுத்துக் கொள்ளலாம் . இந்த தவிர்ப்பு விருப்பத்தை உங்கள் பங்குத் தொகுப்பில் இருக்கும் தனிப்பட்ட பங்குகளுக்கு எடுக்காமல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முதலான சந்தைக் குறியீடுகளுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் . பங்குத் தொகுப்பின் இழப்புக் காப்பிற்குக் குறியீடுகளில் நிலைப்பாட்டை எடுப்பது தான் சரியான ஒன்றாக இருக்க முடியும் . அதே மாதிரி சந்தை கூடும் என்று நீங்கள் நினைத்தால் call option எடுத்துக் கொள்ளலாம் .

இவ்வாறு இந்த விருப்பங்கள் இலாபம் ஈட்டுவதற்கான கருவிகள் அல்ல . தவிர்ப்பு விருப்பம் (put option) எடுத்தவர் அதன் மூலமான இலாபத்தைக் கணக்கில் கொள்ள மாட்டார் . சந்தை உச்சத்திலிருந்து சரியும் போது அந்த சரிவைச் சமன்படுத்துவதில் தான் அவர் கவனம் கொண்டிருப்பார் . மீமிகைக் கரடிச் சந்தையில் உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் போது அதனைச் சமன் செய்யும் விதமாக அழைப்பு விருப்பத்தில் (call option)  நிலைப்பாட்டை மேற்கொள்பவரும் இலாபத்தைக் கணக்கில் கொள்ளாமல் அவர் பங்குத் தொகுப்பின் இழப்பை ஈடு செய்வதில் தான் கவனம் கொண்டிருப்பார் . மேலும் அதிவேகமாக ஏறிச் செல்லவிருக்கும் சந்தையின் உந்து விசையை (momentum) தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவார் .

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்த விருப்பத் தேர்வுகள் உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பைக் காக்கும் காப்பீடுகள் . எப்படிக் காப்பீடுகளுக்கு முனைமத்தொகை (premium) கட்டுவோமோ அதே மாதிரி இந்த விருப்பங்களுக்கும் முனைமத்தொகை உண்டு . முன்பு ஒரு விருப்பத்திற்கு இரண்டு ரூபாய் என்று பார்த்தோம் அல்லவா ? அது தான் முனைமத்தொகை . இது போக உராய்வுச் செலவுகள் ...

ஒரு பங்கின் விலை என்பது வேறு . அதே பங்கின் மதிப்பு என்பது வேறு . விலையும் மதிப்பும் எப்போதும் ஒரே நேர் கோட்டில் இணையாது . எப்போதாவது அபூர்வமாக இணையும் . மற்றபடி ஒரு நேரம் விலை கூடுதலாக இருக்கும் . அது காளைச்சந்தை . ஒரு நேரம் மதிப்பு கூடுதலாக இருக்கும் . அது கரடிச்சந்தை . காளைச் சந்தையிலும் சில பங்குகள் மதிப்பு நிலையில் வர்த்தமாகிக் கொண்டிருக்கும் . அதே மாதிரி கரடிச் சந்தையிலும் சில பங்குகள் அதிக விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் . சந்தை அவ்வப்போது தரும் இத்தகைய வாய்ப்புகளை இனங்கண்டு சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்பவர் தான் ஒரு தேர்ந்த முதலீட்டாளர் ஆகிறார் . இவ்வாறு விலை மற்றும் மதிப்பு இவைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால் உங்களுக்கு விருப்பத் தேர்வுகளே தேவைப்படாது . விலை குறையும் போது அதாவது மதிப்பை நோக்கி அது நகரும் போது நீங்கள் பதட்டம் கொள்ள மாட்டீர்கள் . மேலும் நீங்கள் ஏற்கனவே வாங்கிய பங்குகளின் விலை குறைந்திருப்பதைப் புறக்கணித்து அந்த மதிப்பில் முதலீடு செய்வீர்கள் . விருப்பத் தேர்வுகளில் நான் ஒருபோதும் விருப்பம் கொண்டதில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன் .

ஆனால் நடைமுறையில் இந்த இழப்புக் காப்புக் கருவிகள் ஊக வணிகக் கருவிகளாகி விட்டன . இலாப நோக்கம் கருதி பங்குத்தொகுப்பே இல்லாமல் option களில் நிலைப்பாடு எடுப்பது , அதுவும் , சந்தைக் குறியீடுகளில் அல்லாமல் தனிப்பட்ட பங்குகளில் நிலைப்பாட்டை மேற்கொள்வது ஊக வணிகத்தின் உச்சமாகும் . SEBI ன் சமீபத்திய ஆய்வின் படி 89 சதவீத F & O ஊக வணிகர்கள் நஷ்டமடைகிறார்கள் . வேறு மாதிரி சொல்வதானால் பத்து வணிகர்களில் ஒன்பது பேருக்கு நஷ்டம் . மீதமுள்ள ஒரு வணிகரும் தொடர்ச்சியாக இலாபம் ஈட்டுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும் .

பங்குகளில் முதலீடு செய்வதில் அடிப்படையாக ஒரு ஊகத்தன்மை உள்ளது . நிறுவனங்களின் இலாப நஷ்டக் கணக்கு (Profit and Loss Account) இருப்பு நிலைக் கணக்கு (Balance Sheet) போன்றவை பொது வெளியில் இருந்தாலும் அந்தக் கருப்புப் பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது என்று நிறுவனர்கள் உட்பட யாருக்கும் தெரியாது . பாரசீக வளைகுடாவில் பறக்கும் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு , நிறுவனம் ஒன்றில் புயலை வரவழைக்கலாம் .

பங்குகளே F & O என்று சொல்லப்படும் பெறுதிகளுக்கு ஒப்பானவை என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் . ஆனால் அது தான் உண்மை . ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் முகேஷ் அம்பானிக்கு மட்டுமே பங்குகள் . நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் அவர் முதல் நிலையில் இருக்கிறார் . அவர் தான் நிறுவனம் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் . ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் passive owner என்ற வகையில் பங்குதாரர்களுக்குப் பெறுதிகள் (Derivatives) மட்டுமே . பெறுதிகள் என்பதற்கு அதனளவில் மதிப்பு எதுவும் கிடையாது . அவை தம் மதிப்பை மற்ற ஒன்றிலிருந்து பெறுவதால் அவை பெறுதிகள் என்று அழைக்கப்படுகின்றன . இது  இரண்டாம் நிலை . Futures and Options என்ற வகையில் அது மூன்றாம் நிலைக்குச் சென்று விடுகிறது . முன்பே குறிப்பிட்டது மாதிரி அவர்களுக்கு நிறுவனம் மூலமாக எந்த ஆதாயங்களும் கிடைக்காது .

இந்த ஊக வணிகங்களில் இந்தியப் பங்குச்சந்தை முதலிடத்தில் உள்ளது . ஆனால் அதன் பொருட்டு நாம் சிறப்பாக உணர்வதற்கு ஏதுமில்லை .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்