இலவசம் இலவசமா ?

இலவசம் இலவசமா ?

பங்குச்சந்தையில் இலவசம் இலவசம் அல்ல . ஆனால் இலவசம் இலவசம் .

குறுகிய கால அளவில் இலவசம் இலவசம் அல்ல . நீண்ட கால அளவில் இலவசம் இலவசம் .

நிறுவனங்கள் அவ்வப்போது  1:1 , 1:2 , 2:1 என்ற பல்வேறு விகிதங்களில் இலவசப் பங்குகளை ( Bonus Shares ) அளிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் . இந்தப் பங்குகள் உண்மையிலேயே இலவசம் தானா ? அவ்வாறு இல்லையென்றால் அடிப்படையில் இவை என்ன ?

முதலில் இந்த இலவச விகிதங்களைப் பார்க்கலாம் . 1:1 என்றால் ஏற்கெனவே உள்ள ஒரு பழைய பங்குக்கு ஒரு புதிய பங்கு என்று பொருள் . 1:2 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய இரண்டு பங்குகளுக்கு ஒரு புதிய பங்கு . 2:1 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய ஒரு பங்குக்கு இரண்டு புதிய பங்குகள் . இந்த விகிதத்தில் முதலில் குறிப்பிடப்படும் எண் நிறுவனம் வழங்கவிருக்கும் புதிய பங்குகள் . இரண்டாவதாக குறிப்பிடப்படும் எண் ஏற்கெனவே உள்ள பங்குகள் .

நிறுவனம் ஒன்றின் பங்கு முதல் (Equity capital) 10 கோடி என்று கொள்ளலாம் . அதன் இருப்பு மற்றும் உபரி ( Reserves & Surplus) 500 கோடி . நிறுவனம் அதன் பங்கு முதல் மாதிரி 50 மடங்கு பணத்தை உபரியாக வைத்திருக்கிறது . நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை வழங்குகிறது . இப்போது அதன் பங்கு முதல் 20 கோடி . உபரி 490 கோடி . இப்போது உபரிப் பணம் 24.5 மடங்கு என்பதாகக் குறைந்து விடும் . இதை வேறு மாதிரி சொல்வதென்றால் இந்த இலவசப் பங்களிப்பின் பின்னர் பங்கின் விலை பாதியாகி விடும் . ஆக , இலவசப் பங்களிப்பு என்பது அதன் பங்கு முதல் மற்றும் உபரி இவற்றுக்கு இடையிலான வெறும் புத்தக பதிவு (Book entry) மட்டுமே . இலவசப் பங்களிப்பிற்கு முன்னதான 100 பங்குகளின் மதிப்பும் 1:1 இலவசப் பங்களிப்பிற்குப் பின்னதான 200 பங்குகளின் மதிப்பும் ஒன்று மட்டுமே . ஆக இலவசம் என்பது இலவசம் அல்ல . ஆனால் நீண்ட கால அளவில் இலவசம் என்பது இலவசம் . அதைப்பற்றி அப்புறம் .

நிறுவனங்கள் அவ்வப்போது வழங்கும் பங்காதாயங்கள் குறித்துப் பார்க்கலாம் . இந்தப் பங்காதாயங்கள் இலவசம் என்பதான ஒரு கருத்து நிலவுகிறது . உண்மையிலேயே இவை இலவசம் தானா ?

நிறுவனம் ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் பங்காதாயத்தை அளிப்பதாகக் கொள்ளலாம் . இந்தப் பங்காதாய அளிப்பிற்குப் பின்னர் பங்குகளின் விலை ஒரு ரூபாய் குறைந்து விடும் . அன்றைய தேதியில் அந்தப் பங்குகளுக்கான தேவைப்பாடு அதிகரித்தாலோ அல்லது காளைச் சந்தை என்றாலோ பங்குகளின் விலை கூடுவது வேறு . நிறுவனங்கள் சிறப்புப் பங்காதாயங்களை ஒரு பங்குக்கு 100 ரூபாய் என்ற உயர் அளவீட்டில் வழங்கும் போது இது துலாம்பரமாகத் தெரியும் . பங்கின் விலை பங்காதாய அளிப்பின் பின்னர் கட்டாயம் 100 ரூபாய் குறைந்து விடும் . ஆக , பங்காதாயம் என்பதும் இலவசம் அல்ல . அது நிறுவனங்கள் அளிக்கும் இலாபப் பங்கீடு மட்டுமே . ஆனால் நீண்ட கால அளவில் இதுவும் தலைகீழாக மாறும் .

நிறுவனங்கள் சில சமயம் ஒரு பகுதி வியாபாரத்தைத் தனியே பிரித்து அவற்றைத் தனி நிறுவனமாகப் பட்டியலிடும் . இது நிறுவனப் பிரிப்பு (Demerger) என்பதாக அழைக்கப்படும் . அண்மையில் Motherson Sumi Systems அதன் Wiring harness வர்த்தகத்தைப் பிரித்து Motherson Sumi Wiring harness என்பதாகப் பட்டியலிட்டது . இதுவும் இலவசம் அல்ல . ஏனெனில் நிறுவனப் பிரிப்பின் பின்னர் தாய்ப் பங்கின் விலை பிரிப்பிற்குத் தகுந்தாற்போல் குறைந்து விடும் . ஆனால் நீண்ட கால அளவில் இதுவும் தலைகீழாக மாறும் .

உரிமைப் பங்கு வெளியீட்டிலும் ( Rights Issue ) இதே கதை தான் . நிறுவனங்கள் , சந்தை விலையை விடக் குறை விலையில் உரிமைப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டாலும் , உரிமைப் பங்கு வெளியீட்டினால் அதிகரிக்கும் பங்குகளின் எண்ணிக்கை காரணமாக பங்குகளின் விலை குறைந்து விடும் . ஆனால் நீண்ட கால அளவில் ...

நீண்ட கால அளவில் இலவசப் பங்கு வெளியீட்டில் என்ன நிகழ்கிறது என்று பார்க்கலாம் . நிறுவனம் தொடர்ந்தவாக்கில் இலவசப் பங்களிப்பை மேற்கொள்ளும் போது அது முதன்முறை அளிக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற இலவசப் பங்களிப்பும் இரண்டாவது முறை அளிக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற இலவசப் பங்களிப்பும் ஒன்றல்ல . தொடக்கத்தில் 100 பங்குகள் இருப்பதாகக் கொண்டால் முதன்முறை இலவசப் பங்களிப்பின் போது 100 பங்குகள் கிடைக்கும் . இரண்டாவது முறை 200 பங்குகள் ... மூன்றாவது முறை 400 ... வெறுமனே கணக்கின் பொருட்டு இதனை எழுதவில்லை . இது உண்மையான ஒரு உண்மையாகும் . ITC நிறுவனம் அடுத்து ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்கு வெளியீட்டை மேற்கொள்ளுமென்றால் அதன் 100 பங்குகளை IPO வில் வாங்கி இன்றளவும் வைத்திருக்கும் ITC நிறுவன முதலீட்டாளருக்கு 41310 இலவசப்பங்குகள் கிடைக்கப்பெறும் .

இந்த அதிகரித்து வரும் இலவசப் பங்குகளுக்கும் நிறுவனங்கள் பங்காதாயங்களை வழங்கும் . காலப்போக்கில் நிறுவனங்களின் உயர்ந்து வரும் ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share) காரணமாக அவை வழங்கும் பங்காதாயம் அதிகரிக்கும் . நிறுவனங்கள் பங்காதாய வழங்கல் விகிதத்தை (Dividend Payout Ratio) அதிகரித்தால் பங்காதாயம் இன்னும் அதிகரிக்கும் . ஒரு கட்டத்தில் நிறுவனம் வழங்கும் ஒரு பங்கிற்கான பங்காதாயம் நீங்கள் முதலில் வாங்கிய ஒரு பங்கின் விலையை விட அதிகரித்து விடும் . மீண்டும் ITC நிறுவனத்தையே உதாரணமாகக் கொள்ளலாம் . ITC நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கு அதன் ஒரு பங்குக்கு 11.50 ரூபாய் பங்காதாயமாக வழங்கியிருக்கிறது . இது நிறுவனம் வழங்கிய இலவசப் பங்களிப்பு மற்றும் பங்குப் பிரிப்பைக் கொண்டு கணக்கிட்டதாகும் . IPO வின் 100 பங்குகளைக் கொண்டு கணக்கிட்டால் பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு பங்குக்கு 4750 ரூபாய் வருகிறது .

நிறுவனப் பிரிப்பின் காரணமாக நாம் பெறும் புதிய நிறுவனங்களும் இலவசப் பங்களிப்பு மற்றும் அதிகரித்து வரும் பங்காதாயங்களை வழங்குவதாக இருக்கும் என்பது தெளிவு . ITC நிறுவனம் ஒருவேளை நிறுவனப் பிரிப்பை மேற்கொண்டால் மதிப்புத் திறப்பு (value unlocking) ஒன்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .

உரிமைப் பங்கு வெளியீட்டின் காரணமாக பங்கின் விலைகள் குறுகிய கால அளவில் குறைவதாக இருந்தாலும் நிறுவனம் நன்கு செயல்படும் பட்சத்தில் நீண்ட கால அளவில் பங்கின் விலைகள் வளர்ச்சியின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் .

குறுகிய கால அளவில் இலவசம் இலவசம் அல்ல . ஆனால் , நீண்ட கால அளவில் ஆட்டத்தின் விதிமுறைகள் இவ்விதமாக மாறுகின்றன .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்